.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, August 15, 2005

சிறுகதை - குலதெய்வம்

Your Ad Here

"நானு நாண்டுக்கிட்டுச் செத்துப்போறம்ல. ஒங்க அய்யாவைக் கொன்ன பயலுக இன்னும் உசுரோட திரியரானுகன்னு நெனைச்சாலே ஈரக்கொல நடுங்குது. ஒண்ணுக்கு நாலு ஆம்பளப் புள்ளைகளப் பெத்து என்ன பிரயோசனம்?" சீனியம்மா வாசல்ல உக்காந்து சத்தம் போட்டுக்கிட்டிருந்தா.

உள்ளர்ந்து மூத்த மவன் அழகர்சாமி எட்டிப்பாத்து, "எம்மா, அரவம்* போடாம இரு. நாங்க என்ன செய்யுதோம்னு ஊருக்கெல்லாம் தண்டரா போட்டுக்கிட்டு இருக்க முடியாது. கமுக்கமா காரியத்தை முடிக்கிற ஆளுக நாங்க" அப்பிடீன்னு அவள அடக்கப் பாத்தான்.

ஆனாலும் மனசு ஆறாம, "எவன் எவன் எப்பிடி எப்பிடி வெட்டுனாம்னு பக்கத்திலர்ந்து பாத்தவல்ல நானு. வேண்டாம்யா வேண்டம்யான்னு அந்தச் சின்னப் பயலுக காலைப் புடிச்சு கெஞ்சினம்ல. உங்க அய்யா தலைய சீவிப்புட்டு என்னயும் வெட்டிப்பிட்டு கொக்கரிச்சிட்டுப் போனானுகலே அந்த எடுபட்ட பயக. அன்னக்கிலருந்து இன்னம் ஒறக்கம் வராம சங்கடப்பட்டுக் கெடக்கேன்"ன்னு சீனியம்மா பொலம்பிக்கிட்டுத்தானிருந்தா.

சீனியம்மாவின் புருசன் அய்யனாரு எவருக்கும் பயப்படாதவரு. ஊருக்குள்ள பங்காளிக பண்ண அக்குறும்ப* தட்டிக் கேட்டாருன்னு அவரு அண்ணன் மவன் சிவராசும் பேரன் ராசகோவாலுந்தேன் கூட்டாளிக கூட வந்து அவர வெட்டிப்பிட்டாங்கெ. சீனியம்மா ஆராரு* கூட வந்ததுன்னு வெவரமா போலீசுகிட்ட சொல்லிப்பிட்டா. ஆனா வெட்டின பயக ஒரு மாசமா இன்னம் தலமறவாதேன் திரியறானுக. அவங்கெ பொண்டு புள்ளக எல்லாம் எங்கன போச்சுன்னெ தெரியல. அதுகளயும் காணல.

சீனியம்மா மகங்கெளும் அருவாளோட ஊரூராத் தேடிக்கிட்டுதேன் இருக்கானுக. அம்பிட்டானுகன்னா* அத்தன பேரும் மொத்தமா கெழக்கால* போகவேண்டியதுதேன்.

திடுதிப்புன்னு ஒரு நாளு வெரசு வெரசா* சீனியம்மா மகங்கெ நாலுபேரும் அருவாள சட்டையில சொருகிக்கிட்டு வண்டிய எடுத்துக்கிட்டு பறந்தானுக. என்ன ஏதுன்னு அம்மாட்ட மூச்சுடல. சீனியம்மா லேசுப்பட்டவளா? அவளுக்குத் தெரிஞ்சு போச்சு இன்னக்கி அவ சபதம் நெறவேறப் போவுதுன்னு. பழிக்குப்பழி வாங்கறவரயும் கஞ்சித் தண்ணியத் தவுத்து வேறெதும் சாப்புட மாட்டம்னு ஒத்தக்கால்ல நின்னுப்பிட்டாள்ல!

பயலுக போயி அரநாளுக்கு மேல ஆயிப்போச்சி. சேதி ஒண்ணும் காணுமேன்னு உள்ளுக்கு ஒக்கார முடியாம திண்ணயிலயே ஒக்காந்து கெடக்கா சீனியம்மா.

ஒரு வழியா மகங்கெ திரும்பிவந்தானுக. ஆனா அவனுக மொகம் தொங்கிக் கெடக்கு. "என்னலே, வெட்னீகளா இல்லியா?"ன்னு சீனியம்மா ஆத்திரத்தோட கேக்கா.

"எப்பிடியோ துப்பு கெடச்சி போலீசு வந்து அவனுகள பிடிச்சிட்டுப் பொயிருச்சும்மா"ன்னான் சின்னப்பய செல்லத்துரை.

சீனியம்மாளுக்கு வெளம்* ஏறிப்போச்சு. பயகள நல்லா வஞ்சு* போட்டா.

ரெண்டு நா* கழிச்சி ரெண்டாவது பய சுந்தரம் ரொம்ப சந்தோசமா வீட்டுக்கு ஓடியாந்தான். "எம்மா, பேரங்காரன் செயிலுல செத்துப் போயிட்டானாம். நாயம்தேன் செயிக்கும்னு சாமி காட்டிருச்சி பாத்தியா?" ன்னு சீனியம்மாட்ட நறுக்குன்னு நாலு வார்த்தைல சொன்னானே ஒழிச்சு மேல வெவரமேதும் சொல்லல.

மகங்கெ நாலுபேரும் பெரிய வெளா* எடுக்காததுதேன் கொறை. அம்புட்டு சந்தோசம் அவனுகளுக்கு. அண்ணன் தம்பிக எல்லாம் சேந்து வேட்டு வெடிக்கக் கெளம்பிட்டாங்கெ.


"எப்பிடி செத்தானாம்தா?" ன்னு மூத்த மருமவ முத்துமாரிகிட்ட கேட்டா சீனியம்மா. "எனக்கென்னெளவு தெரியும்? எப்பிடிச் செத்தா என்ன? பாதிப்பழி தீந்து போச்சில்ல"ன்னு சொல்லிப்பிட்டு சுடு சோத்துல கருவாட்டுக் கொழம்பூத்தி வட்டில்ல* மாமியார்காரிகிட்ட குடுத்தா முத்துமாரி.


வாசன நல்லாத்தேன் இருந்துச்சி. ஆனா சீனியம்மாளுக்கு என்னமோ சாப்புடப் புடிக்கல. தட்ட வாங்கினவாக்கில ஒக்காந்துக்கிட்டே இருந்தா. வெளிய வேட்டுச் சத்தம் கேட்டுக்கிட்டே இருந்திச்சி.

சீனியம்மா சோத்துல கைவைக்காததப் பாத்துட்டு மருமவ, "ஒத்த ஆம்பளப்புள்ள செத்துப் போயிட்டான். பொண்டாட்டிக்காரி மூணு பொட்டைகளை வச்சுக்கிட்டு சீரழியப்போறா. நீங்க ஆசப்பட்டாக்ல* கொலமே வெளங்காமப் போனாப்லதான். சந்தோசமா சாப்பிடவேண்டியதுதான?"ன்னா.

மருமவ சொன்னதுந்தேன் சீனியம்மாளுக்கு சடக்குன்னு ஒறச்சது - ஆத்தீ... ஒரு வம்சமில்ல போயிருச்சு! சீனியம்மாளுக்கு நெஞ்சுக் குழிக்குள்ள என்னமோ அடச்சிக்கிட்டாக்ல இருந்திச்சு . சுடு சோத்தக் கையில அவ தொடவே இல்ல. மூலைல சுருட்னாக்ல படுத்துக்கிட்டா. சிவராசும் செத்தாத்தேன் அம்மா வெரதத்த முடிப்பா போலுக்குன்னு மகங்கெ நெனச்சிக்கிட்டானுக.

கேசு கோர்ட்டுக்கு வர அந்தா இந்தான்னு ரெண்டு வருசம் ஓடிப்பொயிருச்சி. கேசுல சீனியம்மாதேன் மெயினான சாச்சி*. அவ ஒருத்திதான நடந்தத நேர்ல பாத்தவ. அவளுக்கு என்னமோ அப்பைக்கப்ப* மேலுக்கு முடியாமப் போயிருது. அவ போயிச் சேந்துட்டா கேசு நிக்காதுன்னு சிவராசு குடும்பமுச்சூடும் எதிர்பாத்துக் காத்துக்கெடக்கு. ஆனா அவ எல்லாத் தரமும் எந்திச்சு வந்துக்கிட்டுதேன் இருக்கா.

ஒரு வழியா சீனியம்மாள கோர்ட்டுல வெசாரிக்கக் கூப்புட்டாகளாம். அடுத்த வாரம் அவ போவணுமாம். மகங்கெ அவளுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லாமப் போயிறக் கூடாதுன்னு பதட்டமாத்தேன் திரிஞ்சிக்கிட்டு இருக்கானுக.

அன்னக்கி வீட்டுல ஆம்பளையாளுக ஒருதரும்* இல்ல. சீனியம்மா திண்ணையில ஒக்காத்துக்கிட்டிருந்தா. அப்ப சிவராசு பொண்டாட்டி சந்திரா ஓடியாந்து சீனியம்மா கால்ல உழுந்தா. கூடவே மூணு பொட்டப்புள்ளைகளும் திருதிருன்னு முழுச்சிக்கிட்டு நிக்குதுக.

"அத்த நீங்கதேன் எப்பிடியாவது மனசு வைக்கணும். அவக பண்ணுனது தப்புதேன். பெரிய குத்தந்தேன். இந்த மூணு பொட்டப்புள்ளைக மொகத்துக்காவது நீங்கதேன் மன்னிக்கணும். உங்கள கொல தெய்வமா* நெனச்சு கும்புடறேன், அத்த. எங்க உசுரு ஒங்க கையிலதேன் இருக்கு"ன்னு காலப் புடிச்சிக்கிட்டு அழுவுதா.

அம்மா அழுவுதான்னு புள்ளக்காடும் அழுவுதுக. சீனியம்மா தெகச்சுப் போயி ஒக்காந்திருக்கா. என்னதோ ஏதோன்னுபோட்டு வெளிய வந்த முத்துமாரி சந்திராவப் பாத்ததும் ஆங்காரமா வைய ஆரம்பிச்சிட்டா. சந்திரா அழுதுக்கிட்டே புள்ளைகள இழுத்துக்கிட்டுப் போயிட்டா.

சீனியம்மாவுக்கு நெஞ்சில பாராங்கல்ல சொமக்கறாப்பிலதேன் இருக்கு. இது இன்னக்கி நேத்தில்ல; ரெண்டுவருசமா இப்படித்தேன் கெடக்கு. பழிக்குப்பழி வாங்கிப்புட்டா, உசுருக்கு உசுரு பொயிருச்சுன்னா பாரம் கொறையுமின்னுதான் நெனச்சா. ஆனா ராசகோவாலு செத்ததுலருந்து இன்னும் பாரம் சாஸ்தியானாக்லதேன் இருக்கு. இப்ப சந்திரா வந்துட்டுப் போனதுங்கூட சங்கடமாத்தேன் கெடக்கு. சீனியம்மாளுக்கு ஒண்ணுமே வெளங்கமாட்டங்குது. சீக்கிரம் செத்துட்டா நல்லதுன்னுதேன் அடிக்கடி நெனச்சிக்கிடுதா.

மூத்தவன் அழகரு வந்ததும் முத்துமாரி சொன்னதக் கேட்டு பேயாட ஆரம்புச்சுட்டான். "அவா வந்து அழுதான்னு நீ பாத்துக்கிட்டு இருந்தியாக்கும்ளா. எங்கம்ம உசிரு போவணும்னு தேங்கா ஒடச்சவளா அவ. நாலு எத்து எத்தி வெளிய தள்ளிருக்கணும். இல்லன்னா அருவாமணைய எடுத்து சொருகிருக்கணும்”னு முத்துமாரிக்கு வசவு கெடச்சது.

“எம்மா, நீ எதுக்கும் கவலப்படாத. நம்ம கேசு வலுவா இருக்கு. நீ மட்டும் கோர்ட்டுக்கு வந்து சாச்சி சொல்லிட்டீன்னா நம்மள ஒரு பய அசச்சுக்க முடியாது”ன்னான் பெத்தவளப் பாத்து.

சீனியம்மா கூண்டில நின்னுக்கிட்டிருக்கா. ஒடம்பெல்லாம் வெடவெடன்னு நடுங்குது. வக்கீலய்யா சீனியம்மாட்ட, “ஒங்க புருசனை வெட்டிக் கொன்னது யாருன்னு ஜட்ஜ் ஐயாகிட்ட சொல்லுங்கம்மா”ங்கறாரு.

வெட்டுன காச்சி இப்பதேன் நடந்தாக்ல கண்ணு முன்ன ஓடுது. கண்ணீரு கரகரன்னு ஊத்துது.

“தைரியமா சொல்லுங்கம்மா”ங்கறாரு வக்கீலு.

சீனியம்மாவுக்கு ஒரே ரோசனையா கெடக்கு. அத்தன சனமும் அவளத்தேன் பாக்குது.

அவா பேசாம நிக்கதப் பாத்துட்டு, “பயப்படாம பதிலச் சொல்லுங்கம்மா”ன்னு மறுக்காவும்* கேக்காரு வக்கீலு.

சீனியம்மா கண்ண மூடி புருசன நெஞ்சில நெனச்சிக்கிட்டு, “வெட்டுனது யாருன்னு சரியா தெரியலைய்யா”ன்னு திக்கித் திக்கிச் சொல்லுதா.

“எம்மா”ன்னு அலறுதானுக மகங்காரனுக.

சீனியம்மாவப் பாத்து தலமேல கைய குமிச்சு கும்பிட்டுக்கிட்டே அழுவுதான் சிவராசு.

சீனியம்மாளுக்கும் கண்ணீரு அடங்க மாட்டாமத்தேன் கொட்டுது. ஆனா நெஞ்சு பஞ்சு கணக்கா லேசானாப்பல இருக்கு.
********************************************************************
* எங்கூருத் தமிழுக்கு அர்த்தம்:

· கொலதெய்வம் - குலதெய்வம்
· அரவம் - சத்தம்
· அக்குறும்பு -அக்கிரமம்
· அம்பிட்டானுகன்னா - அகப்பட்டார்களென்றால்
· வெரசு வெரசா - விரைவாக விரைவாக
· ஆராரு - யார்யாரென்று
· கெழக்கால - கிழக்கே (சுடுகாட்டுக்கு)
· வெளம் -சினம்
· வஞ்சு - வைது
· நா- நாள்
· வெளா - விழா
· வட்டில் - தட்டு
· ஆசப்பட்டாக்ல - ஆசைப்பட்ட வாக்கில்
· சாச்சி - சாட்சி
· அப்பைக்கப்ப - அவ்வப்போது
· ஒருதரும் - ஒருவரும்
· ரோசனை - யோசனை
· மறுக்கா - மறுபடியும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.