.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, January 24, 2006

குழந்தைகளை அடித்தால் ஜெயில்

Your Ad Here

குழந்தைகளை தடம் ஏற்படும் அளவுக்கு அடிக்கும் பெற்றோர்களை 5 வருடம் வரை ஜெயிலில் தள்ளுவதற்கான சட்டம் ஒன்று இங்கிலாந்தில் சென்ற வருடம் அமுலுக்கு வந்தது.

குழந்தைகளை நெறிப்படுத்த மென்மையாக அடிக்கும் சலுகையை (!) இந்த சட்டம் பெற்றோருக்கு வழங்கி இருக்கிறது. இச்சட்டத்தின்படி குழந்தைகளை வீக்கமோ, சிராய்ப்போ, வெட்டுக் காயமோ, அல்லது வேறெந்த விதமான அடையாளமோ ஏற்படும்படி தண்டிக்கும் பெற்றொர்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'குழந்தைகளுக்கு எது நல்லதென்று பெற்றோர்களுக்குத் தெரியும்; அரசாங்கம் எங்களுக்கு சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை' என்று பெற்றோர்கள் கொடிபிடித்தார்கள். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு கூட்டம் குழந்தைகளை அடிப்பதை முற்றிலும் தடை செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை எழுப்பியது. எப்படி வயது வந்த ஒருவரை அடிப்பது சட்டப்படி குற்றமோ அது போல குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகக் காணப்படவேண்டும் என்பது இவர்கள் வாதம். அரசாங்கம் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததை ஒட்டி மீண்டும் இந்த விஷயத்தில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

அதே சமயம் கல்வித் துறை இந்த சட்டத்தை உள்ளபடியே வரவேற்றிருக்கிறது. இந்த சட்டம் குழந்தைகளையும் பெற்றோரின் உரிமையையும் ஒரளவு பாதுகாப்பதாக உள்ளது என்கிறது கல்வித் துறையின் நிலை

நம் சமுதாயத்தில் குழந்தைகளை அடிப்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று; சில இடங்களில் பாராட்டப் படுவதும் உண்டு. தமிழ் சமுதாயத்தில் நான் பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்களில் இந்த மனப்பான்மையும் மாறி இருக்க வாய்ப்புண்டு. உலகின் பல பாகங்களில் வசிக்கும் தமிழ்ப் பெற்றோர் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவல். எழுதுங்களேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

30 Comments:

At January 24, 2006 1:40 AM, Blogger சந்திப்பு said...

`குழந்தைகளை அடிப்பதை தடை செய்யும்’ இத்தகைய சட்டத்தை நிச்சயம் வரவேற்க வேண்டியதே! இந்திய நாட்டில் முதலில் ஆசிரியர்களுக்கு இந்த சட்டத்தை தொடுக்க வேண்டும். அடுத்து பெற்றோர்கள் மீது வைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான ஆசிரியர்கள் குழந்தைகளை - குழந்தைகளாக பார்ப்பது இல்லை. ஏதோ கடமைக்கு வேலைக்கு வந்து விட்டோம் இந்த சனியன்களிடம் மாரடிக்க வேண்டியிருக்கிறது என்ற நிலையே உள்ளது.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் யாராவது ஆசிரியர்கள் பணிபுரிய விரும்பினால் அவர்கள் கீஜூபாய் பாகேவின் பகல் கனவு என்ற அனுபவம் வாய்ந்த புத்தகத்தை படிக்காமல் வேலைக்கு அமர்த்தக்கூடாது. இதற்கேற்ப நம்முடைய பழைய கல்வித் திட்டமும் மாற்றப்பட வேண்டும்.

 
At January 24, 2006 4:35 AM, Blogger நிலா said...

சந்திப்பு,
//இந்திய நாட்டில் முதலில் ஆசிரியர்களுக்கு இந்த சட்டத்தை தொடுக்க வேண்டும்.//

இந்தக் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன்.

நம்மிடம் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் பணத்துக்காக விருப்பமில்லாத வேலையைக் கூட ஒப்புக் கொள்வது (இது குறித்து ஒரு முறை விரிவாக எழுத வேண்டும்).

எனக்குத் தெரிந்து 90% ஆசிரியர்கள் பிழைப்புக்காக அந்தத் தொழிலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய அதன் மேலுள்ள ஆர்வத்தில் அல்ல.

 
At January 24, 2006 6:32 AM, Blogger நிலா said...

சாமான்யன்

நமது பிரச்சனைகளுக்கு இலகுவான வடிகால்களாக பிள்ளைகள் சில சமயம் அமைந்துவிடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அடித்து மண்டையை உடைக்கும் பெற்றொர்களை நான் கண்டிருக்கிறேன். நாம் மிகவும் உணர்ச்சிவசப்படும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.நீங்கள் சொன்னபடி பிரச்சனைகள் பெற்றோரிடமும் சந்திப்பு சொன்னபடி ஆசிரியர்களிடமும் இருக்க நம்மிடையே அதிக வாய்ப்புண்டு. என்னைக் கேட்டால் இந்த சட்டம் மேலை நாட்டவரை விட நமக்கு அதிகமாய்ப் பொருந்துமோ என்று தோன்றுகிறது.

 
At January 24, 2006 7:33 AM, Anonymous Anonymous said...

அடியாத பிள்ளை படியாது

- தங்க ராஜ்

 
At January 24, 2006 8:00 AM, Blogger தாணு said...

குழந்தைகளை அடித்து வளர்ப்பது என்ற concept-ஏ தவறுதான். எங்கள் தந்தை அடித்ததே கிடையாது, ஆனாலும் அவர்களிடம் எங்களுக்கிருந்த பயம் கலந்த மரியாதை அடித்து வளர்க்கும் பெற்றோரிடம் வருமா என்று தெரியவில்லை. நான் அடி வாங்காமல் வளர்ந்ததால் என் குழந்தைகளை அடிக்கவே தெரியவில்லை. திட்டுவது மட்டும் தினசரி வாடிக்கைதான்.
சிறுவயதில் அடிபட்டு வளரும் குழந்தைகளிடம் ஒருவித மூர்க்கம் அல்லது பயம் படிந்துவிடுவது தவிர்க்க முடியாதது. அடிப்பது என்று அனுமதியளித்துவிட்டு காயம் படாமல் அடிக்க வேண்டுமென்ற சப்பைக் கட்டு எதற்கு? அடிப்பதே ஒருவித கையாலகத்தனம் என்பது என் கருத்து. எதிராளியை,அது குழந்தையாக இருந்தாலும் தன் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் சர்வாதிகாரம். புரியாத வயதில் அடிப்பது வேஸ்ட், அதற்குப் புரியப் போவதில்லை. புரிகின்ற வயதில் அடிப்பதும் வேஸ்ட், சொல்லிப் புரியவைப்பது அடித்தலை விட சாலச் சிறந்தது!

 
At January 24, 2006 10:11 AM, Blogger துளசி கோபால் said...

இங்கே, நியூஸியில் குழந்தைகளைத் திட்டுவதும் தவறே.

அப்யூஸ் வகைகளில் அதுவும் ஒன்று.

அடிப்பது ஃபிஸிகல் அப்யூஸ்
திட்டுவது வெர்பல் அப்யூஸ்
மிரட்டுவது எமோஷனல் அப்யூஸ்
இப்படி பலவிதம்.

இது அரசாங்கத்துக்குத் தெரியவரும்பட்சத்தில் குழந்தைகளை ஃபோஸ்ட்டர் ஹோமுக்கு
அனுப்பிவிடுவார்கள்.
பெற்றோர்கள் மேல் கிரிமினல் வழக்கு பதியப்படும்.

ஆனால், ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால்........

16 வயதுவரை குழந்தைகளுக்குச் சட்ட ரீதியான தண்டனை கிடையாது.

 
At January 24, 2006 10:58 AM, Anonymous Anonymous said...

இந்த சட்டமெல்லாம் ரொம்ப ஓவருங்க. பெத்தவங்களுக்கு தெரியாத பிள்ளைகளை எப்படி வளர்க்கணுமின்னு.. ரத்த காயம் வருமளவு அடிக்கிறவுங்களை ஜெயில்ல போடுறது வேணா சரி.

இங்க அமேரிக்காவில கொஞ்சம் திட்டினாவே விவரம் தெரிஞ்ச பசங்க 911க்கு போன் செய்துடராங்க.. அதுக்கு பெற்றோர்கள் பயப்பட வேண்டி இருக்கு.

இப்படித்தான் ஒருத்தர் தன் புள்ளையை கண்டிக்கப்போக அவன் 911 போன் செய்யப் போக அவங்க வந்து அந்த தகப்பனை கண்டிக்கப் போக.. கடைசியா பையனை இந்தியாவுக்கு கூட்டு போய் நல்லா உதை கொடுத்து திருத்தி அப்புறமா இங்க கூட்டிடு வந்தாங்க..

இது எப்படி இருக்கு??

 
At January 24, 2006 12:51 PM, Blogger நிலா said...

தலைவி

நியூசிலாந்து நிலைமையைத் தெரியப்படுத்தினதுக்கு நன்றி

 
At January 24, 2006 2:00 PM, Blogger Suka said...

தேவைகள் இருந்ததாலேயே இந்தச் சட்டம் வந்ததாக நம்புகிறேன். அடிப்பதற்கு மாற்று வழிகள் இருக்கத்தான் செய்கின்றன..இருந்தாலும் குறுகிய கால நிவாரணி 'அடி உதை' தான்..
வழக்கம் போல எல்லா குறுகிய கால நிவாரணிகளுக்கும் உள்ளது போல இதிலும் பக்க விளைவுகள் வெகு அதிகம்.. கேள்விகள் கேட்காமல் காரணம் புரியாமல் குழந்தைகள் வெறும் அடிக்குப் பயந்து ஏதேனும் ஒன்றைச் செய்ய ஆரம்பித்தால் பாதிக்கப்படுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல.. ஒரு தலைமுறயே ... அத்தகைய பாதிப்புகள் கண்கூடாகத் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றன...

சட்டம் போட்டு செய்வது குறையெனில், சட்டம் போடுமளவிற்கு எடுத்துச் சென்றது..?

சுகா

 
At January 24, 2006 3:23 PM, Blogger Ram.K said...

தங்களை அண்டி வாழும் குழந்தைகளின் இயலாமையைப் பயன்படுத்தி அடிப்பது மற்றுமொரு இயலாமையின் வெளிப்பாடு.

சென்னையின் தெருக்களில் குழந்தைகள் அடி வாங்கும் காட்சி ஒரு சாதாரண நிகழ்வு.

இப்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கும் தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் நான் பல குழந்தைகள் அடிவாங்கி அழுவதைக் கண்டு வருந்தினேன்.
காரணங்கள் ஒன்றல்ல பல.
1.விரும்பி ஒரு பொருளை வாங்கித்தரும்படி கேட்டதற்காக.
2. பயப்படும்படியான ராட்டினத்தில் பெற்றோர் அழைத்துச் சென்றதற்காக.
3.பெற்றோர் கூட்டத்தில் குழந்தைகளைத் தவரவிட்டதற்காக.

இந்த அடி உதைக் காட்சியில் என்னை மிகவும் பாதித்த ஒரு காட்சி, ஒரு இரண்டு வயதுக்குழந்தையை ஒரு பெண்மணி போட்டு அடிஅடியென்று அங்கே கீழே கிடந்த குச்சியை எடுத்துக்கொண்டு அடிக்கிறார்.அந்தக் குழந்தை அடி வாங்கிக்கொண்டு பின்புறமாக அடியிலிருந்து தப்பிக்க ஓடுகிறது. உடனே, அப்பெண்மணி அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு எதிர்திசையில் நடக்கத் துவங்குகிறார். குழந்தை எங்கே தம்மை விட்டுவிட்டுச் சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் அப்பெண்மணியை நோக்கி ஓடுகிறது. அக்குழந்தை கிட்ட நெருங்கி வந்தவுடன் மறுபடி அடிஉதை.
திரும்பவும் அக்குழந்தை விலகி ஓடுவது என ஒரு கண்கொள்ளாக் காட்சி.
:-((
அங்கே இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த யாரும் அப்பெண்மணியை ஏன் என்று கேட்கவில்லை.

இதைவிடக் கொடுமை இப்படி அடிவாங்கும் குழந்தையைத் தன் குழந்தைகளுக்குக் காண்பித்து மிரட்டுவது வேறு நடந்தது.

 
At January 24, 2006 10:25 PM, Blogger நிலா said...

கீதா
நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். இதில் கம்பி மேல் நடப்பது போன்ற பேலன்ஸ் தேவை. துளசி சொல்வது போல் திட்டினால் கூட நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் டீன் ஏஜ் பிள்ளைகளையெல்லாம் பெற்றோர் எப்படி நெறிப்படுத்துகிறார்களோ என்று வியப்பாக இருக்கிறது. ஆனால் ஆசிரியையாக வேலை பார்த்த ஒரு தோழி, அவரது பள்ளியில் இப்படி ஒரு கொள்கை இருந்ததாகவும் முதலில் கடினமாக இருந்தால் சில நாட்களிலேயே பிள்ளைகளை நல்ல வார்த்தைகளில் நெறிப்படுத்துவது மிக எளிதாக ஆகிப் போனதாகவும் தெறிவிக்கிறார். மேலை நாடுகளிலெல்லாம் புதிய பெற்றோருக்கு வகுப்புகள் எடுப்பது போல் குழந்தை வளர்ப்பிற்கும் பாடம் கற்றுத்தரலாம்.

 
At January 24, 2006 11:18 PM, Blogger முகமூடி said...

அமெரிக்காவில் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரியாது. ஆனால் பிள்ளைகளை அடிப்பது தவறு என்ற அளவில் இது நடைமுறையில் இருக்கிறது. நல்லதொரு விவாதத்திற்கு அடிகோலியிருக்கிறீர்கள்.

அ) குறைந்த சம்பளத்திற்கு - சில ப்ரைமரி ஸ்கூல்களில் மொத்த சம்பளம் சில நூறுகள் - வேலை வாங்குவது
ஆ) முறையான டீச்சர் ட்ரெய்னிங் இல்லாமல் பக்கத்துல +2 அல்லது 10த் படிச்ச புள்ளங்க இருந்தா 6வது வரை சமாளிக்கலாம் என்று பள்ளிகள் டீச்சர்களை உருவாக்குவது
இ) டீச்சர் ட்ரெயினிங் என்பது ஏட்டுச்சுரைக்காய் அளவில் நடைமுறையுடன் தொடர்பில்லாமல் இருப்பது
ஈ)பிள்ளைகளை பயமுறுத்த பெற்றோர்கள் டீச்சர்களை உபயோகப்படுத்துவது, இவன நாலு போடுங்க என்று அவர்களே டீச்சர்களை வேண்டுவது
என்று பல காரணங்களால் குழந்தைகள் அடிக்கப்படுகிறார்கள்.

எது நல்லது என்று பெற்றோர்களுக்கு/ஆசிரியர்களுக்கு தெரியாதா? என்ற காரணம் காட்டி குழந்தைகளை அடிப்பது மிருகத்தனம். சக மனிதனுக்கு உடல் ரீதியான துன்பம் மிருகத்தனம் எனும்போது தம்மை தற்காத்துக்கொள்ள இயலாத குழந்தைகளின் மேல் உடல் ரீதியான வன்முறை மிகவும் தவறுதான். அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளின் மனநிலை பற்றி யாரும் கவலைப்படுகிறார்களா என்று தெரியவில்லை.

 
At January 25, 2006 12:30 AM, Blogger நிலா said...

//எங்கள் தந்தை அடித்ததே கிடையாது, ஆனாலும் அவர்களிடம் எங்களுக்கிருந்த பயம் கலந்த மரியாதை அடித்து வளர்க்கும் பெற்றோரிடம் வருமா என்று தெரியவில்லை.//

தாணு
உங்களுக்கு மிக நல்ல தந்தை கிடைத்திருக்கிறார். நாங்கல்லாம் செமத்தியா வாங்கிக் கட்டிருக்கோம்ல. (சின்னதுல கொஞ்சம் சேட்டை ஜாஸ்திதான்)

//எதிராளியை,அது குழந்தையாக இருந்தாலும் தன் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் சர்வாதிகாரம். புரியாத வயதில் அடிப்பது வேஸ்ட், அதற்குப் புரியப் போவதில்லை. புரிகின்ற வயதில் அடிப்பதும் வேஸ்ட், சொல்லிப் புரியவைப்பது அடித்தலை விட சாலச் சிறந்தது! //

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. நன்றி. பிரச்சனை என்னன்னா வழிவழியா அப்படியே வளர்ந்துட்டதுல அது தப்புன்னே நமக்குத் தோண மாட்டேங்குது. இந்தக் கால பெற்றோர்கள் தானாக முன்வந்து நல்ல வார்த்தைகளின் மூலம் நெறிப்படுத்த தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

 
At January 25, 2006 12:49 AM, Blogger துளசி கோபால் said...

இதுக்குன்னே பழமொழிகளும் வச்சுருக்காங்கப்பா.

அடியாத மாடு படியாது
அடி உதவற மாதிரி அண்ணந்தம்பி உதவமாட்டான்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அடிச்சு வளர்க்காத புள்ளையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது
அடி மேலே அடி அடிச்சால் அம்மியும் நகரும்.
இன்னும் இதுபோல ஏராளமா இருக்கு. ஞாபகம் வரலை(-:

 
At January 25, 2006 1:40 AM, Blogger நிலா said...

சுகா,

//கேள்விகள் கேட்காமல் காரணம் புரியாமல் குழந்தைகள் வெறும் அடிக்குப் பயந்து ஏதேனும் ஒன்றைச் செய்ய ஆரம்பித்தால் பாதிக்கப்படுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல.. ஒரு தலைமுறயே ... அத்தகைய பாதிப்புகள் கண்கூடாகத் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றன...

சட்டம் போட்டு செய்வது குறையெனில், சட்டம் போடுமளவிற்கு எடுத்துச் சென்றது..?
//
உங்கள் கேள்வி மிகவும் நியாயமானதே. நல்ல கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள்
சமீபத்தில் ஒரு பெண் தன் இருவயதுக் குழந்தையைத் தனியாக வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு இரண்டு வார விடுமுறையில் அயல்நாடு சென்றுவிட்டாள். அந்தக் குழந்தை ஃபிரிஜ்ஜிலிருந்ததை வைத்தே அவ்வளவு நாள் உயிர் வாழ்ந்திருக்கிறது. கண்டுபிடித்து அந்தத் தாயை ஜெயிலில் போட்டுவிட்டார்கள். குழந்தையை இல்லத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். நியாயமாகத்தான் தெரிகிறது.

 
At January 25, 2006 3:25 AM, Blogger பரஞ்சோதி said...

தொடர்ந்து குழந்தைகள் சம்பந்தமாக பதிவுகள் உங்களுக்கு என் பாராட்டுகள். இப்பதிவில் பதில் சொன்ன அனைவரும் அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சட்டம் அவசியமானது தான், இந்தியாவில் கூட கொண்டு வரவேண்டும், ஆனால் பெற்றோருக்கு 5 வருடம் வரை தண்டனை என்பது அதிகம் தான்.

தீ காயமோ அல்லது ரத்த காயங்களோ அல்லது காயங்கள் உடலில் பதியும் படியாக அடித்தால் அது கடுமையான குற்றமாக கருதப்பட வேண்டும், அபராத தண்டனையும் இறுதி எச்சரிக்கையோடு விட்டு விடலாம், மேலும் மேலும் செய்யும் பட்சத்தில் ஜெயில் தண்டனை கொடுக்கலாம்.

3 வயதில் தந்தையை இழந்த என்னையும் என் தம்பியையும் என் அன்னை வளர்த்த விதமே தனி. சின்னவயதில் நான் உலகமகா குசும்பன், திமிர்பிடித்தவன், விளையாட்டில் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் அடித்து விட்டு தான் வருகிறேன். என் தாயாருக்கு எங்களைப் பற்றி அக்கம் பக்கத்தவர் குறிப்பாக உறவினர்கள் குற்றம் குறை சொல்லக்கூடாது என்பது எண்ணம். ஆக யாராவது என்னைப் பற்றி தவறாக (சரியாக) சொன்னால் கொய்யா குச்சியினால் முட்டிக்கு கீழே அடிப்பார்கள். நாலு அடி விழும், அப்புறம் பூஜை அறைக்கு அழைத்து போய் 100 தோப்புக்கரணம் போட வேண்டும். கை கட்டி வாய் பொத்தி 2 மணி நேரம் அசையாமல் நிற்க வேண்டும் என்ற தண்டனைகள் கொடுப்பார்கள், அதை நான் தவறு என்றே சொல்லமாட்டேன், அந்த வயதில் சிந்திக்கும் ஆற்றல் குறைவு, பயம் மட்டுமே கட்டுப்படுத்தும். 6வது படிக்கும் வரை அடித்த அம்மா, அதன் பின்னர் என்னை அடிப்பது இல்லை.

காரணம் எனக்கு அந்த வயதில் சொல்வதை புரிந்துக் கொள்ளும் சக்தி வந்து விட்டது, அன்னை படும் கஷ்டங்கள், வீட்டு நிலைமை, எதிர்காலம், நல்லவன் என்றால் எல்லோரும் நல்லவிதமாக பேசுவாங்க, புகழ்வாங்க என்பதை புரிந்து கொண்டப் பின்னர் சேட்டைகள் குறைந்தது, குற்றம் சொல்பவர்களும் குறைந்தார்கள், அதையும் மீறி ஏதாவது தவறு செய்தால் என் அன்னை அவருக்கே அந்த தண்டனையை கொடுத்துவிடுவார்கள், சுவற்றில் தலையால் முட்டுவார்கள், அல்லது குச்சியை எடுத்து தன்னையே அடிப்பார்கள், அதை பார்த்தால் என்னை அடிப்பதை விட பலமடங்கு எனக்கு வலிக்கும். இந்த முறையானது 10வது படிக்கும் வரை தொடர்ந்தது, அதன் பின்னர் அம்மா எல்லாமே என்னிடமே விட்டு விட்டாங்க. நானே வீட்டு நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்கினேன், நட்பு வட்டமும் பெரிதானது, படிப்பினாலும், விளையாட்டாலும் கிடைத்த நல்ல பெயர் மேலும் என்னை நல்லவனாக்கியது.

என் அன்னை கடைபிடித்த முறையையே என் குழந்தைகளிடம் நானும் கடைபிடிக்க இருக்கிறேன். தவறு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகள் சொல்வது, அறிவுரை சொல்வது போன்றவை குழந்தைகளை திருத்தும். தண்டனையாக நாம் கதை சொல்வதை நிறுத்துவது, பேசாமல் இருப்பது, போன்ற விதமாக கொடுக்கலாம்.

அன்புடன் கையில் குச்சியுடன்
பரஞ்சோதி

 
At January 25, 2006 3:42 AM, Blogger நிலா said...

//ஒரு இரண்டு வயதுக்குழந்தையை ஒரு பெண்மணி போட்டு அடிஅடியென்று அங்கே கீழே கிடந்த குச்சியை எடுத்துக்கொண்டு அடிக்கிறார்.அந்தக் குழந்தை அடி வாங்கிக்கொண்டு பின்புறமாக அடியிலிருந்து தப்பிக்க ஓடுகிறது. உடனே, அப்பெண்மணி அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு எதிர்திசையில் நடக்கத் துவங்குகிறார். குழந்தை எங்கே தம்மை விட்டுவிட்டுச் சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் அப்பெண்மணியை நோக்கி ஓடுகிறது. அக்குழந்தை கிட்ட நெருங்கி வந்தவுடன் மறுபடி அடிஉதை.
//


கேட்பதற்கே மனது சங்கடப்படுகிறது. நான் ஏற்கனவே சொன்னது போல மனமுதிர்ச்சியும் பக்குவமும் குழந்தை வளர்ப்புக்கு மிகத் தேவை. அப்படிப்பட்ட பெற்றோர்களிடம் வளர்கிற குழந்தைகள் நல்ல மனிதர்களாக வருவார்கள். அதனால் சமூக நல அமைப்புகள் குழந்தை வளர்ப்பு குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டலாம். நல்ல சமுதாயம் உருவாக இது ஒரு சிறந்த வழி.

 
At January 25, 2006 3:45 AM, Blogger Unknown said...

நல்ல வேளை இப்படி ஒரு சட்டம் இன்னும் தமிழகம் வரவிலலை. வந்தால் அ.தி.மு.க தந்தைகளால் தாக்கப்படும் சிறுவர்கள் சன் டி.வியில் சிறப்பு பார்வை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும். (தி.மு.க ( கூட்டணி கட்சிகள் சேர்த்து) தந்தைகள் எவ்வளவு பாசமானவர்கள் என்பது ஊருக்கேத் தெரியாதா?)
அடச்சே இங்கேயும் அரசியல் பேசுறேன். என்ன செய்ய தேர்தல் ஜூரம்ங்கோ.

அப்புறம் கீதா சொன்ன மாதிரி என் நண்பனோட அக்கா ஒருத்தர் இப்படி அடி வெளுக்கணும்னே பிள்ளைகளை வருஷம் ஒரு தரம் இந்தியாவுக்குக் கூட்டி வந்து திருத்திக் கூட்டிப் போவாங்க:)

 
At January 25, 2006 4:36 AM, Blogger நிலா said...

முகமூடி
வழக்கம்போல சிறந்த கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். இந்தப் பதிவுக்கு வந்த அனைத்து பின்னூட்டங்களுமே சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
//அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளின் மனநிலை பற்றி யாரும் கவலைப்படுகிறார்களா என்று தெரியவில்லை.//

நமக்கு என்றைக்குமே Long Term Vision இருப்பதில்லை என்பது எனது கருத்து. வளர்ச்சிப்பாதையில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக பெருமை அடித்தால் மட்டும் போதாது. முற்போக்காக சிந்தித்து பிரச்சனைகளின் ஆணிவேரைக் களைய முற்படவேண்டும்

 
At January 25, 2006 5:47 AM, Blogger நிலா said...

//அடியாத மாடு படியாது
அடி உதவற மாதிரி அண்ணந்தம்பி உதவமாட்டான்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அடிச்சு வளர்க்காத புள்ளையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது
அடி மேலே அடி அடிச்சால் அம்மியும் நகரும்.//
தலைவி
என்ன மடிக்கணினியோடுதான் பயணமா?

 
At January 25, 2006 9:44 AM, Blogger நிலா said...

ராஜ்
நீங்கள் சொல்லியிருக்கிறபடி அனைத்து பின்னூட்டங்களும் சிந்திக்கத்தூண்டுவனவாக உள்ளன

// தவறிழைக்கும் சில ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தாங்கள் இந்த பிஞ்சுகளை காயப்படுத்துகிறோம் என்பதே தெரியாமல் இருப்பது தான் கொடுமை.
//

பிரச்சனையே அதுதான். அந்த உணர்வு வந்தால்தானே திருந்த முடியும்? அந்த விழிப்புணர்வைக் கொணர ஊடகங்கள் முயல வேண்டும்

 
At January 25, 2006 2:14 PM, Blogger Sundar Padmanaban said...

நிலா,

அடிப்பதே ஒரு வன்முறை. குழந்தைகளை அடிப்பது வக்கிரம். உடல்ரீதியாக பலவீனமானவர்களை அடிப்பது - அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் - கோழைத்தனம்.

குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பரபரவென்று 24 மணிநேரமும் இருப்பார்கள். ஆர்வம் அதீதமாகிச் சேட்டைகள் அளவுகடந்து போகும்போது, எவ்வளவு பொறுமைசாலியான பெற்றோர்களும் ஒரு கட்டத்தில் நிதானமிழந்து போவதுண்டு. நானும் சில நேரங்களில் நிதானமிழந்து கிட்டத்தட்ட அடித்தும் இருக்கிறேன் (ஒரே ஒரு தட்டு!) - ஆனால் அடுத்த வினாடியே நெஞ்சைக் குடையும் குற்றவுணர்ச்சி தாங்காது, அருகில் அணைத்து உச்சி மோந்து மன்னிப்பு கேட்டிருக்கிறேன். எவ்வளவு கோபம் வந்தாலும் இப்படி நிதானமிழக்கக் கூடாது என்று சங்கல்பம் செய்துகொண்டு, சில வழிமுறைகளை வெற்றிகரமாகக் கடைப்பிடித்தும் வருகிறேன்:

1. உடனே அந்த இடத்தை விட்டு அகன்று செல்வது

2. சட்டென்று மெளனமாகி, ஒரு குவளைத் தண்ணீரைப் பருகிவிட்டு, வேறு சம்பந்தமில்லாத விஷயத்தில் கவனத்தைச் செலுத்துவது - உதா. எதையாவது படிக்கலாம், இசை கேட்கலாம், கணிணியில் அமரலாம் - மொத்தத்தில் பேச்சே எழக்கூடாது.

3. தண்டனையாக அவர்களிடம் முகம் காட்டாதிருப்பது - குறைந்தது ஒரு மணி நேரத்திற்காவது

சிறிது நேரம் கழித்துக் கோபம் ஆறிப்போனதும் நிதானமாக குழந்தை செய்த தவறை விளக்கிப் புரியவைப்பது. அதனால் "குழந்தைக்கு" எப்படிக் கெட்ட பெயர் கிடைக்கும் என்பதைச் சொல்லிப் புரிய வைப்பது

பொதுவாகவே கணவனோ மனைவியோ - பிடித்த முயலுக்கு மூனே கால் என்பது போல - குழந்தைகளுடன் எந்த விவாதத்தையும் நடத்தத் தயாராக இருக்க மாட்டார்கள். குழந்தை எதிர்த்து - நியாயமாக எதையாவது சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கவே இருக்காது - "மொளைச்சு மூணு இலை விடலை... உனக்கு என்ன தெரியும்?" என்ற ஈகோவே எப்போதும் தலைதூக்கி நிற்க, குழந்தைகளை "வாயை மூடு" என்று கத்தி அடக்கிவிடுவார்கள். இது உளவியல் ரீதியான வன்முறை.

குழந்தைகள் சொல்வதைக் காதுகொடுத்து, பொறுமையாகக் கேட்கும் பெற்றோர்கள் குறைவு.

அந்த வயதிற்கேற்ப அவர்களை நடந்து கொள்ள விடாமல் தம் சொந்த விருப்பு வெறுப்புகளை எப்போதும் திணித்துக்கொண்டே இருக்கும் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும். "இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே" என்று 24 மணிநேரமும் சொல்லிக்கொண்டே இருந்து, சுயமாக எதையும் செய்யவே பயப்படும் நிலைக்கு வந்துவிடுவார்கள்.

இன்னும் குறிப்பாக இக்கால குடும்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்கள் தனிக்குடித்தனத்தில் இருக்க, பெற்றோரைத் தவிர வேறு யாரிடமும் குழந்தைகளால் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. பெற்றோரே கடுமையாக நடந்துகொள்ளும்போது, அவர்களிடமும் மனம்விட்டுப் போசமுடியாமல் தவித்துப் போகும் குழந்தைகள். ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகள் கூட பரவாயில்லை. மூன்று நான்கு வயதுகளில் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் பாவம். அவர்களுக்கு அம்மாவை விட்டால் வேறு கதியே இல்லை. அடித்தாலும் உதைத்தாலும் கடைசியில் அம்மா மடியைக் கட்டிக்கொள்ளும். அந்தக் குழந்தைகளையும் அடிப்பது - மெத் மெத்தென்று பூ மாதிரி இருக்கும் குழந்தைகளை எப்படித்தான் அடிக்கவேண்டும் என்று தோன்றுகிறதோ! - அராஜகம்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களது attitude, பழக்க வழக்கங்கள் எல்லாமே பெரும்பான்மையாகப் பெற்றோரிடமிருந்து பெற்றதாகவும், சிறிய சதவீதம் சூழ்நிலை, நட்பு மூலமாகவும் கிடைத்ததாக இருக்கும். எதிர்காலத்தில் அவர்கள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பதில் பெரும்பங்கு பெற்றோரிடம் இருக்கிறது என்பதை பெற்றோர்கள் மனதார உணர்ந்துகொண்டால் - அதுவே பாதி தீர்வு.

நல்ல விவாதம். நல்ல கருத்துகள். உங்களுக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள்.

 
At January 25, 2006 2:16 PM, Blogger நிலா said...

//தவறு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகள் சொல்வது, அறிவுரை சொல்வது போன்றவை குழந்தைகளை திருத்தும். தண்டனையாக நாம் கதை சொல்வதை நிறுத்துவது, பேசாமல் இருப்பது, போன்ற விதமாக கொடுக்கலாம். //

நல்ல கருத்து, பரஞ்சோதி

 
At January 25, 2006 10:34 PM, Blogger நிலா said...

//அப்புறம் கீதா சொன்ன மாதிரி என் நண்பனோட அக்கா ஒருத்தர் இப்படி அடி வெளுக்கணும்னே பிள்ளைகளை வருஷம் ஒரு தரம் இந்தியாவுக்குக் கூட்டி வந்து திருத்திக் கூட்டிப் போவாங்க:)//

திருத்தறதுல உங்களுக்குப் பங்குண்டா, தேவ் :-))))

 
At January 26, 2006 11:23 AM, Blogger U.P.Tharsan said...

எங்களின் வீட்டில் நடந்த ஒரு சுவையான சம்பவம் (அல்ல வருத்தப்படக்கூடிய சம்பவம்.) ஒரு நாள் எங்களுடைய அப்பா என் தங்கையை அடித்துவிட்டார். அடித்ததையெல்லாம் போய் பாடசாலையில் சொல்ல கூடியவள் அல்ல என்தங்கை. எனினும் அடிக்கும்போது அவள் முதுகில் ஏற்பட்ட தடம் போகவில்லை. அதைத கண்டுபிடித்த என் தங்கையின் ஆசிரியை போலிஸ்கு தகவல் கொடுக்க எங்களின் அப்பா கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வீட்டுப்பக்கம் வர தடா விதித்தது காவல்நிலையம். :-)) (பாவம் இரண்டு நாட்களும் வெளியிடத்தில் தங்கினார்.) நாங்கள் எங்கள்அப்பா செய்தது பருவாயில்லை அவரை வீட்டுக்கு வர அனுமதியளியுங்கள் என்று கேட்டும் பயனில்லை. ஆனால் அப்பப இப்போ புத்திசாலித்தனமாக தான் அடிக்காமல் அம்மாவிடம் கொண்டுபோய்விட்டுவிடுவார். என்னைப்பொருத்தவரையில் அடிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம்தான். இல்லாவிடில் என்னைப்போல் இல்லை என் தங்கையைபோல் வலுகளை எப்படி அடக்கி ஆழ்வது.ஆனால் அதுவே அவுக்கு மீறினால் அமீர்தமும் நஞ்சுதான்..... (அடிக்கலாம் ஆனால் அடையாளம் தெரியாத மாதிரி அடிக்கவேண்டும்.:-)) )

 
At January 26, 2006 9:27 PM, Blogger Unknown said...

அந்த்ச் சின்னப் பையன் என்னைத் திருத்தப் பெரும்பாலும் முயற்சி செய்த்து கிடையாது.:)))) அதற்கான வாய்ப்புகளை நான் வழங்குவது இல்லை. :)))))

 
At January 27, 2006 1:26 AM, Blogger நிலா said...

சுந்தர்,

நன்றாக ஆழ்ந்து எழுதி இருக்கிறீர்கள். நன்றி. உங்களுக்கு மிக விரிவாகப் பதில் எழுதவேண்டும் என்றுதான் தள்ளிப் போட்டேன். ஆனால் இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் இன்ஸ்பயர் பண்ணியதில் இந்த டாபிக் குறித்து கொஞ்சம் ஆய்வு செய்து நிலாச்சாரலுக்காக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆய்வில் மிகவும் சுவாரஸ்யமான வாதங்களைக் கண்டேன். அநேகமாக திங்களன்று அந்தக் கட்டுரை வெளிவரும். இங்கு இணைப்பைப் போடுகிறேன். மேலும் இது போன்ற நல்ல விவாதங்களுக்கு அந்தக் கட்டுரை வழிவகுக்க வாய்ப்புள்ளது.

 
At January 27, 2006 6:48 AM, Blogger நிலா said...

தர்ஷன்,

கருத்துக்கு நன்றி. என் கட்டுரையில் உங்கள் கருத்தைப் பயன்படுத்தப் போகிறேன்.

தேவ்,
:-))

 
At January 29, 2006 6:17 PM, Blogger Sundar Padmanaban said...

நிலா,

இப்போதெல்லாம் எனக்கும் மனைவிக்கும் வரும் சண்டைகளில் 90% குழந்தைகளைத் திட்டாதே என்று நான் தடுப்பதால் வருவதாக இருக்கும்! :) :)

குழந்தையோடு சேர்ந்து பெற்றோர்களின் மனப் பக்குவமும் வளர்ச்சிபெற வேண்டும். அதுவே குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வழிவகுக்கும். இதில் எது பிறழ்ந்தாலும், கடைசியில் பாதிக்கப்படுவது குழந்தைகளே.

 
At January 30, 2006 1:10 AM, Blogger நிலா said...

சுந்தர்,
நன்றி.

//குழந்தையோடு சேர்ந்து பெற்றோர்களின் மனப் பக்குவமும் வளர்ச்சிபெற வேண்டும்.//

இதே கருத்தைத்தான் என் கட்டுரையில் நான் முன்வைத்திருக்கிறேன். இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் சிலவற்றையும் இதில் பயன் படுத்தியிருக்கிறேன். கட்டுரையை இங்கே காணலாம்:

http://www.nilacharal.com/tamil/specials/tamil_community_245.asp

 

Post a Comment

<< Home