பதிவுலகில் பெண்கள் - பொன்ஸுக்கு பதில்
பொன்ஸ் எழுதியிருக்கும் பதிவுலகில் பெண்கள் என்ற பதிவு பார்த்தேன்
(மன்னிக்கணும், பொன்ஸ்...) அந்தப் பதிவுடைய நோக்கம் எனக்குப் புரியவில்லை. சாடலாகவும் புலம்பலாகவுமே படுகிறது. இந்தப் பதிவு புதிதாக வர இருப்பவர்களையும் கலவரப்படுத்தாதோ?
//வெளிப்படையாக புரியாதபடி நக்கல் தொனிகளில் விரும்பத்தகாத விமர்சனங்கள் இன்னொரு பக்கம்.//
வெளிப்படையாகப் புரியவில்லை அல்லவா, விட்டுவிடலாமே?
//இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே, "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது" என்று எழுந்து நிற்கும் வக்கிரம்.//
'உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறது' என்பதை அப்படியே லிட்டரலாக எடுத்துக் கொள்ளலாமே! பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் கையில் இருக்கிறது என்னும்போது இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தம் கர்ப்பித்துக் கொண்டு நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வானேன்?
//எங்களை நாங்களாக இருக்க விடுங்கள்//
இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. நீங்கள் நீங்களாக இருக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஏன் உங்கள் கண்ட்ரோலைத் தேவையில்லாமல் அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும்?
அப்படிச் செய்கிறார்கள், இப்படிச் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டு நம் பலகீனத்தைக் காட்டிக் கொள்வதால் யாருக்கு லாபம் என்று யோசித்துப் பாருங்கள். நமது வலிமையை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாமே?
தாக்குதல்களையோ கிண்டல்களையோ கேலிகளையோ முற்றிலும் அலட்சியப்படுத்திப் பாருங்களேன்! இதற்கெல்லாம் முக்கியத்துவம் தந்து நொந்து போவதைத்தானே தாக்குதல் தொடுப்பவர்கள் விரும்புகிறார்கள்? அவர்களுக்கு அந்த திருப்தியைத் தருவானேன்? இது பெண்களுக்கென்றில்லை... அனைவருக்குமே பொருந்தும்
எல்லோரும் கடந்து வரும் பாதைதான் இது... ஆனால் ஒரு கட்டத்தில் நாம் புரிந்து கொள்வது அல்லது புரிந்து கொள்ள ஆரம்பிப்பது:
நன்றும் தீதும் பிறர் தர வாரா :-)
20 Comments:
//நன்றும் தீதும் பிறர் தர வாரா //
உண்மை தான் நிலா.
//தாக்குதல்களையோ கிண்டல்களையோ கேலிகளையோ முற்றிலும் அலட்சியப்படுத்திப் பாருங்களேன்! //
அப்படியும் செய்யலாம். அப்படி நிறைய பேர் செய்கிறார்கள். நான் கூட பிரச்சனைகள் வந்த புதிதில் செய்திருக்கிறேன். செய்து கொண்டிருக்கிறேன். இது வெறும் தொகுப்பு தான்.
ஏதாவது ஒரு இடத்தில் தொகுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்தது.
என்னைப் பொறுத்த வரை பொன்ஸ் அவர்களின் பதிவு இது போல எல்லாம் நடக்கிறது என்பதை பதிவு செய்யும் விதமாகவும், உங்களின் பதிவு இதையெல்லாம் துச்சமாக மதித்து நகர்ந்து போய் விட வேண்டும் என்ற விதமாகவும் இருக்கிறது.
Problem and Solution??!!
மற்றபடி பொன்ஸ் அவர்களின் நிலையில் இருந்து பார்த்தீர்களானால் அது தேவையான பதிவாகவே தோன்றுகிறது.
மற்றபடி no comments. :-))).
well said Nila, No need to say sorry to pons for this.. good points..she will take this in good sense..dont worry..
//நன்றும் தீதும் பிறர் தர வாரா//
ஒரு வரியில் ஒரு பதிவுக்கே பதில்
//பொன்ஸ் எழுதியிருக்கும் பதிவுலகில் பெண்கள் என்ற பதிவு பார்த்தேன்
(மன்னிக்கணும், பொன்ஸ்...)//
இது என்னங்க அநியாயமா இருக்குது?
அவங்க எல்லாரும் பார்க்குறதுக்காகத்தான பதிவு எழுதுறாங்க? நீங்க அதப் பார்த்ததுக்கு மன்னிப்பு கேக்குறீங்க? :-)
மற்றபடி, நீங்க எழுதியிருக்குறதைத்தான் நானும் பொன்ஸ் பதிவுல வேற மாதிரி சொல்லியிருந்தேன். நமக்குத்தான் எதயும் உருப்படியா சொல்லத் தெரியாதே?
சாத்தான்குளத்தான்
அவங்களுக்கு நான் சொன்னது இதுதான்.
//இருக்கட்டும். இப்போ நீங்க பெண்களுக்காகன்னு சொன்ன பிரச்சனைகள் இன்னுமொருவருக்கு அவரின் குலத்தைச் சொல்லியோ,ஜாதியைச் சொல்லியோ வருகிறது.
இதையெல்லாம் ஒரு பிரச்சனையா பார்க்காம, நமக்கு வேணுங்கற மாதிரி நடந்துக்கிறதுலதான் மெச்சூரிட்டி இருக்கு.
எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு வகைப் பிரச்சனை. அதைப் பார்த்துட்டு ஓடிப் போகலாம், ஐயோ எனக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கேன்னு அழுதுகிட்டு இருக்கலாம், போற வரவங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கலாம், அல்லது பிரச்சனைகளுக்கு நடுவில் நாம் நாமாக வாழ பழகிக் கொள்ளலாம்.
இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும்.
(ரொம்ப பிரசங்கமா போச்சோ?)//
கிட்டத்தட்ட நீங்க சொன்ன மேட்டர்தான்.
பொன்ஸ்
பாஸிடிவாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி. எதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோமோ அது இன்னும் அதிகம் முக்கியத்துவத்தைக் கவர்கிறது என்பது அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது. அதனால்தான் இவற்றை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
செந்தில் குமரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கவிதா,
நீங்கள் சொன்னபடியே பொன்ஸ் பாஸிடிவாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார் :-)
நன்றும் தீதும் பிறர் தர வாரா :-)
ஆமென்
//ஒரு வரியில் ஒரு பதிவுக்கே பதில்//
இளா, Dev
நன்றி
ஆசீப், கொத்ஸ்
ஆமாமா... நம்ம எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கு... கட்சி ஆரம்பிச்சிரலாமா?
நட்சத்திரத்தைப் பார்த்து நிலா சொன்னது: மனம் தளர விடாதே ! :)
உங்கள் இடுகை கேலி செய்யப்பட்டு, மட்டம் தட்டப்படுபவர் அனைவருக்குமே ஒரு எழுச்சி கீதம்.
நிலா,
உங்களின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். பெண் பதிவாளர்கள் இப்படியான கீழ்தனமானவர்களின் இழிசெயல்களால் மனம் தளராது , மன உறுதியுடன் தொடர்ந்தும் பதிவுகளை எழுத வேண்டும். அவர்கள் இக் கயவர்களின் வசைக்கு அஞ்சி எழுதாமல் விடுவார்களேயானால் அது அப் பாதகர்களுக்கு கிடைக்கும் வெற்றி.
சகோதரி பொன்ஸ் அவர்கள் இப்படி ஒரு பதிவைப் போட்டதற்கு அவரைப் பாராட்ட வேண்டும். இப்படியான பிரச்சனைகள் தமிழ்மணத்திலும் நடக்கிறது என்பதனை என் போன்று அறியாது இருந்தவர்களும் அறியக் கூடியதாக இருந்தது. சில சமயங்களில் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை தமக்குள்ளேயே வைத்திருப்பதும் இப்படியான சிக்கல்கள் வளரக் காரணம். எனவே இச் சிக்கல்களைக் வெளிக்கொணர்ந்து சகலரும் அறிய வைத்த சகோதரி பொன்ஸ் அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.
நன்றி, மணியன்
பதிவு நன்று...உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்..
//அவர்களுக்கு அந்த திருப்தியைத் தருவானேன்? இது பெண்களுக்கென்றில்லை... அனைவருக்குமே பொருந்தும்//
ஹ்ம்ம்ம்...நல்லா சொல்லியிருக்கீங்க...
//சில சமயங்களில் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை தமக்குள்ளேயே வைத்திருப்பதும் இப்படியான சிக்கல்கள் வளரக் காரணம். //
வெற்றி,
வருகைக்கு நன்றி.
கொடுமைகளை எதிர்த்துக் கண்டிப்பாகக் குரல் கொடுக்க வேண்டும்தான். ஆனால் சில சமயங்களில் எல்லோருக்கும் நடக்கும் சாதாரண விஷயங்களைக் கூட கொடுமையாக மிகைப்படுத்தப்படுவது தேவையில்லை என்கிறேன். பெண்கள் ஓவர் சென்ஸிடிவாக உள்ளர்த்தங்கள் கற்பித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்பதுதான் எனது வாதம்.
சோமி, செந்தழல் ரவி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
நன்றி, மங்கை
அந்தக் கருத்து பிடித்திருந்தால் பூஜ்யன் என்ற இந்த சிறுகதையும் உங்களுக்குப் பிடிக்கலாம்:
http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_216a.html
/தாக்குதல்களையோ கிண்டல்களையோ கேலிகளையோ முற்றிலும் அலட்சியப்படுத்திப் பாருங்களேன்! /
அலட்சியப்படுத்தினால் பெண்கள் தங்களின் செய்கைகளுக்கு சம்மதிக்கின்றார்கள் என்று நினைத்து இன்னுமின்னும் தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்டிருப்பதுதான் யதார்த்தத்தில் நடக்கிறது. இல்லையென்றால் ஏன் ஈவ் ரீஸிங் (eve teasing) போன்றவற்றிற்கு கடும் சட்டம் எல்லாம் கொண்டுவரப்படவேண்டும்? 'பெண்களே அதை அலட்சியப்படுத்துங்கள்' என்று ஒரு அறிக்கை விடுத்துவிட்டு சமூகம் வாளா இருக்கலாமே? 'தீதும் நன்றும் பிறர் தரா வாராது' என்ற பாடலில்தான் 'பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தலும் இலமே' என்ற வரிகளும் வருகின்றன. சமமதிப்புத் தராத இடத்தில் 'ரெளத்திரம் பழகு'வதில் என்ன தவறு இருக்கப்போகின்றது? அமைதியாக இருப்பதா இல்லை ரெளத்திரத்தை திரும்பிக்காட்டுவதா என்பது அவரவர்களுக்கான தெரிவே தவிர, இப்படி இதுதான் என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. நன்றி.
டி.சே.தமிழன்,
கருத்துக்களுக்கு நன்றி
நான் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எல்லாம் அலட்சியப்படுத்தவோ புறக்கணிக்கவோ சொல்லவில்லை. கண்டிப்பாக எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். நான் சொல்ல வந்தது: 'Bricks and Stones can break my bones but words cannot' என்பதைத்தான். பதிவுலகில் ஆண்கள் மேலும் தாக்குல்கள் நடத்தப்படுகின்றனவே? சாதாரணமாக அனைவருக்கும் நடக்கும் விஷயங்களைக் கூட ஓவர் சென்ஸிடிவாக பெண்களுக்கெதிரானதாகப் பார்ப்பதிலோ அல்லது உள்ளர்த்தங்கள் எடுத்துக் கொண்டு வருந்துவதிலோ எனக்கு உடன்பாடில்லை.
//அமைதியாக இருப்பதா இல்லை ரெளத்திரத்தை திரும்பிக்காட்டுவதா என்பது அவரவர்களுக்கான தெரிவே தவிர, இப்படி இதுதான் என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. நன்றி.//
இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை பொன்ஸின் பதிவில் ரௌத்திரம் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி இருக்க வேண்டியதற்கான காரணமும் வலுவாக இல்லை. அதனால்தான் அந்தப் பதிவின் நோக்கம் எனக்குப் புரியவில்லை என்று குறிப்பிட்டேன்.
//இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை பொன்ஸின் பதிவில் ரௌத்திரம் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி இருக்க வேண்டியதற்கான காரணமும் வலுவாக இல்லை. அதனால்தான் அந்தப் பதிவின் நோக்கம் எனக்குப் புரியவில்லை என்று குறிப்பிட்டேன்.//எல்லாமே ரெளத்திரம், ரணகளமயிக்கிட்டே வர்துல்லே! மொத்ததிலே பதிவுலகில் வரும் பெண்கள் அவர்களின் நுண்ணர்வுகளை இழக்கிறார்களோ என்று எனக்குத் தோண்றுகிறது! ஏன்னா அதிகம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கோ என்னமோ!
இதுக்கெல்லாம் நான் இந்த பதிவுல சொன்ன மாதிரி பெண்களை பத்தின 'conflicting attitude' ஆண்கள் மத்தியிலே இன்னும் இருக்கறதாலே!
Post a Comment
<< Home