தலைப்பு
பி.எஃப் போன்ற ஆபாசத் தலைப்புகளும், சுவுண்ட் பார்ட்டி, லொள்ளு போன்ற கேணத்தனமான தலைப்புகளும், மதுர,சின்னா போன்ற க்ரியேடிவிடி ஏதும் தேவைப்படாத தலைப்புகளும் மலிந்துவிட்ட நிலையில் அர்த்தமுள்ள தலைப்புகள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
சிவசங்கரியின் கப்பல் பறவை, சுட்ட மண் என்ற இரு தலைப்புகளும் அவற்றின் பொருள் காரணமாய் மனதில் பதிந்து விட்டன.
துறைமுகத்தில் நிற்கும் கப்பல் தளத்தில் சிதறிக் கிடக்கும் தானியங்களைத் தின்னப் போகும் பறவைகள், உணவின் மயக்கத்தில் கப்பல் நகருவதைக் கவனிக்கத் தவறிவிடுமாம். கப்பல் வெகுதூரம் சென்றபின் அவை நடுக்கடலில் இருப்பதை உணராது கரை நோக்கிப் பயணப்படுமாம். வெகு நேரம் பறந்தும் கரையைக் காண முடியாமல் கப்பல் நோக்கித் திரும்ப முயலுமாம். ஆனால் அதற்குள் கப்பல் எட்ட முடியாத தொலைவு சென்றுவிடுமாம். இதனால் கரைக்கும் போக முடியாமல், கப்பலுக்கும் திரும்பமுடியாமல் இளைப்பாறவும் இடமில்லாமல் பறந்து பறந்தே கடலில் விழுந்து செத்துப் போகுமாம். ஒரு சின்னத் தலைப்பில் எவ்வளவு அருமையான வாழ்க்கைத் தத்துவம்!
***
குயவர்கள் பானை செய்வதற்கு பச்சை (raw) மண்ணை பயன்படுத்துவார்கள். மண் பச்சையாக இருக்கும் போது அதனை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம், வனையலாம். அப்படி ஒரு வடிவத்துக்குக் கொணர்ந்தபின் அதனை தணலில் சுடுவார்கள். அப்படி சுட்டபின் அந்தப் பொருள் உடைந்துவிட்டால் என்ன முயன்றாலும் மீண்டும் அதனை ஒட்ட வைக்க முடியாது. மண் ஒன்றுதான் ஆனால் சுட்டபின் அதன் குணம் மாறிவிடுகிறது. அதனை நாம் நினைக்கிறபடி மாற்ற இயலாது. சில சமயம் சுட்ட மண் என்று உணராமல் நாம் மனிதர்களின் இயல்பை மாற்ற முயன்று தோற்றுப் போகிறோம்.
இம்மாதிரி நியதிகள் நாம் அறிந்தவைதான் என்றாலும் யதார்த்த வாழ்க்கையில் பல சமயம் நமக்கு உறைக்காமல் போயிருக்கிறது. இந்தப் புரிதல் எனக்கு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மிகுந்த உதவியாக இருந்திருக்கிறது. அதுதானே நல்ல எழுத்துக்கு அழகு!
சிவசங்கரி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். த.மா.க.வில் இருந்து சூடுபட்டு பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் குறித்த மேல் தகவல்கள் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.
12 Comments:
கப்பல் பறவை பற்றி...
-------------------
692:
வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே 5.5
----
Link: http://www.tamilnation.org/sathyam/east/pirapantam/mp005b.htm
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பெருமாள் திருமொழி
கப்பல் பறவை....ம்ம்ம்ம்...இது பற்றிய பாடல் கந்தபுராணத்திலும் இருக்கிறது. இப்பொழுது பாடல் நினைவு இல்லை.
சிவசங்கரியின் நூல்களும் சிறப்பாக இருக்கும். நிறைய படித்திருக்கிறேன்.
நிலா, இது நம்ம மேட்டர் ஆச்சே :-) ஆனா பேச ஆரம்பித்தா நிறுத்த முடியாது. சிவசங்கரி கதை எழுதுவதை நிறுத்திவிட்டார், இந்திய மொழிகளில் சிறந்த கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தொகுக்கிறார் , பல மாநில எழுத்தாளர்களை சந்தித்து பேட்டியும் எடுக்கிறார். கவுன்சிலிங் செய்கிறார் என்று செய்தி. லஷ்மிக்கு பிறகு அதிக பெண் வாசகிகளின் மனம் கவர்ந்தவர் அவர்தான்.
சினிமா தலைப்புகளில் ஆரம்பித்தீர்கள் என்பதால் -
'கடற்கரைத் தாகம்', 'பெளர்ணமி அலைகள்' (இந்த இரண்டாவது தலைப்பு படத்துக்குப் பொருந்தி வந்த தலைப்பு -(rough high tides என்ற பொருளில்)ஒரு பிரபல வார இதழ் படத்துக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்போ என்று முட்டாள்தனமாக விமர்சனத்தில் எழுதியிருந்தது.
தலைப்பு நல்லாவும் இருக்கணும் கவர்ந்து இழுப்பதாகவும் இருக்கணும். சிவசங்கரி , நாலைந்து மாதத்துக்கு முன்னாடிகூட இங்கே ஒரு கல்லூரி விழாவுக்கு வந்திருந்தாங்க. மாணவியருடன் கலந்துரையாடல் நல்லா இருந்ததாகக் கேள்விப்பட்டேன்
ஞான்ஸ்
விபரத்துக்கு நன்றி. புதிதாகத் தெரிந்து கொண்டேன்.
//இது பற்றிய பாடல் கந்தபுராணத்திலும் இருக்கிறது. இப்பொழுது பாடல் நினைவு இல்லை.//
ராகவன்,
நிறைய படித்திருப்பீர்கள் போலிருக்கிறது. முடிந்தால் கந்த புராணம் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்
நன்றி உஷா
//லஷ்மிக்கு பிறகு அதிக பெண் வாசகிகளின் மனம் கவர்ந்தவர் அவர்தான்.//
எனக்கென்னவோ லஷ்மியின் எழுத்தின் மேல் அவ்வளவு விருப்பமில்லை. ஏனென்று சொன்னால் அதற்கொரு வாதம் வரும் என்பதால் தவிர்க்கிறேன்.
சிவசங்கரியின் எழுத்தில் நல்ல பக்குவம் இருக்கும். அப்ஜெக்டிவிடியும் உலக ஞானமும் தெரியும்.
//சினிமா தலைப்புகளில் ஆரம்பித்தீர்கள் என்பதால் -
'கடற்கரைத் தாகம்', 'பெளர்ணமி அலைகள்' //
பொருத்தனமான சினிமா தலைப்புகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றி, தருமி
//இங்கே ஒரு கல்லூரி விழாவுக்கு வந்திருந்தாங்க. மாணவியருடன் கலந்துரையாடல் நல்லா இருந்ததாகக் கேள்விப்பட்டேன்//
நன்றி, தாணு
எனக்கும் அவங்களை ரொம்ப நாளா ஒரு பேட்டி எடுக்கணும்னு ஆசை. நடக்க மாட்டேங்குது
HAI NICE
நன்றி, விஸ்வா
Post a Comment
<< Home