ஒளிபடைத்த கண்ணினாய்
தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணி செய்தபோது என் அம்மா அடிக்கடி சொல்லும் டயலாக்: "அந்தப் பிள்ளைக முகத்தப் பாத்தா எல்லாக் கவலையும் மறந்து போகுது"
மனிதத்தின் தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிக்கும் சிறப்பு குழந்தைகளிடம் உண்டு. குழந்தைகளுடன் பணி புரியும் அனுபவம் இனிமையானது மட்டுமல்ல பல சமயங்களில் இன்ஸ்பையரிங் ஆகவும் எனக்கு அமைந்திருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக படம்பிடித்த விளம்பரம்தான் குழந்தைகளோடு எனக்குப் பணிபுரியக் கிடைத்த முதல் அனுபவம். அவர்களை அவர்களாகவே படம் பிடித்தாலே போதும். அருமையாக நிகழ்ச்சி அமைந்துவிடும் என்பது அதில் நான் செய்து பார்த்து கற்றுக் கொண்ட பாடம். ஒரு நிமிட விளம்பரத்துக்காக 5 மணி நேரம் படம்பிடித்தோம் - அதுவும் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து. ஆவலாக அந்தக் குழந்தைகள் தந்த ஒத்துழைப்பில் அவர்களது உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. 9 மணிக்குக் கிளம்புகையில் மற்ற குழந்தைகள் எல்லோரும் காரில் ஏறிக்கொள்ள, 2 வது ப்ருத்விகா மட்டும் நின்று என் கன்னத்தில் முத்தமிட்டுப் போனதில் மிகவும் நெகிழ்ந்து போனேன். என் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய சன்மானம் அந்த மழலையின் அன்புதான்.
5 மணி நேரம் சுட்ட காட்சிகளை 3 மணி நேரம் எடிட் செய்து அவர்களுக்கு ஒரு நிமிட விளம்பரமாய்ப் போட்டுக் காட்டியபோது அவர்கள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைப் பார்க்கவேண்டுமே! எத்தனை முறை தொலைக்காட்சியில் அது வந்தாலும் ஓடிச் சென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் என பெற்றோர் சொன்னார்கள். முதல் கட்ட ஒளிபரப்புக்குப் பின் நாங்கள் செய்த சிறு மாற்றங்களைக் கூட கண்டுபிடித்து தொலைபேசி என்னிடம் காரணம் கேட்டார்கள். எவ்வளவு கூர்மையாகக் கவனிக்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது.
பின்பு நிறப்பிரிகை என்ற என் குறும்படத்துக்காக ஓவியா, அனாமிகா என்ற இரு அருமையான குழந்தைகளுடன் பணியாற்றினேன். அனாமிகாவின் முகத்தில் ஒரு விநாடியில் ஓராயிரம் உணர்வுகள் மின்னிப் போகும். அவரின் குறும்பும் பேச்சும் துறுதுறுப்பும் அப்படியே நம்மைக் கட்டிப்போடும் . 'இன்னும் கொஞ்சம் காஷுவலா பண்ணும்மா' என்று என்னை இமிடேட் செய்வார் இந்த சமர்த்துக் குட்டி.
நிறப்பிரிகையின் நாயகி ஓவியா வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்துத்தான் பேசுவார். நேர்மையாய்த் தன் கருத்துக்களைப் பளிச்சென்று சொல்வார். குழந்தைகளின் விமரிசனங்கள் கலப்படம் இல்லாதவை. அவர்கள் யாருக்காகவும் திரித்துச் சொல்வதில்லை. காட்டமாய்க் கருத்துச் சொன்னால்தான் மதிப்பார்கள் என்று வார்த்தைகளில் வலுக்கட்டாயமாய் முள் பதிப்பதில்லை. ஓவியா ஒவ்வொரு காட்சி முடியும் போதும் அதனை அழகாய் அலசுவார். 10 வயதுப் பெண்ணின் பார்வையில் காட்சி எப்படித் தெரிகிறது என்று எனக்குச் சட்டென்று விளங்கிவிடும். நிறப்பிரிகையில், என் மனதிலிருந்த பாத்திரத்துக்கு உயிர்கொடுத்து மெருகேற்றிய ஓவியாவை எப்போது நினைத்தாலும் ஒரு வித பெருமிதம் மனதில் பொங்குகிறது! (நிறப்பிரிகை குறும்படத்தைப் பார்க்க விரும்பினால் இங்கே செல்லுங்கள்: http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114112922622797042.html )
பின் பூஞ்சிட்டு சிறுவர் இதழ். தமிழ்க் குழந்தைகளுக்கான 5 செய்திமடல்கள் வெளியிடுவதற்காகக் கிடைத்த நிதியுதவியை இழுத்துப் பிடித்து முழுவண்ணத்தில் வழுவழு காகிதத்தில் 5 சிறுவர் இதழ்கள் கொண்டுவந்தோம். ஆசிரியர் குழுவில் ப்ரியங்கா, டிம்பிள் என்ற இரண்டு சிறுமியர். பூஞ்சிட்டு இதழின் முதல் அட்டைப் படத்தை வடிவமைத்த ப்ரியாவின் திறமை என்னை திக்குமுக்காட வைத்தது. (அட்டைப் படத்தினை இங்கு காணலாம்: http://www.nilacharal.com/poonchittu/covers.pdf) அவ்வளவு நேர்த்தி; அத்தனை கவனம்! அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் ப்ரியங்கா நன்கு தமிழ் பேசுவார். அம்மா சுகந்தியின் கைங்கர்யம்! ஸ்பெல்லிங் பீ போட்டியில் மண்டல அளாவிலான போட்டிகளில் பங்கேற்பு, 700 பேர் கலந்து கொண்ட க்ராஃபிக் டிசைன் போட்டியில் தங்கப் பதக்கம், குட்டி நிலவு போட்டியில் முதல் பரிசு என இவரது சாதனை தொடர்கிறது. உலக அளவில் அறியப்படுகிற தமிழ்ப்பெண்ணாய் ப்ரியங்கா வருவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இவளது 6 வயது குட்டித் தங்கை சரிகாவும் சளைத்தவரல்ல. இப்போதே கதைகள், கட்டுரைகள் எழுதிவரும் சரிகாவும் குட்டி நிலவுப் போட்டியில் பரிசு பெற்றார்
நிலாச்சாரலில் 'வேறென்ன வேறு' என்ற படப் புதிர் பகுதியை வழங்கிவரும் ஐஸ்வர்யாவைப் பாராட்ட புதிதாய் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கவேண்டும். இதுவரை சொன்ன அத்தனை குழந்தைகளுக்கும் மேல் நாட்டில் வசிப்பதில் இருக்கும் வசதி, வாய்ப்புகள் உண்டு. ஆனால் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு 10 வயதில் வாரம் தவறாமல் புதிர் அனுப்புகிற பொறுப்பில் வியக்க வைக்கிறது. புதிரென்றால் சாதாரணப் புதிரல்ல. நுணுக்கமான ஓவியங்கள் வரைந்து அவற்றில் வேறுபாடு காட்டவேண்டும். எப்படியும் சில மணி நேரங்களாவது பிடிக்கும். 'கலைஞர்களுக்குக் கமிட்மென்ட் ஒத்துவராது' என்று சாக்கு சொல்லும் பெரியவர்கள் இந்தப் பெண்ணிடம் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம். சமீபத்தில் ஒரு உறவினர் இறந்துவிட்டதால் திடீரென பயணப்பட நேரிட, ஊருக்குத் திரும்பிய அன்றே தன் வேலையை ஆரம்பித்த சமர்த்தை என்னவென்று சொல்வது! ஓய்வெடுக்கச் சொல்லி நானிட்ட அன்புக்கட்டளையினால் அந்த ஒருவாரம் புதிர் வெளிவரவில்லை என்ற வருத்தம் அவருக்கு! அவரது ஓவியங்களில் வெரைட்டி இருக்கும் - பறவைகள், விலங்குகள், மனிதர்கள், இயற்கைக் காட்சிகள் என்று எது செய்தாலும் அதில் ஒரு தனி அழகு தெரிகிறது. தமிழகத் தேர்தல் நடந்த போது தேர்தல் ஸ்பெஷலாக கலைஞர், ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களை வரைந்து அனுப்பியிருந்தார். மிகச் சிறிய வயதிலேயே ஓவியத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு அவரைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவரது தந்தை ஏ.கே.ராஜகோபாலன் அவரது ஒவ்வொரு ஓவியத்தையும் ஊன்றிக் கவனித்து பிழைகளைத் திருத்த உதவுகிறார்.
ஓவியத்தில் மட்டுமல்ல, நடனத்திலும் புலிதான் இந்தக் குட்டிப் பெண். 4 வருடங்களாக பரத நாட்டியம் கற்றுவரும் ஐஸ்வர்யா இதுவரை 3 பொதுநிகழ்ச்சிகளில் நடனமாடியிருக்கிறார். ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும் தனது நடனத் திறமையைக் காட்டவிருக்கிறார்.
தானாகவே இசையமைத்து ஏதேதோ வார்த்தைகளைப் போட்டு பாட்டுச் செய்யும் 7 வயது அஜய், 4 வயதிலேயே அப்பாவை அமரவைத்து portrait வரையும் விரிஷின், 'நெல்லா' என்று என்னை அழைக்கப் பழகி வரும் ஒன்றரை வயது யுதிகா இன்னும் இப்படி என் பயணத்தில் இணைந்து கொள்ளும் ஒவ்வொரு குழந்தையிடமும் வெவ்வேறு திறமைகள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் பொதுவாயிருப்பது - பாசங்கற்ற புனிதம்! அதுதான் என்னை மிகவும் கவர்கிறது.
நன்றி: தமிழோவியம்
2 Comments:
என்ன ரொம்ப நாள் க்ழிச்சு இந்தப் பக்கம்... வாங்க வாங்க..
வரவேற்புக்கு நன்றி, கொத்ஸ்
தமிழ்மணம் நிறையவே மாறிடுச்சு போலிருக்கே!
Post a Comment
<< Home