நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்
தமிழ் சமுதாயம் பொதுவாகவே உணர்ச்சிகரமானது. அன்பானாலும் சரி அடியானாலும் சரி இரண்டுமே எக்ஸ்ட்ரீமாகத்தான் இருக்கும் நம்மிடம். அதே போல் நம் சொந்தக் கருத்துக்களின் மேல் அதீத நம்பிக்கை. நாம் நினைப்பதே சரி என்ற பிடிவாதம் அதிகம். அடுத்தவர் கருத்துக்களைப் புரிந்து கொள்ள முயலாவிட்டாலும் கேட்கிற பொறுமை கூட நம்மில் பலருக்கு இருப்பதில்லை. நிலாச்சாரல் காரணமாய் பல மனிதர்களிடம் தொடர்பிலிருப்பதில் நான் சந்திக்கிற பிரச்சனைகளில் முக்கியமானது இது.
அதற்கு சிறந்த உதாரணம் ஒன்றைக் கேளுங்கள்:
ஒரு இசையமைப்பாளரை தெய்வமாகப் பூஜிக்கும் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நிலாச்சாரலுக்காக இசை விமர்சனமும் இசை ரசிகர் மன்றக் கூட்டம் குறித்த ரிப்போர்ட் ஒன்றும் அனுப்பியிருந்தார்.
அந்த ரிப்போர்ட்டிலிருந்து சுவாரஸ்யமாய் கட்டுரை பண்ண முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இசை விமர்சனத்தில் அப்பட்டமாக அந்த இசை அமைப்பாளர் மேல் அவர் வைத்திருக்கும் பக்தி பளிச்சிட்டது. விமர்சனம் நடுநிலையாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதனால் அவருக்கு எனது எண்ணத்தை எழுதி பிரசுரிக்க இயலாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தேன். அவருக்கு வந்ததே கோபம்!
அதுவரை அவர் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து நாங்கள் எழுதியதெல்லாம் அவருக்கு நொடியில் மறந்து போயிற்று. சிடு சிடுவென்ற ஒரு நீண்ட அஞ்சல். எனக்கு சிறந்தவற்றை ஆதரிக்கும் முதிர்ச்சி இல்லை என்றும் நான் குறுகிய மனப்பான்மை கொண்டவள் என்றும் அர்ச்சனை! எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
ஒரு தனி மனிதரைத் தெய்வமாய் அவர் கொண்டாடிவிட்டுப் போகட்டும். அது அவர் விருப்பம். ஆனால் அவரது ரசனைதான் சிறந்தவற்றுக்கு அளவுகோல் என்று மற்றவர் மேல் திணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? (அது சரி, அவரின் நோயாளிகள் அவரின் தெய்வத்தைக் குறை கூறினால் என்னவாகும்?).
அவருக்கு சிவப்பு நிறம்தான் பிரபஞ்சத்திலேயே சிறந்ததாகத் தோன்றலாம். அது அவரது perception. அது fact அல்லவே!
ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை நம் அனுபவக் கண்கள் கொண்டுதான் பார்க்கிறோம். ஒவ்வொருவரது வாழ்க்கை அனுபவமும் கைரேகை போல தனித்துவம் வாய்ந்தது. அப்படி இருக்க எப்படி ஒரே மாதிரி சிந்திக்கமுடியும்?
என் பார்வையில், நாம் perception என்பதின் முக்கியத்துவத்தை இன்னும் உணரவில்லை என்றுதான் படுகிறது. நமது ஒட்டு மொத்த சமூகத்திற்கே இன்னும் கொஞ்சம் எமோஷனல் மெச்சூரிடி வந்தால் நன்றாக இருக்கும்...
0 Comments:
Post a Comment
<< Home