முதியோர் இல்லங்கள் - ஒரு பருந்துப் பார்வை
உஷாவின் இந்தப் பதிவில் முதியோர் இல்லங்களைப் பற்றி கடுமையான வார்த்தைகளைப் பின்னூட்டங்களில் கண்டேன். முதியோர் இல்லம் என்று பேச்சை எடுத்தாலே நம்மில் பெரும்பாலோர் கண்ணை மூடிக்கொண்டு இதெல்லாம் கொடுமை, நரகம் என்று பேச ஆரம்பித்துவிடுவதுதான் சகஜமாக நடக்கிறது. இறுக கண்ணையும் மனதையும் இப்படி மூடிக்கொள்வதால் இந்த கான்சப்டின் நல்ல பக்கத்தைப் பார்க்காமல் போய்விடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.
மனசைத் தொட்டுச் சொல்லுங்கள் - எத்தனை பிள்ளைகள் வயதான பெற்றோரை சந்தோஷத்தோடு வைத்து பராமரிக்கிறார்கள். கடமையாய்ப் பராமரிப்பது வேறு, அவர்களை குழந்தைகளாக எண்ணி உள்ளன்போடு நடத்துவது வேறு. முக்கால்வாசிப் பிள்ளைகள் உலகம் என்ன சொல்லும் என்ற கடமைக்காகத்தான் பெற்றோரைத் தம்முடன் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இன்றைய வாழ்வின் நெருக்கடி அப்படி.
'வயசான காலத்தில சொன்ன பேச்சைக் கேட்டுக்கிட்டு பேசாம இருக்குதுங்களா பாரேன்', 'இது இருக்கறதுனால எங்கேயும் ஃப்ரீயா போக முடிய்யலை' என்ற முணுமுணுப்புகளை எத்தனை முறை கேட்டிருப்போம்? இதெல்லாம் முதியவர்களை காயப்படுத்தாதா?
'இதுககிட்ட சாப்பட்டுக்கா வந்து கிடக்கிறோம்' என்று கழிவிரக்கத்தோடு பேசுகிற எத்தனையோ முதியவர்களை நான் பார்த்திருக்கிறேன். வெறும் மூன்று வேளை சாப்படு அல்ல அவர்களின் வாழ்க்கை. மூப்பு காலத்தில் அவர்களுக்கு என்ன தேவை? பராமரிப்பு, துணை, பரிவு, மரியாதை. (அவர்களையும் மனிதர்களாய் நினைப்பதுவே பெரிய மரியாதைதான்).
பராமரிப்பில் உணவு மட்டுமில்லை, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளும் அடங்கும். இந்தப் பணிவிடைகள் இந்தக் காலத்து குடும்ப அமைப்பில் சாத்தியம்தானா? வேண்டா வெறுப்பாய் செய்யும் குடும்பத்தினரைவிட அதனை கனிவோடு செய்ய பயிற்சி பெற்ற பணிப்பெண்கள் எந்த விதத்தில் குறைந்து போனவர்கள்? (இந்தியாவில் இந்தப் பயிற்சி குறைவாக இருக்கலாம். அதை வேறொரு இடத்தில் விவாதிப்போம்)
மூன்று தலைமுறைகள் ஒரே வீட்டுக்குள் வாழ்கிறபோது ஏற்படும் முட்டல் மோதல்களில் முகம் கொடுத்துப் பேசக்கூட முடியாத நிலைதான் பெரும்பாலான வீடுகளில் ஏற்படுகிறது. ஒரு வார்த்தை பேச ஆளில்லாமல் தவிக்கும் பெரியவர்களை நாம் கண்டதில்லையா? முதியோர் இல்லங்களில் அவர்களைப் போல் இருக்கும் மனிதர்கள் அவர்களை இன்னும் அதிகம் புரிந்து கொள்வார்களே! ஒருவித ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் இருக்குமல்லவா? நண்பர்களை விட நல்ல துணை வீட்டில் கிடைக்குமா?
தங்களுடைய தேவை இருக்குமிடத்தை முதியோர் மிகவும் விரும்புவார்கள் என்பது என் எண்ணம். வீட்டில் பாரமாயிருப்பதை விட முதியோர் இல்லங்களில் யாருக்கேனும் பேச்சுத் துணையாக இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாமே ஒரு வேளை முடிவு செய்து கொள்கிறோமோ?
மேலை நாடுகளில் முதியோருக்கு பல விதங்களில் அரசாங்கம் ஆதரவு தருகிறது. முதியோருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கவுன்சலிங் என்று பலவிதங்களில் அவர்களுக்கு விசேஷ கவனம் செலுத்தப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இதற்காகவே பயிற்சியெடுத்த பணியாளர்கள் அமைவதுதான். உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் முதியோரைப் பராமரிக்க இவர்கள் பயிற்சியளிக்கப் படுகிறார்கள்.
மற்றொரு முக்கிய வேறுபாடு மேலை நாடுகளில் பிள்ளை 16 வயதை அடைந்துவிட்டால் அவனுக்கு ஒரு தனி வாழ்க்கை அமைந்து விடுகிறது. அதுவரை கண்ணுக்குத் தெரியாமல் பிணைத்திருந்த ஒரு இழை அறுந்து போகிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கிருக்கும் எதிர்பார்ப்பு குறைந்து போகிறது. நம்மூரில் 25 வயதிலும் பெற்றோரின் சம்பாத்தியத்தில் வாழ்கிற பிள்ளைகள் சகஜம். அதே போல் பெற்றோருக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் மீது எமோஷனல் டிபெண்டன்ஸ் வந்து விடுகிறது.
இங்கு எத்தனையோ முறை வயதானவர்களுக்கு உதவப்போய் மூக்குடை பட்டிருக்கிறேன். 'என்னால் முடியும். நன்றி' என்று கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள். 90 வயதில் காரில் சூப்பர் மார்க்கெட் செல்லும், தானே சமைத்துச் சாப்பிடும் பெண்மணிகளைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் நம்மூரில் முக்கியமாக முதிய பெண்களிடம் ஒருவித சுய பச்சாதாபத்தைப் பார்க்கமுடிகிறது. அதற்கு சமூக அமைப்பு காரணமாக இருக்கலாம். காலம் மாறி வருகிறது. இந்த நிலையும் மாறலாம்.
என் நண்பரின் தாய், 'எனக்கு நல்ல பென்ஷன் வருகிறது. ஒரு நல்ல முதியோர் இல்லமாகப் பார்த்து சொல்லம்மா. என்னைப் போன்றவர்களுடன் வசிக்க வேண்டும் போலிருக்கிறது. நிறைய பேசவேண்டும், எழுத வேண்டும் போலிருக்கிறது' என்று என்னிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயத்துக்கு இன்னொரு கோணம் இருப்பதைத்தான் இது காட்டுகிறது. எத்தனை வீடுகளில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தாதிகளாக முதியோர் நடத்தப்படுகின்றனர்!
இப்படி எழுதுவதால் நான் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் வலுக்கட்டாயமாகக் கொண்டு தள்ளச் சொல்வதாக அர்த்தமில்லை. தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளாமல் மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதில் தவறில்லை என்பதுதான் எனது வாதம்.
8 Comments:
உங்கள் பதிவு அருமை. நீங்களே குறிப்பிடபடி பயிற்சி பெற்ற தாதியர் அமைந்த முதியோர் இல்லங்கள் இந்தியாவில் இல்லை. எனக்குத் தெரிந்த சிலர் முதியோர் இல்லம் சென்று திரும்ப கூறும் காரணங்கள்:
1. அங்கு காணப்படும் அலட்சிய போக்கு, சுகாதாரமின்மை மற்றும் உணவு. இதில் உணவு தனிவிருப்பு. மற்றவை பயிற்சியினாலும் மேற்கத்திய அனுபவத்தினாலும் மேம்படுத்தக் கூடும்.
2.வாழையடி வாழையாக கூட்டுகுடும்பத்தை பேணிய சமுகாயம் இப்போதுதான் தனிக்குடித்தனம் வரை வந்திருக்கிறது. மேலைநாடுகள் போல தனிநபர் சமுகாயமாக இந்த தலைமுறையில் தான் முடியும். அதனால் மகன்,மகள்,பேரன் பேத்தியரை நினைவுகூர்ந்து அவதிப் படுகிறார்கள்.
3. நம்வயதில் நமது சுற்றுப்புறத்தை கருத்தில் கொண்டு நம்மால் நமது கொள்கைகளை/பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள முடிகிறது. முதிர்ந்த காலத்தில் அவர்களது மூளை ஒரு காலவரையரைக்குள் சிக்கி அவர்களது flexibilityஐ குறைக்கிறது. இதுவும் தகுந்த மனநிலைமருத்துவர் மூலம் மாற்றலாம்.
இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்ட முதொயோர் இல்லங்கள் நிச்சயம் தேவை.
இந்த தலைமுறைகாரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் போதே தங்களுக்கான பல வசதிகள் கொண்ட முதியோர் இல்லத்தொகுதிகளில் முதலீடு செய்கின்றனர்.அவர்களுக்கு வாக்குகொடுக்கப் பட்ட வசதிகளும் பரிவும் அவர்கள் அங்கு செல்லும் காலகட்டத்தில் நிறைவேற்றப் படுமா என்பதும் இந்தியாவில் கேள்விக்குறியே.
நன்றி, மணியன்
//இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்ட முதொயோர் இல்லங்கள் நிச்சயம் தேவை.//
இதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். நண்பர் ஒருவர் இப்படி அனைத்து வசதிகளும் கொண்ட, பயிற்சி பெற்ற தாதியர்கள் உடைய முதியோர் இல்லங்களை இந்தியாவில் நிறுவ முயன்றார். சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் கைவிட்டு விட்டார்.
எனக்கும் அப்படி ஒரு மாடல் முதியோர் இல்லம் அமைக்கவேண்டும்/ அமையவேண்டும் என்ற பெரிய ஆவல் உண்டு.
சிவசங்கர் பாபா கேளம்பாக்கத்தில் அமைத்திருக்கும் முதியோர் இல்லத்தை இருவருடங்களுக்கு முன்னால் பார்வையிட்டேன். நன்றாக இருக்கிறது. ஆனால் அப்போது அது முழுஅளவில் இயங்க ஆரம்பித்திருக்கவில்லை. வசதிகள் நன்றாக இருந்தன. பணியாளர்கள் கனிவுடன் இயங்கினார்கள்.
சேவாலயா நடத்தும் முதியோர் இல்லம் குறித்தும் கேள்வியுற்றேன். அடுத்த முறை இந்தியா செல்லும் போது சென்று பார்க்கவேண்டும்.
நிலா
என் பதிவு இங்கே:http://domesticatedonion.net/blog/thenthuli.php?itemid=471
Home for aged .... it should be the last resort for people who are less fortunate not to have their biological products taking care of them...
Its my opinion ....
I find it a little uncomfortable in discussing about its improvements when I am against its very existence...
well circumstances are the root cause for their existence i guess
நிலா,
முதன் முதலாக சந்திக்கிறோம்.
மகிழ்ச்சி.
உஷா அவர்கள் மகாபாரதத்தை உதாரணமாகக் கொடுத்தார். அது சரியா என தெளிவு படுத்த சொன்னேன். ஏனென்றால் - மகாபாரதத்தைப்
பலமுறை படித்திருக்கிறேன் - ராஜாஜி எழுதியது முதல் சோ கொடுத்த மகாபாரதம் வரை. அங்கே வானபிரஸ்தம் வாழ்க்கையைத் தேடி
(குறித்துக் கொள்ளுங்கள் - வயதானவர்கள் தேடிப் போகிறார்கள் - விரட்டப்பட்ட வேண்டாத லக்கேஜாக ஒதுக்கப்பட்டோ அல்ல) விரும்பி
வெளியேறுகிறார்கள்.
இதைத் தான் கேட்டேன் - விசாரித்து சொல்லுங்கள் என்று. மற்றபடி என்ன கடுமையான வார்த்தைகளைக் கண்டு விட்டீர்கள் என்று தெரியவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும்.
உங்களின் பார்வையில் - பெற்றவர்கள் - பெற்றார்கள். வளர்த்தார்கள். அதனால், வயதானதும் அதற்கான சேவை கட்டணத்தைக் கொடுத்து
ஒரு விடுதியில் தங்க வைத்து விட்டால் - சரியாகி விடுகிறது என்கிறீர்கள். நீங்கள் கட்டும் அந்த சேவை கட்டணத்தை சம்பாதிக்க தெம்பு
கொடுத்தது மட்டுமா அவர்கள் உங்களுக்குத் தந்தது? நீங்கள் கற்ற கல்விக்கு காசு கொடுத்தது மட்டும் தானா அவர்கள் உங்கள் ஆளுமை
வளர்ந்து வர நியாயம் கற்பிக்கிறது.
நீங்கள் கூறும் மேல்நாட்டு கலாச்சாரத்தில் குழந்தை வளர்ப்ப்பை ஒரு சுமையாக பெற்றவர்கள் கருதுகிறார்கள். குழந்தை பெறுதலையே
ஒரு சுமையாக கருதி - முதல் வாய்ப்பு கிடைத்ததுமே கழற்றி விட்டு - பின்னர் தங்கள் சுகத்தையும் இன்பத்தையும் தேடிக் கொண்டு
போய் விடுகிறார்கள். ஆனால் - கீழை நாட்டு கலாச்சாரத்தில் அப்படி இல்லையே? தான் பணியிலிருந்து அந்த கடைசி நாள் வரையிலும் -
தேவைப்பட்டால், ஓய்வு பெற்ற பின்னும் எதாவது ஒரு பகுதி நேர வேலையாகக் கூட செய்து ஏதாவது சம்பாத்தியம் செய்து குடும்பத்திற்கு
தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
தன்னால் இயலும் வரையிலும் - உழைக்கும் சக்தி இருந்து பங்கு கொடுக்க முடிந்த வரையிலும் - இனிப்பாக இருந்த பெற்றவர்கள் -
பின்னர் தளர்ந்து போனதும் ஒரு சுமையாகக் கருதி அவர்களை வெளியேற்றி - வெளியேற்றி வேண்டாம் - அவர்களை தகுதியான இடத்தில்
கொண்டு சேர்க்கப் போவதாக சொன்னீர்கள் பார்த்தீர்களே - அது சரியா?
They need more emotional support than the material support you could offer.
மேல் நாட்டின் தரத்திற்கு விடுதிகள் - தங்குமிடங்கள் வந்தால் கூட, அங்கு தங்கள் பேரக்குழந்தைகள் துள்ளி குதித்து விளையாடி மகிழ்வதைப்
பார்ப்பதைப் போன்ற இன்பத்தை அடைந்து விட முடியாது. மேலும் நீங்கள் கேட்கும் தரத்திற்கு விடுதிகள் வரும்பொழுது - அதற்காகும்
செலவை விட, வீட்டிலே அவர்களைத் தங்க வைத்து தனி பணியாட்கள் நியமித்துப் பராமரிக்கும் செலவு குறைவாகத் தான் என்பது
என் கருத்து.
என் பார்வையில் - அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகளை விட, அவர்கள் மனம் பெறும் அமைதி தான் அவர்கள் விரும்புவதாக இருக்கும்.
மேலும் உயிருடன் இருக்க முடியும் கடைசி நிமிடம் வரை அவர்கள் தங்கள் வம்சம் தழைத்து வளர்ந்து, செழித்து ஓங்கி நிற்பதை தாங்களாகவே
சொந்தமாக பார்த்து ரசிப்பதை தான் விரும்புவார்களே தவிர -
ஒரு செய்தி அறிக்கை மாதிரி - வாரம் ஒருமுறை நீங்கள் போய் பார்த்து ஒப்புவித்து விட்டு உங்கள் மகிழ்ச்சிகளை அவர்கள் கேட்டு
மனநிம்மதி அடைவார்கள் என்பதை நான் நம்பவில்லை.
மற்றபடிக்கு பருந்து பார்வை எனக்கு அறிமுகமானது தான். ஆனால் உங்கள் பார்வை பருந்து பார்வை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் அது பிரச்சினையின் ஒரு கோணத்தைப் பற்றியது தான். மற்ற கோணங்களை அது அலசவில்லை.
நன்றி நிலா.....
This comment has been removed by a blog administrator.
நிலா, என் பதிவில் உங்களுக்கு இட்ட மறுமொழி, இங்கு உங்கள் பார்வைக்கு
//நிலா, உங்க அலசல் மிக சரி. கதையை விட்டு விட்டு பிரச்சனையைப் பார்த்தால் முதல் காரணம் பெண்கள் வேலைக்குப் போவது. அவசர வாழ்க்கை, குழந்தைகளின் படிப்புக்கு அந்த காலம் போல் இல்லாமல் நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருப்பது போன்று! சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு இன்னொரு பிரச்சனை.
அடுத்து, வெறும் மூன்று வேளை சாப்பாடு மட்டும் போட்டால் போதாது, பெரியவர்களுக்கு தருகிற மரியாதை என்பது மிக குறைந்து வருகிறது. காரணம் கூட்டு குடும்பம் இல்லாமல், மகன் வீட்டில் வயதான காலத்தில் போய் சேர்ந்தால், மருமகளுக்கு சுமையாய் தோன்றுகிறது. வயதானவர்களாலும் புதிய சூழ்நிலையில் பொறுந்திப் போக முடியதில்லை.
பல இடங்களில் வயதானவர்கள் மீதும் நிறைய தவறுகள். மகன் மட்டுமே உறவு, மருமகளை வேண்டாத உறவுதான். வயதான
பிறகு, வைராக்கியம் வேண்டும், அதாவது அட்டாச்மெண்ட் வித் அவுட் டிடாச்மெண்ட் என்பார்களே, அப்படி வாழ தெரிவதில்லை.
யோசித்துப் பார்த்தால், நம் காலங்களில் முதியோர் விடுதிதான் சரிப்படும் போல இருக்கு. நீங்கள் குறிப்பிட்ட "கிளாசிக் குடும்பம்"
நன்றாக இருக்கிறது என்று சொல்ல கேட்டேன். கொஞ்சம் காஸ்ட்லி. அதே போல கோயம்பத்தூரிலும் ஒன்று இருக்கு.
பார்க்கலாம், நம் காலத்தில் நல்ல தரமானவை வரும் என்று நம்புவோம்//
நண்பன்,
வணக்கம். உங்கள் கருத்துக்கு நன்றி
//உங்களின் பார்வையில் - பெற்றவர்கள் - பெற்றார்கள். வளர்த்தார்கள். அதனால், வயதானதும் அதற்கான சேவை கட்டணத்தைக் கொடுத்து
ஒரு விடுதியில் தங்க வைத்து விட்டால் - சரியாகி விடுகிறது என்கிறீர்கள். //
//பின்னர் தளர்ந்து போனதும் ஒரு சுமையாகக் கருதி அவர்களை வெளியேற்றி - வெளியேற்றி வேண்டாம் - அவர்களை தகுதியான இடத்தில்
கொண்டு சேர்க்கப் போவதாக சொன்னீர்கள் பார்த்தீர்களே - அது சரியா? //
நான் அப்படி சொல்லவே இல்லையே. நான் சொல்வதெல்லாம்:
//இப்படி எழுதுவதால் நான் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் வலுக்கட்டாயமாகக் கொண்டு தள்ளச் சொல்வதாக அர்த்தமில்லை. தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளாமல் மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதில் தவறில்லை என்பதுதான் எனது வாதம்.//
எந்த விஷயத்துக்கும் பல முகங்கள் உண்டு. முதியோர் இல்லங்களில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவரவில்லை. முற்றிலும் அந்த வழியை அடைக்கக் கூடாது என்பதே கருத்து.
உங்களுக்கும் எனக்கும் அடிப்படையான கருத்து ஒன்றுதான் - முதியோர் மன நிம்மதியோடு இருக்கவேண்டும். முதியவர்கள் வீட்டில் இருந்துவிடுவதால் மட்டும் மன நிம்மதி வந்து விடும் என்பது யதார்த்தமாக இல்லை என்கிறேன். தங்களது சுயநலத்துக்காக, ஊர் உலகத்துக்காக பெற்றோரை வீட்டில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை விட அவர்களைக் கனிவாக நடத்தும் முதியோர் இல்லங்கள் மேல் என்றுதான் நான் சொல்கிறேன்,.
Post a Comment
<< Home