.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Saturday, December 24, 2005

பொட்டைப் புள்ளையாக்கும்?

Your Ad Here

மிகச் சிறிய வயதிலிருந்தே பெண் என்ற பாகுபாட்டோடு நடதப்படுகையில் எனக்கு எல்லையில்லாமல் கோபம் வந்திருக்கிறது. பிறந்து வளர்ந்தது கிராமம் ஆகையால் பெண் என்பவள் ஆணுக்கு ஒரு படி தாழ்ந்தவள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நியதி

பெண் சிசுக்கொலை எங்கள் ஊர்ப்பக்கம் நடக்கவில்லை என்றாலும் பெண்பிள்ளை பிறந்துவிட்டால் துக்கம் கொண்டாடாத குறைதான். 'பொட்டைப் புள்ளைதானாக்கும்?' 'யாருக்கு வேண்டும் பொம்பிள்ளைப்பிள்ளை?' இதுதான் பெண் சிசுக்களுக்குப் பெரும்பாலும் கிடைக்கும் வரவேற்பு. இப்படி சலித்துக் கொள்ளும் அன்னையரிடம் காரணம் கேட்டிருக்கிறேன். 'பொண்ணுன்னா ஒலகத்தில எவ்வளவு கஸ்டம், பாப்பா. நம்மளப் போல அதுவும் பாடாய்ப் படவேண்டும்தானே' என்ற கழிவிரக்கத்தோடுதான் பலர் பதில் தந்திருக்கிறார்கள். தாய்மாரின் இந்த இயலாமையும் பயமும் கருவிலிருக்கும் போதே பெண் சிசுக்களைப் பாதிக்க ஆரம்பித்துவிடும் என்பது என் தாழ்மையான கருத்து.

எனக்குத் தெரிந்த ஒரு மனிதர், 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?' என்று கேட்டால் 'ஒரு ப்ளஸ் ஒரு மைனஸ்' என்றே சொல்வார். இன்றும் பெண் குழந்தை பிறந்துவிட்ட நாளிலிருந்தே அதன் திருமணத்தைக் குறித்துக் கவலைப் படும் பெற்றோர்களைப் பார்க்கிறேன். பெண்குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அதன் திருமணத்தை நோக்கியேதான் நகர்த்தப்படுகிறது.

'அதிகம் படிக்க வச்சால் அதுக்கு மேல படிச்ச மாப்பிள்ளை பாக்கணும். மெத்தப்படிச்ச மாப்பிள்ளைன்னா சீர் அதிகம் செய்யணும். எதற்கிந்த வம்பு?' என்ற மனப்பான்மை கிராமப் புறங்களில் மிகவும் சகஜம்.

சில இடங்களில் பள்ளிக்கு அனுப்புவதே சலுகையாகத்தான் கருதப்பட்டிருக்கிறது. அதில் திறமையை வளர்த்துக் கொள்வதாவது? 'பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி என்றெல்லாம் போனால் பல பையன்கள் பார்ப்பார்கள். ஏதாவது பிரச்சனை வரும். ஒன்றும் வேண்டாம். ஒழுங்காகப் படித்துவிட்டு வந்தால் போதும்' - இப்படித்தான் எனக்குப் பெரும்பாலான சமயங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. சகோதரனுக்கு எளிதாய்க் கிடைக்கும் வாய்ப்புகள் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு வித வெறுப்போடுதான் எனக்குத் தரப்பட்டிருக்கின்றன.

பையன்கள் காப்பி அடிக்கிறார்களா என என்னை மேற்பார்வை பார்க்க வைத்த வாத்தியார் பயங்கர கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறார் - 'ஒரு பொம்பளைப் பிள்ளையை பையன்களை மேற்பார்க்க அனுமதிப்பதா?' (கண்டனக் குரல்களில் என் பெற்றோரின் குரலும் உண்டு)


'நான் ஏன் இப்படி செய்யக் கூடாது?' என்று குரல் எழுப்பும் போதெல்லாம் 'பொம்பிள்ளைப்பிள்ளை மாதிரி நடந்துக்க' என்ற மொட்டை அறிவுரைதான் பதிலாகக் கிடைக்கும்.

அட, இதெற்கெல்லாம் கூட சூழலைக் காரணமாய்க் காட்டலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, 'மேடை ஏற உனக்குத் தயக்கமே இருக்கமாட்டேங்கறது. உன்னை உங்கள் வீட்டில் சரியாய் வளர்க்கவில்லை' என்று குறை சொன்ன சக மாணவர்கள் என்னிடம் சரியாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.கல்லூரி கலை விழாக்களில் எய்யப்படும் காதிக அம்புகள் என்னை வெகுவாய் அவமானப்படுத்தியுருக்கின்றன. 'உன்னைப் போலவே ரத்தமும் சதையும் கொண்ட மனித ஜன்மம் நான். என்ன காரணத்தால் உனக்கு என்னைப் பார்த்தால் இழிவாய்த் தோன்றுகிறது?' என்ற கேள்வி சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. தெருவில் போகும் நாயின் மேல் கல் எறிவதற்கும் என் மேல் காகித அம்பு எறிவதற்கும் பெரிதான வித்தியாசம் இல்லை என்பது எனது வாதம்

கேலிகளும் கிண்டல்களிலும் பெரும்பாலும் வெகுண்டெழுந்து 'உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன பிரச்சனை?' என்று முகத்துக்கு நேராய்க் கேட்டுவிட்டு வந்திருக்கிறேன். பணிக்குச் சென்ற பின்னும் 'ஒரு பொம்பளை... அவ என்னைத் தப்பு சொல்லிட்டா' என்று மக்கள் புழுங்குவது சாதாரணமாய் நடந்திருக்கிறது.(ஐ.டி. வந்த பிறகு இது எவ்வளவோ குறைந்துவிட்டதென்பது உண்மை)

திருமணம் ஆன புதிதில் 'கணவருக்குப் பணிவிடை செய்யவேண்டும்' என்று எனக்கு அறிவுரை சொன்ன கடிதத்தை வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். எல்லா விதத்திலும் சமமாய் இருக்கும் பெண் ஏன் ஆண் என்ற ஒரே காரணத்துக்காகக் கணவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்பது எனக்கு என்றுமே புரியாத புதிர்.

'என் மனைவிக்கு நிறைய சுதந்திரம் தந்திருக்கிறேன்' என்று மார்தட்டிக் கொள்ளும் கணவர்கள் இருக்கிறார்கள். பெண் சுதந்திரம் ஒரு சலுகையில்லை. உரிமை. பெண் சுதந்திரம் யாரும் கொடுத்து வருவதில்லை. விருப்பப்பட்டவர்கள் தரித்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டு அடிமைகளாய் இருக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமையாய் இருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன்.


காலம் மாறிவருகிறது. உலகமயமாக்கலில் நடந்த நல்லவற்றில் ஒன்று பெண்கள் சுதந்திரம் என்று எண்ணுகிறேன். ஆனால் 21ம் நூற்றாண்டின் தமிழ்த் திரைப்படங்களில் கூட 'அவன் ஒரு ஆம்பளை. என் ன வேணும்னாலும் செய்வான். நீ ஒரு பொண்ணு' என்ற ரீதியில் வருகிற வசனங்களையும் (சமீபத்தில் சிவகாசி படத்தில் கூட இப்படி ஒரு வசனத்தைக் கேட்டதாய் நினைவு) அதற்கு தியேட்டரில் பறக்கும் விசில் சத்தங்களையும் கேட்கும்போது நாம் இன்னும் வெகு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

21 Comments:

At December 24, 2005 4:23 AM, Anonymous Padma said...

இதைப்பற்றி என் பழைய பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன் நிலா. சமீபத்தில் ஒரு விகடன் பத்திரிக்கையில் நிறைய பேர் பெண் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஆணாக மாற்றி தர சொல்லி கேட்பதாக எழுதி இருந்ததை படித்த போது நிறைய கோபம் வந்தது. இதில் மருத்துவ சிக்கல், உளநிலை சிக்கல் வரும். இதை பற்றி உடல்நிலை சரியானபின் எழுதுகிறேன்.

 
At December 24, 2005 4:50 AM, Blogger Vaa.Manikandan said...

//அட, இதெற்கெல்லாம் கூட சூழலைக் காரணமாய்க் காட்டலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, 'மேடை ஏற உனக்குத் தயக்கமே இருக்கமாட்டேங்கறது. உன்னை உங்கள் வீட்டில் சரியாய் வளர்க்கவில்லை' என்று குறை சொன்ன சக மாணவர்கள் என்னிடம் சரியாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.//

எனக்கு தெரிந்து அண்ணா யுனிவர்சிட்டியில் மட்டும் இல்லை, எந்த பொறியியல் கல்லூரியிலும் சொல்வார்கள் எனத் தோன்றவில்லை. எங்கும் கலை நிகழ்ச்சிகள் நடப்பதும் பெண்கள் தொடர்ந்து அரங்கேறி பரிசுகள் வெல்வதும் நிகழ்ந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது.

பக்கத்தை நிரப்ப இந்தப் பத்தியை உள் நுழைத்தீர்களோ?

 
At December 24, 2005 5:10 AM, Blogger நிலா said...

நன்றி, பத்மா

மணிகண்டன்,

//பக்கத்தை நிரப்ப இந்தப் பத்தியை உள் நுழைத்தீர்களோ?//

நம்மைப் போலவே அடுத்தவர்களையும் எடை போடுவது சகஜம். அதனால் இப்படி எழுதிவிட்டீர்கள், பரவாயில்லை.:-)

//எனக்கு தெரிந்து அண்ணா யுனிவர்சிட்டியில் மட்டும் இல்லை, எந்த பொறியியல் கல்லூரியிலும் சொல்வார்கள் எனத் தோன்றவில்லை. //
நான் பொதுப்படையாகச் சொல்லவில்லை. எனது அனுபவத்தைச் சொன்னேன். வீடியோ ஆதாரம் எதுவுமில்லை. மன்னிக்கவும்:-)

 
At December 24, 2005 5:33 AM, Blogger Vaa.Manikandan said...

//நம்மைப் போலவே அடுத்தவர்களையும் எடை போடுவது சகஜம். அதனால் இப்படி எழுதிவிட்டீர்கள், பரவாயில்லை//

அடேயப்பா இவ்வளவு கோபம் வருமா! எனது எத்தனை பதிவுகளை படித்து இருக்கிறீர்கள் தோழி?
சரி தொடருங்கள்.

 
At December 24, 2005 11:23 AM, Blogger Thangamani said...

தமிழ்ச் சமுதாயம் இந்த விதத்தில் மிகவும் முடங்கிபோன, அழுகிய சமுதாயம். கல்லூரியிலும், பலகலைக்கழகங்களிலும் உயர்கல்வி கற்றவர்களும் கூட இந்த அழுகலை ஒரு பாமரனின் அளவுக்கும் பல சமயங்களில் அதைவிடவும் அதிகமாகவும் சுமப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அண்ணா பலகலைக் கழகம்(துணைவேந்தர்!) உடைக் கட்டுப்பாட்டை இந்த நூற்றாண்டில் கொண்டு வந்த அவலமே இதற்கான சாட்சி!

 
At December 25, 2005 10:59 PM, Blogger தேவ் | Dev said...

தனிமனித அனுபவங்கள் தனிமனிதச் சிந்தனைப் பிறக்கக் காரணம்... உரிமைகள்.. போராட்டங்கள் வாழ்க்கையின் அங்கம் அது தொடரும்... சில இடங்களில் கருத்துக்கள் ஏற்று கொள்ளப் படாம்ல் போகலாம்... அதை தாங்கி கொள்ளலாம்... கருத்துக்கள் கேலி செய்யப் பட்டால் தாங்குவது கடினம்.
பெண் சுதந்திரம்...அப்படின்னா என்னங்க? தன் தாய், மனைவி, மகளை நேசிப்பது...மதிப்பது... இந்தச் சமுதாயம் பெண்களுக்கு என உடை, நடை என்று சிலக் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது...
அதிலிருந்து மீறி நடப்பவர்களைச் சமயம் கிடைக்கும் போது மென்று தூப்புகிறது... இப்படி இருக்கும் சமுதாயம் மெல்ல மாறும்... அந்தக் காலம் வரும் வரை இந்த விவாதம் தொடரும்...

 
At December 25, 2005 11:32 PM, Blogger Jigidi said...

பக்கத்தை நிரப்ப இந்தப் பத்தியை உள் நுழைத்தீர்களோ?

உண்மையச் சொன்னா சிலருக்கு சுடும்."இன்ஸ்பெக்டராய் இருந்தாலும் நீ ஒரு பொம்பள" என்னும் இளய தளபதியின் வசனத்திற்கு விசில் அடிப்பவர்களில் இவரும் ஒருவராய் இருப்பாரோன்னு தோணுது.

இத்தப் பத்தியெல்லாம் கவலப்படாம தொடர்ந்து எழுதுங்க.

 
At December 26, 2005 12:12 AM, Blogger நிலா said...

//அண்ணா பலகலைக் கழகம்(துணைவேந்தர்!) உடைக் கட்டுப்பாட்டை இந்த நூற்றாண்டில் கொண்டு வந்த அவலமே இதற்கான சாட்சி! //

அருமையான பதில். நன்றி, தங்கமணி

தேவி, தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி

//இத்தப் பத்தியெல்லாம் கவலப்படாம தொடர்ந்து எழுதுங்க//
கண்டிப்பாக. நன்றி, ஜிகிடி

 
At January 02, 2006 9:50 PM, Blogger கைப்புள்ள said...

All said and done...நாம் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. அண்ணா பல்கலைகழகத்தில் கமெண்டே அடிக்காத "Perfect Gentlemen" மட்டுமே படிக்கின்றனர் என்பதும் கொஞ்சம் ஒவர் தான். காலேஜில் படிக்கும் இளவட்டங்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான். அண்ணா பல்கலைகழகத்தில் நான் வெளியில் வரும் வரை "Centre for Water Resources" கட்டிடத்தில் தனியாக ஒரு பெண்கள் கழிப்பறை கிடையாது. ஆண்கள் கழிப்பறையை உள்ளிருந்து தாழிட்டு பெண்கள் உபயோகிக்கும் நிலையை பலமுறை கண்டிருக்கிறேன். சொல்ல வருவது என்னவென்றால் ஒரு கட்டிடத்தை வடிவமைக்கும் போது எப்படி இந்த அடிப்படை தேவையை மறக்க முடியும்? மறப்பது மறுப்பதற்கு சமம் அல்லவா?

 
At January 03, 2006 2:50 AM, Blogger நிலா said...

ஆதரவாய் குரல் கொடுத்ததுக்கு நன்றி, கைப்புள்ள. (பேர் நல்லாயிருக்குங்க)

 
At January 03, 2006 4:56 AM, Blogger நிலவு நண்பன் said...

//பிறந்து வளர்ந்தது கிராமம் ஆகையால் பெண் என்பவள் ஆணுக்கு ஒரு படி தாழ்ந்தவள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நியதி//

கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் இந்த வேற்றுமை உண்டு

// இன்றும் பெண் குழந்தை பிறந்துவிட்ட நாளிலிருந்தே அதன் திருமணத்தைக் குறித்துக் கவலைப் படும் பெற்றோர்களைப் பார்க்கிறேன்.//

இது பெற்றோர்களின் நியாயமான கவலைதான். இதற்கு தீர்வு வரதட்சணை ஒழிக்கப்படவேண்டும். வரதட்சணை வாங்குபவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கலாம்.

//திருமணம் ஆன புதிதில் 'கணவருக்குப் பணிவிடை செய்யவேண்டும்' என்று எனக்கு அறிவுரை சொன்ன கடிதத்தை வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.//

இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது சகோதரி..? அப்படியென்றால் தங்கள் கருத்துப்படி கணவனுக்கு பணிவிடை செய்தல் பெண்ணடிமைத்தனமா..?

 
At January 03, 2006 5:19 AM, Blogger நிலா said...

ரசிகவ்,

உங்கள் கேள்வியே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது

திருமணம் பகிர்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். அடிமைத்தனத்தை அல்ல. ஒரு நிறுவனத்தில் ஒரே லெவலில் நீங்களும் உங்கள் நண்பரும் சேர்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அவரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? அது போல்தான் இதுவும்.

ஏன் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சொல்லி கணவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை? இது ஆதிக்கத் தன்மை இல்லாமல் வேறென்ன?

 
At January 03, 2006 10:11 PM, Blogger கைப்புள்ள said...

சகோதரி,
I beg to differ...நீங்கள் கூறுவது போல ஆதிக்கத் தன்மை தான். Overnight சரியாக வாய்ப்பில்லை. ஆயினும் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சொல்லி கணவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை என்பதனால் வெறுமனே சிரிப்பது வேறு. கணவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை என்பதனால் நான் என் கணவரின் பொருட்டு உள்ள அன்பினை வெளிப்படுத்த மாட்டேன் என்று சொல்வது வேறு. அதில் எனக்கு உடன்பாடில்லை.

பணிவிடை அன்பின் வெளிப்பாடாக இருப்பின் அதை அடிமைத்தனமாகக் கருதக் கூடாது என்பதே அடியேன் கருத்து. ஆண்களும் அவ்வண்ணமே உணர வேண்டும் என்பதும் உண்மை. தாங்கள் மேற்கூரிய அர்த்தத்தில் எழுதவில்லை என்றே நம்புகிறேன்.

 
At January 03, 2006 10:17 PM, Blogger நிலா said...

This comment has been removed by a blog administrator.

 
At January 03, 2006 10:18 PM, Blogger நிலா said...

//கணவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை என்பதனால் நான் என் கணவரின் பொருட்டு உள்ள அன்பினை வெளிப்படுத்த மாட்டேன் என்று சொல்வது வேறு. அதில் எனக்கு உடன்பாடில்லை. //
கைப்புள்ள,

யாரும் சொல்லி வருவதில்லை உள்ளன்பு. அன்பின்பால் எதைச் செய்தாலும் அது தவறே அல்ல. ஆனால் அதனைக் கடமையாக வலியுறுத்துவது தவறு என்பதுதான் எனது வாதம்.

 
At January 03, 2006 10:34 PM, Blogger கைப்புள்ள said...

என்னுடைய முழுமையானக் கருத்தை வெளியிடாமல் ஒரு பகுதியினை மட்டும் தங்கள் Comment பகுதியில் வெளியிட்டதற்கு வருந்துகிறேன்.

 
At January 03, 2006 10:50 PM, Blogger நிலா said...

கைப்புள்ள,
மன்னிக்கவும். ப்ளாக்கில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்துவிட்டுத்தான் எனது மேலுள்ள கருத்தை வைத்தேன்:

****
I beg to differ...நீங்கள் கூறுவது போல ஆதிக்கத் தன்மை தான். Overnight சரியாக வாய்ப்பில்லை. ஆயினும் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சொல்லி கணவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை என்பதனால் வெறுமனே சிரிப்பது வேறு. கணவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை என்பதனால் நான் என் கணவரின் பொருட்டு உள்ள அன்பினை வெளிப்படுத்த மாட்டேன் என்று சொல்வது வேறு. அதில் எனக்கு உடன்பாடில்லை.

பணிவிடை அன்பின் வெளிப்பாடாக இருப்பின் அதை அடிமைத்தனமாகக் கருதக் கூடாது என்பதே அடியேன் கருத்து. ஆண்களும் அவ்வண்ணமே உணர வேண்டும் என்பதும் உண்மை. தாங்கள் மேற்கூரிய அர்த்தத்தில் எழுதவில்லை என்றே நம்புகிறேன்.

***

இது வெளியிடப்படாததை நான் கவனிக்கவில்லை. உங்களிடமிருந்து வந்த இந்தப் பின்னூட்டம் முதலில் எனக்குப் புரிபடவில்லை:

//என்னுடைய முழுமையானக் கருத்தை வெளியிடாமல் ஒரு பகுதியினை மட்டும் தங்கள் comment பகுதியில் வெளியிட்டதற்கு வருந்துகிறேன். //

இதையும் பப்ளிஷ் செய்தேன். ஆனால் இங்கே வெளியாகவில்லை.
என்ன பிரச்சனை என்று பின்பு பார்க்கிறேன். மனவருத்தமளித்ததற்கு வருந்துகிறேன்.

 
At January 03, 2006 10:53 PM, Blogger நிலா said...

Kaipulla,
Now I see both your comments in chronological order. you can see that your first comment is above my reply to your comment.

 
At January 03, 2006 11:26 PM, Blogger கைப்புள்ள said...

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

 
At January 04, 2006 2:33 AM, Blogger கோபி(Gopi) said...

//ஏன் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சொல்லி கணவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்வதில்லை?//

//ஆனால் அதனைக் கடமையாக வலியுறுத்துவது தவறு என்பதுதான் எனது வாதம்.//

:-)

 
At January 04, 2006 3:57 AM, Blogger நிலா said...

கோபி,
குறுறுறும்பு... :-)

 

Post a Comment

<< Home