உஷாவின்
இந்தப் பதிவில் முதியோர் இல்லங்களைப் பற்றி கடுமையான வார்த்தைகளைப் பின்னூட்டங்களில் கண்டேன். முதியோர் இல்லம் என்று பேச்சை எடுத்தாலே நம்மில் பெரும்பாலோர் கண்ணை மூடிக்கொண்டு இதெல்லாம் கொடுமை, நரகம் என்று பேச ஆரம்பித்துவிடுவதுதான் சகஜமாக நடக்கிறது. இறுக கண்ணையும் மனதையும் இப்படி மூடிக்கொள்வதால் இந்த கான்சப்டின் நல்ல பக்கத்தைப் பார்க்காமல் போய்விடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.
மனசைத் தொட்டுச் சொல்லுங்கள் - எத்தனை பிள்ளைகள் வயதான பெற்றோரை சந்தோஷத்தோடு வைத்து பராமரிக்கிறார்கள். கடமையாய்ப் பராமரிப்பது வேறு, அவர்களை குழந்தைகளாக எண்ணி உள்ளன்போடு நடத்துவது வேறு. முக்கால்வாசிப் பிள்ளைகள் உலகம் என்ன சொல்லும் என்ற கடமைக்காகத்தான் பெற்றோரைத் தம்முடன் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இன்றைய வாழ்வின் நெருக்கடி அப்படி.
'வயசான காலத்தில சொன்ன பேச்சைக் கேட்டுக்கிட்டு பேசாம இருக்குதுங்களா பாரேன்', 'இது இருக்கறதுனால எங்கேயும் ஃப்ரீயா போக முடிய்யலை' என்ற முணுமுணுப்புகளை எத்தனை முறை கேட்டிருப்போம்? இதெல்லாம் முதியவர்களை காயப்படுத்தாதா?
'இதுககிட்ட சாப்பட்டுக்கா வந்து கிடக்கிறோம்' என்று கழிவிரக்கத்தோடு பேசுகிற எத்தனையோ முதியவர்களை நான் பார்த்திருக்கிறேன். வெறும் மூன்று வேளை சாப்படு அல்ல அவர்களின் வாழ்க்கை. மூப்பு காலத்தில் அவர்களுக்கு என்ன தேவை? பராமரிப்பு, துணை, பரிவு, மரியாதை. (அவர்களையும் மனிதர்களாய் நினைப்பதுவே பெரிய மரியாதைதான்).
பராமரிப்பில் உணவு மட்டுமில்லை, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளும் அடங்கும். இந்தப் பணிவிடைகள் இந்தக் காலத்து குடும்ப அமைப்பில் சாத்தியம்தானா? வேண்டா வெறுப்பாய் செய்யும் குடும்பத்தினரைவிட அதனை கனிவோடு செய்ய பயிற்சி பெற்ற பணிப்பெண்கள் எந்த விதத்தில் குறைந்து போனவர்கள்? (இந்தியாவில் இந்தப் பயிற்சி குறைவாக இருக்கலாம். அதை வேறொரு இடத்தில் விவாதிப்போம்)
மூன்று தலைமுறைகள் ஒரே வீட்டுக்குள் வாழ்கிறபோது ஏற்படும் முட்டல் மோதல்களில் முகம் கொடுத்துப் பேசக்கூட முடியாத நிலைதான் பெரும்பாலான வீடுகளில் ஏற்படுகிறது. ஒரு வார்த்தை பேச ஆளில்லாமல் தவிக்கும் பெரியவர்களை நாம் கண்டதில்லையா? முதியோர் இல்லங்களில் அவர்களைப் போல் இருக்கும் மனிதர்கள் அவர்களை இன்னும் அதிகம் புரிந்து கொள்வார்களே! ஒருவித ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் இருக்குமல்லவா? நண்பர்களை விட நல்ல துணை வீட்டில் கிடைக்குமா?
தங்களுடைய தேவை இருக்குமிடத்தை முதியோர் மிகவும் விரும்புவார்கள் என்பது என் எண்ணம். வீட்டில் பாரமாயிருப்பதை விட முதியோர் இல்லங்களில் யாருக்கேனும் பேச்சுத் துணையாக இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாமே ஒரு வேளை முடிவு செய்து கொள்கிறோமோ?
மேலை நாடுகளில் முதியோருக்கு பல விதங்களில் அரசாங்கம் ஆதரவு தருகிறது. முதியோருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கவுன்சலிங் என்று பலவிதங்களில் அவர்களுக்கு விசேஷ கவனம் செலுத்தப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இதற்காகவே பயிற்சியெடுத்த பணியாளர்கள் அமைவதுதான். உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் முதியோரைப் பராமரிக்க இவர்கள் பயிற்சியளிக்கப் படுகிறார்கள்.
மற்றொரு முக்கிய வேறுபாடு மேலை நாடுகளில் பிள்ளை 16 வயதை அடைந்துவிட்டால் அவனுக்கு ஒரு தனி வாழ்க்கை அமைந்து விடுகிறது. அதுவரை கண்ணுக்குத் தெரியாமல் பிணைத்திருந்த ஒரு இழை அறுந்து போகிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கிருக்கும் எதிர்பார்ப்பு குறைந்து போகிறது. நம்மூரில் 25 வயதிலும் பெற்றோரின் சம்பாத்தியத்தில் வாழ்கிற பிள்ளைகள் சகஜம். அதே போல் பெற்றோருக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் மீது எமோஷனல் டிபெண்டன்ஸ் வந்து விடுகிறது.
இங்கு எத்தனையோ முறை வயதானவர்களுக்கு உதவப்போய் மூக்குடை பட்டிருக்கிறேன். 'என்னால் முடியும். நன்றி' என்று கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள். 90 வயதில் காரில் சூப்பர் மார்க்கெட் செல்லும், தானே சமைத்துச் சாப்பிடும் பெண்மணிகளைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் நம்மூரில் முக்கியமாக முதிய பெண்களிடம் ஒருவித சுய பச்சாதாபத்தைப் பார்க்கமுடிகிறது. அதற்கு சமூக அமைப்பு காரணமாக இருக்கலாம். காலம் மாறி வருகிறது. இந்த நிலையும் மாறலாம்.
என் நண்பரின் தாய், 'எனக்கு நல்ல பென்ஷன் வருகிறது. ஒரு நல்ல முதியோர் இல்லமாகப் பார்த்து சொல்லம்மா. என்னைப் போன்றவர்களுடன் வசிக்க வேண்டும் போலிருக்கிறது. நிறைய பேசவேண்டும், எழுத வேண்டும் போலிருக்கிறது' என்று என்னிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயத்துக்கு இன்னொரு கோணம் இருப்பதைத்தான் இது காட்டுகிறது. எத்தனை வீடுகளில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தாதிகளாக முதியோர் நடத்தப்படுகின்றனர்!
இப்படி எழுதுவதால் நான் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் வலுக்கட்டாயமாகக் கொண்டு தள்ளச் சொல்வதாக அர்த்தமில்லை. தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளாமல் மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதில் தவறில்லை என்பதுதான் எனது வாதம்.