தேன்கூடு - தமிழோவியம் போட்டி: ஆகஸ்டு' 06
தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்தும் போட்டிகளில் ஜூலை மாதம் வென்றதன் விளைவாக ஆகஸ்டு மாதப் போட்டியின் தலைப்பை அறிவிக்கும் பாக்யம் (!) பெற்றிருக்கிறேன் :-)
போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php
படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php
படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஆகஸ்டு 20, 2006
ஆகஸ்டு 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் ஆகஸ்டு 26 அறிவிக்கப்படும்.
சரி, தலைப்புக்கு வருவோம்
போன போட்டிக்கு மரணம்னு தலைப்புக் கொடுத்து இளவஞ்சி வலைபதிவுலகைக் கொஞ்சம் கனமாக்கிட்டாரில்ல.... அதனால இந்த மாசம் கொஞ்சம் லைட்டான தலைப்பாக் கொடுக்கணும்னு நெனச்சேன்.
எல்லாருக்கும் பரிச்சயமானதா இருக்கணும், அவங்கவங்க வாழ்க்கையில அனுபவிச்சிருக்கணும், ஈசியா கிடைக்கக் கூடியதாகவும் இருக்கணும், தூரத்துக் கானலாப் போகக் கூடியதாகவும் இருக்கணும், சுகமாகவும் இருக்கணும், சுமையாகவும் இருக்கணும்.... இப்படி பல பரிமாணங்களுடைய அம்சம் எளிமையானதா இருக்கமுடியாதே? சிக்கல் நிறைந்ததா இருந்தா அங்கே சுவாரஸ்யமும் இருந்தாகணுமே?
ஆமாமா... ரொம்ப ரொம்ப சர்ப்ரைஸ் தரக்கூடிய அம்சம்தான் இது. எப்போ, எங்கே, எப்படி முளைவிடும்னு சொல்றது ரொம்ப கஷ்டம். சில சமயம் பாத்தீங்கன்னா ஒரு நொடியிலேயே இது ஒரு விருட்சமா கிளையும் விழுதும் பரப்பி விஸ்வரூபம் எடுத்துரும். ஆனா வேற சில சமயங்கள்ல என்னதான் தண்ணி ஊத்தி, உரம் வைச்சு, வியர்வை சிந்தி உழைச்சாலும் கூட சட்டுன்னு கருகிப் போயிரும்.
ஒருவேளை இது நமக்கு ஈசியாவே கிடைச்சிட்டாக்கூட 'அட இவ்வளவுதானா'ன்னு அலட்சியமா இருந்தீங்கன்னு வைங்க - கிடைச்ச வேகத்திலேயே கைநழுவிப் போயிரும். இதை பத்திரப் படுத்தி வைக்கிறதுக்கு மெனக்கெடத்தான் செய்யணும்... ஆனா ஒண்ணு - மெனக்கிடறதால மட்டும் இது நிலைச்சிறாது. அதையெல்லாம் தாண்டின ஏதோ ஒண்ணு இருக்கத்தான் செய்யுது...
இந்நேரம் தலைப்பை ஊகிச்சிருப்பீங்களே!
ஆமா, இந்த மாதப் போட்டியின் கரு 'உறவுகள்'...
உறவுகளுக்கு ஆக்கவும் அழிக்கவும் ஆற்றல் இருக்குங்கறது நம்ம எல்லாருக்குமே தெரியும். சில நிமிஷங்கள்லயே அல்பாயுசுல அழிஞ்சு போற உறவுகள் கூட சில பேரோட வாழ்க்கையின் போக்கையே மாத்திரும்...
ஆனா பாருங்க, இவ்வளவு வீரியமுள்ள உறவுகளை எல்லா சமயமும் தேர்ந்தெடுக்கிற உரிமை நமக்குக் கிடைக்கறதில்லை... சமீபத்தில எங்கேயோ படிச்சது நினைவுக்கு வருது: 'உன்னோட அப்பா ஏழைன்னா அது உன் தப்பில்ல; ஆனா உன் மாமனார் ஏழைன்னா அதுக்கு நீ மட்டுமே பொறுப்பு'
இது ஒரு நகைச்சுவையான கருத்துன்னா கூட பெரும்பாலான உறவுகள்ல ஒருவிதமான சுயநலம் இருக்கறதைச் சுட்டிக் காட்டுதில்லையா?
'நீ அருகிலிருந்தால் தோளில் சுமை; தொலைவிலிருந்தால் நெஞ்சில் சுமை' - இப்படித்தானிருக்கும் பெரும்பாலான பெற்றோருடைய மனநிலை. ஆனா அநேகமான பெற்றோர்கள் இன்னைக்கு வயோதிகத்தில நெஞ்சில சுமையோடதானே வாழவேண்டி இருக்கு? ஒரு வேளை விஞ்ஞானம் வளர வளர, மனித உறவுகளோட வீச்சு சுருங்கிக்கிட்டே வருதோ?
ஒரு மனிதனோட வாழ்க்கையில நீண்ட கால உறவு யாரோட இருக்கும்னு நெனைக்கறீங்க? உடன் பிறந்தவர்களோடதான்...
இன்னைக்கு எத்தனை குழந்தைகளுக்கு அக்கா, அண்ணா, தம்பி, தங்கைன்னு எல்லாவிதமான ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளும் கிடைக்குது?
ஆனா இந்தக் குறை பெரிசா தெரியாமல் போறதுக்கு முக்கியமான காரணம் நண்பர்கள்... நாமே விரும்பிச் சேத்துக்கற உறவுகள்ல முக்கியமானது நட்பு. ரத்த உறவுகளோட நட்பை ஒப்பிட முடியுமா?
......
......
......
இப்படி உறவுகளை உற்றுப் பாக்கப் பாக்க புதுசு புதுசா பற்பல கோணங்கள் தோணிக்கிட்டே இருக்கும்...
அதனால மகா ஜனங்களே, நீங்க புகுந்து விளையாடறதுக்கான களம் ரொம்ப ரொம்பப் பெரிசுங்கறதை உணர்ந்து ஒண்ணுக்கு நாலு படைப்பா போட்டுத் தாக்குங்க... சரியா?
பி.கு: ஒரே ஒரு தலைப்புதான்... 'மிஸ், சாய்ஸ் குடுங்க'ன்னெல்லாம் கேக்கப்படாது...