.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, February 27, 2006

"பாவிகளே... மனம் திரும்புங்கள்"

Your Ad Here

'பாவிகளே... மனம் திரும்புங்கள். அறுவடைநாள் சமீபத்தில் இருக்கிறது' இப்படிப்பட்ட போதனைகளைக் கேட்கும்போது எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.

எதற்காக இந்த பயங்காட்டுதல்? பயமுறுத்திக் கொண்டுவரும் நம்பிக்கைகள் நிலைக்குமா? அதனால் யாருக்கு நன்மை? எத்தனை பேரை மனமாற்றினாய் என்று கடவுள் கணக்குக் கேட்பாரா? அப்படிக் கணக்குக் கேட்பாராயின் அவர் சர்வவல்லமை படைத்த, அன்பே உருவான கடவுள்தானா?

கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. காற்றை உணர்வது போல கடவுளை மனிதன் உணரத்தான் முடியும். ஒருவனுக்காக அடுத்தவன் அதை உணர முடியுமா? இல்லை நான் உணர்வதுதான் சரி என்று சாதிக்க முடியுமா? தம் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்க எண்ணும் மனிதர்களைக் கண்டால் பரிதாப உணர்ச்சியே எனக்கு மேலிடுகிறது.

ஆனாலும் மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன; பலரும் அதை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். எப்படி மதமாற்றத்துக்குப் பாடுபடுபவர்களைப் பார்த்தால் பரிதாபம் தோன்றுகிறதோ அதே உணர்ச்சிதான் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்தாலும் வருகிறது.

ஒருவரின் மதம் என்ன என்பதை எதை வைத்து நிர்ணயிக்கிறோம்? வெளி அடையாளங்களை வைத்தா, அல்லது அவர் நம்பும் கோட்பாடுகளை வைத்தா,அல்லது அவர் நம்பும் கடவுளை வைத்தா?

இஸ்லாமுக்கு மதம் மாறி காதலனைக் கைப்பிடித்த கிறித்துவத் தோழி ஒருத்தியை ஒரு முறை மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் சந்தித்தபோது, 'என்னதான் இருந்தாலும் ஒரு கஷ்டம்னா வேளாங்கண்ணி மாதாவும் ஏசுவும்தான் நெனப்புல வர்றாங்க' என்று கண்ணீர் மல்க என்னிடம் பகிர்ந்து கொண்டாள். அவள் கிறித்தவளா? முஸ்லீமா?

அவள் அடையாளங்கள் மாற்றிக்கொண்டது அவளின் வசதிக்காக. அதிலென்ன தவறு இருக்கமுடியும்? காட்டுவாசிகளைப் போல் உடையணிந்தால் 1 பில்லியன் டாலர் தரப்படும் என்று ஒரு அறிவிப்பு வந்தால், ஒட்டு மொத்த உலகமே வரிசையில் நிற்காதா?

பணத்துக்காக மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதே ஒரு அபத்தமான வாதம்.அப்படியே மாறுகிறார்கள் என்றே இருக்கட்டும். அது பில்லியன் டாலர் உதாரணத்திலிருந்து எங்ஙனம் வேறுபடுகிறது?

உங்களுக்கு பச்சை நிறம் பிடிக்கும் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சிவப்பு நிறத்தை விரும்பினால் 1 மில்லியன் தருகிறோம் என்று யாராவது சொல்கிறார்கள் என்று கொள்வோம். நீங்கள் சிவப்பு ஆடை அணிந்து அந்த நிறத்தை விரும்புவதாக பாசாங்கு காட்டலாமே ஒழிய, உண்மையிலேயே உங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்வது சாத்தியமா?

கடவுளும் அப்படித்தான். அந்த அடிப்படை புரிதலை, அது தரும் நம்பிக்கையை அவரவர் மாற்றிக் கொண்டால்தானுண்டு. மாற்றிக் கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அப்படி இருக்க, கட்டாய மத மாற்றம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?

'பாவியே' என்று என்னை அழைக்காதே என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம். ஆனால் என் பக்கத்துவீட்டுக்காரனின் அடையாளத்தை மாற்றக்கூடாது என்று குதிப்பது தன்னம்பிக்கை இன்மையையும் பாதுகாப்பின்மையையுமே காட்டுகிறது.

அதே போல அவரவர் மதங்களைப் போதிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கும் ஒரு வரம்பு உண்டு. 'நான் ஒரு கடைக்குப் போகிறேன். ஒரு நல்ல சாமானைக் குறைந்த விலையில் வாங்குகிறேன். அதை உபயோகித்துப் பார்த்து பயன் பெற்றால் அனைவரிடமும் சொல்கிறேன். அது போலத்தான் எனக்கு பலனளித்த என் நம்பிக்கை பற்றியும் சொல்கிறேன். இதில் என்ன தவறு?' என்று கேட்கும் நண்பர்களுக்கு -

நல்லவற்றைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு நேரம், காலம், இடம், பொருள் மற்றும் வரம்பும் உண்டு. பகிர்ந்து கொள்கிற சாக்கில் அடுத்தவர் நம்பிக்கையைத் தூஷிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. உங்களிடம் யாராவது, "என் அம்மா மிகவும் நல்லவள். என்னை மிகுந்த அன்போடு நடத்துகிறாள். என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறாள். ஆனால் உன் அம்மா வேஷம் போட்ட பிசாசு" என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தீர்களானால் உங்கள் செய்கையின் கனம் புரியும்.

எல்லா மதங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை; எந்தக் கடவுளும் அடுத்தவரைக் காயப் படுத்துவதை விரும்ப மாட்டார் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. இறைவனின் பெயரால் சகமனிதனைத் தூற்றுவதும் துன்புறுத்துவதும் அந்த இறைவனுக்குச் செய்யும் துரோகம் என்றே நான் கருதுகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

35 Comments:

At February 27, 2006 2:27 PM, Blogger திரு said...

//எல்லா மதங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை; எந்தக் கடவுளும் அடுத்தவரைக் காயப் படுத்துவதை விரும்ப மாட்டார் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. இறைவனின் பெயரால் சகமனிதனைத் தூற்றுவதும் துன்புறுத்துவதும் அந்த இறைவனுக்குச் செய்யும் துரோகம் என்றே நான் கருதுகிறேன்.//

மனதை தொடும் உண்மை சகோதரி! இதை அனைவரும் புரிந்தால் மதங்களுக்கிடையே சண்டையில்லை.

 
At February 27, 2006 3:32 PM, Blogger சிங். செயகுமார். said...

"அவரவர் மதங்களைப் போதிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கும் ஒரு வரம்பு உண்டு. 'நான் ஒரு கடைக்குப் போகிறேன். ஒரு நல்ல சாமானைக் குறைந்த விலையில் வாங்குகிறேன். அதை உபயோகித்துப் பார்த்து பயன் பெற்றால் அனைவரிடமும் சொல்கிறேன். அது போலத்தான் எனக்கு பலனளித்த என் நம்பிக்கை பற்றியும் சொல்கிறேன். இதில் என்ன தவறு?' என்று கேட்கும் நண்பர்களுக்கு -

நல்லவற்றைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு நேரம், காலம், இடம், பொருள் மற்றும் வரம்பும் உண்டு. பகிர்ந்து கொள்கிற சாக்கில் அடுத்தவர் நம்பிக்கையைத் தூஷிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. உங்களிடம் யாராவது, "என் அம்மா மிகவும் நல்லவள். என்னை மிகுந்த அன்போடு நடத்துகிறாள். என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறாள். ஆனால் உன் அம்மா வேஷம் போட்ட பிசாசு" என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தீர்களானால் உங்கள் செய்கையின் கனம் புரியும்."

ஒருவனை நல்வழிக்கு அழைத்து செல்லலாம்.அதே சமயம் அவனுடைய இனிஷியலை அந்த கடவுளே அந்த கடவுளே வந்தாலும் மாற்றமுடியாது.அதே போலதான் அவன் பிறந்து வளர்ந்த மதமும்.
உங்கள் ஆதங்கத்திற்கு பதிலாக இந்தபதிவின் சம்மந்த பட்ட ஆசிரியரின் நூலுக்காக அவரின் மின்னஞ்சலும்,தொலைபேசி எண்ணும் தருகின்றேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால்

 
At February 27, 2006 4:31 PM, Blogger முத்து(தமிழினி) said...

நிலா,

மன்னித்துக்கொள்ளுங்கள்...என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை...மதமாற்றம் செய்யலாம் என்கிறீர்களா? வேண்டாம் என்கீறிர்களா?


மற்றபடி நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...

(போட்டி எல்லாம் கனஜோராக போகிறது போலிருக்கே)

 
At February 27, 2006 4:34 PM, Blogger டி ராஜ்/ DRaj said...

நிலா:
அருமையான பதிவு. :) சுகி சிவம் பாணியில் சொல்வதென்றால்-"இதை மட்டும் இந்த உலம் புரிந்துகொள்ளுமானா இந்த நாள் மட்டுமல்ல வரும் நாள் அனைத்தும் இனிய நாளே" :)

 
At February 27, 2006 5:04 PM, Blogger ஜோ / Joe said...

மனதில் கொள்ள வேண்டிய கருத்து..இது தொடர்பாக ஒரு பதிவு போட எண்ணி,தள்ளிக்கொண்டே போகிறது.

 
At February 27, 2006 5:42 PM, Blogger ஞானவெட்டியான் said...

இயல்பான, அடுத்தவர் மனம் புண்படாத வகையில் இடப்பட்ட பாங்கு என்னை மிகவும் கவர்கிறது.
உண்மையில் தேவை மன மாற்றமே!

 
At February 27, 2006 7:12 PM, Blogger சிவா said...

நிலா! என்னை என் சின்ன வயது முதல் இன்று வரை தொடர்ந்து டார்ச்சர் பண்ணும் சில ஈன பிறவிகள் பற்றி எழுதியுள்ளீர்கள். ஒரு கிருஸ்தவ நகரத்தில் (நாசரேத்) வளர்ந்த காரணத்தினால் எனக்கு இவனுங்க 3 வகுப்பில் இருந்தே பழக்கம். மனசு முழுதும் கோவம் நிரம்பி கிடக்கிறது. தனி பதிவாக கொட்டுகிறேன் மெதுவாக( இதயத்தில் இருந்து)..

 
At February 27, 2006 7:26 PM, Blogger Sam said...

சகோதரி
உங்களுடைய கருத்துகள் நன்றாகப் புரிகிறது. அதே சமயம், நாயன்மார்களின் காலத்தில்
சமணனாக நான் பிறந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்றும் யோசிக்கிறேன். கழு மரத்தில் ஏறுடா என்றால் என்ன செய்திருக்க முடியும்? மதம் என்கிற அடையாளம், பிறப்பால் நமக்கு வருகிறது. நம்முடையது என்ற
எதையுமே நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. வாழ்வோம், வாழ விடுவோம் என்ற எண்ணம் எல்லாருக்குமே வர வேண்டும். நான் இந்து சமயத்தை சார்ந்தவன்.

சாம்

 
At February 27, 2006 8:28 PM, Blogger G.Ragavan said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள் நிலா. அடுத்தவரைத் தாழ்த்தி தன்னை உயர்த்திக் கொள்வது மிகத் தவறு. மதமாற்றம் அவரவர் சொந்த விஷயம். திருமணங்கள் கூட மதமாற்றத்தை விரும்புகின்றன என்று தெரியும் பொழுது மிகுந்த வருத்தமே. கலப்புக் கல்யாணம் என்கிறார்கள். ஆனால் அதில் மதம் மட்டும் கலக்கக்கூடாதாம். நான் நானாய்.....நீ நீயாய் சேர்ந்து வாழ மதமும் தடைதான்.

 
At February 27, 2006 8:35 PM, Blogger வெளிகண்ட நாதர் said...

மாறி வரும் இக்கால கட்டத்தில், அன்பினை யாரும் போதிப்பதில்லை. எல்லா மதங்களின் அமைப்புகள், தொழுகை கூடங்கள் அனைத்தும் வணிகதலங்களாகி விட்டன. இது நட்ப்பது மூன்றாம் உலகினைல் மட்டுமில்லை. விஞ்ஞான வளர்ச்சி கண்ட மேன்மை நாடுகளில் இவையெல்லாம் ஒரு வர்த்தக நிறுவனங்கள் போல் செயல் பட ஆரம்பித்து விட்டன. அதுவும் பல்கலைகழகங்களில் வணிகம் பயின்ற மாணவர்களை கொண்டு ஆளுமை செய்யபடுகின்றன! Jesus, CEO, Amman, CEO என வர்த்தக படிமங்களை கொண்டு செயல்படுகின்றன! இதில் "பாவிகளே.. மனம் திரும்புங்கள்" என தெய்வீக கூக்குரல் எழுப்பவதில் யாதொரும் பயனுமில்லை!

 
At February 27, 2006 9:10 PM, Anonymous Anonymous said...

""பாவிகளே... மனம் திரும்புங்கள்""

One who really repented can tell the Value of this Scripture!!!

Please dont judge or Comment any Scripture!!!

One Day you should stand before the Judgement Throne!!!!
At that time you would Understand
What that Scripture ment!!!

By:
A fellow from Mamsapuram
Virudhunager Dt.

 
At February 27, 2006 9:44 PM, Blogger Vetrivel said...

அருமையா எழுதிருக்கீங்க நிலா அக்கா. இத்தயதான் இந்த பாவிகளே பாவிகளே கேஸுங்களப்பத்திதான் கொஞ்சநாள் முன்னால ஜோஸப்சார் பதிவுல எழுதியிருந்தன். படிச்சுப்பாருங்க.
அவரும் அத ஏத்துக்கிட்டாரு. அவரமாதிரி எல்லாரும் பக்குவம ஆயிட்டா அப்பறம் நம்பளுக்குள்ள சண்டை ஏதாச்சும் வருமா.

http://vedhagamam.blogspot.com/2006/01/blog-post_18.html
http://vedhagamam.blogspot.com/2006/01/blog-post_19.html

 
At February 27, 2006 10:27 PM, Blogger மணியன் said...

மதமாற்றங்களால் எண்ணிக்கைகளை மாற்றலாம். எண்ணங்களை அல்ல என்று அழகாக கூறியிருக்கிறீர்கள். கடவுள் மிகவும் தனிப்பட்ட உணர்ச்சி. அதனை புற அடையாளங்களால் அடையாளம் காண்பதோ மாற்றுவதோ முடியாது. ஆயினும் சமூக சச்சரவுகளுக்கும் ஆதிக்கங்களுக்கும் எண்ணிக்கை வேண்டியிருக்கிறதே!

 
At February 27, 2006 10:42 PM, Blogger யாத்திரீகன் said...

கண்முன் இருக்கும் மனிதருக்கு உதவ மனமில்லை ஆனால் மதம் மாற்ற, அதை தடுக்க மனமும் உண்டு, பணமும் உண்டு....

"கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக, கண்ணுக்கு தெரியுற மனுஷனை கொல்றீங்களே"னு கடவுள் படத்துல வர்ற வசனம்தான் நியாபகம் வருது..

 
At February 27, 2006 10:48 PM, Blogger நிலா said...

//மனதை தொடும் உண்மை சகோதரி! இதை அனைவரும் புரிந்தால் மதங்களுக்கிடையே சண்டையில்லை.//

திரு, நன்றி. இந்தப் புரிதலை அந்த ஆண்டவன் தான் தர வேண்டும்:-)

 
At February 27, 2006 11:38 PM, Blogger நிலா said...

//ஒருவனை நல்வழிக்கு அழைத்து செல்லலாம்.அதே சமயம் அவனுடைய இனிஷியலை அந்த கடவுளே அந்த கடவுளே வந்தாலும் மாற்றமுடியாது.அதே போலதான் அவன் பிறந்து வளர்ந்த மதமும்.
உங்கள் ஆதங்கத்திற்கு பதிலாக இந்தபதிவின் சம்மந்த பட்ட ஆசிரியரின் நூலுக்காக அவரின் மின்னஞ்சலும்,தொலைபேசி எண்ணும் தருகின்றேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால்//

நன்றி
சிங் ஜெயக்குமார்.
புத்தகம் குறித்த உங்கள் பதிவைப் படித்தேன். ஆசிரியரின் விபரங்கள் அனுப்புங்களேன்

 
At February 27, 2006 11:38 PM, Blogger தாணு said...

//விரும்புவதாக பாசாங்கு காட்டலாமே ஒழிய, உண்மையிலேயே உங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்வது சாத்தியமா// நெற்றியில் அறையும் கேள்வி.
//ஒருவரின் மதம் என்ன என்பதை எதை வைத்து நிர்ணயிக்கிறோம்? வெளி அடையாளங்களை வைத்தா, அல்லது அவர் நம்பும் கோட்பாடுகளை வைத்தா,அல்லது அவர் நம்பும் கடவுளை வைத்தா?// இந்த மூன்று விஷயங்களுக்குள்ளுமே வராதவர்கள் என்ன மதம்?
//அவரவர் மதங்களைப் போதிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது// இதிலிருந்து நான் முரண்படுகிறேன். Religion can be practised according to their convenience&faith; it neednt to be preached. உங்களின் அடுத்த பத்தியிலேயே பதில் இருக்கிறது. `பகிர்ந்து கொள்ளுதல்’ வேண்டுமானால் சரியாக இருக்கலாம், போதிப்பது என்றுமே சரியானது அல்ல.

 
At February 28, 2006 1:21 AM, Blogger நிலா said...

//மன்னித்துக்கொள்ளுங்கள்...என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை...மதமாற்றம் செய்யலாம் என்கிறீர்களா? வேண்டாம் என்கீறிர்களா?//

முத்து(தமிழினி)

யாரும் யாரையும் மதம் மாற்ற முடியாதென்கிறேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி. போட்டி பேஷாகப் போகிறது.

 
At February 28, 2006 3:33 AM, Blogger நிலா said...

//அருமையான பதிவு. :) சுகி சிவம் பாணியில் சொல்வதென்றால்-"இதை மட்டும் இந்த உலம் புரிந்துகொள்ளுமானா இந்த நாள் மட்டுமல்ல வரும் நாள் அனைத்தும் இனிய நாளே" :)
//
நன்றி, ராஜ்

அந்தப் 'புரிதல்'தானே பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

 
At February 28, 2006 4:32 AM, Blogger நிலா said...

ஜோ
கண்டிப்பா எழுதுங்க. நானெல்லாம் நுனிப்புல் (உபயம்: உஷா) மேயற ஜாதி. நீங்கள் நல்லா ஆழ்ந்து எழுதுவீங்க

 
At February 28, 2006 4:49 AM, Blogger ramachandranusha said...

ஹைய், எனக்கு ஒரு சிஷ்யைக் கிடச்சிட்டாங்க. ஆனாலும் சிஷ்யை, பொதுவுல நீங்க, "நான்
இலக்கியவாதியோ அறிவுஜீவியோ இல்லை" என்று சொல்லும்பொழுதே நினைத்தேன். இத்தனை
நாட்கள்/மாதங்கள்/ வருடங்கள் இணையத்தில் குப்பைக் கொட்டி கற்றது என்னவென்று :-))))))

 
At February 28, 2006 5:28 AM, Blogger நிலா said...

//அடுத்தவர் மனம் புண்படாத வகையில் இடப்பட்ட பாங்கு என்னை மிகவும் கவர்கிறது.//


நன்றி, ஞான வெட்டியான் அவர்களே.
சொல்லமுடியாது, இதற்கும் 4 பேர் திட்டுவதற்குக் கிளம்புவார்கள்:-)
ஏற்கெனவே அனானி ஒருவர் திட்டிவிட்டார்

 
At February 28, 2006 5:52 AM, Anonymous Anonymous said...

ஹைய், எனக்கு ஒரு சிஷ்யைக் கிடச்சிட்டாங்க

Yes Her Holiness Usha :)

 
At February 28, 2006 8:21 AM, Blogger நிலா said...

//திருமணங்கள் கூட மதமாற்றத்தை விரும்புகின்றன என்று தெரியும் பொழுது மிகுந்த வருத்தமே. கலப்புக் கல்யாணம் என்கிறார்கள். ஆனால் அதில் மதம் மட்டும் கலக்கக்கூடாதாம். நான் நானாய்.....நீ நீயாய் சேர்ந்து வாழ மதமும் தடைதான்//

ராகவன்
நீங்கள் சொல்வது மிகச் சரி. அடிப்படையில் பார்த்தால் இது பரஸ்பர மரியாதை மட்டுமே. மரியாதை இல்லாவிட்டாலும் சகிப்புத் தன்மை இருந்துவிட்டால் கூட போதும்

 
At February 28, 2006 9:24 AM, Blogger நிலா said...

//மாறி வரும் இக்கால கட்டத்தில், அன்பினை யாரும் போதிப்பதில்லை.//

வெளிகண்ட நாதர்
இதுதான் பிரச்சனையின் மூல காரணமே. மதத்தின் கோட்பாடுகளை மறந்து வெளி அடையாளங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது

 
At February 28, 2006 8:43 PM, Blogger Dharumi said...

நி(..)லா,
நீங்க சொன்னது: "என் அம்மா மிகவும் நல்லவள். என்னை மிகுந்த அன்போடு நடத்துகிறாள். என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறாள். ஆனால் உன் அம்மா வேஷம் போட்ட பிசாசு" என்று சொன்னால் எப்படி இருக்கும்"
நான் சொன்னது: என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு.


இது தொடர்பாக ஒரு பதிவு போட எண்ணி,தள்ளிக்கொண்டே போகிறது.- ஜோ. நானும்தான். 'மத நல்லிணக்கம் ஒரு மாயமான்; கானல் நீர்' என்ற தலைப்பில் உள்ள என் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்த நெடுநாள் ஆசை.

அடுத்தவரைத் தாழ்த்தித் தன்னை உயர்த்திக் கொள்வது மிகத் தவறு.ராகவன்
'கீழே பாவம்போல் விழுந்து கிடக்கும் உன்னைத் தூக்கி விடவல்லவா நான் முயற்சிக்கிறேன். உதவ வரும் என் கரங்களைத் தட்டி விடுகிறாயே, பாவி' - அய்யோ, ராகவன் இத நான் சொல்லலை...அவங்க எல்லாரும்தான்.

A fellow from Mamsapuram
Virudhunager Dt.- இவருக்குப் பதில்: ஹா..ஹா..
ஆமா, நிலா, மம்சாபுரம் மேல எனக்கு நல்ல எண்ணம் இருந்திச்சே..இவ்வளவுதானா..?

 
At March 01, 2006 2:54 AM, Blogger நிலா said...

வெற்றிவேல்,
உங்கள் பதிவுகளை அப்புறமா படிச்சிட்டு கருத்து சொல்றேன் கண்டிப்பா. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

 
At March 01, 2006 5:02 AM, Blogger நிலா said...

மணியன் அவர்களே,
பாராட்டுக்கு நன்றி.
//ஆயினும் சமூக சச்சரவுகளுக்கும் ஆதிக்கங்களுக்கும் எண்ணிக்கை வேண்டியிருக்கிறதே!//

நீங்கள் சொல்வது சரிதான். என்னைக் கேட்டால் மனிதனின் ஆதிக்க மனப்பான்மைக்கு இரையாவது இறைவன்!

 
At March 01, 2006 7:53 AM, Blogger நிலா said...

//"கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக, கண்ணுக்கு தெரியுற மனுஷனை கொல்றீங்களே"னு கடவுள் படத்துல வர்ற வசனம்தான் நியாபகம் வருது..//

நல்ல வசனம். வருகைக்கு நன்றி, யாத்ரீகன்

 
At March 01, 2006 9:43 AM, Blogger நிலா said...

//`பகிர்ந்து கொள்ளுதல்’ வேண்டுமானால் சரியாக இருக்கலாம், போதிப்பது என்றுமே சரியானது அல்ல.//
தாணு,
நாம் பார்க்கும் போதனை முறைகள் நமக்கு வெறுப்பைத் தருவதால் போதனையே கூடாது என்றி சொல்வது சரியென்று எனக்குப் படவில்லை. போதிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது - புத்தரைப் போல, மகா வீரரைப் போல சாத்வீகமான போதனையில் தவறில்லையே?

 
At March 01, 2006 4:26 PM, Blogger குமரன் (Kumaran) said...

எல்லாரும் சொல்வது போல் தான் நானும் சொல்லப் போகிறேன். ஒரு தொடர் எழுதும் அளவுக்கு எண்ணங்களைத் தூண்டிவிட்டீர்கள். பதிவுகளாகவே போட்டுவிடுகிறேன். நான் போடவில்லை என்றால் நினைவு படுத்துங்கள். :-)

 
At March 02, 2006 5:24 AM, Blogger நிலா said...

//ஹைய், எனக்கு ஒரு சிஷ்யைக் கிடச்சிட்டாங்க. ஆனாலும் சிஷ்யை, பொதுவுல நீங்க, "நான்
இலக்கியவாதியோ அறிவுஜீவியோ இல்லை" என்று சொல்லும்பொழுதே நினைத்தேன். இத்தனை
நாட்கள்/மாதங்கள்/ வருடங்கள் இணையத்தில் குப்பைக் கொட்டி கற்றது என்னவென்று :-))))))//


குருவே,

எத்தனை காலம் குப்பை கொட்டினாலும் மரமண்டையில ஒண்ணும் ஏறமாட்டேங்குதுங்க :-)))
நீங்கதான் அருள் பாலிக்கணும் :-)

 
At March 02, 2006 7:00 AM, Blogger நிலா said...

//'மத நல்லிணக்கம் ஒரு மாயமான்; கானல் நீர்' என்ற தலைப்பில் உள்ள என் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்த நெடுநாள் ஆசை.//
கானல் நீர்னு சொல்லி பயமுறுத்திறீங்களே, தருமி
//ஆமா, நிலா, மம்சாபுரம் மேல எனக்கு நல்ல எண்ணம் இருந்திச்சே..இவ்வளவுதானா..? //
நான் இங்கிட்டு வந்துட்டதினால கெட்டுப் போச்சு :-)))

 
At March 02, 2006 9:24 AM, Blogger நிலா said...

//ஒரு தொடர் எழுதும் அளவுக்கு எண்ணங்களைத் தூண்டிவிட்டீர்கள். பதிவுகளாகவே போட்டுவிடுகிறேன். நான் போடவில்லை என்றால் நினைவு படுத்துங்கள். :-)//

ஆகா... ஆன்மீகச் செம்மலின் சிந்தனையைத் தூண்டிவிட்டாச்சா :-))
நன்றி குமரன். நினைவு படுத்துகிறேன்

 
At March 06, 2006 5:10 AM, Blogger நிலா said...

//நிலா! என்னை என் சின்ன வயது முதல் இன்று வரை தொடர்ந்து டார்ச்சர் பண்ணும் சில ஈன பிறவிகள் பற்றி எழுதியுள்ளீர்கள். ஒரு கிருஸ்தவ நகரத்தில் (நாசரேத்) வளர்ந்த காரணத்தினால் எனக்கு இவனுங்க 3 வகுப்பில் இருந்தே பழக்கம். மனசு முழுதும் கோவம் நிரம்பி கிடக்கிறது. தனி பதிவாக கொட்டுகிறேன் மெதுவாக( இதயத்தில் இருந்து)..//


சிவா, இப்பதான் எல்லா பதிவையும் பார்த்து பின்னுட்டம் போட்டுட்டு வர்றேன். உங்களுக்கு பதில் சொல்ல விட்டுப் போச்சு போல்ருக்கு. ஸாரி.

ரொம்ப நொந்து போயி இருக்கீங்க இந்த விஷயத்தில. உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்

 

Post a Comment

<< Home