.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, December 30, 2005

இங்கிலாந்தை உணவினால் வென்ற இந்தியர்கள்

Your Ad Here

சிங்கப்பூர் ஒலி 96.8க்காக 15 செப் 2002 அன்று தயாரித்தளித்த சிறு செய்திக் கோவை:

ஆங்கிலேயர் இந்தியாவை ஆயுதத்தால் வென்றார்கள். இந்தியர் இங்கிலாந்தை உணவினால் வென்றார்கள்' என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. அந்த அளவு ஆங்கிலேயர்களுக்கு இந்திய உணவு மீது மோகமுண்டு. 'curry' என்ற்தான் அவர்கள் இந்திய உணவைப் பொதுவாகக் குறிப்பிடுவார்கள்.

பெரும்பாலும் வட இந்திய உணவு வகைகள் ஆங்கிலேயருக்கு ஏற்றார் போல சில மாற்றங்களை அடைந்து ஆங்கிலோஇந்திய உணவு வகைகளாகத்தான் இங்கு காணப்படுகின்றன. உதாரணமாக பால்டி எனப்படும் உணவு வகை இங்கு பர்மிங்ஹாமில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. சிக்கன் திக்கா மசாலா தேசிய உணவாகவே இப்போது கருதப்படுகிறது. இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகள் இன்னும் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.

தொலைக்காட்சிகளில் கூட இந்திய சமையல் நிகழ்ச்சிகள் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.சிறப்பு அங்காடிகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட துரித இந்திய உணவுவகைகளும் விற்பனைக்குள்ளன.

ஒரு அயர்லாந்துப் பெண்மணியை மணந்து இங்கிலாந்து வந்த Sake Deen Mahomed என்ற இந்தியர்தான் 1809 ம் ஆண்டு Hindustani Coffee House என்ற இந்திய உணவகத்தை இலண்டன் போர்ட்மேன் சதுக்கத்தில் முதன்முதலில் ஆரம்பித்தார். 1927-ல் ரம்பிக்கப்பட்ட வீராசாமி என்ற உணவகத்திற்கு டென்மார்க் மன்னர் அடிக்கடி வந்ததாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

விக்டோரியா மகாராணி இந்திய உணவை விரும்பிய காரணத்தால் 100 ண்டுகளுக்கு முன்பே பக்கிங்ஹாம் அரண்மனையில் இந்திய சமையல் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

கடந்த 30 ண்டுகளில் பல இந்திய உணவகங்கள் இங்கு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரிட்டனில் இந்திய உணவு வர்த்தகத்தின் மதிப்பு வருடத்திற்கு 3.5 பில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. உணவகங்களில் செலவிடப்படும் பணத்தில் இது இரண்டில் மூன்று பாகம் என்று தெரிகிறது. 2.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வாரமும் இந்திய உணவகங்களை நாடுகிறார்கள்.

இந்த உணவகங்களை நடத்துபவர்களில் தொண்ணூறு சதவீதம் பங்களாதேசத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய உணவைப் பிரபலப்படுத்துவதறகாக 1962ம் ண்டு Pat Chapman என்ற பிரபல சமையல் கலைஞரால் The Curry Club என்ற சங்கம் தொடங்கப்பட்டது. இன்றும் பல்தரப்பட்ட மக்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றனர்..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 27, 2005

தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு பணிவான கேள்வி

Your Ad Here

வணக்கம். தமிழ்மணம் மூலம் தாங்கள் தமிழுக்காற்றும் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ் மணத்தில் தமிழ் இணைய இதழ்களைப் பட்டியலிட்டு இணைப்பும் கொடுத்திருக்கிறீர்கள். இவை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.

240 வாரங்களாய் தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலாச்சாரல் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது; 3000க்கும் மேற்பட்ட தமிழ் படைப்புகளை உள்ளடக்கி இருக்கிறது; தரமான படைப்புகளை மெருகேற்றி வெளியிட்டுவருகிறது; குழந்தைகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் பிரத்யேகப் பகுதிகள் கொண்டு இளையதலைமுறையின் மேல் விசேஷ கவனம் செலுத்தி வருகிறது.

நிலாச்சாரலின் ஆசிரியர் என்கிற முறையில் உங்கள் பட்டியலில் நாங்கள் இடம் பெறாதது சற்று வியப்பையும் வருத்தத்தையும் தந்தாலும் கேட்டுப் பெறுவது அங்கீகாரமல்ல என்ற காரணத்தால் மௌனம் காத்தேன். ஆனால் பாஸ்டன் பாலாவின் இந்தப் பதிவிலும் நிலாச்சாரல் இடம் பெறாமல் போக, பதில் அறிவது நலம் பயக்கும் என்று உணர்கிறேன்.

பாலா குறிப்பிட்டுள்ள அலெக்ஸா ரேங்க் படி நிலாச்சாரலே தமிழ் இணைய இதழ்களில் முதலிடம் வகிக்கிறது. அப்படி இருக்க தங்களைப் போன்ற, பாலாவைப் போன்ற நடுநிலைவாதிகள் நிலாச்சாரலை முற்றுமாய்ப் புறக்கணிக்க ஏதேனும் காரணம் இருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

ஆன்ம திருப்தி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டுதான் உலகின் பல மூலைகளிலிருந்து இயங்குகிறது நிலாக்குழு. எங்கள் முயற்சிகளை இன்னும் சீர்படுத்திக் கொள்ள அந்தக் காரணம் உதவலாம் என்ற எண்ணத்தினால்தான் இந்த அஞ்சல். சற்று நேரம் ஒதுக்கிக் காரணத்தைக் கூறுவீர்களானால் எங்களை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி.

பி.கு: தமிழ்மண நிர்வாகிகளது மின்னஞ்சல் முகவரி ஏதும் காணப்படாததால் இங்கே பதிகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 24, 2005

பொட்டைப் புள்ளையாக்கும்?

Your Ad Here

மிகச் சிறிய வயதிலிருந்தே பெண் என்ற பாகுபாட்டோடு நடதப்படுகையில் எனக்கு எல்லையில்லாமல் கோபம் வந்திருக்கிறது. பிறந்து வளர்ந்தது கிராமம் ஆகையால் பெண் என்பவள் ஆணுக்கு ஒரு படி தாழ்ந்தவள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நியதி

பெண் சிசுக்கொலை எங்கள் ஊர்ப்பக்கம் நடக்கவில்லை என்றாலும் பெண்பிள்ளை பிறந்துவிட்டால் துக்கம் கொண்டாடாத குறைதான். 'பொட்டைப் புள்ளைதானாக்கும்?' 'யாருக்கு வேண்டும் பொம்பிள்ளைப்பிள்ளை?' இதுதான் பெண் சிசுக்களுக்குப் பெரும்பாலும் கிடைக்கும் வரவேற்பு. இப்படி சலித்துக் கொள்ளும் அன்னையரிடம் காரணம் கேட்டிருக்கிறேன். 'பொண்ணுன்னா ஒலகத்தில எவ்வளவு கஸ்டம், பாப்பா. நம்மளப் போல அதுவும் பாடாய்ப் படவேண்டும்தானே' என்ற கழிவிரக்கத்தோடுதான் பலர் பதில் தந்திருக்கிறார்கள். தாய்மாரின் இந்த இயலாமையும் பயமும் கருவிலிருக்கும் போதே பெண் சிசுக்களைப் பாதிக்க ஆரம்பித்துவிடும் என்பது என் தாழ்மையான கருத்து.

எனக்குத் தெரிந்த ஒரு மனிதர், 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?' என்று கேட்டால் 'ஒரு ப்ளஸ் ஒரு மைனஸ்' என்றே சொல்வார். இன்றும் பெண் குழந்தை பிறந்துவிட்ட நாளிலிருந்தே அதன் திருமணத்தைக் குறித்துக் கவலைப் படும் பெற்றோர்களைப் பார்க்கிறேன். பெண்குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அதன் திருமணத்தை நோக்கியேதான் நகர்த்தப்படுகிறது.

'அதிகம் படிக்க வச்சால் அதுக்கு மேல படிச்ச மாப்பிள்ளை பாக்கணும். மெத்தப்படிச்ச மாப்பிள்ளைன்னா சீர் அதிகம் செய்யணும். எதற்கிந்த வம்பு?' என்ற மனப்பான்மை கிராமப் புறங்களில் மிகவும் சகஜம்.

சில இடங்களில் பள்ளிக்கு அனுப்புவதே சலுகையாகத்தான் கருதப்பட்டிருக்கிறது. அதில் திறமையை வளர்த்துக் கொள்வதாவது? 'பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி என்றெல்லாம் போனால் பல பையன்கள் பார்ப்பார்கள். ஏதாவது பிரச்சனை வரும். ஒன்றும் வேண்டாம். ஒழுங்காகப் படித்துவிட்டு வந்தால் போதும்' - இப்படித்தான் எனக்குப் பெரும்பாலான சமயங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. சகோதரனுக்கு எளிதாய்க் கிடைக்கும் வாய்ப்புகள் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு வித வெறுப்போடுதான் எனக்குத் தரப்பட்டிருக்கின்றன.

பையன்கள் காப்பி அடிக்கிறார்களா என என்னை மேற்பார்வை பார்க்க வைத்த வாத்தியார் பயங்கர கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறார் - 'ஒரு பொம்பளைப் பிள்ளையை பையன்களை மேற்பார்க்க அனுமதிப்பதா?' (கண்டனக் குரல்களில் என் பெற்றோரின் குரலும் உண்டு)


'நான் ஏன் இப்படி செய்யக் கூடாது?' என்று குரல் எழுப்பும் போதெல்லாம் 'பொம்பிள்ளைப்பிள்ளை மாதிரி நடந்துக்க' என்ற மொட்டை அறிவுரைதான் பதிலாகக் கிடைக்கும்.

அட, இதெற்கெல்லாம் கூட சூழலைக் காரணமாய்க் காட்டலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, 'மேடை ஏற உனக்குத் தயக்கமே இருக்கமாட்டேங்கறது. உன்னை உங்கள் வீட்டில் சரியாய் வளர்க்கவில்லை' என்று குறை சொன்ன சக மாணவர்கள் என்னிடம் சரியாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.



கல்லூரி கலை விழாக்களில் எய்யப்படும் காதிக அம்புகள் என்னை வெகுவாய் அவமானப்படுத்தியுருக்கின்றன. 'உன்னைப் போலவே ரத்தமும் சதையும் கொண்ட மனித ஜன்மம் நான். என்ன காரணத்தால் உனக்கு என்னைப் பார்த்தால் இழிவாய்த் தோன்றுகிறது?' என்ற கேள்வி சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. தெருவில் போகும் நாயின் மேல் கல் எறிவதற்கும் என் மேல் காகித அம்பு எறிவதற்கும் பெரிதான வித்தியாசம் இல்லை என்பது எனது வாதம்

கேலிகளும் கிண்டல்களிலும் பெரும்பாலும் வெகுண்டெழுந்து 'உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன பிரச்சனை?' என்று முகத்துக்கு நேராய்க் கேட்டுவிட்டு வந்திருக்கிறேன். பணிக்குச் சென்ற பின்னும் 'ஒரு பொம்பளை... அவ என்னைத் தப்பு சொல்லிட்டா' என்று மக்கள் புழுங்குவது சாதாரணமாய் நடந்திருக்கிறது.(ஐ.டி. வந்த பிறகு இது எவ்வளவோ குறைந்துவிட்டதென்பது உண்மை)

திருமணம் ஆன புதிதில் 'கணவருக்குப் பணிவிடை செய்யவேண்டும்' என்று எனக்கு அறிவுரை சொன்ன கடிதத்தை வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். எல்லா விதத்திலும் சமமாய் இருக்கும் பெண் ஏன் ஆண் என்ற ஒரே காரணத்துக்காகக் கணவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்பது எனக்கு என்றுமே புரியாத புதிர்.

'என் மனைவிக்கு நிறைய சுதந்திரம் தந்திருக்கிறேன்' என்று மார்தட்டிக் கொள்ளும் கணவர்கள் இருக்கிறார்கள். பெண் சுதந்திரம் ஒரு சலுகையில்லை. உரிமை. பெண் சுதந்திரம் யாரும் கொடுத்து வருவதில்லை. விருப்பப்பட்டவர்கள் தரித்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டு அடிமைகளாய் இருக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமையாய் இருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன்.


காலம் மாறிவருகிறது. உலகமயமாக்கலில் நடந்த நல்லவற்றில் ஒன்று பெண்கள் சுதந்திரம் என்று எண்ணுகிறேன். ஆனால் 21ம் நூற்றாண்டின் தமிழ்த் திரைப்படங்களில் கூட 'அவன் ஒரு ஆம்பளை. என் ன வேணும்னாலும் செய்வான். நீ ஒரு பொண்ணு' என்ற ரீதியில் வருகிற வசனங்களையும் (சமீபத்தில் சிவகாசி படத்தில் கூட இப்படி ஒரு வசனத்தைக் கேட்டதாய் நினைவு) அதற்கு தியேட்டரில் பறக்கும் விசில் சத்தங்களையும் கேட்கும்போது நாம் இன்னும் வெகு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 22, 2005

பஹேலி ஆஸ்காருக்குப் போனதெப்படி?

Your Ad Here

பஹேலி -ஷாருக்கான், ராணி முகர்ஜி நடித்து சில மாதங்களுக்கு முன் வந்த இந்தத் திரைப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதையாம் இது! கணவனின் பிரிவில் ஒரு ஆவியுடன் வாழ்க்கை நடத்தும் பெண் ஒருத்தி கணவன் திரும்பி வந்ததும் என்ன செய்வாள் என்று இரண்டு வரியில் சொல்லிவிடக் கூடிய கதை. சரி, திரைக்கதையாவது சுவாரஸ்யமாக இருக்கிறதாவென்றால் அதுவுமில்லை. சவசவவென்ற காட்சி அமைப்புகள். மனைவி திரைக்கதை எழுதி அமோல் பலேகர் இயக்கிய படமாம்! ஷாருக்கானின் சொந்தத் தயாரிப்பு.
ஷாருக்கானுக்கு இரட்டை வேடம். அவர் ஒன்றும் பெரிதாக இதற்கென்று மெனக்கெடவில்லை. ராணி முகர்ஜிக்கும் விசேஷமாய் சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. (அதெப்படி ஆறேழு வருஷமாய் அப்படியே இருக்கிறார் ராணி?)

அமிதாப் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் (நம்ம ஊர் ஸ்டைலில் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரம் என்று சொல்லிக் கொள்ளலாம்!). ஜூஹி சாவிலாவின் அண்ணி பாத்திரம் எதற்கென்றே தெரியவில்லை. ஒரு வேளை ஷாருக்கின் ப்ரொடக்ஷன் கம்பெனியில் பார்ட்னராகையால் தன் பங்குக்கு படத்திலும் ஒரு பாத்திரம் செய்ய நினைத்திருக்கலாம். ஐயோ பாவம், சுனில் ஷெட்டி வசனம் ஏதுமில்லாமல் ஒரே ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

சொல்லிக் கொள்ளக்கூடிய மாதிரி இருப்பவை இசையும் கேமராவும்தான். ஆனால் அதற்காக, உப்பு சப்பில்லாத இந்தப் படத்தை ஆஸ்காருக்கு அனுப்பினால் நம் மரியாதை(!) என்னாவது? ப்ளாக் இதை விட சிறந்த படமென்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைத் தேர்ந்தெடுக்காமல் போனதற்கான காரணத்தைப் படம் பார்க்காமல் ஊகிப்பது சரியல்ல.

இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் செலக்ஷனுக்கு வந்திருந்த படங்களில் சச்சினும் ஒன்றாம்! எனக்கு அதைப் படித்துவிட்டு சிரிப்பை அடக்க ரொம்ப நேரமானது.

பி.கு: என் பதிவில் சினிமா நெடி பயங்கரமாய் இருக்கிறதென்று ஏற்கெனவே தேவ் புகார் செய்துவிட்டார். விடுமுறைக் காலமாகையால் நிறைய படம் பாக்கும் வாய்ப்பு; ஸ்கையில் வேறு ஒரு தமிழ் சேனல் இலவசமாய் வந்து தொலைக்கிறது - என்றெல்லாம் சாக்குச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்:-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அன்பு கிடைக்குமா அன்பு?

Your Ad Here

சில வருடங்களுக்கு முன் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் ஒரு வயதுக்குற்பட்ட குழந்தைகளின் பகுதியைப் பார்வையிட்ட போது, அங்கிருந்த ஆறேழு குழந்தைகள் எங்களைப் பார்த்ததும் தூக்கிக் கொள்ளுமாறு பாவனை செய்தனர். ஒவ்வொருவரையும் சற்று நேரம் தூக்கிவைத்துக் கொண்டிருந்துவிட்டு கீழே இறக்கிவிடும்போது ஒரே அழுகை. அந்த பிஞ்சுகளுக்குத் தேவையான இந்த அடிப்படை அரவணைப்பு கூடக் கிடைக்கக் கூடாத அளவுக்கு அவர்கள் என்ன பாவம் செய்துவிட்டார்கள் என்ற கேள்வி என்னை இன்னும் அரித்துக் கொண்டிருக்கிறது. பதில் கிடைக்காத எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்று. அந்தத் தாக்கத்தில் எழுதிய கதை இது:

அன்பு கிடைக்குமா அன்பு?

அன்பகத்தில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல் அப்பாஜி ஆதரவற்ற அந்த குழந்தைகளோடு அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது தலையில், தோளில், மடியில் என்று ஒரு பத்து அதிர்ஷ்டக்காரக் குழந்தைகளுக்கு இடம் கிடைக்க, மீதி இருந்த எழுபது பேரும் அவரை நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். 9 வயது சுகவனத்துக்கு ஒரு மூலையில்தான் இடம் கிடைத்தது. ஊன்றுகோல்கள் பழகாததால் தாமதமாகத்தான் வரமுடிந்தது. அவளுக்கு திரைப்படத்தில் மனம் லயிக்கவில்லை. திரைப்பட இடைவேளையில் வருகிற அந்த விளம்பரத்துக்காத்தான் ஆவலோடு காத்திருந்தாள். செய்திச் சுருக்கத்திற்குப்பின் திரைப்படம் தொடரும் என்ற அறிவிப்பு வந்ததும் உற்சாகமானாள். இதோ விளம்பரம் ஆரம்பமாகிவிட்டது. மேலும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 21, 2005

உயிரின் எடை 21 கிராம்

Your Ad Here

டாக்டர் ராப்ர்ட் வின்ஸ்டனின் கடவுளின் கதை விவரணப்படத்தில் கேள்விப்பட்ட சுவாரஸ்யமான செய்தி இது.

இறந்து கொண்டிருந்த இரு மனிதர்களின் எடையைத் தொடர்ந்து கவனித்ததில் உயிர் பிரியுமுன்னும் பின்னும் இருவரின் எடையிலும் சரியாக 21 கிராம் வித்தியாசம் இருந்ததாம். அதனால் உயிரின் விலை 21 கிராம் என்று அந்த டாக்டர் ஒரு கருத்தை முன்வைத்தாராம். பின்பு அதே டாக்டர் அதே போல உயிர் பிரிந்து கொண்டிருந்த ஒரு நாயின் எடையை அளந்ததில் ஒரு வேறுபாடும் இல்லாமல் போக, பிராணிகளுக்கு ஆன்மாவே இல்லை என்றும் முடிவுக்கும் வந்தாராம் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

முதியோர் இல்லங்கள் - ஒரு பருந்துப் பார்வை

Your Ad Here

உஷாவின் இந்தப் பதிவில் முதியோர் இல்லங்களைப் பற்றி கடுமையான வார்த்தைகளைப் பின்னூட்டங்களில் கண்டேன். முதியோர் இல்லம் என்று பேச்சை எடுத்தாலே நம்மில் பெரும்பாலோர் கண்ணை மூடிக்கொண்டு இதெல்லாம் கொடுமை, நரகம் என்று பேச ஆரம்பித்துவிடுவதுதான் சகஜமாக நடக்கிறது. இறுக கண்ணையும் மனதையும் இப்படி மூடிக்கொள்வதால் இந்த கான்சப்டின் நல்ல பக்கத்தைப் பார்க்காமல் போய்விடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

மனசைத் தொட்டுச் சொல்லுங்கள் - எத்தனை பிள்ளைகள் வயதான பெற்றோரை சந்தோஷத்தோடு வைத்து பராமரிக்கிறார்கள். கடமையாய்ப் பராமரிப்பது வேறு, அவர்களை குழந்தைகளாக எண்ணி உள்ளன்போடு நடத்துவது வேறு. முக்கால்வாசிப் பிள்ளைகள் உலகம் என்ன சொல்லும் என்ற கடமைக்காகத்தான் பெற்றோரைத் தம்முடன் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இன்றைய வாழ்வின் நெருக்கடி அப்படி.

'வயசான காலத்தில சொன்ன பேச்சைக் கேட்டுக்கிட்டு பேசாம இருக்குதுங்களா பாரேன்', 'இது இருக்கறதுனால எங்கேயும் ஃப்ரீயா போக முடிய்யலை' என்ற முணுமுணுப்புகளை எத்தனை முறை கேட்டிருப்போம்? இதெல்லாம் முதியவர்களை காயப்படுத்தாதா?

'இதுககிட்ட சாப்பட்டுக்கா வந்து கிடக்கிறோம்' என்று கழிவிரக்கத்தோடு பேசுகிற எத்தனையோ முதியவர்களை நான் பார்த்திருக்கிறேன். வெறும் மூன்று வேளை சாப்படு அல்ல அவர்களின் வாழ்க்கை. மூப்பு காலத்தில் அவர்களுக்கு என்ன தேவை? பராமரிப்பு, துணை, பரிவு, மரியாதை. (அவர்களையும் மனிதர்களாய் நினைப்பதுவே பெரிய மரியாதைதான்).

பராமரிப்பில் உணவு மட்டுமில்லை, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளும் அடங்கும். இந்தப் பணிவிடைகள் இந்தக் காலத்து குடும்ப அமைப்பில் சாத்தியம்தானா? வேண்டா வெறுப்பாய் செய்யும் குடும்பத்தினரைவிட அதனை கனிவோடு செய்ய பயிற்சி பெற்ற பணிப்பெண்கள் எந்த விதத்தில் குறைந்து போனவர்கள்? (இந்தியாவில் இந்தப் பயிற்சி குறைவாக இருக்கலாம். அதை வேறொரு இடத்தில் விவாதிப்போம்)

மூன்று தலைமுறைகள் ஒரே வீட்டுக்குள் வாழ்கிறபோது ஏற்படும் முட்டல் மோதல்களில் முகம் கொடுத்துப் பேசக்கூட முடியாத நிலைதான் பெரும்பாலான வீடுகளில் ஏற்படுகிறது. ஒரு வார்த்தை பேச ஆளில்லாமல் தவிக்கும் பெரியவர்களை நாம் கண்டதில்லையா? முதியோர் இல்லங்களில் அவர்களைப் போல் இருக்கும் மனிதர்கள் அவர்களை இன்னும் அதிகம் புரிந்து கொள்வார்களே! ஒருவித ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் இருக்குமல்லவா? நண்பர்களை விட நல்ல துணை வீட்டில் கிடைக்குமா?
தங்களுடைய தேவை இருக்குமிடத்தை முதியோர் மிகவும் விரும்புவார்கள் என்பது என் எண்ணம். வீட்டில் பாரமாயிருப்பதை விட முதியோர் இல்லங்களில் யாருக்கேனும் பேச்சுத் துணையாக இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாமே ஒரு வேளை முடிவு செய்து கொள்கிறோமோ?

மேலை நாடுகளில் முதியோருக்கு பல விதங்களில் அரசாங்கம் ஆதரவு தருகிறது. முதியோருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கவுன்சலிங் என்று பலவிதங்களில் அவர்களுக்கு விசேஷ கவனம் செலுத்தப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இதற்காகவே பயிற்சியெடுத்த பணியாளர்கள் அமைவதுதான். உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் முதியோரைப் பராமரிக்க இவர்கள் பயிற்சியளிக்கப் படுகிறார்கள்.
மற்றொரு முக்கிய வேறுபாடு மேலை நாடுகளில் பிள்ளை 16 வயதை அடைந்துவிட்டால் அவனுக்கு ஒரு தனி வாழ்க்கை அமைந்து விடுகிறது. அதுவரை கண்ணுக்குத் தெரியாமல் பிணைத்திருந்த ஒரு இழை அறுந்து போகிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கிருக்கும் எதிர்பார்ப்பு குறைந்து போகிறது. நம்மூரில் 25 வயதிலும் பெற்றோரின் சம்பாத்தியத்தில் வாழ்கிற பிள்ளைகள் சகஜம். அதே போல் பெற்றோருக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் மீது எமோஷனல் டிபெண்டன்ஸ் வந்து விடுகிறது.

இங்கு எத்தனையோ முறை வயதானவர்களுக்கு உதவப்போய் மூக்குடை பட்டிருக்கிறேன். 'என்னால் முடியும். நன்றி' என்று கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள். 90 வயதில் காரில் சூப்பர் மார்க்கெட் செல்லும், தானே சமைத்துச் சாப்பிடும் பெண்மணிகளைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் நம்மூரில் முக்கியமாக முதிய பெண்களிடம் ஒருவித சுய பச்சாதாபத்தைப் பார்க்கமுடிகிறது. அதற்கு சமூக அமைப்பு காரணமாக இருக்கலாம். காலம் மாறி வருகிறது. இந்த நிலையும் மாறலாம்.

என் நண்பரின் தாய், 'எனக்கு நல்ல பென்ஷன் வருகிறது. ஒரு நல்ல முதியோர் இல்லமாகப் பார்த்து சொல்லம்மா. என்னைப் போன்றவர்களுடன் வசிக்க வேண்டும் போலிருக்கிறது. நிறைய பேசவேண்டும், எழுத வேண்டும் போலிருக்கிறது' என்று என்னிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயத்துக்கு இன்னொரு கோணம் இருப்பதைத்தான் இது காட்டுகிறது. எத்தனை வீடுகளில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தாதிகளாக முதியோர் நடத்தப்படுகின்றனர்!

இப்படி எழுதுவதால் நான் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் வலுக்கட்டாயமாகக் கொண்டு தள்ளச் சொல்வதாக அர்த்தமில்லை. தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளாமல் மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதில் தவறில்லை என்பதுதான் எனது வாதம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 20, 2005

விஜய் - ஒரு நல்ல கலைஞன் வீணாகிறார்!

Your Ad Here

விஜய் வந்த புதிதில் எனக்கு அவரைக் கண்டால் ஆகாது. மகா மசாலாவான படங்களில் அவரைக் கோழிக் குருமா போலத்தான் ப்ரசன்ட் பண்ணினார் அவர் தந்தை சந்திரசேகர். பூவே உனக்காகவில் விக்ரமன் அவருக்கு மறுபிறவி அளித்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பாத்திரத்துக்கு விஜய் நன்றாகப் பொருந்தியிருந்தார். காமெடி, காதல் என்று கலந்து கட்டி பொறுப்பாக நடிக்கவும் செய்திருந்தார்.

பிறகு வழக்கம்போல சில படங்கள் செய்தாலும் காதலுக்கு மரியாதையில் மீண்டும் ஒரு நல்ல நடிகன் என்று நிரூபித்தார். அதற்குப் பிறகு என்னவாயிற்றென்றுதான் தெரியவில்லை. சொல்லி வைத்தார் போன்று 4 பாட்டு + 8 சண்டை + கொஞ்சம் காமெடி என்கிற ரீதியில் ஒரே ஃபார்முலாப் படங்கள். சகிக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் (ரஜினி ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட் - அவரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்)

நான் ஆக்ஷன் படங்களுக்கு எதிரியில்லை. கில்லியை வெகுவாக ரசித்தேன். கில்லியில் அருமையாக காமெடி செய்திருந்தார். பெரிதாக பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல் அடக்கி வாசித்திருந்தார்.

ஆனால் அதற்கு முன் வந்த பகவதி, திருமலை எல்லாம் காணச் சகிக்காத கொடுமை. ஒரேடியாக அவர் துதிபாடும் படங்கள் ரொம்பவே ஓவர். இப்போது வந்திருக்கும் சிவகாசியையும் சேர்த்துதான். பாதிப் படத்திலேயே எழுந்து வரவேண்டியதாகப் போயிற்று.

சச்சின் காதல் படமென்றாலும் நடிப்பில் அநியாயத்துக்கு செயற்கை. 'அட நான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்களப்பா' என்கிற அலட்சியம் தெரிந்தது.

விஜய்க்கு நன்றாக நடனம் வரும், காமெடி அற்புதமாய்ப் பொருந்துகிறது, நன்றாக சண்டையிடுகிறார், தேவை ஏற்பட்டால் நன்றாக நடிக்கவும் செய்கிறார் - ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இருந்தாலும் வெறும் ஃபார்முலா நடிகராக வீணாவதேனோ? (இதில் கொடுமை என்னவென்றால் இது அவர் தந்தை காட்டிய வழியாம்!)

பணம் வருகிறது, புகழ் வருகிறது என்பதுதான் காரணமென்றால், பூவே உனக்காக படம்தானே அவரை அடையாளம் காட்டியது? காதலுக்கு மரியாதைதானே ஒரு இடம் பெற்றுத் தந்தது?

இப்படியே போனால், 80 வயதில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு வெளியில் ஊர் பொறாமைப் படும் அளவுக்கு பணம், புகழ் என்று எல்லாம் குவிந்திருக்கலாம்; ஆனால் அவருக்குள் ஒரு நிறைவு இருக்குமா என்பது கேள்விக்குறி.

விஜய், யோசிப்பது நலம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, December 18, 2005

தமிழ் எழுத்தாளர்களின் பிரச்சனைகள்

Your Ad Here

தமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என்ற தலைப்பில் பத்ரி எழுதியுள்ள பதிவுக்குப் பதிலாக எனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. தமிழ் நூல்கள் அதிகம் வருவதில்லை என்ற அவரது கருத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

நல்ல படைப்புகளைத் தமிழ் பதிப்புலகம் ஊக்குவிக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. நிலாச்சாரலில் எழுதுகிற எத்தனையோ படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை புத்தகமாக வெளியிட முயல்கிறபோது கொஞ்சம் மனம் தளர்ந்து போவதைத்தான் பார்க்கிறேன். இன்றைய நிலையில் அநேகமாக தமிழ் எழுத்தாளர்கள் தமது புத்தகப் பதிப்புக்கு ஆகும் செலவைத் தாமே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். அயல்நாட்டுத் தமிழர்களுக்கு இது ஒருவேளை சாத்தியமாகலாம். தமிழ் நாட்டில் இருக்கும் நல்ல எழுத்தாளர்களுக்கு இது வசதிப்படுமா? அப்படியே வசதிப்பட்டாலும் இது ஒரு சுயவிளம்பரமாகக் கருதப்படுமோ என்றெண்ணி கூட்டுக்குள் சுருங்கிக் கொள்பவர் எத்தனை பேர்!

புதியவர்களை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் காசு பண்ணும் பதிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில அபத்தமான புத்தகங்களைப் பார்க்கையில் இதனால் பதிப்பாளரைத் தவிர யாருக்கு லாபம் என்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்திருக்கிறது. இப்படிப்பட்ட நூல்கள் எதிர்கால சந்ததிக்கு எப்படிப்பட்ட பதிவுகளாக அமையும் என்ற பயமும் ஏற்படுகிறது.

தவிர, பணம் இருந்தால் எந்தக் குப்பையையும் புத்தகமாகப் போடலாம் என்ற நிலையைப் பார்க்கிற போது புத்தகம் எழுதும் ஆசையே விட்டுப் போகிறது என்பதுவும் நிதர்சனம்.

இதனால் வெளிவரும் தமிழ் நூல்கள் எல்லாமே குப்பை என்றோ எல்லா தமிழ்ப் பதிப்பகங்களுமே மோசம் என்றோ நான் சொல்வதாகத் தயவு செய்து தவறாக அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள்.

தமிழ் பதிப்பாளர்களுக்கும் பல சிரமங்கள் உண்டு என்பதை நானறிவேன். பொதுவாகவே நம் சமூகத்தில் மேலை நாடுகள் அளவுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கிடையாது என்பதால் புத்தகங்களை விற்பனை செய்வது கடினமாக இருக்கலாம். எழுத்தாளர்களுக்கு ராயல்டி தர இயலாத நிலை கூட புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியிட கைக்காசை செலவு செய்ய வேண்டும் என்ற அவல நிலையை ஜீரணித்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை.

நான் கேட்டுக் கொள்வதெல்லாம் பத்ரி, பா.ரா போன்ற ஆர்வலர்கள் இதற்கான காரணங்களை இன்னும் ஆழ்ந்து ஆராய்ந்து ஆவன செய்யவேண்டும் என்பதே!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 17, 2005

கௌவரம் ரஜினிகாந்த்

Your Ad Here

நேற்று அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது கௌவரம் படத்தின் சில காட்சிகளைக் காண நேர்ந்தது.

முதல் காட்சியில் கண்ணன் சிவாஜியும் உஷா நந்தினியும் உரையாடுவார்கள். அடுத்த காட்சியில் நாகேஷ் கண்ணனைப் பற்றி ரஜினிகாந்த் சிவாஜியிடம் கோள்மூட்டுவார். இந்த இரண்டு காட்சிகளிலும் நடித்தவர் ஒரே மனிதர்தான் என்று நம்புவதற்குக் கடினமாய் இருந்தது. பாடி லாங்குவேஜிலேயே அவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார் மனிதர். இவ்வளவுக்கும் இரண்டாவது காட்சியில் வாயில் பைப்பை வைத்துக் கொண்டு வெறுமனே நின்று கொண்டிருப்பார். முகத்தில் கூட அவ்வளவு எக்ஸ்ப்ரஷன்ஸ் காட்ட மாட்டார். ஆனால் நிற்கிற தோரணையே ஆயிரம் உணர்ச்சிகளைச் சொல்லும். என்ன மாதிரி மனிதரை இழந்துவிட்டது தமிழ் சினிமா என்கிற ஆதங்கம் எழுந்தது.

சிவாஜியின் நடிப்பில் நாடக பாணி தெரியும் என்ற விமரிசனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் இன்னும் இந்திய சினிமாவே இயல்பான நடிப்பை முழுமையாய் அரவணைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

சிவாஜி வெகு இயல்பாய் செய்த படங்களில் ஒன்று முதல் மரியாதை. அதைப் பற்றித் தனியே நினைத்திருக்கிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 16, 2005

'உன்னை நானறிவேன்' கமல்

Your Ad Here

குணாவில் வரும் 'உன்னை நானறிவேன்' பாடல் எனது ஆன்மாவைத் தொட்ட பாடல்களில் ஒன்று. ஜானகியின் குரலை விட வரலட்சுமியின் குரலில் பாவம் அதிகம் இருந்ததாய்ப் படும். மனநிலை சரியில்லாத மகனைக் குறித்த இயலாமை வெளிப்படும்.

நான் யாருக்கும் சட்டென்று ரசிகையாகி விடுகிற ரகமல்ல. கமலை எனக்கு சில படங்களில் மிகவும் பிடிக்கும்; சில படங்களில் அறவே பிடிக்காது. அப்படிப் பிடித்த படங்களில் ஒன்று குணா. பல காட்சிகளில் மிகவும் இயல்பாய் செய்திருப்பார். அதில் ஒன்று ரேகா பாடும் 'உன்னை நானறிவேன்' பாடலுக்கு முன் இடம் பெற்றிருக்கும்'வரும் வரும் வரும்' காட்சி. அந்தக் காட்சிக்காகவே கமலுக்கு ஆயிரம் விருதுகள் கொடுக்கலாம்.

என்னைக் கவர்ந்த அவரின் மற்றொரு பர்ஃபார்மன்ஸ் பாலச்சந்தரின் 'அவர்கள்' படத்தில். மலையாள ஜானியாகவே வாழ்ந்திருப்பார். கமல் ஒரு காட்டாற்று வெள்ளம் போல என்று நினைக்கிறேன். அவரை நெறிப்படுத்த நல்ல இயக்குனர் தேவை என்பது என் எண்ணம். பாலச்சந்தர் அதைப் பல சமயங்களில் நன்றாகச் செய்திருந்தாலும் புன்னகை மன்னனில் சற்று கோட்டை விட்டுவிட்டார்

பல படங்களில் கமல் ஒவர் ஆக்ட் செய்து முற்றிலும் சொதப்பி எடுத்துவிடுவார். அவருடைய முக்கால்வாசி கமர்ஷியல் படங்கள் அப்படித்தானிருக்கும் (எ.கா: உயர்ந்த உள்ளம், காக்கி சட்டை, ஆளவந்தான், பீ.கே.எஸ்)

காமெடி செய்யும் கதாநாயகர்களில் முதலிடம் கமலுக்குத்தான். சதி லீலாவதி, மை.ம.கா.ராஜன், ஷண்முகி எல்லாம் க்ளாஸ் காமெடி. ஆனால் காதலா காதலா, வசூல் ராஜாவிலெல்லாம் ஏகத்துக்கு சொதப்பி இருப்பார்.

கமல் இன்னும் அவரின் முழு ஆற்றலையும் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது என் கணிப்பு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 15, 2005

முதல் கடிதம்

Your Ad Here

அதென்னவோ தெரிய்லை சின்னப் புள்ளையா இருக்கும்போதே நமக்கு லெட்டர் எழுதறதுல அலாதிப் பிரியம்.

மொதல் மொதலா எப்ப லெட்டர் எழுத ஆரம்பிச்சேன்னு கேட்டா ஆடிப் போயிருவீங்க - 7 வயசுல ஆரம்பிச்சேன். ரெண்டாங்கிளாஸ் லீவில என் கேங்க் மக்களுக்கெல்லாம் தனித் தனியா நலைஞ்சு வரில லெட்டர் எழுதி, அதை மடிச்சு ஐஸ் பாக்கெட்டுக்குள்ள போட்டு மெழுகுதிரில காட்டி சீல் பண்ணிக்கிட்டிருக்கும்போது மாட்டிக்கிட்டென்.

பக்கத்துவீட்டுப் பெரியம்மா, "என்ன செய்யிற, எங்க குடு பாப்போம்"னு வாங்கி அவ்வளவையும் படிச்சி எல்லாருக்கும் காமிச்சி சிரிச்சிப் போட்டு கடைசில "நல்லாத்தாண்டா எழுதிருக்கா"ன்னாங்க. எனக்கு வெக்கம்னா வெக்கம்.
அப்புறம் வழக்க்கமா அமெரிக்காவில படிச்சிக்கிட்டிருந்த சித்தப்பாவுக்கு ஆறு மாசத்துக்கொருக்க வீட்டில எல்லாரும் எழுதுவோம். அத அப்பா படிச்சி திருத்தி அப்புறம் அனுப்புவாங்க. எட்டாவது படிக்கும்போது டீச்சரா வேலை பாத்துக்கிட்டிருந்த சித்தி எனக்கு லெட்டர் எழுதியிருந்தாங்க. எனக்கு தலை கால் புரியலை. என் பேருக்கு வந்த முதல் லெட்டர். பதில் எழுதணும்னு ஒரே பரபரப்பு. அப்பாவும் "சரி, எழுது"ன்னுட்டாக்க. நான் பாட்டுக்கு இன்லேன்ட் கவர் வாங்கி லெட்டர் எழுதி போஸ்ட் பண்ணியாச்சு. சித்தி அதுக்கு பதில் போட்ட பெறகுதான் வீட்டுக்கு விஷயம் தெரியுது. 'இன்னும் யாராருக்கு லெட்டர் குடுத்தாளோ'ன்னு அப்பாவுக்கு பயம் எடுத்திருச்சி.உக்கார வச்சு ஒரே அறிவுரை. இனிமே யாருக்கு லெட்டர் எழுதினாலும் அப்பாகிட்ட காட்டிட்டுதான் போஸ்ட் பண்ணணும்னு எனக்கு வெளங்கிற மாதிரி தெளிவா சொன்னாங்க.

காலேஜ் போன பிறகு விதவிதமா தோழிகளுக்கு கடிதம் எழுதுவோம் - ஊர்க்கதை உலகக் கதை எல்லாம் எழுதி அதுக்கு வியாக்யானம் வேற குடுத்து.... காகிதத்தில ஒரு எழுத்துக்குக் கூட மீதி இடம் இல்லாத மாதிரிதான் எழுதறது.

'நம்மால் முடியும் தம்பி' தொடரை விகடன்ல படிச்சிட்டு டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்திக்கு நம்ம எழுதின லெட்டர்ல இம்ப்ரஸ் ஆகி ஃபோன் பண்ணிப் பேசினாரு பாருங்க, அதுதான் நம்ம கடுதாசிக்குக் கிடைச்ச முதல் பெருமை.
அட, எல்லாம் போயிருச்சப்பா! இப்ப அன்புள்ளன்னு கூட ஆரம்பிக்காம ஒரு வரிலதான் எல்லாத்துக்கும் மின்பதில் போடறமாதிரி போயிருச்சி.

ரெண்டு வருஷம் முன்னால சிந்தனை சிற்பிகள் கேட்டிருந்தாங்கன்னு வாவி பாளையத்தில முதியோர் கல்வி மாணவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 30 பதில் வந்தது. மனசே நெகிழ்ந்து போச்சு.
இப்பவும் முதியோர் இல்லத்தில இருக்கிறவங்களுக்கு எழுதணும்னு ஆசைஇருக்கு. தேடிக்கிட்டிருக்கேன். யாருக்காவது கனெக்ஷன் இருந்தா சொல்லுங்க

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 14, 2005

கவுண்டமணி வாழ்க!

Your Ad Here

ரொம்ப நாளா இதை யார்கிட்டேயாவது சொல்லணும்னு தோணிக்கிட்டே இருந்திச்சி. இருக்கவே இருக்கு வலைப்பதிவு!

தலைவர் கவுண்டமணியை ரொம்ப நாளா காணாம கொஞ்சம் வெசனமா கெடக்கு. சரி, கவுண்டரதேன் காணும், அவரு பழைய தமாசையாவது நெனச்சுப் பாக்கலாம்னு கெள்ம்பீட்டேன்

1. தலைவரு 'எப்ப கடா வெட்டுவாங்க'ன்னு நான் பாடும் பாடல்ல என்னமா கலக்கி இருப்பாரு! பாத்திருக்கீகளா? அந்த சோக்க டிவிலயும் காட்டா மாட்டேங்குறாக, டிவிடிலயும் கெடைக்க மாட்டங்குது. அதே படத்தில விருந்தாளி வாராகன்னு கறி வாங்கிட்டு வரச்சொல்லி பொண்டாட்டி காசு குடுத்து அனுப்புவா. குவார்ட்டர் அடிச்சிட்டு ரெண்டு ரூபாய்க்கு பை நெறைய அடுப்புக்கரி வாங்கிட்டு வந்து நல்லா மொத்து வாங்குவாரு.

2. எங்க தங்க ராசான்னு நெனக்கேன் - செயில்லருந்து வந்து சொத்துக்காக ஒரு கெழவரோட பேரனா நடிப்பாரு. அவர செந்தில் அப்பப்ப மாட்டிவிடுறதும் கவுண்டரு வாய் பேச முடியாம விடுற லுக்கும் சுப்பர்! அந்த ஒரு லுக்கிலயே செந்திலை 'இந்தத் தலையா அந்தத் தலையா'ன்னு வஞ்சி, மிதிச்சி, துவைச்சி காயப் போட்ருவாரு.

2.வாழப்பழக் காமெடியைப் பத்தி நான் சொல்லவே வேண்டாம்.முக்குக்கு முக்கு மைக் செட்ல போட்டு வசனமெல்லாம் எல்லாப் புள்ளக்காடுகளுக்கும் மனப்பாடம் ஆயிருச்சி. அத எப்ப நெனச்சாலும் சிரிப்பு பொங்குதுல்ல.

3. கவுண்டருக்கு சரியான சோடின்னா அது சத்திய ராசுதான். புது மனிதன்னு ஒரு படத்தில ரெண்டுபேரும் அடிக்கிற தமாசு தாங்க முடியாம வவுத்தப் பிடிச்சிக்கிட்டு குனிஞ்சிக்கிட வேண்டியதாப்போச்சு. 'பவ்யமா வாத்தியார் கிட்ட போங்கடா'ன்னு மனோரமா சொல்ல, கவுண்டரு சமையலுக்கு வச்சிருந்த வாழப்பூவ எடுத்து காதில மாட்டிக்கிட்டு கெளம்பிருவாரு.

4.இப்பிடித்தேன் இன்னொரு படம் - மாமன் மகள்னு நெனக்கேன். கோடீஸ்வரனா சதிதிய ராசு வேசம் போட தலைவரு ஜால்ராவா இருப்பாரு. போட்ட வேசம் கலைஞ்சு போயிரும். அது தெரியாம சத்திய ராசு கதை விட்டுக்கிட்டே போக அண்ட்ராயரோட கவுண்டரு தவழ்ந்து வந்து சத்யராசுகிட்ட "போதும்டா..."ன்னு சொல்ல்ற சீனு அம்புட்டு சிரிப்பா இருக்கும்

5. உள்ளத்தை அள்ளித்தா படத்தில செந்தில் மணிவண்ணன கடத்திக்கிட்டுப் போயி போன் செய்வாரு. நாப்பதாயிரத்திலருந்து கொறச்சு கொறச்சு நானூறு ரூபாயில வந்து நிப்பாரு. "வேன் வச்சில்லாம் கடத்திருக்கோம் கொஞ்சம் பாத்துக் குடுங்க'ன்னு செந்தில் அழாத குறையா கேக்க,"ஒரு அம்பது ரூவா போட்டுத் தாரேன். அவன சேவ் பண்ணிக் கூட்டிவா"ம்பாரே, செம லொள்ளுல்ல. படம் முழுக்கா அவரு ரவுசு தாங்காது. அந்தப் படத்துக்கு திருப்தியா காசு குடுக்கலாம்யா.

இப்பிடி சும்மா நெனச்சுப்பாத்து சிரிக்க வேண்டியதுதான் போல. கவுண்டருக்கு வயசாயிருச்சி. இனிமே புதுப்படம் என்னத்த நடிக்கப்போறாரு.
நல்லா சிரிக்கா வைக்க மவராசன். நெறையா நாளு வாழட்டும்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, December 12, 2005

நாட்டுப்பற்று என்பது ஒரு மாயைதானோ?

Your Ad Here

அமீர்கானின் என்.டி.டி.வி நேர்முகம் எனக்குள் இருந்த சில கேள்விகளை உசுப்பிவிட்டுவிட்டது. சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் குடியேறல் விஷயமாய் பேசிக்கொண்டிருந்த போது, 'உலகமே ஒரு கிராமம் போல சுருங்கிவிட்ட பிறகு எந்த நாட்டின் குடிமகனாய் இருக்கிறோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பாஸ்போர்ட், விசா எல்லாம் வெறும் காகிதம், அவ்வளவுதான்.நாட்டுப் பற்று என்பதெல்லாம் விரைவில் போய்விடும் ' என்றார். சிந்தனையைத் தூண்டியது அவர் கருத்து.

பின்பு 'இந்தியர்களை இணைப்பது எது?' என்ற கேள்வி ஒரு மேலை நாட்டுக்காரரால் எழுப்பப்பட, மீண்டும் அந்த சிந்தனை வலுப்பெற்றது. இந்தி தெரியாத தமிழர் ஒருவர் வட இந்தியாவை விட அமெரிக்கா ஒன்றும் தனக்கு அன்னியமாய்த் தெரியவில்லை என்று நேர்மையாகச் சொன்னபோது அது எனக்கு நியாயமாகத்தான் பட்டது.

இங்கிலாந்தில் 30 ஆண்டுகளாக வசிக்கும் நண்பர் ஒருவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்குதான் கழித்திருப்பதால் தன் தாய்நாட்டையும் இங்கிலாந்தையும் ஒரே போல்தான் பார்க்கமுடிகிறதென்றார். எனக்கு அதில் தவறொன்றும் இருப்பதாகப்படவில்லை.

அப்படியானால் நாட்டுப் பற்றென்பது என்ன? பிறந்த நாட்டின் மீது வைத்திருக்கும் அன்பா? இல்லை வசிக்கிற நாட்டின் மேல் வைத்திருக்கும் பாசமா?

ஒரு வெள்ளத்தில் நல்லவனான சீனன் ஒருவனும் கெட்டவனான இந்தியன் ஒருவனும் அடித்துச் செல்லப்படும்போது நமக்கு ஒருவரை மற்றும் காப்பாற்றுகிற வல்லமை இருந்தால் யாரைக் காப்பாற்றுவோம்?

'நாடு என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட பிரிவினை. ஆன்மீகவாதிக்கு எல்லா நாடும் எல்லா மக்களும் சமம்தான்' என்பது போல் நாட்டுப்பற்று என்பது ஒரு மாயைதானோ?

பி.கு: படித்தலும் பகிர்தலும் சிந்தையை விரிவுபடுத்தும் என்பது என் எண்ணம். அதனால்தான் என் குழப்பங்களை இங்கு கேள்விகளாக வைக்கிறேன். என் கருத்துக்களெல்லாம் சரி என்று சொல்ல வரவில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 10, 2005

குஷ்பு பற்றி அமீர்கான்

Your Ad Here

இன்று இரவு என்டிடிவியில் அமீர்கானின் நேருக்கு நேர் கண்டேன். அவரின் பதில்களிலிருந்த நேர்மையும் துணிச்சலும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. வழக்கமாக பிரபலங்களிடம் இருக்கும் அலட்டலையும் அவரிடம் காண முடியவில்லை.

* சரியோ தவறோ தனி மனிதருக்குக் கருத்துச் சொல்ல உரிமை உண்டு என்பதை மிகவும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் குஷ்பு, சானியா மிர்ஸா போன்றோரின் அனுபவங்கள் மிகவும் துரதிர்ஷ்ட வசமானவை என்றும் இளைஞர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

* லகான் திரைப்படத்தை ஆங்கிலேயருக்கெதிரான இந்தியரின் போராட்டமாகத் தான் பார்க்கவில்லை என்றும், ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரின் எழுச்சி என்றே தான் கருதுவதாகவும் கூறினார். அதாவது அந்தப்படம் நாட்டுப்பற்றை வலியுறுத்துகிற படம் அல்ல என்றார். (இதைச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்தானே!)

* பூமி அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமானது என்றும் மனிதனாய் வகுத்துக் கொண்ட எல்லைக் கோடுகளைத் தன்னால் பிரிவினைக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இது மிக நல்ல கருத்தாகவே பட்டது. (இதற்குத் தனியாக ஒரு பதிவு எழுத முயற்சிக்க வேண்டும்)

* இந்திய ஊடகங்கள் குறித்த தன் கவலையை வெளிப்படுத்தினார். சமுதாய அக்கறை இல்லாமல் ஊடகங்கள் செயல்படுவதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக இருந்து கொண்டு பிரணாய் ராய் அமீரின் கருத்தை அமோதித்ததில் பிரணாயின் அப்ஜெக்டிவிடி தெரிந்தது.

மொத்தத்தில், போலித்தனமில்லாத, பூசி மெழுகாத ஒரு நல்ல நிகழ்ச்சி.

Well, I am impressed with Amir!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 09, 2005

சூப்பர் ஸ்டாராகத் தேவையான தகுதிகள்

Your Ad Here

நம்மூரில் சூப்பர் ஸ்டாராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். விடை ஒன்றும் கிடைத்தபாடில்லை.

சிவாஜியை விட எம்ஜிஆரும் கமலை விட ரஜினியும் எந்த விதத்தில் சிறந்தவர்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவே இல்லை.
கண்டிப்பாக எம்.ஜி.ஆரும் ரஜினியும் ஆக்ஷனில் பிரகாசித்தார்கள் என்றால் சிவாஜியும் கமலும் பெர்ஃபாமன்ஸில் பின்னி எடுக்கிறவர்கள்தானே. சொல்லப்போனால் இவர்கள் அனைவரையும் நடிகர்கள் என்ற அளவில் பார்த்தால் சிவாஜியும் கமலும்தான் முன் நிற்பார்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள். ஆனால் ஏன் நம் ஜனத்துக்கு எம்.ஜி.ஆரும் ரஜினியும் உசத்தியாகத் தெரிகிறார்கள்?

'நம்மால் செய்ய முடியாதவற்றை இந்த ஆட்கள் செய்கிறார்கள்' என்ற பிரமிப்பா? நிழலை நிஜம் என்று நம்புகிற பிரச்சனையோ? இல்லை, தமது நடிப்பால் நம் உள்ளத்தைத் தொடுபவர்களை விட அன்றாடப் பிரச்சனைகளை சில நிமிடங்கள் மறக்கடிக்கிறவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்களோ?

ஆனால், எம்.ஜிஆரைத் தம் 'வாத்தியாராக' பெரும்பான்மையான கிராம மக்கள் ஏற்றுக் கொண்டிருகிறார்கள் என்றால், ஒரு வயதுப் பையனுக்குக் கூட ரஜினியின் ஸ்டைல் பிடிக்கிறதென்றால், நமக்குத் தெரியாத காரணங்கள் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அல்லது இப்படி நியாயப்படுத்துகிற காரணங்கள் எதுவுமில்லாத 'தலை எழுத்தோ' என்கிற கேள்வியையும் உதற முடிவதில்லை.

இதற்கு மனோதத்துவ ரீதியான அல்லது கலாசார ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும் என்றே நம்புகிறேன். வல்லுனர்களின் கருத்தறிந்து ஒரு தீஸிஸ் எழுத ஆவல் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 08, 2005

தமிழ்க் காதலர்

Your Ad Here

கனடாவில் வசிக்கும் கவிஞர் புகாரியை அநேகர் அறிந்திருப்பீர்கள். புகாரிக்கு தமிழின் மேலுள்ள காதல் ஆத்மார்த்தமானது என்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். மற்ற மொழிகளின் மேல் துவேசம் காட்டும் வெறி அல்ல அது. தன் தாயின் மேல் வைக்கும் அன்பு போல அதில் ஒரு உரிமையும் யதார்த்தமும் இருக்கும் அவர் தமிழின்பால் கொண்டுள்ள அன்பில்.

நிலாச்சாரல் ஆரம்பித்த புதிதில் (2001) பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. புகாரி அதற்கான காரணம் கேட்டபோது என் பிரச்சனைகளைச் சொல்ல, "ஆங்கிலத்தில் எழுத உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறர்கள். தமிழில் எழுத தமிழரை விட்டால் யார் இருக்கிறார்கள்?" என்றார். அந்தக் கேள்வி எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதென்னவோ உண்மை. இன்று நிலாச்சாரலில் 90% கட்டுரைகள் தமிழில் இருப்பதற்கு மூல காரணம் புகாரியின் இந்தக் கேள்விதான் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.அதிகம் எழுதாமலிருந்த என்னை உந்தித் தள்ளி அதிகம் எழுத வைத்ததும் அவர்தான்.

அவருக்குத் தமிழ் மேலிருக்கும் காதல் எவ்வளவு ஆழமானது என்பதற்கு ஒரு உதாரணம் இங்கே:

சமீபத்தில் தனது கவிதை ஒன்றை நிலாச்சாரலில் பிரசுரத்துக்காக அனுப்பி இருந்தார். பொருள் நன்றாக இருந்தாலும் சொல்நயம் அவரது வழக்கமான தரத்துக்கு இல்லை என்று தோன்ற அதை அப்படியே அவரிடம் சொல்லி, நிலாச்சாரலில் வெளியிடாவிட்டால் தவறாக எண்ணிக் கொள்ள மாட்டீர்களே எனக் கேட்டிருந்தேன்.அதற்கு அவர் அளித்த இந்த பதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது:

///தமிழின் தரத்துக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பு.
நானெழுதிய கவிதைகளெல்லாம் உங்களுக்கு ஏற்புடையனவாய் இருக்கவேண்டும்என்பதில்லை. நிலாச்சாரலின் தரக்கட்டுப்பாட்டின்படி நீங்கள் தேர்வுசெய்துதான் இடவேண்டும். அதையே நான் அழுத்தமாக விரும்புகிறேன்.
விரைவில் இன்னொரு கவிதை அனுப்புகிறேன். அதுவும் ஏற்புடையதில்லையென்றால்தயவுசெய்து நிராகரியுங்கள். நான் மகிழவே செய்வேன்.
தேர்வு செய்யப்பட்ட கவிதைகளுக்கு மத்தியில் என் கவிதை பிரசுரமாவதே எனக்குமகிழ்ச்சி.///

இரண்டு கவிதைகள் எழுதிய புதுக்கவிஞர்கள் கூடத் தங்கள் கவிதை தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் 'உங்களுக்கு ரசனை இல்லை' என்று காட்டமாய் பதில் அனுப்புகிற இந்தக் காலத்தில் நான்கு புத்தகங்கள் வெளியிட்டும் இவ்வளவு தன்னடக்கத்தோடு அவர் சொன்ன பதில் அவர் சிறந்த கவிஞர் மட்டுமல்ல ஒரு பக்குவப்பட்ட மனிதர் கூட என்றே தெரிவித்தது. அது மட்டுமில்லை, ஒரு எழுத்தாளராக இதே பக்குவத்தோடு நாமும் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சியையும் எனக்குள் விதைத்தது.

கவிஞர் புகாரியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் அவரின் நேர்முகத்தை இங்கே காணலாம்:

http://www.nilacharal.com/tamil/interview/tamil_interview_235_1.asp

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 06, 2005

பாலகுமாரனும் கற்பு சர்ச்சையும்

Your Ad Here

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது பாலகுமாரனுடன் நடந்த ஒரு நேருக்கு நேரில் எதோ ஒரு கேள்வி கேட்கப் போய் அது கற்பு குறித்த சர்ச்சையில் போய் முடிந்தது. அவர் சாவகாசமாக, "என்னம்மா இஞ்சினியரிங் படிச்சுக்கிட்டு இன்னும் கற்புன்னெல்லாம் பேசிக்கிட்டிருக்கே" என்றார் (போட்டுக் கொடுக்கறதுக்காக சொல்லலை, சாமி). அவர் எப்படி அப்படி சொல்லப் போயிற்றென்று அப்போது எனக்குக் கோபமான கோபம் . இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அவருடைய வாழ்க்கை அனுபவத்தில் பாதி கூட அப்போது எனக்குக் கிடையாது. ஆனாலும் கூட அவர் சொல்வதற்கு இன்னொரு கோணம் இருக்கலாம் என்று அப்போது எண்ணத் தோன்றவில்லை. கண்மூடித்தனமான கோபம்!

அதே போல் அதற்கு அடுத்த வருடம் நடந்த நேருக்கு நேரில் "வாழ்க்கையில் தியாகம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. மனிதர்களின் செயல்கள் அனைத்திலும் ஒரு சுயநலம் இருக்கிறது" என்று அவர் சொல்ல, நான் பதிலுக்கு "காந்திஜி நாட்டுக்காக தியாகமே செய்யவில்லை என்கிறீர்களா?" என்று கேட்க, "இதற்கு பதில் சொன்னா நான் சிக்கல்ல மாட்டிக்குவேன். நீங்க நிறைய படிக்கணும்" என்று முடித்துக் கொண்டார். எனக்கு அவரை மடக்கிவிட்ட இறுமாப்பு.

இப்போது நினைத்துப் பார்த்தால் அவரை நான் மடக்கவில்லை, 'இதுக்கெல்லாம் சொன்னா புரிஞ்சுக்கற பக்குவம் வரலை' என்று புத்தகங்கள் பக்கம் கைகாட்டி விட்டாரென்றுதான் தோன்றுகிறது. இன்றைக்கு அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அவர் பதில்களில் இருந்த தத்துவார்த்தத்தைப் புரிந்து கொள்ளவாவது முடிகிறது. ஒரு வேளை இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஒப்புக் கொள்ளவே முடியுமோ என்னவோ!

'வாழ்க்கை ஒரு கடுமையான ஆசிரியர். தேர்வு முடிந்தபின் தான் பாடம் கிடைக்கும்' என்று எங்கோ படித்த நினைவு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, December 05, 2005

இந்து மதத்தில் 330 மில்லியன் (!!!) கடவுளர்கள்

Your Ad Here

நேற்று இரவு டாக்டர் ராபர்ட் வின்ஸ்டனின் 'கடவுளின் கதை' என்ற விவரணப்படத் தொடரின் முதல் பாகத்தைப் பார்க்க நேர்ந்தது. விவரணப்படத்தைக் கூட எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாக எடுக்க முடியும் என்று டாக்டர் வின்ஸ்டனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

28000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மத நம்பிக்கையிலிருந்து ஆரம்பித்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்து மதம் வரை வந்திருக்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் அழகர் திருவிழாக்காட்சிகளும் இருந்தன.

மூன்று ஆச்சரியத் தகவல்கள் தெரிந்து கொண்டேன்:

- மத நம்பிக்கை விவசாயத்திலிருந்துதான் வந்தது. தனது சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை சக்திகளை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதுதான் அவற்றை வணங்குகிற பழக்கம் ஏற்பட்டது

- புத்த மதம் சிலபேரால் நாத்திகத்துக்கு இணையாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம் புத்த மத கோட்பாட்டின் படி துன்பத்திலிருந்து விடுபடுவது தனிமனிதன் கையில்தானிருக்கிறதே ஒழிய கடவுளால் அவனை விடுவிக்கமுடியாது என்பதே.

- இந்து மதத்தில் 330 மில்லியன் (!!!) கடவுளர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இத்தொடரின் இரண்டாவது பாகம் ஞாயிற்றுக்கிழமை 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 01, 2005

அந்நியப்படுத்துகின்றனவா நம் கலாசார அடையாளங்கள்?

Your Ad Here

சந்திரவதனா எனது முந்தைய பதிவுக்குப் பதிலாக போட்டிருக்கும் பதிவு இங்கே:
http://manaosai.blogspot.com/2005/12/blog-post.html
இதைப் படித்ததும் புடவை அணிவது குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. முதல் முதலாக அலுவல் ரீதியான அயல்நாட்டுப் பயணத்திலாகட்டும் இப்போது இங்கிலாந்தில் பணிபுரியும் அலுவலகத்திலாகட்டும் நான் சுரிதாரும் புடவையும் சகஜமாய் அணிந்து கொண்டுதானிருக்கிறேன். அதைக்குறித்து நம்மவர்கள் பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். 'உங்களுக்கு அன்னியமாய்த் தெரிவதில் வருத்தமில்லையா?' என்று கேட்டிருக்கிறார்கள். எனக்கு இந்தக் கேள்விதான் புதிராக இருந்திருக்கிறது.
பிஸினஸ் நிமித்தமாய் இந்தியா வரும் மேற்கத்தியப் பெண்கள் அந்நியமாய்த் தெரிவதாக புடவைக்கும் சுரிதாருக்கும் மாறிக் கொள்கிறார்களா என்ன? ஏன் நமக்கு மட்டும் அந்தத் தன்னம்பிக்கை இருப்பதில்லை எனத் தெரியவில்லை. அயல்நாட்டில் இறங்கிய இரண்டாம் நாளே முடியை வெட்டிக் கொண்டு பொட்டைத் துறந்துவிட்டு நம் பெண்கள் சூட் அணிவது ஏன் என்பது எனக்குப் புரியாத புதிராகத்தானிருக்கிறது. இதுதான் அவர்கள் விருப்பமென்றால் அதில் கேள்வியேதுமில்லை. ஆனால் அந்நியமாய்த் தெரிவதால்தான் மாறுகிறோம் என்றால் அந்நியமாய்த் தெரியும் முகத்தையும் நிறத்தையும் மாற்றிவிட முடியுமா என்ன?
எனக்கென்னவோ மேற்கத்தியர்கள் உடையை வைத்தெல்லாம் நம்மை மதிப்பிடுவதாகத் தெரியவில்லை. அமெரிக்க நிறுவனத்துக்கு அலுவலகப் பணியாய் சென்றபோது புடவை அணிந்து சென்றதைப் பார்த்து சக இந்தியர்கள் 'இன்டீஸன்டாய் டிரஸ் செய்திருப்பதாக அமெரிக்கர்கள் நினைப்பார்கள்' என்று முகம் சுழித்தார்கள். ஆனால் என்னுடன் பணிபுரிந்த அத்தனை அமெரிக்கர்களும் என் உடை அழகாக இருந்ததாகப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள். அங்குமட்டுமில்லை, இத்தாலியிலும் இங்கிலாந்திலும் இதே கதைதான். நான் ஒரு நாள் ஜீன்ஸ் அணிந்து சென்றால் கூட 'உங்கள் நாட்டு உடைதான் வண்ணமயமாக அழகாக இருக்கிறது. நீ மேற்கத்திய உடைக்கு மாறாதே' என்று உரிமையாய் கேட்டுக் கொண்ட ஆங்கிலேய நண்பர்களும் உண்டு.
மற்றவர்களுக்கு எப்படியோ, எனது அனுபவத்தில் நமது கலாசார அடையாளங்கள் எனக்கு ஒரு போதும் பாதகமாய் இருந்ததில்லை. மாறாக சாதகமாகவே இருந்திருக்கின்றன.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.