ஃபிலிம் காட்றோம்... (குறும்படம் பார்க்க வாங்க)
நிறப்பிரிகை என்ற 5 நிமிட குறும்படம் எடுக்க நேர்ந்தது ஒரு சுவையான அனுபவம். ஐரோப்பிய குறும்பட விழாவுக்காக ஒரு இணைய தளம் வடிவமைத்துக் கொடுத்தேன் . அந்த விழாவின் அமைப்பாளர் அஜீவன் அந்த விழாவிற்கு ஒரு படம் எடுத்து அனுப்பலாமே என ஆலோசனை தெரிவித்தார். 'சான்ஸே இல்லை. கொஞ்சம் கூட அனுபவம் இல்லாமல் அது சரிவராது'' என்று உதறிவிட்டேன் . ஆனால் அவர் தொடர்ந்து ஊக்கப் படுத்திக் கொண்டே இருந்தார். சுற்றிப் பார்த்ததில் ஒப்பேற்றும் அளவுக்கு நண்பர்கள் சிலரிடம் படம் எடுக்கத் தேவையான கருவிகளும் திறமையும் இருததது கொஞ்சம் உற்சாகத்தைத் தந்தது.
ஆனால் கதை வேண்டும் அதற்கு நடிக்க ஆள் வேண்டும். கதையை எழுதிவிட்டு ஆள் தேடி கிடைக்காமல் சிரமப் படுவதை விட நடிக்க ஆளைத் தயார் செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்த தோழி ஒருவர் தன் குழந்தைகளையும் மாணவிகளையும் நடிக்க வைக்க ஆர்வம் தெரிவித்தார்.
குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு கதை எழுதவேண்டும். ஆனால் அது குழந்தைகளுக்கான படமாய் மட்டும் அமைந்துவிடக்கூடாது என்று எண்ணினேன். அப்படி உருவானதுதான் நிறப்பிரிகை. மத நல்லிணக்கத்தில் குழந்தைகளின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்று சொல்ல விழைந்தேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒளிப்பதிவாளர் உரிய நேரத்தில் வரக் காணோம். நடிக்க வரவேண்டிய குட்டிப் பெண் வரவில்லை. வெறுத்துப் போய் கைவிட்டுவிடலாமென்ற நிலையில் ஒளிப்பதிவாளர் வந்து சேர, தன் அம்மாவுடன் வேடிக்கை பார்க்க வந்த பெண்ணை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோம் (அவள் பின்னி எடுத்துவிட்டாள் என்பது வேறு கதை). தாமதமானதால் வெளிச்சம் போய்விட்டது. வெளியில் எடுக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்க முடியாமல் போக, திரைக்கதையில் அவசர மாற்றம் தேவைப்பட்டது.
கேமரா ஆங்கிள், லைட் செட்டிங் எல்லாம் குத்து மதிப்பாய் வைத்து படம்பிடித்து முடித்தோம். லைவ் சவுண்ட் வேறு! 5 நிமிடப் படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை பெண்டு நிமிர்த்தியது. இசைஞானமுடைய யாரும் பின்னணி இசைக்கு இல்லை. எடிட் செய்த பின்னும் காட்சிகளின் ஃப்ளோ சீராக இல்லை. எப்படியோ முடித்து அனுப்பி வைத்தோம். விழாவுக்கு வந்திருந்த 83 படங்களில் 27 படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் நிறப்பிரிகையும் ஒன்று. கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தோஷமான ஆச்சரியம்!
படைப்பில் எனக்குத் திருப்தியில்லாததால் வேறெங்கும் இதனை அனுப்பவில்லை. கதையில் எனக்கு நிறைவு இருக்கிறது; நடித்தவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அவர்களை இன்னும்கூட இயல்பாக செய்ய வைத்திருக்கலாம். டெக்னிகலாக நிறைய சொதப்பல்கள். அனைத்துக் குறைகளுக்கும் முழுப்பொறுப்பு என்னுடையதே.
இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள்:
* படம் எடுப்பது சுலபமல்ல.
* படம் எடுப்பதற்கு நுணுக்கமான திட்டமிடல் அவசியம்
* படப்பிடிப்பில் ஒலி ஒளி இரண்டுக்கும் மிக முக்கியத்துவம் தரவேண்டும்
* எடிட்டிங்கில் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம் என்பது தவறு. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.
* கதை அழுத்தமாக இருந்தால் டெக்னிகல் சொதப்பல்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு
இந்தப் பாடமெல்லாம் கற்றுக் கொண்டு அதற்குப் பின் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தலை நிறைய கனவுகள் உண்டு. கனியும் காலம்தான் இன்னும் வரவில்லை.
படத்துக்குப் போகுமுன் இரண்டு விஷயங்கள்:
1. நிறப்பிரிகை என்பதற்கு விளக்கம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
2. இது 9/11க்குப் பிறகு அன்பே சிவம் படத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம்
படம் பார்த்து கருத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள் :-)
nirapirigai (short movie)
Video sent by nilaraj