நன்றி: திசைகள் மற்றும் பாக்யா
சுகுமார் உலக சுற்றுப் பயணத்துக்கு எல்லாவிதத்திலும் தயாராகிக் கொண்டிருந்தான். அவனது பொறுப்புகளை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டுப் போவது எளிதில்லைதான். ஆனாலும் இந்தப் பயணம் அவசியம். இந்தப் பயணத்திலாவது அவனது தேடலுக்கு விடை கிடைக்குமா எனத் தெரியவில்லை.
சுகுமாரைக் கடந்த சில மாதங்களாய் இனம்புரியாத ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் என்று ்குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் அவன் ஆன்மா ஏதோ ஒன்றை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறது.
38 வயதில் அவனது வாழ்க்கை நிறைவாக இருப்பதாகத்தான் எல்லோரும் எண்ணுவார்கள். லாபகரமான பிஸினஸ், அழகான அளவான குடும்பம், தமிழக இளைஞர்கள் அவனை ரோல் மாடலாகக் கருதும் அளவு புகழ்.. என்ன இல்லை?
ஆனாலும் அவன் ஆன்மா மூச்சிறைக்க ஓடி ஓடி எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் ஒற்றை ஆளாய் எவ்வளவோ சாதித்தாயிற்று. ஆனால் இந்த ஆத்ம சந்தோஷத்தை அடைவது மட்டும் ஏனிவ்வளவு சிரமமாய் இருக்கிறது என அவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இப்படியே உழன்று கொண்டிருந்தபோது உதித்ததுதான் அந்த யோசனை. ‘பேசாமல் ஒரு நாலைந்து மாதம் தனியாக உலகத்தை வலம் வந்தாலென்ன? இமயமலையில் ஆன்மீகத்தையும் ஐரோப்பாவில் அமைதியையும் ஆப்பிரிக்காவில் அட்வென்சரையும் முயற்சித்தாலென்ன? இதில் எதிலாவது அந்த ஆத்ம சந்தோஷம் கிடைக்கலாமே!’
மனைவி மஞ்சுவிடம் தனது முடிவை ஒரு தகவலாகத்தான் சொன்னான். அவனைப் பொறுத்தவரை அவள் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குடும்பத்துக்காகத்தானே தினம் 12 மணி நேரம் உழைக்கிறான்! இந்த பிரேக் தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் மிகவும் அவசியமான பரிசு என்பது அவன் எண்ணம்.
பயணத்துக்கு இரு வாரங்களிருக்கும் போது தொடர்ந்து உடம்பு வலியாக இருக்க, மருத்துவமனைக்குச் சென்று செக்கப் செய்து கொண்டபோது வந்ததுதான் பிரச்சனை. ரத்தத்தில் வைரல் அட்டாக் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். கண்டிப்பாக ஒரு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.
சுகுமாருக்கு வீட்டில் வெறுமனே படுத்துக் கொண்டிருப்பது வெறுப்பாக இருக்கிறது. சுறுசுறுப்பாக ஆடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தவனை இப்படி தலையில் தட்டி வீட்டில் உட்கார வைத்துவிட்டதே விதி என்று விரக்தியாக இருந்தது. ஆரம்பத்தில் சும்மா இருப்பது மிகப்பெரிய வேதனையாக இருந்தது. அடிக்ட் ஆனவன் போல கை காலெல்லாம் நடுங்கிற்று. மூச்சு விட சிரமமாயிருந்தது. மனசு பரபரவென்றிருந்தது. இப்போது கொஞ்சம் பழகிவிட்டது. ஆனாலும் அவனை ஆக்கிரமித்திருந்த மாயத் தேடலுடன் வாழ்க்கையின் நிச்சயமின்மையும் இயலாமையும் சேர்ந்து அவனை மனதளவில் மேலும் பலவீனப்படுத்தி இருந்தன.
இயலாமையின் வெளிப்பாடாக கோபம் குமுறிக் கொண்டு வந்தது. எல்லோர் மேலும் எல்லாவற்றிற்கும் எரிச்சல் மண்டிற்று.
தரையின் மெல்லிய அதிர்வில் கண் திறந்தான். மஞ்சு நின்று கொண்டிருந்தாள். "ஒரு வாரமா ரூம்லயே இருக்கீங்க. தோட்டத்துக்கு வந்து உக்கார்றீங்களா?" ஆதரவாய்க் கேட்டாள்.
"அங்கே வந்த எல்லாம் சரியாயிடுமா?" என்றான் கடுப்போடு.
மஞ்சு விடாப்பிடியாக, "வெளில நல்லா ஜிலுஜிலுன்னு காத்து வருது. உங்கம்மாவும் இப்ப வர்றதா ·போன் பண்ணினாங்க. எல்லாருமா தோட்டத்தில உக்காந்திருக்கலாமேன்னுதான் சொல்றேன்"
சுகுமார் வேண்டா வெறுப்பாக எழுந்து நடந்தான். தோட்டதில் வண்ணக் குடைக்கடியில் நாற்காலிகள் பதவிசாய் அடுக்கப்பட்டிருந்தன. காட்டு மல்லி மணம் கும்மென்று தூக்கிற்று. வித்தியாசமாய் பல வண்ணங்களில் பூக்கள் கண்ணில் பட்டன.
டீ எடுத்து வருவதாய்ச் சொல்லிப் போனாள் மஞ்சு. வானத்தை அண்ணாந்து பார்த்தான் சுகுமார். நீர்க்குவியலாய் மேகங்கள் - விதவிதமான வடிவங்களில். ஏதோ முதல் முறை மேகத்தைப் பார்த்தாற் போலிருந்தது சுகுமாருக்கு. காற்றில் மண்மணம் மிதந்து வந்தது. அருகில் எங்கோ மழை பெய்கிறது போலும். காற்றை ஆழமாய் உள்ளிழுத்த போது மண் வாசனையும் காட்டு மல்லியின் சுகந்தமும் ஒன்றாய் இழைந்து உட்சென்று அவனுக்குள்ளிருந்த கோபத்தை சற்று மட்டுப் படுத்தினாற்போலிருந்தது.
“அம்மா எங்கேப்பா?" எட்டு வயது மகள் ஸ்ருதி கையில் ஏதோ நோட்டுப் புத்தகத்தோடு நின்றிருந்தாள்.
"கிச்சன்ல இருப்பாங்கடா. என்ன வேணும்?"
"அம்மாகிட்ட நான் வரைஞ்ச பார்பியைக் காட்டணும்."
"ஏன் அப்பாகிட்ட காட்டமாட்டியா?"
"நீங்க பாப்பீங்களாப்பா?" சந்தேகத்தோடு கேட்டாள் மகள்.
அந்த விநோதமான கேள்வியை ரசித்துப் புன்னகைத்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தான்.
"அட, இவ்வளவு இவ்வளவு அழகா வரையத் தெரியுமா உனக்கு?" என்றான் சுகுமார் அதிசயித்து.
"ஓ. ப்ரைஸ் கூட வாங்கிருக்கேன்பா. நான் நல்லா பாட்டு கூட பாடுவேன், தெரியுமா?"
"வெரி குட்" என்ற சுகுமார் தன் குழந்தையைப் பற்றித் தனக்கு இன்னும் என்னென்ன தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டான்.
"பாடட்டாப்பா?" ஸ்ருதியின் கண்களில் மின்னிய ஆர்வத்தைக் கவனித்தான், தன்னைப் போல்தான் இருக்கிறாள் என்று பெருமையாய் இருந்தது.
"பாடு கண்ணு" என்றான்.
"இருங்கப்பா. மேட் எடுத்துட்டு வர்றேன்" என்றாள்
"பக்க வாத்தியம் கூட வேணும்னு கேட்ப போலிருக்கு" என்று சிரித்தான் சுகுமார்.
ஒரு விநாடி நின்று அவனை உற்றுப் பார்த்து, "அப்பா, நீங்க சிரிச்சா கன்னத்தில அழகா குழி விழுது" என்றாள் அவன் கன்னத்தைக் கிள்ளி.
சுகுமாருக்கு அடிமனதிலிருந்து சிரிப்பு எழுந்தது. அவளை இழுத்தணைத்துக் கொள்ள விழைந்தபோது வழுக்கிக் கொண்டு பாய் எடுக்க உள்ளே ஓடிப்போனாள்.
'என்னமாய் வளர்ந்துவிட்டது இந்தப் பிள்ளை! பார்த்துக் கொண்டிருந்தாலே கண்ணும் மனசும் நிறைகிறது. ரசிக்க ரசிக்கப் பேசுகிறது. அது இருக்கிற இடத்தையே தன் பிரசன்னத்தால் நிறைக்கிறதே!'
அவனுக்கு அந்த அனுபவம் வித்தியாசமாய் இருந்தது. முக்கால்வாசி நேரம் அலுவலகம், கொஞ்சம் நேரம் கிடைத்தால் கிளப் என்று சுற்றித் திரிவதில் தனது வீட்டுத் தோட்டமும் பிள்ளையும் கூட அந்நியமாய்த் தெரிவது வினோதமாக இருந்தது. மழை மெலிதாய்த் தூற ஆரம்பித்தது. இந்த சுகானுபவம் கலைந்து போய்விடுமோ என்று சுகுமார் ஏமாற்றத்தோடு நினைத்துக் கொண்டிருக்கையில், மஞ்சு கையில் தட்டோடு வந்தாள்.
தட்டிலிருந்த பஜ்ஜி கமகமத்தது. காற்றில் சில்லிப்பும் சுகந்தமும் அதிகரித்திருந்தன. ஆழமாய் மூச்சை இழுத்து விட்டபோது பிரபஞ்சத்தின் சக்தி தன்னுள் நிரம்புவதாய் உணர்ந்தான் சுகுமார்.
"இந்தாங்க" என்று மஞ்சு டீ கோப்பையை நீட்டினாள். டீயின் சுவை தன் பால்ய நினைவுகளைக் கிளப்பவே, "அம்மா போட்டதா?" என்றான்.
"ம்ம்.. பரவாயில்லையே. கண்டு பிடிச்சுட்டீங்களே. உங்கம்மா இஞ்சி, ஏலக்காயோடா அன்பையும் கலந்திருக்காங்களா, என்ன?" சிரித்தபடியே கேட்டாள் மஞ்சு.
அவளே தொடர்ந்து, "அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஏதோ கஷாயம் போட்டுக்கிட்டிருக்காங்க. இப்ப வருவாங்க" என்றாள்.
ஸ்ருதி பாயை அவன் காலடியில் விரித்து வாகாய் அமர்ந்துகொண்டாள்.
தொடையில் தாளமிட்டபடியே, "மகா கணபதிம்..." என்று அவள் கணீர்க் குரலில் பாட ஆரம்பித்ததும் சுகுமாருக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடிற்று. தூறல் பலமாகி குடையில் மிருதங்கம் வாசித்தது. ஸ்ருதியின் ஜிமிக்கி அவள் குண்டுக் கன்னத்தில் நர்த்தனமாடியதை வெகுவாய் ரசித்தான் சுகுமார். மஞ்சுவும் மெல்லிய குரலில் ஸ்ருதியோடு பாடலில் இணைந்து கொள்ள, அந்த சூழல் அவனைத் தன்னுள் அமிழ்த்துக் கொண்டது. கண்கள் தானாக மூடிக் கொள்ள உலகை மறந்து லயித்திருந்தான் சுகுமார்.
கண்களை லேசாய்த் திறந்த போது ஒற்றைக் குடையில் குறுகிக் குழைந்து அப்பாவும் அம்மாவும் அவர்களை நோக்கி வந்தது ஹைக்கூவாய்த் தெரிந்தது. அவர்களுக்கு மேலே வானவில் ஒன்று பிரகாசமாய் ஒளிர்ந்தது.
மழை இரைச்சலையும் சங்கீதச் சாரலையும் மீறிய ஒரு பேரமைதி தன்னை ஆக்கிரமித்தாற்போலிருந்தது சுகுமாருக்கு. உள்ளுக்குள் உற்று நோக்கினான். அவன் ஆத்மா பெரிதாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தது.
உலகமெலாம் தான் தேடவிருந்த இந்த மாயமான் அவன் வீட்டுத் தோட்டத்தில் கிட்டுமென்று அவன் நினைத்திருக்கவில்லை