.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, June 08, 2006

திருட்டுப் பயலே!

Your Ad Here

தலைப்பைப் பார்த்ததும் சினிமா விமரிசனம் என்று நினைத்து வந்தீர்களானால்... ஸாரி... (உங்களை எப்படித்தான் படிக்கவைக்கிறதாம் :-)))
சமீபத்தில் இந்திய அரசு இயந்திரங்கள் செயல்படும் அழகு குறித்து 'என் அம்மாவின் பாஸ்போர்ட்' என்ற பதிவில் எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அது போல ஒரு புலம்பல்தான் இதுவும்.

சமீபத்தில் எனது நாத்தனார் எங்களுடன் ஒரு மாதம் தங்கிவிட்டு இந்தியா திரும்பினார். தனது பெட்டிக்கு ஒரு சிறிய பூட்டு மட்டும் போட்டிருந்தார். என் கணவர் என்ன சொல்லியும் பெட்டியில் இருந்த நம்பர் லாக்கைப் பூட்ட மறுத்துவிட்டார். (நம்பர் மறந்துவிடுவார் என்று!)

பிரிட்டிஷ் ஏர்வேஸில் ஊர் போய்ச் சேர்ந்த போது சென்னை ஏர்போர்ட்டில் இவரது பெட்டி வரவில்லை. புகார் சொல்லிவிட்டு அவரது கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இரு நாட்கள் கழித்து பெட்டியை எடுத்துக்கொண்டு சென்ற அலுவலர் எல்லா பாரங்களிலும் உஷாராய் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

இங்கே பெட்டியைச் செக்-இன் செய்யும்போது 20.5 கிலோ இருந்தது. ஆனால் அவர் 19 கிலோவுக்குக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். என் நாத்தனார் கேட்டபோது ஏதோ சொல்லி சமாளித்திருக்கிறார். பெட்டி பூட்டிய நிலையில் இருக்கவும் என் நாத்தனாருக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை
ஆனால் பெட்டியைப் பின் திறந்த போதுதான் விலை உயர்ந்த பட்டுப்புடவை ஒன்றும் பரிசுப் பொருட்கள் பலவும் காணாமல் போயிருப்பதைக் கண்டார். டென்ஷனாகி திரும்ப நிறுத்துப் பார்த்ததில் 17 கிலோதான் இருந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் சொன்னால் உங்கள் புகாரைப் பதிவு செய்தாகிவிட்டது; கடிதம் வரும் என்கிறார்கள் - வழக்கமான நம்மூர் ஸ்டைலில். என் கணவர் இங்கிருந்து தொலை பேசியபோதும் இயந்திரத்தனமான பொறுப்பில்லாத அதே பதில்.

4 நாட்கள் கழித்து இன்று வந்த கடிதத்தில் தொலைந்த பொருட்கள் வாங்கிய ரசீது இருந்தால் மட்டுமே ஈட்டுத்தொகை பற்றி பரிசீலிக்க இயலும் என்றும் மற்றபடி தொலைந்த பொருட்களுக்குத் தாங்கள் பொறுப்பில்லை என டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸை மேற்கோள்காட்டி கழன்று கொண்டார்கள்

தொலைந்த பொருட்கள் எல்லாவற்றுக்கும் ரசீது கிடைப்பதரிது என்றாலும் வெறும் ஈட்டுத்தொகையால் திருட்டுப் போன பொருட்களின் சென்டிமென்டல் வேல்யூவை ஈடு செய்ய இயலுமா? அந்தப் பட்டுப்புடவை மறைந்த என் மாமியார் தன் மகளுக்கு வாங்கித்தந்த புடவை; என் நாத்தனாருக்கு ராசியான புடவை வேறு. முகூர்த்த நாளில் அதுவும் வேறு சில மங்கலப் பொருட்களும் காணாமல் போனது வேறு அவருக்கு அபசகுனமாகப் படுகிறது. பாவம், ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டார்.

எனக்கு இருக்கும் கேள்விகளெல்லாம்:

- அதிகபட்சம் 20 பணியாளர்கள் அந்தப் பெட்டியைக் கையாண்டிருக்க வாய்ப்புண்டா? அந்த 20 பேரையும் விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடாதா?

- பிரிட்டிஷ் ஏர்வேஸ் இதனைச் செய்யத் தயங்குவதேன்? திருட்டு அம்பலப்பட்டு பெயர் கெட்டுவிடும் என்றா? இப்போது மட்டும் பெயர் கெடவில்லையா? பின் ஏன் இந்த மெத்தனப் போக்கு? இடைநிலை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பார்களோ?

- திருட்டு நடக்கிறதென்று அப்பட்டமாகத் தெரிகிறது. அதனை எளிதாய்க் கண்டுபிடிக்கலாம் என்றும் தெரிகிறது. அப்படி இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை ஏன்? இது இந்தியாவில் (அல்லது வளர்ந்து வரும் நாடுகளில்) மட்டும்தானா?

- இவர்களோடு மன்றாடிக் கொண்டிருக்கமுடியாது என்று எல்லோருமே விட்டுவிடுவதால்தானோ இத்தகைய திருட்டுகள் தொடர்கின்றன? நீதி ஒன்று இருக்கிறது என்ற பயம் வந்தால் இத்தகைய திருடர்கள் திருந்த மாட்டார்களா?

- நுகர்வோர் வழக்குமன்றத்தில் வழக்குத் தொடரமுடியுமா? எவ்வளவு காலம் பிடிக்கும்? எவ்வளவு செலவாகும்?

- போலீஸில் புகார் தரமுடியுமா? (பெட்டியில் வைத்திருந்தாய் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் என்ன சொல்லமுடியும்?)

- தனியார் துப்பறியும் நிறுவனங்களின் உதவி கொண்டு ஆதாரங்கள் சேகரித்துக் கொடுத்தால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பரிசீலிக்குமா?

- இல்லை, நீதி, நியாயம் என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் ஓவர் ரீயாக்ஷனோ? இதையெல்லாம் கண்டும் காணாமல் போவதுதான் 'நல்ல' இந்தியனுக்கு அழகோ??

ஏதாவது செய்யவேண்டும் என்று துடிப்பாய் இருக்கிறது... ஆனால் சாத்தியமா, தேவையா என்றுதான் குழப்பமாக இருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

(அடுத்த பதிவாவது உருப்படியான பதிவாக இருக்கவேண்டுமென்று உண்மையாகவே ஆசைப்படுகிறேன் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

At June 09, 2006 9:07 AM, Anonymous சேதுக்கரசி said...

("அன்புடன்" குழுமத்தில் நான் இட்ட மறுமொழியின் பகுதி)


ஒரே மாதிரிப் புலம்பல்கள் வைத்திருக்கிறோம்.

நான் முதல் முறை இந்தியாவுக்குச் சென்றபோது இரண்டு பெட்டிகள் தொலைந்தன. ஒன்று பிரிட்டிஷ் ஏர்வேஸிலிருந்து தாமதமாகக் கிடைத்தது, இன்னொன்று ஏர் ஃபிரான்ஸில் போயாச்சே, போயித்தே, போயிந்தே, "இட்ஸ் கான்". என் கணவரின் தம்பிக்காக ஒரு பெரிய ஸ்பீக்கர் செட்டை நாங்கள் கொண்டுபோகவேண்டி இருந்ததால் உறவினர் ஒருவரிடம் எங்கள் பெட்டியை அனுப்பப்போய் வந்த வினை அது.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் தாமதமாகக் கிடைத்தது சிறிய பெட்டி தான், நல்லவேளை! எனவே அதில் அதிகப் பொருட்கள் இல்லை. பெட்டி கிடைப்பதற்குள் கோவை சென்றுவிட்டேன் என்பதால் அது கிடைத்த தகவல் கிடைத்ததும் கோவைக்கு அனுப்பச்சொன்னோம். கோவை விமான நிலையத்தில் பெட்டியை வாங்கச் சென்றபோது கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். கையெழுத்து வாங்கினார்களா என்று நினைவில்லை, ஆனால் பெட்டியைத் திறந்து பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். மேலாகப் பார்த்ததில் ஒரு பொருள் குறைந்தது உடனே தெரிந்தது, ஆனால் அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். வீட்டுக்குச் சென்று பார்த்தால் ஒரு புடவையைக் காணவில்லை. 300 ரூபாய்க்குள் மதிக்கக்கூடிய சுமாரான புடவை தான், சென்னை சென்று இறங்கியதும் மாற்றிக்கொள்வதற்காக வைத்திருந்தது. புதுப் புடவை கூட இல்லை... *உபயோகப்படுத்திய புடவையை எடுத்துக்கொண்டார்கள் பிச்சைக்காரர்கள்*! என்று விட்டுத்தொலைத்தேன்.

ஏர் ஃபிரான்ஸில் சென்ற உறவினருடைய இரண்டு பெட்டிகளும் தில்லியில் அவர் இறங்கியபோது காணவில்லை. அதில் ஒன்று எங்களுடையது. 25 கிலோ எடை முழுக்க முழுக்கப் புதுப் பொருட்கள். நான் முதல் முறை விடுமுறைக்குச் செல்வதால் அனைவருக்கும் வாங்கியிருந்த பரிசுகள். குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் வீட்டில் வேலை செய்வோருக்கும் நண்பர்களுக்கும் என்று... அவர்களுக்கெல்லாம் விருப்பப்பட்ட பொருட்களைக் கொடுக்கமுடியவில்லையே என்ற பெரும் ஆதங்கம். என் கணவரின் தாயார், பெரியம்மாக்கள், சித்திகள், அத்தைகள், மாமி என்று அனைத்துப் பெண்மணிகளுக்கும் வாங்கிய பொருட்கள் அம்போ. பெண்களுக்கு வாங்கிய பொருட்கள் தொலைந்தால் மிகவும் சங்கடம், பிறகு அவர்களுக்கு வேறு என்ன கொடுப்பது என்ற மனக்கஷ்டம்.

உறவினரின் ஏர் ஃபிரான்ஸ் டிக்கட்டினாலும் அவருடைய பயணத்துக்காக அவருடைய நிறுவனம் எடுத்திருந்த பயண இன்சூரன்ஸினாலும் அவரால் பணம் மீட்டுத் தரமுடிந்தது. ரசீதுகள் கேட்கவில்லை, ஆனால் பொருட்களின் பட்டியலும் டாலர் மதிப்பும் கேட்டிருந்தார்கள். இயன்றவரை நினைவுபடுத்தி எழுதிக் கொடுத்தேன். இரண்டொரு மாதங்களில் பணம் கிடைத்தது. கணிசமான தொகையாகவும் இருந்தது, அதனால் தொகையைக் குறைகூற முடியாது.

ஆனால் அடுத்த முறையும் அவர் பணிக்காக ஏர் ஃபிரான்ஸில் அமெரிக்கா வந்து சென்ற போது அவருடைய பெட்டி காணாமல் போயிற்று என்பது கொசுறு விசயம்.

அந்த ஒரே காரணத்துக்காக, முன்பெல்லாம் தில்லி சென்ற ஏர் ஃபிரான்ஸ் இப்போதெல்லாம் சென்னைக்கே செல்கிறது என்றாலும் அதன் பயணச்சீட்டின் விலை சற்றே குறைவாக இருந்தாலும் அதில் பயணம் செய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்.

2003-இல் பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணித்தபோது அமெரிக்காவில் பெட்டியைப் பூட்ட வேண்டாம், பூட்டினால் பூட்டை உடைக்கவேண்டிவரும் என்று சொல்லியிருந்தார்கள் (செப்டம்பர் 2001-க்குப் பிறகு வந்த மாற்றங்களால்) அல்லது நம்பர் லாக் போட்டு நம்பரைத் திருப்பாமல் அவர்களிடம் கொடுத்துவிடவேண்டும். அவர்கள் தேவைப்பட்டால் சோதனையிட்டுவிட்டு நம்பர் லாக்கைப் பொருத்துவார்கள். எனவே அந்தப் பயணத்தில் நாங்கள் பெட்டியைப் பூட்டவேயில்லை, ஆனால் சென்னையில் பத்திரமாக வந்து சேர்ந்தது!

அது சரி, விசாரணை நடந்தால் தானே உண்மை வெளிவருவதற்கு? என்னுடைய case-இல் புடவையையும் மற்ற பொருளையும் எடுத்தது பெட்டிகளைக் கன்வேயர் பெல்ட்டில் தூக்கிப்போடும் கடைநிலை ஊழியனல்ல, அதிகாரியாக இருக்கும் என்பதே என் யூகம். பெட்டியில் வைத்திருந்தோம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அதற்காக, பெட்டியில் பொருட்களை அடுக்கும்போது நாம் வீடியோ எடுத்து சேமித்துவைத்தா அவர்களிடம் காட்டமுடியும்?

 
At June 10, 2006 1:37 AM, Blogger மணியன் said...

பெட்டி தொலைந்து போவது வெளிநாடு போகும் அனைவருக்கும் ஏற்படும் நிகழ்வுதான். ஆனால் பொருட்கள் தொலைவது சற்று இந்தியாவில் அதிகம்தான். விமானக்கம்பனிகள் சாமன்களை கையாளுவதை மூன்றாம் நபர்களுக்கு விடுவதாலும், பலநாட்டு போலிஸ் எல்லைப் பிரச்னைகள் வருவதாலும் மீட்பது என்பது துர்லபம் தான். அதனால்தான் ஈட்டுப்பணம் கொடுத்து சரிகட்டுகிறார்கள். அதையும் சமீபகாலங்களில், இலாப மார்ஜின் குறைந்திருப்பதால், தட்டிக் கழிக்கப் பார்க்கிறர்கள்.
நுகர்வோர் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடரலாம். செலவு அதிகம் ஆகாது. காலம் வழக்கின்போக்கைப் பொறுத்திருக்கும்.அதிலும் ஈட்டுத் தொகையே கிடைக்கும்; போன பொருள் கிடைக்காது:(

 
At June 10, 2006 4:51 AM, Blogger நிலவு நண்பன் said...

இந்த நேரத்தில் இன்னொன்றையும் கூறியே ஆகவேண்டும் . கஷ்டப்பட்டு பொருளீட்டி வருபவர்களிடம் லஞ்சம் வாங்குகின்ற பல அதிகாரிகளை என்ன செய்வது..?

இதற்கு ஒரு விடிவே இல்லையா..? இங்கே துபாயில் கஷ்டப்பட்டு பொருளீட்டி செல்லுகின்ற சில கூலித்தொழிலாளர்களிடம் கூட பணங்களை புடுங்கிக்கொண்டு விடும் கழுகுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்போது..?

இந்தியாவிற்கு எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு நகைகள் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லலாம் என்ற விதிமுறைகள் இருக்கின்றதா..?

ஒரே ஒரு ஹோம் தியேட்டர் மட்டுமே வாங்கிக் கொண்டு சென்றாலும் அந்த ஹோம் தியேட்டர் விலைக்கு ஒத்த அளவிற்கு பணங்களை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் புடுங்கியிருக்கின்றார்கள் என் றண்பனிடம். இது எவ்வளவு அநியாயம்..?

நா கூசாமல் பணம் புடுங்குகின்றார்கள். இவர்களை கட்டுப்படுத்த எந்த சட்டங்களும் இல்லையா..? என்பதுதான் இங்குள்ள அநேகர்களின் புலம்பல்கள்..

 
At June 10, 2006 12:08 PM, Blogger PRABHU RAJADURAI said...

இதே விடயம் குறித்து எனது கட்டுரை எனது பதிவில் http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post_11.html
சில கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம். நன்றி

 
At June 10, 2006 2:41 PM, Blogger வவ்வால் said...

லுப்தான்சா விமானத்தில் சமிபத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிபதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்ய வர்தன் சிங் ரத்தோரின் விலையுயர்ந்த போட்டிக்கு பயன் படும் துப்பாக்கி இருந்த பெட்டியே காணாமல் போய்விட்டது அதனை மீட்க உயர்மட்ட அளவில் பல போராட்டங்கள் நடத்தியுள்ளார் அவர்.கடைசியாக அத்துப்பாக்கி மீட்கபட்டது ,இதனால் அவர் ஒரு போட்டியில் கலந்து கொள்வதே ரத்தானது.தேசம் அறிந்த ஒரு பிரபலத்திற்கே இதான் கதி!

துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் விமானத்தில் எடுத்து செல்ல சிறப்பு அனுமதி வாங்கி தனியாகவே எடுத்து செல்லப்படும் அப்படி இருக்கையில் அதுவே காணாமல் போகிறது அந்த அளவில் தான் விமான நிறுவனங்கள் உலக அளவில் இருக்கிறது.

 
At June 10, 2006 11:04 PM, Blogger துபாய்வாசி said...

பிரிட்டிஷ் ஏர்வேஸில் இப்படியா எனத் தான் கேட்கத்தோன்றுகிறது. நல்லவேளையாக, இதுவரை எனக்கு இந்த மாதிரி பெட்டிகள் தொலைந்து போன அனுபவம் கிடையாது.

ஆனால், ஒரு முறை கசப்பான லஞ்சம் கேட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி ஒரு பெரிய பதிவே எழுதலாம்.

இங்கிருந்து எடுத்துச்சென்ற டைகர் பாமில் கைவைத்த போலீஸ்காரர் இன்னும் என் மனத்தில் இருக்கிறார். அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டு மீட்டுச்சென்ற வீர சாகசமும் தான்!

 
At June 11, 2006 4:50 PM, Anonymous Anonymous said...

போன வருடம் நாங்கள் British Airways பயணம் செய்த போது ஒரு பெட்டி வரவேயில்லை. கேட்டதிற்கு இங்கும் அங்குமாக அலைந்த அலைச்சல் இருக்கிறதே...(கடைசி வரை பெட்டியோ,ஈட்டுத் தொகையோ கிடைக்கவில்லை).பொறுப்பில்லாத பதில்கள் அங்கும் இங்கும் அலைசசல், தொலையட்டும் என்று விட்டுவிட்டோம். BA-விடம்கவனமாக இருங்கள்.கூடுமான வரை காப்புறுதி எடுப்பது நல்லது.
..aadhi

 

Post a Comment

<< Home