.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Sunday, July 09, 2006

ஜனனம் - தேன்கூடு போட்டிக்காக

Your Ad Here


தெருவோட பொம்பளையாள்கெல்லாம் அரக்கப்பரக்க ஓடுததப் பாத்ததுமே ஊருக்குள்ள பெரிய சாவுன்னு புரிஞ்சிருச்சி பேச்சி ஆத்தாளுக்கு.

அடுத்தது தாந்தான்னு எப்பயும் போல அவளுக்குப் பீதி கெளம்புது. லபக்குன்னு வவுத்த ஓநாய் கவ்வுதாப்ல கிலி. கிறுகிறுன்னு தலைய சுத்துது. உக்காந்திருந்த திண்ணைலயே மெள்ளப் படுக்த்துக்கிடுதா.

இப்பக்கி ஆத்தாவுக்கு எப்பிடியும் ஒரு எம்பத்தச்சு வயசுருக்கும். குடும்பத்தில ஏழெட்டு சாவு பாத்திருப்பா. அவ மூத்த மவன் சம்முவம் கூட போய்ச் சேந்து ஒரு ரெண்டு மூணு வருசம் இருக்கும். ஆனா ஆத்தாவுக்கு வயசாவ ஆவ சாவு பயம் சாஸ்தியாகிட்டே இருக்கு. செத்தாள் கொட்டு கேட்டுச்சின்னா நெஞ்செல்லாம் கலங்கிரும்.

கிறுகிறுப்பு கொஞ்சம் அடங்குனதும் கண்ணத் தொறந்து பாக்கா. தெருவில வெக்கு வெக்குன்னு ஆரோ நடந்து போறது தெரியுது. "ராசா.. எந்த வீட்லய்யா எளவு?"ன்னு கேக்கா முடிஞ்சளவு சத்தம் போட்டு...

"கீழ வீட்டு தேவானைப் பாட்டிதேன். அடுத்து நீதேன்னு ஊருக்குள்ள பேசிக்கிடுதாங்க ஆத்தோவ்... " சொல்லிப்புட்டு கெக்கேகெக்கேன்னு சிரிக்கான் அந்த எடுபட்ட பய.

இந்த நக்கலெல்லாம் கொஞ்ச காலமா நடந்திக்கிட்டுதேன் இருக்கு. ஆத்தாவுக்கு மூஞ்சிலடிச்சாப்ல ஆயிப்போச்சி. 'நான் பாத்து பொறந்த பயக... என்ன எகத்தாளம் பேசுதான்க'

இந்த ஊருல முக்காவாசிப் பேரு ஆத்தா பேறுகாலம் பாத்து பொறந்தவகதேன். இப்ப ஒரு பத்து வருசமாத்தேன் பாக்கப் போறதுல்ல. ஒடம்பு தளந்து போச்சில்ல...

6 புள்ள பெத்த மவராசி. இப்ப ஒத்தையிலதேன் இந்த வீட்டுல கெடக்கா. முந்தி தொழுவா இருந்ததில ஒரு சின்ன ரூம்பும் ஒரு சிலாத்தனான திண்ணையும் கட்டிக்குடுத்து இங்கன குடிவச்சிருக்காங்க மவங்காரங்க. கடைசி மருமவ வவுத்துக்கு வஞ்சகம் பண்ணாம சோறு குடுத்துட்ருவா. ரெண்டாவது மவன் வாராவாரம் வெத்தல பாக்குக்கு காசு குடுத்துட்டுப் பொயிருவான். எப்பயாச்சும் கடையிலருந்து காப்பித்தண்ணி வாங்கி குடிச்சிக்கிடுவா.

எப்பயும் போல காலைல இந்த திண்ணல வந்து ஒக்காந்தான்னா போற வாற எல்லார்ட்டயும் பேச்சுக்குடுப்பா. முக்காவாசிப்பேரு கேக்காதகணக்கா பொயிருவாக. ஒண்ணு ரெண்டு நக்கலா பதில் சொல்லிட்டுப் போவும். எப்பயாவது ஒருத்தவுக நின்னு 'ஆத்தா நல்லாருக்கியா?'ன்னு வெசாரிச்சிட்டா அன்னைக்கு பூரா ஆத்தா ரொம்ப சந்தோசமா இருப்பா.

என்னத்துக்கு இருக்கோமுன்னு தெரியலன்னாலும் என்னன்னு தெரியாத சாவ நெனச்சு ஆத்தா எந்நேரமும் பயந்துகிட்டேதேனிருக்கா. போன வருசம் இழுத்துப் பறிச்சிக்கிட்டுதேன் கெடந்துச்சி ஆத்தாளுக்கு. உறவு சனமெல்லாம் கூடிருச்சி. திடீர்னு 'என்னிய அதுக்குள்ள சாவச் சொல்லுதீகளா'ன்னு எந்திச்சி உக்காந்துட்டா ஆத்தா.

ஆத்தாளுக்கு நல்லா கூனு போட்ருச்சி. கண்ணு கூட லேசு லேசாதேன் தெரியும். ஒத்தப் பல்லு கூட கெடையாது. ஆனா காது மட்டும் நல்லா உசாரா கேக்கும். வாயிக்கும் குறைவு கெடையாது.

செத்தாள் கொட்டு கேக்க ஆரம்பிச்சிருச்சி... ஆத்தா வீட்டுக்குள்ள போவலாமுன்னு மெதுவா எந்திக்கா... அப்பப் பாத்து நாலாம் வீட்டு லச்சுமி வவுத்தப் புடிச்சிக்கிட்டே திண்ணையில வந்து உக்காருதா. 'ஆத்தா, வலி வந்திருச்சி... வீட்ல யாருமில்லை'ன்னு அழுவுதா...

ஆச்சிக்கு பதறுது. தாக்கல் சொல்லி உடுததுக்குக் கூட ஆரையுங் காணும்... "நிறை மாசமா இருக்க பொம்பளைய இப்பிடி ஒத்தையிலையா உட்டுட்டுப் போவாக?"

"இன்னும் ஒரு வாரமிருக்குன்னு நெனச்சோம் ஆத்தா" திணறுதா லச்சுமி

அவ சீலையெல்லாம் ஈரமா கெடக்கு. வவுத்தில கைய வச்சுப் பாக்குதா ஆத்தா...

"தாயி... மெள்ள மெள்ள இந்த சுவத்தப் பிடிச்சிக்கிட்டே உள்ள வந்திருத்தா... "


****


"பொட்டப் புள்ள தாயி" ஆத்தா புள்ளையைத் தூக்க முடியாம தூக்கி லச்சுமிகிட்ட குடுக்கா.... அதக் கேட்டதும் லச்சுமி ஓன்னு அழுவுதா... "மூணாவதும் பொட்டையாப் போச்சே ஆத்தா... புள்ள வேண்டாம் வேண்டாமின்னாரு ஆத்தா. நாந்தேன் ஆம்பளப் புள்ளக்கி ஆசப்பட்டு பெத்தேன். "

கொஞ்ச நேரம் கழிச்சி லச்சுமியோட மாமியாக்காரி வந்து லச்சுமிய நல்லா வஞ்சு போட்டுப் போனா. மவன் மூணு பொட்டப் புள்ளைகளை எப்பிடிக்
கரையேத்துவானோங்கற கவலை அவளுக்கு.

'வீட்டுப் பக்கம் வந்திராத'ன்னு வேற சொல்லிட்டுப் போறா அந்தப் புண்ணியவதி. புருசங்காரன் எட்டியே பாக்கலை. சாயங்காலமா குடிச்சிப்போட்டு வந்து ஆத்தா வீட்டுக்கு முன்னால சத்தம் போட்டுக்கிட்டிருந்தான்.

நல்ல வேள... பக்கத்துவீட்டு வேணிதேன் பத்தியச் சாப்பாடெல்லாம் செஞ்சு குடுத்து லச்சுமிக்கு ஒத்தாசையா இருக்கா. லச்சுமி அம்மாவுக்கு தாக்கீது சொல்லி உட்ருக்கதா சொன்னா. அவுக ரொம்பத் தொலவுலருந்து வரணும்...

மணி ராத்திரி ஒம்பதரை ஆயிப்போச்சு. சாப்புட்ட சாமான் சட்டியெல்லாம் எடுக்க வந்த வேணிட்ட "அந்தப் புள்ளய கொஞ்சம் இப்டி மடில வை தாயி"ன்னு கேட்டு வாங்கிக்கிடுதா ஆத்தா.

எத்தனப் புள்ளைகள மடில போட்டுக்கிட்டாலும் ஆச அடங்கமாட்டங்குது ஆத்தாவுக்கு. பூப்பந்து கணக்கா சம்முன்னு மடில படுத்திருக்கு பாப்பா. ஆத்தாளுக்கு சத்தம்போட்டு தாலாட்டுப் படிக்கணும்னு ஆசைதேன். முடியமாட்டங்குது...

புள்ள ஆத்தா மடில ஒண்ணுக்குப் பொயிருச்சி. 'எத்தா லச்சுமி, புள்ள துணிய மாத்துத்தா'ங்கா ஆத்தா. அழுதுக்கிட்டே பேசாம படுத்துக் கெடக்கா லச்சுமி. அவா பாடு அவளுக்கு பாவம்...

இன்னும் ரெண்டு தரம் சத்தம் குடுத்திருந்தா எந்திச்சு மாத்திருப்பா. ஆனா ஆத்தாளுக்கு பாவமா இருந்திச்சி. புள்ளைய மடில வச்சுகிட்டே நவண்டு நவண்டு துண்டை எடுத்து துடைச்சிட்டு பழைய வேஷ்டித் துணிய கிழிச்சி பாப்பாளோட இடுப்பச் சுத்திக் கட்டி உடுதா.

பாப்பா கைய கால ஆட்டிக்கிட்டே பளிச் பளிச்சின்னு முழிக்கி. ஆத்தா கண்ணச் சுருக்கி கூர் பண்ணிக்கிட்டுப் புள்ளய நல்லா பாக்கா. புள்ள ஆத்தா மூஞ்சயே பாக்கது போலத் தெரியுது. நெஞ்சுக்குள்ள சிலுசிலுன்னு ஊத்துத் தண்ணி ஓடுத கணக்கா இருக்கு ஆத்தாளுக்கு.

"எங்கிட்ருந்துத்தா வந்த நீயி? யாரு உன்னிய இங்கிட்டு அம்ச்சது தாயி?" ங்கா புள்ளகிட்ட

புள்ள லேசா உதட்ட சுழிக்கி. அந்த சுழில ஆத்தாளோட நெஞ்சு சிக்கிக்கிட்டாக்ல இருக்கு. கண்ணுல தண்ணி ஒழுகுது. சொரசொரன்னு இருக்க கையால புள்ளையோட கன்னத்த தடவுதா ஆத்தா.

"எதுக்கு தாயி இங்கிட்டு வந்த? என்னதான் இருக்குன்னு பாக்க வந்தியாக்கும்?" புள்ளக்கி உறக்கம் சொக்குது. ஆனா ஆத்தா பேச்சை உடுததா இல்ல.


"உன்னிய வேண்டான்னு நெனக்க மக்க மத்தில எம்புட்டு தெகிரியமா வந்திருக்கத்தா நீயி? இந்த ஆத்தாளுக்குத்தேன் இங்கிட்டிருந்து போவதுக்கு பயமாவே கெடக்கு. செத்துட்டா உன்னியப் போல ராச்சத்திமாரையெல்லாம் இப்பிடி மடில வச்சிருக்க முடியாதுல்ல தாயி..." ஆத்தாளுக்கு மேல பேச முடியமாட்டங்குது. சீலைல கண்ணயும் மூஞ்சையும் நல்லா தொடச்சிக்கிடுதா.

புள்ள அரைத் தூக்கத்தில ஆத்தாளப் பாக்கு.

"ஆனா என்னிக்கின்னாலும் போயித்தானத்தா ஆவணும்? ஏந்தாயி, இம்புட்டுக்காணம் இருந்துக்கிட்டு எம்புட்டுத் தெகிரியம் வச்சிருக்க நீயி... அதுல இந்தா இம்புட்டூண்டு குடேன் ஆத்தாளுக்கு" நரம்பாக் கெடக்க கையைக் குமிச்சு புள்ள கண்ணு முன்னால ஆட்டுதா ஆத்தா. சரிங்காப்ல புள்ள இன்னொருக்கா ஒண்ணுக்குப் போச்சு.

ஆத்தாளுக்குத் துணி மாத்த தெம்பு இல்ல. எம்புட்டு வேல பாத்திருக்கு இன்னைக்கு? ஆயாசமா இருக்கு. கண்ணக் கட்டுது.

இறுக்கி மூடிக்கெடக்க பாப்பாளோட பிஞ்சுக் கையைப் பிரிச்சு உள்ளங்கைல ஒத்த விரலால லேசா தடவுதா ஆத்தா. புள்ள அவ விரலை கிச்சின்னு பிடிச்சிக்கிடுது. ஆத்தாளுக்குத் திரும்பியும் அவங்காத்தா வயித்துக்குள்ள போயிட்டாப்ல நிம்மதியா இருக்கு.

மறுநா காலைல ஆத்தா வீட்டுல செத்தாள் கொட்டு கேக்கு. ஆத்தா சாவுக்கு ஆருமே அழல - பாப்பாளத் தவித்து.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

77 Comments:

At July 09, 2006 5:36 AM, Anonymous Guru said...

Engal Vottu AAththaavukke!!!!
aaththaala engkka konneenga thevaye illaama? innum konja naa paappaavoda vellaada vitturukkalaaam.

really nice story. wishes for you to win the contest.

 
At July 09, 2006 7:25 AM, Blogger இளவஞ்சி said...

நிலா,

கதை அருமையாக வந்திருக்கு!

போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!

 
At July 09, 2006 8:58 AM, Blogger manu said...

நிலா, அருமையான கவிதை. ஆத்தா மாதிரி இருக்கிறவங்களைப் பத்தி எழுத நிலா வந்தது மிக மகிழ்ச்சி.
குழந்தை பிறந்து ஆத்தா போனது ஒன்றிலிருந்து ஒன்று நிலையைச் சொல்கிறது.
அட இப்படியெல்லாம் நல்ல தமிழ்க் கேட்குமானால் அங்கே நாமே பொகலாமே.
வெற்றிக்கு வாழ்த்துக்கள் நிலா.

 
At July 09, 2006 9:50 AM, Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

நிலா, கதை நன்றாக இருக்கிறது. வட்டார வழக்கு இயல்பாய் இருக்கிறது.

 
At July 09, 2006 11:35 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

மீண்டும் கிராமிய நடை.
நல்ல கதை.
வாழ்த்துக்கள்.

 
At July 09, 2006 12:49 PM, Blogger S. அருள் குமார் said...

என்னடா நீங்க இன்னும் எழுதலையேன்னு காத்திருந்தேன். எதிர்பார்ப்புக்குக் குறையில்லாமல் அமைந்த இயல்பான கதை.

வாழ்த்துக்கள் :)

 
At July 09, 2006 1:31 PM, Blogger பத்மா அர்விந்த் said...

Nila, Very well written story. I think you, Usha and Poons are competing to write good stories!!

 
At July 09, 2006 10:15 PM, Blogger நிலா said...

//Engal Vottu AAththaavukke!!!!//

யெய்யா, பொறவு மாத்திரப்படாது :-)))

நன்றி, குரு

 
At July 09, 2006 11:58 PM, Blogger நிலா said...

நன்றி இளவஞ்சி

போட்டி அறிவித்தவரிடமிருந்து பாராட்டுப் பெறுவதில் மகிழ்ச்சி

 
At July 10, 2006 12:54 AM, Blogger மணியன் said...

தேன்துளி கூறுவதை நானும் வழிமொழிகிறேன். இயல்பான வட்டார வழக்கில் மரணத்தை முதுமை எதிர்கொள்வதை நாட்டுநடப்போடு அழகாக கூறியிருக்கிறீர்கள்.
Aside:
போட்டியென்று வந்துவிட்டால் வாசகர்களுக்குக் கொண்டாட்டம்தான், வோட்டு போடும்வரை. அதிலும் இந்த formatஇல் எல்லோருக்கும் போட்டுவிடலாம்.

 
At July 10, 2006 1:45 AM, Blogger G.Ragavan said...

ம்ம்ம்ம்...ஊகிக்க முடிந்த முடிவு என்றாலும் நடை அருமை. மிக அருமை. குறிப்பாக பாட்டி-பாப்பா உரையாடல்.

வாழ்த்துகள்.

 
At July 10, 2006 4:43 AM, Blogger நிலா said...

//நிலா, அருமையான கவிதை. //

மனு

ரொம்ப நன்றி...
எனக்கு ரொம்ப நிறைவு தந்த படைப்பு

ரொம்ப யோசிக்காம இதயத்திலிருந்து எழுதினது. ஒரே மூச்சில எழுதி முடிச்சது.

 
At July 10, 2006 5:53 AM, Blogger நிலா said...

நன்றி செல்வராஜ்

 
At July 10, 2006 7:01 AM, Blogger மா சிவகுமார் said...

ஊர்ப்பக்க ஆத்தா ஒருத்தியின் தனிமையை அழகாக வடித்து விட்டீர்கள்.

மரணத்தை எதிர்பார்த்து இருப்பது என்பது கொடுமை. முப்பது வயது ஆனதும் முப்பது வயதெல்லாம் சின்ன வயதாகப் பட்டு விடுகிறது. அறுபது வயது காரர்கள், "அவருக்கு அதிகம் வயசில்லை, என்ன ஒரு அறுபத்தஞ்சு தான் இருக்கும்" என்று பேசுகிறார்கள். எண்பது வயதிலும் சாவு நம்மை ஏன் இப்படி மிரட்டுகிறது?

எதற்காக தாம் இன்னும் வாழ்கிறோம் என்ற கேள்வி எழ ஆரம்பித்து விட்டாலே தளர்ச்சியும் ஆரம்பித்து விடுகிறது. தொண்ணூறு வயதானாலும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் தன்னால் பிறருக்குப் பலன் இருக்கிறது என்ற மனத் திடம் இருந்து விட்டால் வெல்ல முடியாத ஒன்றான மரணத்தைத் தவிர்க்க முடியாவிட்டாலும், மரண பயத்தை வென்று விடலாம்.

வட்டார வழக்கு கொஞ்சம் வலிந்து எழுதியதாகப் படுகிறது. மற்றபடி பல நடப்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உங்கள் கதை. பாராட்டுக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்
பிகு:
எறும்புகளில் முன்பு பேசியிருக்கிறோம். நினைவிருக்கிறதா?

 
At July 10, 2006 9:43 AM, Blogger நிலா said...

கொத்ஸ்

இந்தக் கதைக்கு கிராமிய நடை பொருந்தும்னு நெனச்சு எழுதினேன்

கதை பிடிச்சிருப்பதில் சந்தோஷம்

 
At July 10, 2006 10:32 AM, Blogger நிலா said...

//என்னடா நீங்க இன்னும் எழுதலையேன்னு காத்திருந்தேன். //

அப்படியா, அருள்... சந்தோசம்

//எதிர்பார்ப்புக்குக் குறையில்லாமல் அமைந்த இயல்பான கதை.

வாழ்த்துக்கள் :) //

நன்றி... நீங்க எப்ப எழுதிறீங்க?

 
At July 10, 2006 11:52 AM, Blogger murali said...

"எங்கிட்ருந்துத்தா வந்த நீயி? யாரு உன்னிய இங்கிட்டு அம்ச்சது தாயி?"

குழந்தைகளை பார்க்கும் போது எழும்
ஆச்சரியாமான கேள்வி.இதை தனக்குள் தக்கவைத்துக்கொண்டு விடை கண்டவர்கள் பிறருக்கு ஆச்சரியமாய் போய்விடுகிறார்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

 
At July 10, 2006 5:09 PM, Blogger கப்பி பய said...

இயல்பான நடையில் அருமையான கதை...வாழ்த்துக்கள் நிலா

 
At July 10, 2006 10:01 PM, Blogger மதுமிதா said...

நிலா

///"உன்னிய வேண்டான்னு நெனக்க மக்க மத்தில எம்புட்டு தெகிரியமா வந்திருக்கத்தா நீயி? ///

///ஏந்தாயி, இம்புட்டுக்காணம் இருந்துக்கிட்டு எம்புட்டுத் தெகிரியம் வச்சிருக்க நீயி... அதுல இந்தா இம்புட்டூண்டு குடேன் ஆத்தாளுக்கு" நரம்பாக் கெடக்க கையைக் குமிச்சு புள்ள கண்ணு முன்னால ஆட்டுதா ஆத்தா. ///


அருமையான கதை

ஆமா நீங்க சொன்ன பிறகு புதுசா கதை எழுதி போட்டாச்சு.

வந்து பாருங்க
http://madhumithaa.blogspot.com/2006/07/blog-post_10.html

ஆமா வாசகர்கள் நடுவர்கள் னு தேன்கூடில் இருக்கே.எப்படி தேர்ந்தெடுக்கிறது?
ஒண்ணுமே புரியலியே
ரொம்ப லேட்டா இருக்கிறேனா:-(

 
At July 10, 2006 10:51 PM, Blogger நிலா said...

Thank you, ThenthuLi

Will try to live upto the expectation

 
At July 11, 2006 12:26 AM, Anonymous Manju said...

நிலாவை பார்க்க தான் முடியும், நெருங்க முடியாது என்பது உண்மைக்கு எடுத்துகாட்டாக நிலாவின் எழுத்துக்கள் அருகே எவரும் நெருங்க முடியாது. அவளுக்கு அவள் தான் நிகர். மேளும் நிறய கதைகள் எழுதி, நிலாரசிகர்களின் வாழ்த்துபெற எனது வாழ்த்துகள்

 
At July 11, 2006 1:33 AM, Blogger நிலா said...

//இயல்பான வட்டார வழக்கில் மரணத்தை முதுமை எதிர்கொள்வதை நாட்டுநடப்போடு அழகாக கூறியிருக்கிறீர்கள்.//

நன்றி...

//போட்டியென்று வந்துவிட்டால் வாசகர்களுக்குக் கொண்டாட்டம்தான், வோட்டு போடும்வரை. அதிலும் இந்த formatஇல் எல்லோருக்கும் போட்டுவிடலாம்.//


ஓட்டு இல்லைன்னு நாசூக்கா சொல்றீங்களோ :-))))

 
At July 11, 2006 3:16 AM, Blogger நிலா said...

எனது முந்தைய கதைகள் சிலவற்றிற்கு நடுநிலையான விமரிசனங்களைத் தந்திருந்த பாரிஸ் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களிடம் ஜனனம் குறித்து கருத்துக் கேட்டிருந்தேன். அவருடைய பதில் இங்கே:

Am greatly moved by yr s.story ;
philosophical musings and social conciousness go hand in hand!
Nice short story ; eligible for the 1st prize.
Pls see my commnets in Tamil :
ஜனனம் -
ஆரவாரமில்லாமல் அரங்கேறிய அருமையான நாடகம்!
பிறப்பும் இறப்பும் பற்றிய சிறப்பான சிறுகதை!
வட்டார வழக்கில் ஒய்யார நடை போட்டு வரும் பட்டான கவிதை!
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே' என்ற
நன்னூலார் சூத்திரத்துக்கு நல்ல விளக்க உரை!
போகும் நேரம் வந்து விடுமோ என அஞசிக் காத்திருக்கும் பேச்சி ஆத்தாள்,
அனுப்பியது யார் எனத் தெரியாமலே வந்து விழுந்து
காலமெல்லாம் அழுவதற்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும் பாப்பா...
பொருத்தமான பாத்திரங்கள்!
இவர்கள் வழியாகச் சமுதாயச் சிந்தனைகளையும் தந்துவிடுகின்ற நயம்...
"ஜனனம்' பிறப்பித்த நிலாவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
முதற் பரிசுக்கே உரிய படைப்பு!
வாழ்க!
அன்புடன் பெஞ்சமின் லெபோ (பாரீஸ்)

 
At July 11, 2006 5:49 AM, Blogger நிலா said...

நன்றி, ராகவன்

 
At July 11, 2006 8:20 AM, Blogger நிலா said...

சிவகுமார்

விரிவான விமரிசனத்திற்கு மிக்க நன்றி

//வட்டார வழக்கு கொஞ்சம் வலிந்து எழுதியதாகப் படுகிறது. //

கொஞ்சம் விளக்குவீர்களா? திருத்திக் கொள்ள உதவும்? அதிகப்படியாகத் தெரிகிறதோ?

//மற்றபடி பல நடப்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உங்கள் கதை. பாராட்டுக்கள்.//

நன்றி

//எறும்புகளில் முன்பு பேசியிருக்கிறோம். நினைவிருக்கிறதா?//

ஓ :-)

 
At July 11, 2006 12:47 PM, Blogger நிலா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, முரளி

 
At July 11, 2006 1:49 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

கதை நல்லா இருக்கு நிலா.. எனக்கு வட்டாரத் தமிழே அத்தனை பழக்கமில்லை.. கொஞ்சம் நிறுத்தி நிதானிச்சி படிச்சேனா, அதான் தாமதமாகிடிச்சு..

//இம்புட்டுக்காணம் இருந்துக்கிட்டு எம்புட்டுத் தெகிரியம் வச்சிருக்க நீயி... அதுல இந்தா இம்புட்டூண்டு குடேன் ஆத்தாளுக்கு//
என்று ஆத்தா கேட்கும் போது... நெகிழ்வதைத் தவிர்க்க முடியவில்லை.. போட்டிக்கு வாழ்த்துக்கள்.

 
At July 11, 2006 10:24 PM, Blogger நிலா said...

நன்றி, கப்பி

 
At July 12, 2006 4:41 AM, Blogger நிலா said...

மது

வருகைக்கு நன்றி
வாசகர்கள்லாம் ஓட்டுப் போட்டுதாங்க பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுப்பாங்க. விபரமெல்லாம் தேன்கூட்டில இருக்கு. பாருங்க

அதனால தேர்தலுக்குத் தயாராகுங்க:-)))

 
At July 12, 2006 5:11 AM, Blogger தம்பி said...

நிலா,

வட்டார வழக்கிலுள்ள வார்த்தைகளை கதை முழுதும் அழகா தெளிச்சிருக்கிங்க. கதையும் ரொம்ப அருமையா வந்திருக்கு. உங்க கதைல வர்ற ஆத்தா மாதிரி ஒவ்வொரு கிராமத்திலயும் சில பேர் இருக்காங்க. நான் கூட அது போல சில பேரை சந்திச்சும் இருக்கேன் அதனால கதையோட ஒன்றிபோய் படிக்க முடிஞ்சது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

அன்புடன்
தம்பி

 
At July 12, 2006 8:18 AM, Blogger நிலா said...

மஞ்சு

இன்னும் கத்துக்குட்டிதான் நான். இந்தப் போட்டி எழுதிப் பழக வசதியா இருக்கு
மறக்காம ஓட்டு போட்ருங்க:-)

 
At July 12, 2006 3:10 PM, Blogger குமரன் (Kumaran) said...

மிக நல்ல கதை நிலா. ஒவ்வொரு மாதமும் அருமையான படைப்புகளாகக் கொடுக்கிறீர்கள். வாழ்த்துகள்.

 
At July 12, 2006 3:10 PM, Blogger குமரன் (Kumaran) said...

பாட்டியும் பாப்பாவும்ன்னு தலைப்பு கொடுத்திருக்கலாம்.

 
At July 12, 2006 8:54 PM, Blogger ராபின் ஹூட் said...

என் ஓட்டு கண்டிப்பா உங்களுக்குதான். கதை நல்லா இருக்குது.

 
At July 13, 2006 1:44 PM, Blogger நிலா said...

//எனக்கு வட்டாரத் தமிழே அத்தனை பழக்கமில்லை.. கொஞ்சம் நிறுத்தி நிதானிச்சி படிச்சேனா, அதான் தாமதமாகிடிச்சு.. //

நம்ம வீட்டுக்காரருக்கும் இதே பிரச்சனைதானுங்க :-)

//நெகிழ்வதைத் தவிர்க்க முடியவில்லை.. போட்டிக்கு வாழ்த்துக்கள்.
//

நன்றி, பொன்ஸ்

 
At July 13, 2006 9:12 PM, Blogger நிலா said...

//அதனால கதையோட ஒன்றிபோய் படிக்க முடிஞ்சது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்
//

நன்றி தம்பி

 
At July 13, 2006 10:10 PM, Blogger செந்தழல் ரவி said...

கதை அருமையா இருக்கு...வட்டார வழக்கு இயல்பாக நடைபோடுது...வாழ்த்துக்கள்..

 
At July 14, 2006 1:39 AM, Blogger தேவ் | Dev said...

ஒரு நடை தின்னவேலி பக்கம் போயி வந்தாப்பல்ல இருக்கு.. பதிவுலகின் பாரதிராஜா நீங்க தான் அக்கா.... போட்டுத் தாக்குங்க:)

 
At July 14, 2006 2:19 AM, Blogger ஜயராமன் said...

என்ன அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.

படித்து கொஞ்ச நேரம் ஆகிறது மனது படபடக்காமல் இருப்பதற்கு.

கடைசியில் எதிர்பார்த்தது போல ஆத்தாவை சாகடித்தது கொஞ்சம் ஸ்டாண்டர்ட் குறைந்து விட்டது. அது சராசரித்தனம். ஒருவேளை இன்னொரு மரணம் இருந்தால் தான் போட்டியில் ஜொலிக்கும் என்று நினைத்தீர்களோ.

ஆனால், ஜனனம், மரணத்தையும் பினைத்து கருவாக்கினது ரொம்ப டாப்.

நன்றி

 
At July 14, 2006 6:32 AM, Blogger நிலா said...

நன்றி, குமரன்
ஓட்டுப் போடும்போது நினைவில் கொள்ளுங்கள்:-)

 
At July 14, 2006 8:17 AM, Blogger நிலா said...

//பாட்டியும் பாப்பாவும்ன்னு தலைப்பு கொடுத்திருக்கலாம்.//

குமரன்

அப்புறம் சிறுவர்கள் கதைன்னு நினைச்சிடுவாங்க :-))

 
At July 14, 2006 1:50 PM, Blogger நிலா said...

ராபின் ஹூட்

ஓட்டு பற்றி தெளிவாகச் சொன்னதற்கு நன்றி. :-)

 
At July 14, 2006 11:42 PM, Blogger நிலா said...

செந்தழல் ரவி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 
At July 15, 2006 7:21 AM, Blogger நிலா said...

//பதிவுலகின் பாரதிராஜா நீங்க தான் அக்கா.... போட்டுத் தாக்குங்க:)//


சும்மா சொன்னா போதாதுய்யா... சங்கத்திலருந்து ஓட்டெல்லாம் கொண்டு வந்து சேத்துப்புடணும், ஆமா :-)

 
At July 16, 2006 3:17 PM, Blogger நிலா said...

//கடைசியில் எதிர்பார்த்தது போல ஆத்தாவை சாகடித்தது கொஞ்சம் ஸ்டாண்டர்ட் குறைந்து விட்டது.//

வாய்ப்பிருக்கிறது, ஜயராமன்

//ஒருவேளை இன்னொரு மரணம் இருந்தால் தான் போட்டியில் ஜொலிக்கும் என்று நினைத்தீர்களோ.//

ஒரு ஜனனம் மரண பயத்தை இளக்குகிறது என்பதுதான் கதையின் கரு. ஆத்தா இறந்தால்தான் இந்த மெஸேஜ் வெளிப்படும். முடிவு எழுதும் போது இது அனைவராலும் ஊகிக்கக் கூடியதாக இருப்பதால் மாற்றிவிடலாமா எனக்கூட நினைத்தேன். ஆனால் படைப்பு போட்டிக்கானதாக மட்டும் இருக்கக்கூடாது என்பதால்தான் முடிவை மாற்ற மனம் வரவில்லை. போட்டியின் தலைப்பு மரணம் என்பதை அறியாதவர்களுக்கு இந்த முடிவு சரியானதாகத் தோன்றும் என்பது என் எண்ணம்

//ஆனால், ஜனனம், மரணத்தையும் பினைத்து கருவாக்கினது ரொம்ப டாப்.//

மிக்க நன்றி

 
At July 21, 2006 8:48 AM, Blogger மதுமிதா said...

நிலா

எப்படி ஓட்டு போடணும்னு தெரியாம அந்தப் பக்கம் போனேன்
இருக்கிற ஒரு வோட்டை பாட்டிக்குப் போட்டுட்டு வந்துட்டேனே.

இப்ப சந்தோஷப்படறதா வேணாமா
உங்களுக்கு கிடைச்சது சந்தோஷம்:-)))
காற்றுவெளிக்கு இல்லாம போச்சே:-(((

 
At July 21, 2006 8:51 AM, Blogger நிலா said...

மது

எவ்வளவு நல்ல உள்ளம் உங்களுக்கு!

பேச்சி ஆத்தாளின் ஆன்மா உங்களை வாழ்த்தும் :-))

ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களுக்கு வாக்களிக்கலாமே, மது
காற்று வெளியை சேர்த்திருக்கலாமே!

அதனாலென்ன... அடுத்த முறை இருக்கவே இருக்கிறது, மது :-)

 
At July 21, 2006 8:43 PM, Blogger செல்வேந்திரன் said...

Sooperb One Nila !!

Aathaa naan pass aagitean nu solrathukulla....

aaathaa pass agitaangalea ;-(

Nice thought !!

 
At July 23, 2006 10:46 PM, Blogger நிலா said...

//Sooperb One Nila !!//

நன்றி, செல்வேந்திரன்

//Aathaa naan pass aagitean nu solrathukulla....

aaathaa pass agitaangalea ;-(//

:-)

 
At July 27, 2006 6:03 PM, Blogger சோழநாடன் said...

வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

 
At July 27, 2006 6:05 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் நிலா

 
At July 27, 2006 6:58 PM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் தி. ரா.ச

 
At July 27, 2006 7:02 PM, Blogger Seemachu said...

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் நிலா..

கதையை இப்பத்தான் படிச்சேன். முன்னமே படிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

பரிசுக்குத் தகுதியான கதைதான்.
இன்னொரு வோட்டு போஸ்டல் ஓட்டாச் சேத்துக்குங்க,

அன்புடன்,
சீமாச்சு..

 
At July 27, 2006 7:21 PM, Blogger துளசி கோபால் said...

முதலிடம் பெற்றதுக்கு வாழ்த்து(க்)கள் நிலா.

அருமையான கதை.

 
At July 27, 2006 7:58 PM, Blogger azadak said...

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

அன்புடன்
ஆசாத்

 
At July 27, 2006 9:45 PM, Blogger செந்தில் குமரன் said...

வாழ்த்துக்கள்... :-)))

 
At July 27, 2006 9:57 PM, Blogger உங்கள் நண்பன் said...

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் நிலா..

கதையை இப்பத்தான் படிச்சேன்.
தகுதியான கதை வாழ்த்துக்கள்,

"ஆத்தாவ மறந்திடாதீங்க" என்று சொல்லியும் படிக்காமல் விட்டதற்க்கு இப்போது வருத்தப் படுகிறேன்,

இனி சொல் போச்சு கேட்டு நடந்துகொள்கிறேன்.


அன்புடன்...
சரவணன்.

 
At July 27, 2006 9:59 PM, Blogger S. அருள் குமார் said...

வாழ்த்துக்கள் நிலா :)

 
At July 27, 2006 10:16 PM, Blogger தேவ் | Dev said...

வாழ்த்துக்கள் :)

 
At July 27, 2006 10:17 PM, Blogger மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்தும்மா

ஆமாம் நிலா
பரிசு அறிவிச்ச உடனே என்னை நினைச்சீங்களா இல்லியா?
முதல் ஓட்டு போட்டு ஆரம்பிச்சு வெச்சது எங்க கொண்டு போயி நிறுத்தியிருக்கு பாருங்க


மென்மேலும் சிறப்புகள் பெற்று வாழ்க நிலா

 
At July 27, 2006 11:12 PM, Blogger ILA(a)இளா said...

போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

 
At July 28, 2006 2:16 AM, Blogger ஜயராமன் said...

இது தங்கள் இந்த பதிவில் நான் இடும் இரண்டாவது பின்னூட்டம்.

முதல் பரிசு அறிவிப்பை கேட்டு நான் நானே வென்றதாக மகிழ்ந்தேன்.

உங்களுக்காக மெனக்கட்டு இந்த தேன்கூடு எங்க இருக்குன்னு பாத்து அதில என்ன பதிச்சு தேனியெல்லாம் கொட்டாம போய் ஒரு ஓட்டு போட்டேன். (யாருக்குன்னு சொல்லவேற வேணுமா) இந்த ராமர் அங்கே அணிப்பிள்ளையா ஆயிட்டேன்.

பரிசுகள் மூன்றும் மூன்று சுவையான பதிவுகளுக்கு போய் இருக்கிறது. முக்கனிகள் போல் மூன்று பதிவுகளும் இருக்கின்றன. ஒருத்தர் கவிதை சிம்பதி ஓட்டில பரிசு தட்டிவிட்டது என்று நினைக்கிறேன். (அதற்காக குறை என்று தவறாக நினைக்கவேண்டாம்)

ஆனால், தங்கள் கதை பல மைல் வித்தியாசத்தில் ஓடி வென்ற குதிரை.

இந்த 'மரணம்' தலைப்பில் இவ்வளவு உற்சாகமாகவும் பாஸிட்டிவ் ஆகவும் ஒரு கதையை அமைத்தது தங்கள் முதல் வெற்றி.

மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது.

தங்கள் சிறுகதையை படித்த பிறகு அதை சொல்லிய விதம், (லோகல் ஸ்லாங் மட்டும் இல்ல. விறுவிறுப்பான வார்த்தைகளை போட்டு வேகமாக சொன்ன பாணி) மறுபடியும் படிக்க சொன்னது.

மேலும் ப்ளாஸ்பேக் ரொம்ப குறைச்சல். மற்ற பல கதைகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு மூட்டையை அவர்கள் சுமந்து கொண்டே அலைந்தார்கள். அதனால் கதை படிக்கும்போது அயர்ச்சி வந்தது. ஆனால், தங்கள் கதை நிகழ்விலேயே சுற்றி வந்தது.

தங்கள் கதையின் பாத்திரங்கள் காம்ப்ளிகேட் இல்லாத ஓர் முனை பாத்திரங்கள். அது கதைக்கு மிக மெருகு. மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள்.

ரொம்ப இழுத்துவிட்டேன் போல இருக்கு.

ஜூட்.

கங்க்ராட்ஸ்.

 
At July 28, 2006 2:37 AM, Blogger செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள்...:)) - எப்படியோ நம்ம ஓட்டு வீணா போகல..:))

 
At July 28, 2006 2:45 AM, Blogger ramachandranusha said...

//"எங்கிட்ருந்துத்தா வந்த நீயி? யாரு உன்னிய இங்கிட்டு அம்ச்சது தாயி?" ங்கா புள்ளகிட்ட//

நிலா, இந்த வரிகள் ... இதை சொல்லாத பெருசுகளே இல்லை. பிறந்த குழந்தையைப் பார்த்ததும் மனதில் இந்த வார்த்தைகள் எல்லாருக்குமே ஓடும். சின்ன கண்கள், ங்கா என்று ஒரு பேச்சு, குட்டி குட்டி கை, கால்கள் என்ற உருவத்தைப் பார்த்ததும் மனதில் தோன்றும் எண்ணத்தை அப்படியே வார்த்தையால் வடித்துவிட்டீர்கள்.
இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்றால், சும்மா ஒரு ஆளுக்கே திரும்ப திரும்ப பரிசு கொடுப்பது போங்கு என்ற நல்ல எண்ணத்தில்தான் :-))))
வாழ்த்து தேன்கூட்டில் சொல்லிட்டேன், மீண்டும் ஒரு முறை
நிலா முதல் பரிசு பெற்றதற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! (அவசரமாய் அடிப்பதால் தவறுகளைக்
கண்டுக்காதீர்கள்)

 
At July 28, 2006 5:25 AM, Blogger நிலா said...

சோழநாடன், தி.ரா.ச
வாழ்த்துக்களுக்கு நன்றி

பொன்ஸ்,

வெற்றி பெற்றதற்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்

 
At July 28, 2006 6:59 AM, Blogger G Gowtham said...

நிலா,
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தேன்கூட்டுக்கும் தமிழ்மணத்துக்கும் பாராட்டுக்கள்.
வாக்களித்த அனைவருக்கும் கை குலுக்கல்கள்.
சரியானது வென்றே தீரும், வெற்றியாளர்கள் வாழ்க: வளர்க!
அழியா அன்புடன்..
ஜி கௌதம்

 
At July 28, 2006 9:36 AM, Blogger நிலா said...

//பரிசுக்குத் தகுதியான கதைதான்.
இன்னொரு வோட்டு போஸ்டல் ஓட்டாச் சேத்துக்குங்க//

நன்றி சீமாச்சு :-)

 
At July 28, 2006 12:19 PM, Blogger G Gowtham said...

ஐயா ஜயராமன் அவர்களே..

(மன்னிக்கவும் நிலா! இது உங்கள் இடமென்றாலும் ஐயாவிடம் கொஞ்சம் பேசவேண்டியுள்ளது!)

ஏற்கெனவே நான் இங்கே ஒரு பின்னூட்டத்தில் சொன்னதை மறுபடியும் ஒருமுறை வழி மொழிகிறேன்.... 'சரியானது வென்றே தீரும்!'
வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள், மனமார வாழ்த்துங்கள்.

அதே சமயம்... 'மற்ற பலரை'க் காயப்படுத்தாமலிருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

//மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது.//
//மற்ற பல கதைகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு மூட்டையை அவர்கள் சுமந்து கொண்டே அலைந்தார்கள். அதனால் கதை படிக்கும்போது அயர்ச்சி வந்தது.//
//மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள்.//

எல்லோரையும் உற்சாகப் படுத்தவேண்டும் என்பதற்காக 80 பதிவுகளுக்கும் வோட்டுப் போட்டவன் நான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் போட்டிக்குப் படைப்புகளை அனுப்பியவர்களில் நானுமொருவன் என்பதால் சுய கோபத்தில் நான் இந்தப் பின்னூட்டத்தை எழுதுவதாக தப்பர்த்தம் செய்துவிட வேண்டாம்!

'இன்றைக்கு சமையல் அருமை' என மனைவியைப் பாராட்டலாம். ஆனால் 'இதுவரை நீ சமைத்ததெல்லாம் சகிக்கலை. இன்றைக்கு சமையல் அருமை'எனச் சொல்வது மனைவிக்கான பாராட்டு இல்லை!

'மற்ற பலரின் மன விகாரங்களை' அவர்களது ஒரே படைப்பில் படித்து கண்டுபிடித்த அதிமேதேவி ஐயாவே... இணையத்தில் தமிழ் வளர்வதாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். எழுதுபவர்களை உற்சாகப் படுத்த முடியாதபடியான மன விகாரம் உங்களுக்கு இருக்கட்டும், அதனால் ஊருக்குக் கெடுதல் இல்லை. ஆனால் காயப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்.

 
At July 28, 2006 1:40 PM, Blogger செயபால் said...

நல்ல கதை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
இந்தக் கிராமியத் தமிழ் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சொந்தமா?

//செத்தாள் கொட்டு,
சின்ன ரூம்பும் ஒரு சிலாத்தனான //

எல்லாம் புதுசாயிருக்கு. ஆனால் நல்லாயிருக்கு.

 
At July 28, 2006 4:12 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ஜயராமன்,
வெற்றி பெற்ற மூன்று படைப்புகளிலும் உங்கள் பின்னூட்டத்தைப் படித்தபின் எனக்கு நிஜமாக ரொம்ப கோபம் வந்தது சார்..

//மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது. //
மற்ற பலரின்? எத்தனை சார் படிச்சீங்க?!! நானும் 80 படைப்பையும் படிச்சேன். மரணம் என்னும் தலைப்புக்கு நிச்சயம் ஒட்டி வருவதாகவே இருந்தன பல படைப்புகள்.. இன்னும் சில சைன்ஸ் fiction , காமெடி, satire கூட இருந்ததே, அதுக்கெல்லாம் ஓட்டு போட்டிருக்க வேண்டியது தானே? நீங்க நினைப்பது போல் எல்லாரும் நினைத்திருந்தால், அந்தச் சில படைப்புகளில் ஒன்று வந்திருக்குமே!!

// ஒருத்தர் கவிதை சிம்பதி ஓட்டில பரிசு தட்டிவிட்டது என்று நினைக்கிறேன். (அதற்காக குறை என்று தவறாக நினைக்கவேண்டாம்)//
சிம்பதி என்று எதைச் சொல்வீர்கள்? இதில் லிவிங் ஸ்மைல் வித்யாவின் கவிதைப் பக்கத்திலேயே என்னவோ சோகம், வன்ம்ம், வெறுப்புடன் எழுதி இருக்கிறதாய் சொல்றீங்க!! அவங்க சொல்லும் விஷயங்கள் நமக்கே நடந்திருந்தா எப்படி சார் இருந்திருக்கும்? சோகம், வன்மம் இல்லாம பேச முடியுமா என்ன? வித்யாவின் கவிதை முகத்தில் அறையும் நிஜம்.. பேச்சியாத்தாளையும் சந்திரா அத்தையையும் நீங்களும் நானும் சராசரி வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். அதனால இயல்பா தோணுது.. ஆனா லிவிங் ஸ்மைல் சொல்லும் அக்கிரமங்கள் இன்னும் சமுதாயத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா சார் உங்களால?!!

பொதுவா எனக்குக் கோபம் வராது.. இஷ்டத்துக்கு எது வேணாலும் பேசலாம்னு நீங்க பேசும்போது.. என்ன சொல்றதுன்னே தெரியலை சார்!!

என்னவோ போங்க.. அன்பு, காதல் கவிதைகள் மட்டும் எழுத வேணுமானால், உலகம் முழுவதும் அன்பால் மட்டுமே நிரம்பி இருக்க வேணும்.. அதுவரை இப்படிப்பட்ட படைப்புகளை வெறும் அனுதாப ஓட்டாக்கிக் குறைத்துப் பேசுவதை .. என்ன சொல்றதுன்னு தெரியலை சார்.. உணர்ந்து தான் பேசறீங்களா? இல்லை வித்தியாசமா சொல்லணும்னு..? இதோட விட்டுர்றேன். எதுவும் சொல்ல வரலை!!

நிலா, உங்க கதைக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டம் இது.. உங்களுக்கு ஆட்சேபணை இருந்தா சொல்லுங்க என் பதிவில் போட்டுக்கிறேன்.

 
At July 28, 2006 7:31 PM, Blogger ஜயராமன் said...

பொன்ஸ் மேடம்,

என் பின்னூட்டத்தில் ஏதாவது தங்களுக்கு பிழையாக தோன்றியிருந்தால் நான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

எனக்கு தோன்றியதை எழுதினேன். அது தங்கள் அபிப்ராயத்துக்கு விரோதமாக இருந்ததால் ஏன் இத்தனை காட்டமாக எதிர்க்கிறீர்கள். யானை தாக்கினால் நாங்கள் தாங்குவோமா?

நான் யாரையும் எதையும் சிறுமைப்படுத்த முயலவில்லை.

நிலா மேடம். இம்மாதிரி இங்கு நடந்ததுக்கு நான் தனிப்பட்ட முறையில் தங்களை மன்னிக்க வேண்டுகிறேன்.

நன்றி

 
At July 28, 2006 10:00 PM, Blogger இளவஞ்சி said...

நிலா,

வெற்றிக்கான என் வாழ்த்துக்கள்! :)

 
At July 29, 2006 5:13 AM, Blogger நிலா said...

ஆசாத், நன்றி

துளசி தலைவி

வாழ்த்தெல்லாம் இருக்கட்டும்... போட்டி நடக்கறப்ப நம்ம பக்கமே வர்றதில்லை போலிருக்கு :-)))

 
At July 29, 2006 2:40 PM, Blogger நிலா said...

குமரன் எண்ணம், அருள்குமார்

நன்றி

சரவணன்,

//இனி சொல் போச்சு கேட்டு நடந்துகொள்கிறேன்.//

அது.... :-))

 
At July 30, 2006 1:11 AM, Blogger நிலா said...

தேவ், இளா

நன்றி

மது,

சிற்பிகளுக்கு சமர்ப்பணம்னு உங்களைப் பத்தி எழுதியாச்சு

 
At July 30, 2006 12:31 PM, Blogger நிலா said...

இளா, கௌதம்
வாழ்த்துக்கு நன்றி

செந்தழல் ரவி,

ஓட்டுப் போட்டதுக்கு ஸ்பெஷல் நன்றி

 
At August 13, 2006 9:17 AM, Blogger ஆழியூரான். said...

மிகுந்த தாமதத்திற்குப் பிறகு 77-வது நபராக எதிர்வினை செய்கிறேன்.

அன்பும்,கருணையும் பொங்கி வழியும் அற்புதமான கதை.ஒரே நெருடலாக எனக்குத் தெரிந்தது,நெல்லை, தேனீ ஆகிய இரண்டு வட்டார வழக்குகள் கலந்திருந்ததுதான்.பெரும்பாலும் நெல்லை வழக்கில் செல்லும் கதை ஒரு சில இடங்களில் தேனீக்குத் திசை மாறுகிறது.ஆனால் கதையின் போக்கும் பாட்டி-பாப்பா நெகிழ்ச்சியான உரையாடலும் வேறு எதையும் யோசிக்க விடவில்லை.வாழ்த்துக்கள்...

 

Post a Comment

<< Home