காணாமல் போன என் கிராமம்
சிவாவின் நெல்லைத் தமிழ் என் சிறுவயது தாத்தா ஊர் நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது. கரிசல் கிராமத்தில் பிறந்துவிட்டு என்னவோ அயல்நாட்டிலிருந்து வந்தது போல் நெல்லைத் தமிழைக் கேலிபேசியதும் பதிலுக்கு என் கூட்டாளிப் பிள்ளைகளிடம் என் கரிசல் தமிழ் கந்தலாகிப் போனதும் சுகமான ஞாபகங்கள். இன்றைக்கு தேம்ஸ் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டிருக்கும் போது அந்த சங்கீதத் தமிழுக்காய் மனதுக்கள் அப்படி ஒரு ஏக்கம். (நெல்லைத் தமிழுக்காகவே டும் டும் டும் படத்தை மூன்று முறை பார்க்கத் தோன்றியது)
புரட்டாசிப் பொங்கல், கொன்றையாண்டி கோவில் படையல், ‘கல்லா மண்ணா’ என்று புழுதியில் புரண்டு விளையாடிய வீதிகள் எல்லாம் இனி நினைவுகளில் மட்டுமே என்ற எண்ணம் எழும்போது மனதை என்னவோ செய்கிறது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த போது தெரியாமல் போன அதன் சுகந்தம் தூர தேசத்தில் இருக்கும் போது வெகுவாய் ஈர்க்கிறது.
உணர்ச்சிகளை முடக்கிக் கொள்ளத் தெரியாத அப்பாவி மனங்கள், மண்ணுக்கேற்றார் போல் வளைந்து கொண்ண்டு கொஞ்சும் தமிழ், உறவுமுறை சம்பிரதாயங்கள், உள்ளூர் வரைமுறைகள்... இப்படி ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தனி கலாசாரமே உண்டல்லவா?
இப்படி நினைத்துக் கொண்டு ஆசையாய் கிராமத்தில் கால்பதித்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. தாவணி அணிந்த பெண்களைப் பார்க்கவே முடிவதில்லை. என்னைப் புடவையில் பார்த்ததும் ‘என்னக்கா இன்னும் பட்டிக்காடாவே இருக்கீங்க’ என்று கேலி பேசுகிறார்கள் என் கிராமத்துப் பெண்கள்!
மூணாங்கிளாசில் ஆங்கிலம் கற்க ரம்பித்தது போய் மூன்று வயசில் ங்கில ரைம்ஸ் சொல்லித்தர ரம்பித்து விடுகிறார்கள். மறந்து கூட ‘அம்மா இங்கே வா வா’ சொல்லித் தருவதில்லை. ‘டாடி, மம்மி’ என்று அழைக்கப் பழக்கியிருக்கிறார்கள் என் சிறு வயதுத் தோழிகள்!
தட்டாங்கல்லயும் பல்லாங்குழியையும் என் கிராமம் மறந்து போய்விட்டது. ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்று பாடிக் கொண்டே விளையாண்டதை எல்லாம் யாரும் பிள்ளைகளுக்குச் சொல்லி இருக்கவில்லை. வேப்பங்கொட்டை பொறுக்கும், புளியங்காய் அடிக்கும், கொடிக்காய் பறிக்கும் அனுபவங்கள் எல்லாம் இந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்குமா? பாம்படம் அணிந்த பாட்டிகளை ·போட்டோவிலேனும் இவர்களுக்குப் பார்க்கக் கிடைக்குமா?
சென்னையில் தமிழ் முக்கால்வாசி காணாமல் போய்விட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இனி நெல்லையில் ‘சுகமா இருக்கியளா?’ போன்ற பாச விசாரிப்புகள் தொலைந்து போக எவ்வளவு நாளாகும் என்ற கிலி மனதைக் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கிராமியப் பாடல்களைப் பதிவு செய்வது போல் கிராமிய பேச்சு வழக்குகளையும் நடைமுறைகளையும் கூடப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை உண்டு. நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.
அப்படிப் பதிவு செய்யாத பட்சத்தில் இன்னும் இருபது ண்டுகளில் வட்டாரத் தமிழ் வழக்குகளைக் கேட்கிற பாக்கியம் யாருக்கும் இல்லாமல் போய்விடும். ஆனால் டி.வி தமிழ் (?) மட்டும் உயிரோடிருக்கும்!
11 Comments:
நிலா! எனக்கு உங்கள் பதிவை பற்றி தெரிவித்தற்க்கு நன்றி. உண்மை தான். கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. நான் வாழ்ந்த வாழ்க்கையை இந்த தலைமுறை பசங்கள் அனுபவிக்க முடிவதில்லை என்றே நான் சொல்வேன். வெறும் கிரிக்கட், டி.வி இதிலேயே அவர்கள் வாழ்க்கை போகிறது. நீங்கள் சொல்வது போல் டீசண்ட் என்னும் வார்த்தை என்று டி.வி மூலம் கிராமத்தை எட்டி பார்த்ததோ, அன்றே அதன் அடையாளங்கள் அழிய தொடங்கிவிட்டது. இன்னொரு காரணம், இளைய தலைமுறைக்கு வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் நகரங்களுக்கு பாதி பேர் போய்விடுகிறார்கள். அந்த கலாச்சாரம் மெதுவாக நுழைந்து விடுகிறது. என் கிராமம், இன்னும் கொஞ்சம் உயிரோடு இருக்கிறது. இன்னும் தாவணி தான். வில்லுப்பாட்டு தான். சாமி ஆட்டம் தான். இவை தான் வாழ்க்கை. சீக்கிரம் ஊருக்கு போக வேண்டும். :-)
நிலா அவர்களே!~
உங்களது கிராமத்து பதிவு அருமை.
கிராமத்தின் மீது இருக்கும் உங்கள் பிரியமும், கிராமங்கள் காணமல் போவதை பற்றிய உங்க பரிதவிப்பும் நன்றாக புரிகிறது.
கிராமத்தின் வாழ்க்கை அனுபவத்தவற்களுக்குத் தான் அதன் அருமை தெரியும்.
வெள்ளை உள்ளம் கொண்டவர்கள், இப்போ கூட ஊருக்கு சென்றால் பஸ் ஸ்டாண்டிலிருந்து வீடு செல்லும் வரை எத்தனை கவனிப்பு, எத்தனை நலம் விசாரிப்புகள், அதே மாறாத அன்பு, அதான் கிராமம்.
கிராமங்களை விட்டு வெளியே சென்றவர்கள் கண்டிப்பாக தங்கள் குழந்தைகளை கிராமத்து விசேஷங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சிவா,
வில்லுப்பாட்டு உயிரோடிருப்பதாகக் கேள்வியுற்று மகிழ்ச்சியடைகிறேன். முடிந்தால் அதை எல்லாம் வீடியோவில் பதிவு செய்து வையுங்கள்.
பரஞ்சோதி,
மிக்க நன்றி
மூணாங்கிளாசில் ஆங்கிலம் கற்க ரம்பித்தது போய் மூன்று வயசில் ங்கில ரைம்ஸ் சொல்லித்தர ரம்பித்து விடுகிறார்கள். //
Converter ப்ராப்ளத்துல 'ஆ'எல்லாம் காணாம போயிருச்சி!!
ஆனா அதுலயும் ஒரு காமடி இருக்கு 'ரம்பித்து' ங்கறது 'ரம்பம்' போட்டு கொன்னுட்டாங்கறா மாதிரி.
மத்தபடி உங்க ஆதங்கம் எனக்கும் இருக்குங்க நிலா. நானும் பாளையங்கோட்டைக்காரன்தான். ஆனா நம்ம ஊர்ல இன்றைய தலைமுறைகள் பேசும்போது லகர ளகரமே வரமாட்டேங்குது. என்ன பண்றது?
நல்ல பதிவு நிலா
நிலா,
கிராமத்தின் ஏக்கம் கடல் கடந்தவர்களுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் தள்ளி நகரங்களில் இருப்பவர்களுக்குகூட உண்டு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் குழந்தைகளிடம் நம் கிராமத்து அத்தியாயங்களைச் சொல்லி ஆறுதல் பட்டுக் கொள்வேன். இன்னும் என் பையனை வலுக்கட்டாயமாக `லேய்'ன்னுதான் கூப்பிடுவேன், என் கணவருக்குப் பிடிக்காட்டியும் கூட! கிராமத்திலும் நிறைய மாறுதல்கள் வந்தாலும், நாம் ரசித்த , விளையாண்ட இடங்கள் மாறியிருப்பதில்லை.
நன்றி, சந்திரவதனா, தனு
ஜோசப், நம்மூர்ப் பிள்ளைகள் இன்னும் ஏதோ தமிழாவது பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்
மிகச்சரியான கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறீர்கள் நிலா. எனக்கும் இதே ஆதங்கம்தான். இதனால்தான் என்னுடைய வலைப்பூவில் வாழ்வியல் சம்பவங்களை வழக்குமொழியிலும் அவ்வப்போது எழுதுகிறேன். என்னால் அதிகம் எழுத முடியவில்லை. எழுதிய வரைக்கும் உள்ள வலைப்பூவின் சுட்டி கீழே... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்.
http://murugapoopathi.weblogs.us
முருகபூபதி, நன்றி. உங்கள் பதிவைப்ப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
onnum sari illai
Very nice post. I have played "kalla manna", poopaRikka varukiroom, etc.
http://premalathakombai.blogspot.com/2005/11/kallaatta-kallapparuppaatta.html
Post a Comment
<< Home