பாகிஸ்தானில் கபடி
எங்கள் இரயில் நிலையத்தில் பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள் பாகிஸ்தானியர்களே. நான் அவ்வப்போது டாக்ஸி எடுக்க நேரிடும் போதெல்லாம் அன்பாக என்னைப் பற்றி விசாரிப்பார்கள். நேற்று புதிதாக ஒரு டிரைவர். என்னைப் பார்த்ததும் 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்றார். 'இந்தியா' என்றேன் புன்னகையோடு. 'நான் உங்கள் அடுத்த வீட்டுக்காரன்' என்றார். நானும் சிரித்துக் கொண்டே' உங்களைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன்' என்றுவிட்டு 'கிரிக்கெட் பார்ப்பீர்களா?' என்றேன்.
ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அவர், "எனக்கு கிரிக்கெட் புரியாது. கபடிதான் பார்ப்பேன்' என்றார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். நான் சுவராஸ்யமாய்க் கவனிக்க ஆரம்பித்ததும் அவருக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டது. 'நான் இங்கே (இங்கிலாந்தில்) கபடி போட்டிகளெல்லாம் நடத்துகிறேன். சிறுவயதில் நிறைய விளையாடி இருக்கிறேன். ஆனால் இப்போது வயதாகிவிட்டது. நான் பாகிஸ்தானில் பள்ளியில் படிக்கும் போது 99% பேர் கபடியில் ஆர்வம் காண்பிப்பார்கள். 1% பேர்தான் கிரிக்கெட் விளையாடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழ். ஆனால் நான் இப்போதும் பாகிஸ்தானில் கபடி சீசன் ஆரம்பிக்கும் போதுதான் ஊருக்குப் போவேன். கிராமங்களில் மட்டும்தான் இந்தப் போட்டிகள் நடக்கும். நாங்களெல்லாம் இலவசமாக சந்தோஷத்துக்காகத்தான் விளையாடுவோம். இப்போது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் நிறைய பணம் கொடுக்கப் படுகிறது. போட்டிகள் மேளதாளங்களோடு நடக்கும். மிகவும் கோலாகலமாக இருக்கும். உங்களுக்கு விருப்பமிருந்தால் கேசட் தருகிறேன். பாருங்கள்.' என்றார். அதற்குள் வீடு வந்து விட்டதால் அடுத்த முறை மீதியைக் கேட்கவும் கேசட்டைப் பார்க்கவும் ஆவலாக இருப்பதாகக் கூறி விடை பெற்றேன்.
அட நம்ம ஊர் கபடி இவ்வளவு புகழ் பெற்றிருக்கிறதா என்று வியப்பாய் இருந்தது. கூகுளில் கபடி என்று தேடினால் இரு வருடங்களுக்கு முன் ஆக்ஸ்போர்டு பல்க்லைக் கழகத்தில் கபடி போட்டித்தொடர் நடந்த செய்தி தெரிந்தது.
கபடி 4000 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தோன்றியதாகத் தகவல். இத்தனை தொன்மையான விளையாட்டை கிரிக்கெட் முற்றிலுமாய்க் கொன்று போடாமலிருந்தால் சரி.
1 Comments:
What is your problem with cricket?
Post a Comment
<< Home