.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, December 21, 2006

மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன?

Your Ad Here

'ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன்' என்ற செந்தழல் ரவியின் பதிவைப் பார்த்ததும் உதவவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் உள்ளே சென்றேன்.

பதிவையும் பின்னூட்டங்களையும் படித்து முடித்ததும் இவ்வளவு பேர் மனம் கசிந்து பணமாக உதவுகிறார்களே, இதனால் அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே நன்மை நடக்குமா என்ற கேள்வி என்னை உறுத்தியது. இந்தப் பின்னூட்டத்தை இட்டேன்:

//நல்ல முயற்சி...

ஒரு சிறு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பெண் எம்.எஸ்.ஸி படித்திருக்கிறாரல்லவா? அதற்கேற்ற வேலை வாங்கித்தந்தால் தன் சொந்தக் காலில் நிற்கும் நிலை வருமே? பின் கரஸ்பாண்டன்ஸில் பி.எட் பண்ணலாமே! அறுபதாயிரம் கொடுத்து அவர் பி.எட் படித்து முடித்தாலும் அவருக்கு வேலை கிடைக்கும்வரை அதன் பலன் தெரியப்போவதில்லை அல்லவா?

ஐ.டி.ஐ படிக்கக் கூட வசதியில்லாமல் எவ்வளவோ திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த அறுபதாயிரத்தில் ஒரு வேளை 10 பேருக்கு தொழிற்கல்வி தந்து 10 குடும்பங்களை முன்னேற்றலாமோ என்ற கேள்வி எழுகிறது.

பசிப்பவருக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தல் நலம் அல்லவா? //

ரவி எனக்கு இவ்வாறு தனிம்டல் அனுப்பினார்:

//நீங்கள் கூறுவது சரிதான்...கல்லூரியில் பாதியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் தற்க்கொலைக்கு சென்றுவிட்டாராம் இந்த பெண்...உங்கள் பின்னூட்டம் வெளியிட்டால் உதவிசெய்யும் எண்ணம் உடையவரும் நின்றுவிடுவார்கள்...நான் எடுத்த முயற்சி தோல்வியில்தான் முடியும்...கல்லாதவர் ஆயிரக்கணக்காணவர் இங்குண்டு....ஒவ்வொருவரையும் தேடித்தேடி அலைய நேரமோ / சக்தியோ இல்லை...நம் கவனத்துக்கு வந்தவருக்கு முடிந்தவரை உதவலாமே என்றுதான் நான் இந்த முயற்சி எடுத்தேன்...

விரும்பினால் உதவி...இல்லை என்றால் ஒரு கயமை பின்னூட்டம்...அவ்வளவுதான் நான் எதிர்பார்ப்பது...

நன்றி...//

அவருக்கு நான் கூறிய பதில்:

//ரவி

உங்கள் முயற்சி தோல்வியில் முடியும் என்பதால் அடுத்தவர்கள் சீர் தூக்கிப் பார்க்கக்கூடாது என்று நினைப்பது நல்லதா என நினைத்துப் பாருங்கள்.

உதவ வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில் குறையில்லை. ஆனால் அந்தப் பெண்ணுக்கு என்ன செய்தியை நீங்கள் தருகிறீர்கள் - தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தால் உதவி வரும் என்றா?

நாளைக்கே அவளுக்குக் காதல் தோல்வி என்றால் இதே முயற்சியில் அந்தப் பெண் இறங்க மாட்டாளா?

ஆயிரம் இரண்டாயிரத்தைக் கொடுத்துவிட்டு நானும் நல்ல பேர் வாங்க முயற்சிக்கலாம், ரவி. ஆனால் அந்தப் பெண் உண்மையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்

நீங்கள் அறுபதாயிரம் திரட்ட எடுத்துக் கொள்ளும் அதே முயற்சியை அவருக்கு வேலை வாங்கித் தர முயற்சியுங்கள் என்று நான் எழுதியதில் தவறொன்றுமிருப்பதாக எனக்குப் படவில்லை

இலவசம் தந்து நம்மைக் கையேந்திகளாக்கும் அரசியல்வாதிகளைக் கடிந்து கொள்கிறோமே... இப்போது நாம் செய்வதென்ன?

எதிர்க்கருத்து கூறுவதால் உங்களையோ உங்கள் முயற்சிகளையோ குறைவாக மதிப்பிடுகிறேன் என எண்ண வேண்டாம். ஆற்றல் நல்ல விதத்தில் பயன்படட்டுமே என்கிற ஆதங்கம். வேறொன்றுமில்லை

நீங்கள் எனது பின்னூட்டத்தை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் இது குறித்து நான் பதிவெழுதுவதாகத்தானிருக்கிறேன்

நன்றி//

ரவியின் பதில் இங்கே:

//கண்டிப்பாக வேலையையும் பெற்றுத்தருகிறேன் நிலா அவர்களே !!! அருமையான உங்கள் கருத்துக்கு நன்றி !!!//


இந்த விவாதத்தை நான் இங்கே வெளிப்படுத்தக் காரணம் உண்டு. இதே போல் முன்பொரு முறை கோயம்புத்தூரைச் சேர்ந்த சிந்தனை சிற்பிகள் அமைப்பில் நடந்தது. இதே கருத்தைத்தான் அப்போதும் சொன்னேன். பொதுவாகவே நாம் உணர்ச்சி வசப்படும் சமுதாயம். பிரச்சனையின் மூலத்தை ஆற்ற முயற்சிக்காமல் சட்டென்று அதன் அறிகுறிகளை அகற்ற முயற்சிப்போம். அதற்காக பேரளவு ஆற்றல் செலவிடுவோம். அதே ஆற்றலின் ஒவ்வொரு துளியும் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால் நம் சமூகம் முன்னேறும் என்ற ஆதங்கம்தான் எனக்கு.

எப்படிப்பட்ட உதவி நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம். உணர்ச்சிவசப்பட்டு பணத்தைத் தருவது உண்மையில் உதவியா அல்லது தவறான முன்னுதாரணமா என்பதை சற்றே சிந்தித்தல் நலம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

16 Comments:

At December 21, 2006 1:58 AM, Blogger ரவி said...

அன்பின் நிலா...

தனிமடலில் அனுப்பியதை இப்படி அனுமதியின்றி பொதுவில் இடுவீர்கள் என்று நினைக்கவில்லை..

 
At December 21, 2006 2:29 AM, Blogger நிலா said...

மன்னிக்கவும், ரவி

எனது பின்னூட்டத்தை வெளியிடத் தயங்கித்தான் எனக்கு தனி மடல் அனுப்பினீர்கள் என எண்ணினேன்.அதிலிருந்த கருத்துக்களைச் சொல்ல அஞ்சியிருப்பீர்கள் எனத் தோன்றவில்லை

எனினும் உங்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்

 
At December 21, 2006 3:32 AM, Blogger பத்மா அர்விந்த் said...

நிலா

முதுநிலை கல்வி என்பதை படித்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. பதிவின் பல கருத்துக்களும் நன்று.

 
At December 21, 2006 4:09 AM, Blogger பங்காளி... said...

உங்களுக்கு சரியென பட்டதை சொல்லியிருக்கிறீர்கள்.....ம்ம்ம்ம்ம்

 
At December 21, 2006 6:07 AM, Blogger ரவி said...

பத்மா அரவிந்த்..

எனக்கு தெரிந்து முதுநிலை கல்வி படித்தவர்கள் சிலர் இருக்கிறார்கள்...உங்கள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு வாங்கித்தர இயலுமா ? என்ன கொஞ்சம் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்...சற்று ஆங்கில அறிவு குறைவாக இருக்கும்...பரவாயில்லையா ?

மிகவும் நன்றி !!!

 
At December 21, 2006 6:25 AM, Blogger ✪சிந்தாநதி said...

நிலா

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.. ஏதோ ஒரு புரிதலின்மையால் விளைந்தது என்று நினைக்கிறேன்.

பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பைத் தொடர, அதுவும் பணம் செலுத்த முடியாமையால் வெளியேற்றப் பட்ட ஒரு மாணவிக்கு அந்தப் படிப்பைத் தொடர வழி செய்வதே நல்லது.

ஒரே மாணவிக்கு இவ்வளவு தொகை செலவிடப்பட வேண்டுமா எனக்கேட்பது ஒரு புதிய திட்டம் அல்லது நிதியை ஒரு காரியத்துக்கு பயன்படுத்த ஆலோசிக்கும் கட்டத்தில் பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் இது குறிப்பிட்ட தேவைக்காகவே என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் பலருக்கும் உங்கள் பதிவு மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

 
At December 21, 2006 6:56 AM, Blogger ஓகை said...

அந்தப் பெண்ணுக்கான உதவியைப் பொறுத்தவரையில் உங்கள் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடிகிறது.

தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். என் கருத்தளவில் நீங்கள் ரவியின் தனிமடலை வெளியிட்டது மிகப் பெரும் தவறு. வெளியிடப்படக்கூடாது என்பதற்காகவே தனிமடல்கள் பெரும்பாலும் போடப்படுகின்றன. ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டிர்களோ என்று அஞ்சுகிறேன்.

ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

 
At December 21, 2006 9:55 AM, Blogger Darren said...

///உதவ வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில் குறையில்லை. ஆனால் அந்தப் பெண்ணுக்கு என்ன செய்தியை நீங்கள் தருகிறீர்கள் - தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தால் உதவி வரும் என்றா?////
சிந்திக்க வேண்டிய கருத்து

K.Dharan.

 
At December 21, 2006 12:33 PM, Blogger ✪சிந்தாநதி said...

இன்னொரு விஷயம் இது எதற்காக என்று தெளிவாக அறிந்த நிலையிலேயே அனைவரும் உதவ முடிவெடுத்துள்ளனர்.

நீங்கள் கூறுவது போல பத்து தொழிற்கல்வி மாணவர்களுக்கு உதவ நிதி தாருங்கள் என்றால் பலரும் இவ்வளவு ஆர்வமாக முன்வந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

அந்த மாணவிக்கு உதவ எல்லோரும் விரும்பி முன்வந்துள்ள நிலையில் உங்கள் கருத்து வீணான விவாதத்துக்கு வழிவகுத்துவிட்டது.

 
At December 21, 2006 1:17 PM, Blogger நிலா said...

பத்மா, பங்காளி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

//உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.. ஏதோ ஒரு புரிதலின்மையால் விளைந்தது என்று நினைக்கிறேன்.//

இல்லை, சிந்தாநதி அவர்களே. மிகவும் தெளிவாகப் புரிதலுடன்தான் இதனை எழுதியிருக்கிறேன்

//பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பைத் தொடர, அதுவும் பணம் செலுத்த முடியாமையால் வெளியேற்றப் பட்ட ஒரு மாணவிக்கு அந்தப் படிப்பைத் தொடர வழி செய்வதே நல்லது. //

இது உங்கள் கருத்து. உங்களுக்கென்று தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதில் தவறே இல்லை.

//ஒரே மாணவிக்கு இவ்வளவு தொகை செலவிடப்பட வேண்டுமா எனக்கேட்பது ஒரு புதிய திட்டம் அல்லது நிதியை ஒரு காரியத்துக்கு பயன்படுத்த ஆலோசிக்கும் கட்டத்தில் பொருத்தமாக இருக்கலாம். //

நான் கேட்பதெல்லாம் இந்த நிதியால் அந்தப் பெண்ணின் அடிப்படைப் பிரச்சனைக்கு முழுத்தீர்வு தரமுடியுமா என்பதுதான். குறுகிய காலத்தீர்வை யோசிக்காமல் தொலைநோக்குப் பார்வை பாருங்கள் என்றுதான் சொல்கிறேன்

//ஆனால் இது குறிப்பிட்ட தேவைக்காகவே என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் பலருக்கும் உங்கள் பதிவு மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. //

நீங்களெல்லாம் சேர்ந்து சிவப்புக் கலரில் தோரணம் கட்டுகீறீர்கள். நான், 'அது பொருத்தமாக இல்லை, நீல வண்ணம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்' என்றால் அதனால் மன வருத்தம் அடைவீர்களா? அப்படி அடைந்தால் அதற்கு நான் பொறுப்பா? மன்னிக்கவும், நான் அப்படி நினைக்கவில்லை

கலைஞரின் இலவசத் திட்டங்களை வசை பாடாத ஊடகங்களா? வல்லுநர்களா? அதற்கெல்லாம் அவர் மனவருத்தமடைந்து திட்டத்தை நிறுத்திவிட்டாரா என்ன? அவருக்குச் சரியெனப் பட்டதைச் செய்கிறார். அது போல அவரவர்க்கு சரியெனப் பட்டதைத் தாராளமாகச் செய்யட்டும். அதற்காக எதிர்க்கருத்து சொல்லாதீர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை

//அந்த மாணவிக்கு உதவ எல்லோரும் விரும்பி முன்வந்துள்ள நிலையில் உங்கள் கருத்து வீணான விவாதத்துக்கு வழிவகுத்துவிட்டது. //
என்னோடு உடன்படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதைப் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும். எதிர்க்கருத்துச் சொல்வது வீண் என்றால் நாமெல்லாம் சிந்திப்பதெப்படி, சிந்தாநதி அவர்களே?

 
At December 21, 2006 2:11 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நிலா,

இந்த குறிப்பிட்ட சம்பவத்தை விட்டு விடுங்கள். அதனைப் பற்றி விவாதித்து இப்பொழுது ஒன்றும் ஆகப் போவதில்லை. வேண்டும் என்பவர்கள் உதவி செய்யட்டும் என நீங்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்.

ஆனால் உங்கள் பதிவில் இருக்கும் கருத்துக்களை உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்கவும், விவாதம் செய்யவும் ஒரு நேரம் வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. இதை இந்த ஒரு சம்பவத்துடன் கலந்தது வேண்டுமானால் இவ்வளவு உணர்ச்சிகளைத் தூண்டி இருக்கலாம். அதனால் இச்சம்பவம் இல்லாமல் பொதுவாக இக்கருத்துக்களை விவாதம் செய்வது அவசியம் என்றே தோன்றுகிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடுண்டு. சிலவற்றில் இல்லை. ஆனால் அதனைச் சொன்னதிற்காக உங்களுக்கு முத்திரை குத்துவது சரியாகப் படவில்லை. உங்கள் கருத்து அதுவாயின் அதனைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லாமல் போகுமா?

ஆனால் உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லி, இச்சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்டாக கொண்டிருக்காமல், பொதுவான ஒரு பதிவிட்டிருக்கலாம். அந்த தனிமடல்களை ரவியைக் கேட்காமல் வெளியிட்டது சரியில்லைதான்.

 
At December 21, 2006 3:19 PM, Blogger நிலா said...

ஓகை, தரன், கொத்ஸ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தனிமடல்களை வெளியிட்டமைக்காக ரவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

இந்தப் பதிவு குறித்து பல சர்ச்சைகள் இருப்பதால் இதனை இப்போது மாற்றினால் சரியாக இராது என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன்.

 
At December 21, 2006 6:18 PM, Blogger ✪சிந்தாநதி said...

ஆசிரியர் படிப்பு தரும் வேலைவாய்ப்புக்கும் பிற வேலை வாய்ப்புக்கும் உள்ள வேறுபாட்டை உணராமல் பேசுகிறீர்கள் என்று படுகிறது. எம்எஸ்ஸி படித்த ஒருவருக்கு இங்கே என்ன வேலை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஏதேனும் ஒரு கடையில் கணக்கெழுதலாம். ஐடி துறையில் மட்டுமே தனியாரிடம் இங்கே அதிக சம்பளம். மற்ற துறைகளில் எல்லாம் தினக்கூலிக்கு கிடைக்கும் சம்பளம் கூடக் கிடைக்காது.

அரசாங்கத்தில் வேலை வேண்டுமானால் அதற்குரிய தேர்வுகளை எழுதிக்கொண்டே இருந்தால் எப்போதாவது ஒரு குமஸ்தா வேலை கிடைக்கலாம். ஆனால் தமிழகத்தில் ஆசிரியர் படிப்புக்கு குறைந்த கால அளவில் அரசு வேலையே கிடைக்கிறது. அதுவரை கூட காத்திருக்காமல் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கலாம். தவிர பெண்களுக்கு பாதுகாப்பான துறையும் அதுதான். மேலதிகாரி தொல்லை அதுஇதுவென்று அதிகம் இல்லாத பாதுகாப்பான பணி இது.

எனவே அவருக்கு இப்போது ஒரு வேலை வாங்கிக் கொடுப்பது என்பதை விட இந்தப் படிப்பைத் தொடர வகை செய்வதே உங்கள் நோக்கப் படியே கூட நீண்டகால நன்மை தரும். அவரது எதிர்காலத்துக்கு அதுவே நிச்சயம் நன்மை தரும்.

//நான் கேட்பதெல்லாம் இந்த நிதியால் அந்தப் பெண்ணின் அடிப்படைப் பிரச்சனைக்கு முழுத்தீர்வு தரமுடியுமா என்பதுதான். குறுகிய காலத்தீர்வை யோசிக்காமல் தொலைநோக்குப் பார்வை பாருங்கள் என்றுதான் சொல்கிறேன்//

உங்கள் தீர்வு எப்படி நீண்டகாலத் தீர்வாக முடியும் என்று தான் புரியவில்லை. நான் உட்பட பலரும் அதே நீண்டகாலத்தீர்வு என்ற அடிப்படையில் தான் இதைச் சிந்திக்கிறோம்.

தமிழகச்சூழல் புரியாமல் நீங்கள் எம்எஸ்ஸி என்பது பெரிய தகுதிதானே என்ற எண்ணத்துடனும் பேசுகிறீர்கள். குறைந்த சம்பளத்தில் ஏதாவதொரு வேலையில் அமர்ந்து எதிர்காலத்தை இன்னும் போராட்டங்களுடன் தொடர வழிவகுப்பதா அல்லது நிச்சயமான, பாதுகாப்பான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இந்தப் படிப்பு சிறந்ததா என்று சிந்தித்துப் பாருங்கள்.

 
At December 21, 2006 10:53 PM, Blogger இரா.செந்தில் said...

//நான் கேட்பதெல்லாம் இந்த நிதியால் அந்தப் பெண்ணின் அடிப்படைப் பிரச்சனைக்கு முழுத்தீர்வு தரமுடியுமா என்பதுதான். குறுகிய காலத்தீர்வை யோசிக்காமல் தொலைநோக்குப் பார்வை பாருங்கள் என்றுதான் சொல்கிறேன்
//

தாங்களே ஒரு தொலை நோக்குப் பார்வையோ தீர்வையோ தந்தால் மிகவும் உதவியாய் இருக்கும்

//பொதுவாகவே நாம் உணர்ச்சி வசப்படும் சமுதாயம். பிரச்சனையின் மூலத்தை ஆற்ற முயற்சிக்காமல் சட்டென்று அதன் அறிகுறிகளை அகற்ற முயற்சிப்போம//
இந்த பிரச்சனைக்கு மூல காரணத்தை உணர்ச்சி வசப்படாமல் கண்டறிந்து தெரிவித்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்

 
At December 22, 2006 8:15 PM, Blogger BadNewsIndia said...

நல்ல கருத்துக்கள்.

'உதவி வேண்டும்' என்று எவர் கேட்டாலும், பதிவுலகில் நல்ல நிலையில் இருக்கும் நம்மில் பலர் சற்றும் யோசிக்காமல் உதவி செய்து வருவது நல்ல விஷயமே.

M.SC Applied Biology படித்த மஹாலட்சுமி, B.Ed படிக்க உதவி செய்ய வேண்டுமா என்பது நல்ல கேள்வி. கல்லூரியில் இருந்து துறத்தி விட்டால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை கொண்டவர், ஆசிரியை ஆக முடியுமா?

M.Sc படித்தவருக்கு கிட்டாத வேலை B.Ed படித்தவுடன் கிடைக்குமா?

60,000 ரூபாய் வீணாகக் கூடாது அல்லவா? ஞானவெட்டியான் போன்றவர்கள் அந்த பெண்ணுக்கு counselling செய்து தேவையான அளவு மட்டுமே பணம் (தவணை முறையில்) கொடுக்கவேண்டும்.

M.Sc படித்த பெண் குடும்ப சூழலை உணர்ந்து ஒரு வேலை செய்து, B.Ed part-time ஆக படிக்கவேண்டும்.

வேலை கிடைக்க யாராவது உதவுவதே அந்த பெண்ணின் இப்பொழுதைய பிரச்சனைக்கு தீர்வு.
22 வயதான அந்த பெண்ணுக்கு அந்த புரிதல் இருக்குமா என்பது தெரியவில்லை. அதற்க்குத்தான், ஞானவெட்டியான், ரவி போன்றவர்கள் counselling செய்து உதவ வேண்டும்.

பண உதவி செய்வோர் கண்டிப்பாக உதவியை ஞானவெட்டியான்/ரவிக்கு அனுப்புங்கள்.

ரவி/ஞானவெட்டியான், வரும் பணத்தை கொண்டு பிரச்ச்னைக்கு ஓரளவுக்கு நிரந்தர தீர்வு வர வேண்டியதை செய்ய வேண்டும்.

சில யோசனைகள்:

1) மஹாலட்சுமிக்கு counselling - ( தற்கொலை மடத்தனம்/ இருப்பதை வைத்து பிழைப்பதே முக்கியம் - பிடித்தது எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. )
2) குடும்ப சூழலை உணர வைத்து, வேலை கிடைக்க வழி செய்யுங்கள்
3) சிறிது பணம் வேலை கிடைக்கும் வரை தவணை முறையில் கிடைக்க வகை செய்யுங்கள்
4) பகுதி நேர வழியில், B.Ed படிக்க யோசனை கூறுங்கள்
5) என்ன/எப்படி இதற்கு தீர்வு காணப்பட்டது என்பதை ஒரு சீரான பதிவாக தந்தால், இன்னும் பல மஹாலட்சுமிகளுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய இது சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.

 
At December 23, 2006 9:19 PM, Blogger Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear Nila,
I accept your views.Yes, we have the tendency to act on impulse and emotion.And we derive a hypocritical pleasure and pseudo publicity by taking an involvement in such matters.How many of us do really care for Tamils in Sri Lanka.When ever there is a strike,we are happy because we get a day off.But when we are asked [rather ordered by the Govt] to donate our oneday salary ,i have seen people lamenting.I honestly congratulate you for having spoken so frankly.Hats off to u.
kalavathy karthikeyan....kalakarthik1411@gmail.com...vijayanagar.blogspot.com

 

Post a Comment

<< Home