வாழ்க்கையைப் பாழடிக்கிறதா தாய்மொழிக்கல்வி?
சென்ற வருடம் பொறியியல் பட்டம் பெற்ற என் உறவுப்பையன் (ஆங்கிலத்தில் கஸின் என்று சொல்ல வசதியாக இருக்கிறது) ஒரு வருடமாக வேலை கிடைக்காத ஏமாற்றத்தில் தன்னைத் தமிழ் மீடியம் படிக்கவைத்து தன் வாழ்க்கையையே தன் பெற்றோர்கள் வீணாக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். இது என்னைச் சற்று சிந்திக்க வைத்தது. (இப்படி எல்லாம் ஏதாவது நடக்காவிட்டால் சிந்தப்பதே இல்லையாக்கும்!)
தாய்மொழியில் கல்வி கற்பது வாழ்க்கையை சிதைக்கிறதா? அறிஞர்கள் எல்லாம் தாய்மொழிக்கல்வி மாணவர்களின் தரத்தை உயர்த்தும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஏன் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது என்ற கேள்வி இயல்பாய் எழுகிறது. தாய்மொழியிலேயே பிரதானமாய் கல்வி கற்கும் சீனர்கள் அமெரிக்காவில் மேற்கல்விக்கோ அல்லது வேலைக்கோ செல்வதில்லையா? அவர்கள் எவரும் இப்படிக் குறை கூறித் திரிவதாகக் காணோமே! எங்கே இருக்கிறது குற்றம் -நமக்குள்ளா, நம் சமூகத்திலா?
நானும் ஒரு கிராமத்தில் தமிழ் மீடியம் பள்ளியில் படித்தவள்தான். ஒரு வாக்கியம் கூட ஆங்கிலம் பேசத் தெரியாமல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழைந்தவள்தான். அதனால் வெகுவாய் அவமானப்பட்டிருக்கிறேன் தான். ஆனால் அதனால் என் வாழ்வு சிதைந்து போகவில்லையே! என்னைப் போல பலரை என்னால் அடையாளம் காட்டமுடியும். நேர்முகத்தில் ஆங்கிலக் கேள்விகளுக்குத் தமிழில் சிறப்பாகப் பதிலளித்து வேலையைத் தட்டிச் சென்றவர்களிருக்கிறார்கள்தான்
நம் மாணவர்களிடம் இப்படிப்பட்ட ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதில் நம் சமூகத்துக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் முக்கியமான பங்குண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது. நியாயமாகப் பார்த்தால் கல்வி நிறுவனங்கள் இந்த நிலைக்குப் பொறுப்பெடுத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாழ்வு மனப்பான்மையையும் களைய ஆவன செய்வதை அவர்களின் கடமையாகக் கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சனை குறித்துப் பல கேள்விகளுக்குப் பதில் காண ஆதங்கமாய் இருந்தாலும் அரிதாய்க் கிடைக்கும் நேரம் தீர்ந்துவிட்டதால் கேள்விகளை உங்களிடம் வைக்கிறேன்:
1. தாய்மொழி கண்போன்றது; அயல் மொழி கண்ணாடி போன்றது என்று நம் சமூகம் உணராமல் போனதற்கு என்ன காரணம்?
2. ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை என்கிற நிலை ஏன் வந்தது தமிழகத்தில்?
3. தாய்மொழிக் கல்வி கற்பவர்களுக்கு ஒருவேளை அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படவேண்டுமோ?
4. பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கற்றுக் கொடுக்க வேண்டுமோ?
5. என்ன செய்தால் இது போன்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்கலாம்?
5 Comments:
//ஒரு வாக்கியம் கூட ஆங்கிலம் பேசத் தெரியாமல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழைந்தவள்தான். //
நீங்களாவது அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழையும் வரைதான், நான் கல்லூரி முடித்து வெளியில் வரும்போது வரை இதுதான் நிலை...
நிலா,
தமிழ் மொழி கல்வியில் தான் இந்த பிரச்சனை என்று இல்லை. எந்த மொழியில் பயின்றாலும் இந்த பிரச்சனை தான். ஏன் ஆங்கில வழி கல்வி பயின்றோர் எல்லாம் ஆங்கில புலமையில் தேர்ந்தவர்களா ? எல்லாம் பயிலும் நம் கையில் தான் உள்ளது.
ஆனால் தமிழ் வழி கல்வி கற்போரிடம் இந்த தாழ்வு மனப்பான்மை நிறையவே காணப் படுகிறது. அதை போக்க ஒரு வழி பிறந்தால் இந்த அரசியல்வியாதிகள் சொல்லி நம் தமிழன் தமிழ் படிக்கமாட்டான்.. தன்னாலே படிப்பான்.
என்றும் அன்புடன்
சங்கர்
yes, the educational institutions should take responsibility.
http://amalasingh.blogspot.com/2005/06/blog-post.html
நிலாவின் இக்கேள்வி கிராமப்புற மாணவர்களிடம் அதிகம் காணப்படும் தாழ்வு மனப்பான்மையை நினைவு கூறுகிறது. இது தமிழ் மண் வெள்ளைக்காரன் போய் ஐம்பது ஆண்டுகள் ஆயினும், அவன் கிட்டத்தட்ட250 வருடங்கள் இம்மண்ணில் செய்த ஆட்சியின் விளைவு. இன்னும் 100 வருடங்கள் ஆண்டிருந்தால், தமிழ் என்ற மொழி செத்த மொழி என்ற தகுதியைப்பெற்றிருக்கும். அது சரி, வெள்ளைக்காரனிடம், அடிமைப்படாமல் தப்பிப்பிழைத்த சீனர்கள், கொரியர்கள் இவர்களிடம் இத்தாழ்வு மனப்பான்மை இல்லையே. ஏன் என்பதை நாம் புரிந்துகொண்டால் நமக்கு ஒன்று புலப்படும். இத்தாழ்வு மனப்பான்மை வெள்ளையன் விட்டுச்சென்ற அடிமையுணர்வின் தொடர்ச்சியே. நம்முடைய தன்னம்பிக்கை தொலைந்துவிட்டது. வெள்ளைக்காரந்தான் வேலை கொடுக்க வேண்டும் என்ற சார்பு நிலைக்கு நாம் தள்ளிவிடப்பட்டுள்ளோம். இந்த தாழ்வு மனப்பான்மை, கிராமப்புற, தமிழ்வழி மாணவர்கள் வெளிப்படுத்தினாலும், இது எல்லோரிடமும் மறைமுகமாக உள்ளது எனலாம். எடுத்துக்காட்டாகக்கூறினால், எத்தனை ஆங்கில வழி மாணவர்கள், சிறப்பாகத்தேர்வு பெற்றவர்கள், தொழில் தொடங்க முன்வருவர் என்று பாருங்கள்? சுழி என்று சொன்னால் அது மிகை ஆகாது. ஏன்? அது தான் வெள்ளையன் செய்து விட்டுப்போன மூளைச்சலவை. நம்முடைய தொழில்களையெல்லாம் நசிய விட்டுவிட்டு, நாமெல்லாம், அவனிடம் கூலி வேலை செய்யவேண்டும் என்ற உளப்பாங்கை அவன் ஏற்படுத்தி விட்டுச்சென்று விட்டான். அதனால்தான், படித்தும் சொந்தமாகத் தொழில் தொடங்க முன்வராமல், வெள்ளைக்காரர்களை தயை செய்து, ஏற்றுமதி செய்து பிழைக்கும் தொழில்களையே நம்பி வாழ வேன்டியிருக்கிறது. தொழில் செய்து பிழைக்கும் கூட்டமோ, கல்வியரிவைப்பயன்படுதி, தொழில் விரிவாக்கும் எண்ணமின்றி, மரபு ரீதியிலான தொழில் முறைகளை நம்பியே வாழ்ந்து கொன்டு இருக்கிறது. இம்மாதிரியான நிலையைப்போக்க நாம் தமிழ் இணையம் மூலம் முயன்று கொன்டு தான் இருக்கிறோம். இதற்கான ஆதரவு பெருகும்போது, அம்முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.
நிலா, அமலா
பதிவும் பதிலும் நல்லா இருக்கு
Post a Comment
<< Home