தமிழ் எழுத்தாளர்களின் பிரச்சனைகள்
தமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என்ற தலைப்பில் பத்ரி எழுதியுள்ள பதிவுக்குப் பதிலாக எனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. தமிழ் நூல்கள் அதிகம் வருவதில்லை என்ற அவரது கருத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணத்தை இன்னும் ஆழமாக ஆராய்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
நல்ல படைப்புகளைத் தமிழ் பதிப்புலகம் ஊக்குவிக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. நிலாச்சாரலில் எழுதுகிற எத்தனையோ படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை புத்தகமாக வெளியிட முயல்கிறபோது கொஞ்சம் மனம் தளர்ந்து போவதைத்தான் பார்க்கிறேன். இன்றைய நிலையில் அநேகமாக தமிழ் எழுத்தாளர்கள் தமது புத்தகப் பதிப்புக்கு ஆகும் செலவைத் தாமே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். அயல்நாட்டுத் தமிழர்களுக்கு இது ஒருவேளை சாத்தியமாகலாம். தமிழ் நாட்டில் இருக்கும் நல்ல எழுத்தாளர்களுக்கு இது வசதிப்படுமா? அப்படியே வசதிப்பட்டாலும் இது ஒரு சுயவிளம்பரமாகக் கருதப்படுமோ என்றெண்ணி கூட்டுக்குள் சுருங்கிக் கொள்பவர் எத்தனை பேர்!
புதியவர்களை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் காசு பண்ணும் பதிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில அபத்தமான புத்தகங்களைப் பார்க்கையில் இதனால் பதிப்பாளரைத் தவிர யாருக்கு லாபம் என்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்திருக்கிறது. இப்படிப்பட்ட நூல்கள் எதிர்கால சந்ததிக்கு எப்படிப்பட்ட பதிவுகளாக அமையும் என்ற பயமும் ஏற்படுகிறது.
தவிர, பணம் இருந்தால் எந்தக் குப்பையையும் புத்தகமாகப் போடலாம் என்ற நிலையைப் பார்க்கிற போது புத்தகம் எழுதும் ஆசையே விட்டுப் போகிறது என்பதுவும் நிதர்சனம்.
இதனால் வெளிவரும் தமிழ் நூல்கள் எல்லாமே குப்பை என்றோ எல்லா தமிழ்ப் பதிப்பகங்களுமே மோசம் என்றோ நான் சொல்வதாகத் தயவு செய்து தவறாக அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள்.
தமிழ் பதிப்பாளர்களுக்கும் பல சிரமங்கள் உண்டு என்பதை நானறிவேன். பொதுவாகவே நம் சமூகத்தில் மேலை நாடுகள் அளவுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கிடையாது என்பதால் புத்தகங்களை விற்பனை செய்வது கடினமாக இருக்கலாம். எழுத்தாளர்களுக்கு ராயல்டி தர இயலாத நிலை கூட புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியிட கைக்காசை செலவு செய்ய வேண்டும் என்ற அவல நிலையை ஜீரணித்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை.
நான் கேட்டுக் கொள்வதெல்லாம் பத்ரி, பா.ரா போன்ற ஆர்வலர்கள் இதற்கான காரணங்களை இன்னும் ஆழ்ந்து ஆராய்ந்து ஆவன செய்யவேண்டும் என்பதே!
1 Comments:
என் பதிலும் சற்றே விரிவாகிப் போனதால் அதை என் பதிவில் கொடுத்துள்ளேன்.
http://thoughtsintamil.blogspot.com/2005/12/blog-post_19.html
இந்த விவாதத்தைத் தொடர்வோம். தெளிவு பிறக்கலாம்.
Post a Comment
<< Home