தமிழ்க் காதலர்
கனடாவில் வசிக்கும் கவிஞர் புகாரியை அநேகர் அறிந்திருப்பீர்கள். புகாரிக்கு தமிழின் மேலுள்ள காதல் ஆத்மார்த்தமானது என்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். மற்ற மொழிகளின் மேல் துவேசம் காட்டும் வெறி அல்ல அது. தன் தாயின் மேல் வைக்கும் அன்பு போல அதில் ஒரு உரிமையும் யதார்த்தமும் இருக்கும் அவர் தமிழின்பால் கொண்டுள்ள அன்பில்.
நிலாச்சாரல் ஆரம்பித்த புதிதில் (2001) பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. புகாரி அதற்கான காரணம் கேட்டபோது என் பிரச்சனைகளைச் சொல்ல, "ஆங்கிலத்தில் எழுத உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறர்கள். தமிழில் எழுத தமிழரை விட்டால் யார் இருக்கிறார்கள்?" என்றார். அந்தக் கேள்வி எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதென்னவோ உண்மை. இன்று நிலாச்சாரலில் 90% கட்டுரைகள் தமிழில் இருப்பதற்கு மூல காரணம் புகாரியின் இந்தக் கேள்விதான் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.அதிகம் எழுதாமலிருந்த என்னை உந்தித் தள்ளி அதிகம் எழுத வைத்ததும் அவர்தான்.
அவருக்குத் தமிழ் மேலிருக்கும் காதல் எவ்வளவு ஆழமானது என்பதற்கு ஒரு உதாரணம் இங்கே:
சமீபத்தில் தனது கவிதை ஒன்றை நிலாச்சாரலில் பிரசுரத்துக்காக அனுப்பி இருந்தார். பொருள் நன்றாக இருந்தாலும் சொல்நயம் அவரது வழக்கமான தரத்துக்கு இல்லை என்று தோன்ற அதை அப்படியே அவரிடம் சொல்லி, நிலாச்சாரலில் வெளியிடாவிட்டால் தவறாக எண்ணிக் கொள்ள மாட்டீர்களே எனக் கேட்டிருந்தேன்.அதற்கு அவர் அளித்த இந்த பதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது:
///தமிழின் தரத்துக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பு.
நானெழுதிய கவிதைகளெல்லாம் உங்களுக்கு ஏற்புடையனவாய் இருக்கவேண்டும்என்பதில்லை. நிலாச்சாரலின் தரக்கட்டுப்பாட்டின்படி நீங்கள் தேர்வுசெய்துதான் இடவேண்டும். அதையே நான் அழுத்தமாக விரும்புகிறேன்.
விரைவில் இன்னொரு கவிதை அனுப்புகிறேன். அதுவும் ஏற்புடையதில்லையென்றால்தயவுசெய்து நிராகரியுங்கள். நான் மகிழவே செய்வேன்.
தேர்வு செய்யப்பட்ட கவிதைகளுக்கு மத்தியில் என் கவிதை பிரசுரமாவதே எனக்குமகிழ்ச்சி.///
இரண்டு கவிதைகள் எழுதிய புதுக்கவிஞர்கள் கூடத் தங்கள் கவிதை தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் 'உங்களுக்கு ரசனை இல்லை' என்று காட்டமாய் பதில் அனுப்புகிற இந்தக் காலத்தில் நான்கு புத்தகங்கள் வெளியிட்டும் இவ்வளவு தன்னடக்கத்தோடு அவர் சொன்ன பதில் அவர் சிறந்த கவிஞர் மட்டுமல்ல ஒரு பக்குவப்பட்ட மனிதர் கூட என்றே தெரிவித்தது. அது மட்டுமில்லை, ஒரு எழுத்தாளராக இதே பக்குவத்தோடு நாமும் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சியையும் எனக்குள் விதைத்தது.
கவிஞர் புகாரியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் அவரின் நேர்முகத்தை இங்கே காணலாம்:
http://www.nilacharal.com/tamil/interview/tamil_interview_235_1.asp
1 Comments:
கவிஞர் புகாரிக்கு வாழ்த்துக்கள்
சத்தியா
Post a Comment
<< Home