"என்னடா ஆச்சு சாமியாருக்கு? பளபளப்பா மாறிட்டு வர்றான்? மாப்பிள்ள வயசுக்கு வந்துட்டானாடா மச்சான்?"
கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்த பாலமுருகு தன்னைப் பற்றிய தன் நண்பனின் கமென்டுக்கு உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். ஆனால் முகம் வழக்கம்போல இறுகித்தானிருந்தது.
"உனக்கு விஷயம் தெரியாதா? ரொம்ப நாளா இவனோட க்ளாஸ் மேட் மலர் இவனுக்கு ரூட் போட்டுக்கிட்டிருந்தாள்ல? என்ன செய்தாளோ தெரியல, சாமியார் துறவறத்தைக் கலைச்சு குடும்பஸ்தனாயிட்டான்"
இந்த நக்கல்களையெல்லாம் புறந்தள்ளி பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினான் பாலமுருகு.
"செமஸ்டர் லீவுக்கு அம்மணி ஊருக்கு போவுதுன்னு துரை பஸ் ஏத்திவிடப் போறாராம்"
"நெசமாத்தான் சொல்றியாடா? நம்ப முடியலையே?"
நண்பனுக்கு மட்டுமா நம்பமுடியவில்லை? பாலமுருகுவுக்கும்தான். எப்படி நடந்ததெனத் தெரியாத மாற்றம். பாறையின் நடுமத்தியில் பூப்பத்த அதிசயம்.
அறையை விட்டு வெளியில் வந்தான் பாலமுருகு. மனமெல்லாம் மலரிடத்தில்.
"மச்சான் லெட்டர்டா"
நண்பன் கையில் செருகிவிட்டுப் போன கடிதம் பெற்றோரிடமிருந்து வந்திருப்பது தெரிந்தது. விரைவில் ஊருக்கு வரச்சொல்லி எழுதியிருப்பார்கள்! பிரிக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.
மொத்த ஹாஸ்டலில் எண்ணி பத்து பேருக்கு வீட்டிலிருந்து கடிதம் வருமாக இருக்கும். செல்ஃபோனெல்லாம் வந்துவிட்ட பிறகு யார் எழுத உட்கார்வார்கள்? ஆனால் பாலமுருகு டெலிஃபோனில் அகப்பட்டால்தானே?
இதயத்துக்கருகிலிருந்த கடிதம் நெஞ்சை நெருஞ்சியாய் உறுத்தியது.
'இவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை என்றுதானே ஊருக்குப் போவதைத் தவிர்த்து வருகிறேன்... எதற்கென்று இந்தக் கடிதம்?' பெற்றோர்களை நினைத்ததும் ஆழமாய்க் கசந்தது.
ஏழாவது வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவன்தான் பாலமுருகு.
"மாடு மாதிரி வளந்தாச்சில்ல? இன்னும் என்ன அவனுக்கு தலை சீவி விட்டுக்கிட்டிருக்க?"
"பரிச்சை லீவில வீட்டுக்கு வந்து ரெண்டு வாரம் இருந்துட்டுப் போன்னு சின்னராஜ் ஆசையா கூப்பிடறான். வெக்கமில்லாம எங்கம்மாவை விட்டுட்டு இருக்கமுடியாது சித்தப்பாங்கறான் உன் மகன்"
அப்பாவிடம் இப்படியெல்லாம் வசவு வாங்கிய பையன்தான் பாலமுருகு. ஆனால் எல்லாம் அந்த ஒரு ராத்திரியில் மாறிப் போய்விட்டது.
அன்றைக்குப் போட்டுக் கொளுத்திய வெயிலின் உக்கிரம் அந்த இரவுப் பொழுதிலும் உடம்பை உருக்க, வீட்டிலிருந்த எல்லாருக்குமாய் ஐஸ் சர்பத் வாங்கித் தந்தார் அப்பா. பாலமுருகுவுக்குப் பிடிக்குமென அம்மா தன் பங்கில் பாதியையும் அவனுக்குக் கொடுத்துவிட நட்ட நடு ராத்திரியில் பாத்ரூமுக்கு எழுந்து கொள்ள வேண்டியதாயிற்று.
பக்கத்தில் எப்போதும் படுத்திருக்கும் அம்மாவைக் காணாததில் சற்று குழம்பிப் போய் பாத்ரூமை நோக்கி நடந்தான் பாலமுருகு. அருகில் ஸ்டோர் ரூமிலிருந்து அம்மாவின் மெல்லிய முனகல் சத்தம் கேட்க, அவனுக்கு வயிற்றில் பிரளயம் எழும்பியது. 'அய்யோ வீட்டுக்குள் திருடன் வந்திட்டானோ? அம்மாவைப் பிடித்து வைத்திருக்கிறானோ?' அம்மாகோண்டுவான பனிரெண்டு வயது பாலமுருகுவை பயம் முழுவதுமாய் ஆக்கிரமித்தது. உடம்பு உதறியது. லேசாய்த் திறந்திருந்த ஜன்னலின் மேற்கதவு வழியாய்ப் பார்த்தவனுக்கு அருவருப்பில் உடம்பு கூசிப்போனது. 'ச்சீ... அம்மாவா இப்படி?'
அந்தக் காட்சியைப் பார்த்த கண்களைத் தோண்டி எறியவேண்டும் போல் ஆத்திரம் கொப்புளிக்க பாத்ரூமில் கேவிக் கேவி அழுதுவிட்டு வந்து பாயை எடுத்துக் கொண்டு திண்ணைக்குப் போனான் பாலமுருகு. அதன் பிறகு வாழ்க்கையில் சகலமும் மாறிப் போனது.
அப்பாவின், அம்மாவின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காத வெறுப்பில் தனக்குள் முடங்கிப் போனான் அந்தச் சின்னப் பையன். அவனைச் சுற்றி பெரிதாய் ஒரு கோட்டை எழுப்பிக் கொண்டதும் அப்போதுதான்
வயது ஏற ஏற விபரம் புரியப் புரிய இந்த இடைவெளி மேலும் வளர்ந்ததே ஒழிய குறைந்தபாடில்லை. பதினேழு வயதில் கல்லூரிக்குள் நுழையும்போது பெற்றோரின் மேல் மட்டுமல்லாமல் 'உடம்புக்கு அலையும் உலகம்' என்று இந்த உலகத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்துவிட்டிருந்தது.
பெண்கள் என்றால் ஏழு மைல் தூரத்துக்கு ஓடுவதும், ஆபாசம் என்று திரைப்படங்களை முற்றுமாய் நிராகரிப்பதும் போன்ற இன்ன பிற சமாச்சாரங்கள் இவனை சக மாணவர்களிடம் துறவியாய்க் காட்டின. அவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் எந்த எதிர்வினையும் காட்டாது அழுத்தமாய்த் தன் காரியத்தில் கண்ணாக இருப்பான் பாலமுருகு. கவனம் சிதற வாய்ப்பில்லாது போனதாலோ என்னவோ இதுவரை ஒன்று விடாமல் அத்தனை செமஸ்டர்களிலும் முதல் மார்க். அதுவும் ஒவ்வொரு முறையும் நல்ல வித்தியாசத்தில்.
"என்னதான் சொல்லு, சாமியாரின் புத்தி யாருக்கும் இங்கே இல்லைடா... அவன் எங்கேயோ நாம எங்கேயோ" என்று இரண்டாவது வருடத்திலேயே சகமாணவர்கள் ஒரே மனதாய் ஒப்புக்கொண்டாயிற்று. அவன் இருக்கும் வகுப்புக்கு சற்று அதிகப்படியாய் தயாராக வேண்டும் என்று பேராசிரியர்களுக்கும் புரிந்து போயிற்று.
அந்த கற்பூர புத்திதான் மலரை அவனிடம் ஈர்த்தது - ஆரம்பத்தில் வெட்கப் பார்வையும் சின்னச் சிரிப்புமாய் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது கொஞ்சமும் பிரயோசனமில்லாமல் போக, நேரிடையாக அவனிடம் சகஜமாய்ப் பேச ஆரம்பித்ததில் அவன் திகிலெடுத்து விலகி ஓட.... கடந்த இரு வருடங்களாய் நடந்த இந்தத் துரத்தல் சில நாட்களாய்த்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.
வெறுக்க வெறுக்க, விலக விலக சற்றும் சளைக்காமல் அவள் காட்டிய அக்கறையும், அன்பும், கரிசனமும் தன்னை இந்த மாயவலைக்குள் இழுத்துப் போட்டுவிடும் என்று பாலமுருகுவே எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நாள் அவளில்லாவிட்டாலும் வாழ்க்கை சற்றே இருட்டாய்த் தோன்ற ஆரம்பித்தபோதுதான் அவனுக்குப் புரிந்தது சுழலில் அகப்பட்டுவிட்டோமென்று.
செமஸ்டருக்கு முந்தைய நாள் அவள் பிறந்த நாளுக்கு அவன் ஒரு வெகு சாதாரண வாழ்த்தட்டையை கையெழுத்து கூட போடாமல் நீட்டியபோது, மலருக்கு மலருக்கு மனம் கொள்ளாப் பூரிப்பு. தொலைபேசியில் மெல்ல மெல்ல அவனைக் கரைத்து இன்று அவனை பஸ் ஸ்டாண்டுக்கு வரச்செய்தது அவளுக்குப் பெரிய சாதனையாகத்தானிருந்தது.
"மொதல் மொதலா ரெண்டு பேரும் வெளில வர்றோம். அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்குப் போயிட்டு பஸ் ஸ்டாண்ட் போலாம்பா. நெறைய நேரம் இருக்கே" பஸ் ஸ்டாப்பில் அவளின் கெஞ்சலுக்கு செவிசாய்த்தான்.
கோவிலிலிருந்து வெளியில் வந்ததும், "அஞ்சே அஞ்சு நிமிஷம் இந்த மணல்ல உக்காந்துட்டுப் போலாம்" எங்கோ ஒதுக்குப் புறமாய் அழைத்துச் சென்றாள்.
'மலர் நல்ல பெண்; அவளுக்கு உடம்பு சுகம் பெரிதாயிருக்காது. என்னை என் மனசுக்காக நேசிக்கிற பெண். என்னை, என் விருப்புவெறுப்புகளைப் புரிந்து கொள்வாள்' என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தாலும் உள்ளுக்குள் உதறலாகத்தான் இருந்தது. 'ஒரு வேளை இவளும் சராசரிப் பெண்களைப் போல....'
மலர் மணலில் கோலம் போட்டுக் கொண்டே குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்; அவள் விருப்பு வெறுப்புகளை விவிரித்தாள்; அவனைப் பற்றி சிலாகித்தாள். பாலமுருகு கடலைப் பார்த்தவாறு 'உம்' கொட்டிக் கொண்டே அவள் அருகாமை தந்த இதத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.
'தொட்டால்தான் சுகமா? இதோ இந்த இடைவெளி இருந்தும் மனசு சிட்டு போலப் பறக்கிறதே' அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே மலர் சட்டென்று இரு கைகளாலும் அவன் கழுத்தை வளைத்து அவன் மார்பில் புதைந்து கொண்டாள். பாலமுருகு பதறி அனிச்சையாய் அவளைப் பிரிக்க அவள் இன்னும் இறுகிக் கொண்டாள். முதல் முறையாய் ஒரு பெண்ணின் ஸ்பரிஸம்... மூச்சு முட்டும் நெருக்கம்... படீரென அவனது சமநிலையைக் குலைத்துப் போட்ட அந்த உணர்வை கிரகிக்குமுன்னே, நிமிர்ந்து அவன் உதட்டில் அழுத்தமாய் தன் அதரங்களைப் பதித்தாள் மலர். பாலமுருகு சுதாரிக்குமுன் சட்டென்று விலகி ஈரமான விழிகளுடன் அவன் பார்வையை ஆழமாய் ஊடுருவி கிசுகிசுப்பாய் 'ஐ'ல் மிஸ் யூ வெரி மச்' என்றாள். பின் தன் செயலுக்காய் வெட்கப்பட்டவள் போல பையை எடுத்துக் கொண்டு அவனுக்குக் காத்திராமல் ஆட்டோவை நோக்கி நடந்தாள்
பாலமுருகு பிரமித்து அமர்ந்திருந்தான். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பேரின்பப் பிரவாகம் நிகழ்வதாய் உணர்வு. அவளின் ஸ்பரிஸம், இறுக்கம், முத்தம் எல்லாமாய் சில விநாடிகளே நிலைத்திருந்தாலும் யுகயுகமாய் நீடித்ததான பரிச்சயம். வெறும் உடம்பின் கிளர்ச்சியாய் இருந்தால் இது எப்படி சாத்தியமாகும்? அதையும் தாண்டிய ஆன்மானுபவம் போலல்லவா இருந்தது இந்த நிகழ்வு?
அவன் சுய ப்ரக்ஞை பெற்றபோது மலர் தூரத்தில் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் அவசரமாய் எழ முயற்சித்த கணம் ஆட்டோ வேகம் பிடித்தது.
பாதியாய் உணர்ந்தான் பாலமுருகு. அவனுக்கு அவள் மிகவும் தேவையாய் இருந்தாள். ஹார்மோன்கள் செய்யும் கலகம் என்று அவன் புத்தி இடித்துரைத்தாலும் தன் ஆன்மா அவளால்தான் முழுமைபெறும் போன்றதான தாகம் உயிரின் வேரைப் பிடித்தாட்டியது. கண்ணில் நீர் கொட்டியது. தாங்க முடியாத துக்கம் அவனைப் பீடித்தது. முழங்காலில் முகம் புதைத்து வெட்கமில்லாமல் அழுதான். அழுது முடித்த போது நன்றாய் இருட்டிவிட்டிருந்தது. வானத்தில் மினுக் மினுக்கென மலர்கள் பூத்து அவளை மேலும் நினைவுபடுத்தின. கடற்காற்று அவளின் சுகந்தத்தைத் தன்னிடமிருந்து அழித்துவிடக் கூடாதென மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான். மனசு அடங்க மறுத்தது. பழசும் புதுசுமாய் நினைவுகளும் நிழல்களுமாய் சுழன்றடித்தன.
கால்களின் சோர்வை உணர ஆரம்பித்தபோதுதான் இரண்டுமணி நேரம் நடந்திருந்தது உறைத்தது. இன்னும் அரை மணி நடந்தால் ஹாஸ்டல். தண்ணீர் வாங்க சில்லறை எடுத்தபோது கையோடு வந்தது பெற்றோரின் கடிதம். என்னவோ உடனே படிக்க வேண்டுமென்பதான உத்வேகம் வர, தெரு விளக்குக்குக் கீழ் நின்று கடிதத்தைப் பிரித்தான். முதலிரண்டு வரிகளுக்கு மேல் படிக்க முடியாமல் கண்ணில் நீர் திரைகட்டிற்று.
அடுத்த நாள் அதிகாலையிலேயே ஊருக்குக் கிளம்பினான் பாலமுருகு. பஸ் ஏறுமுன் மறக்காமல் அம்மாவுக்கு ஒரு கண்ணன் பொம்மையும் அப்பாவுக்கு ஒரு உயர் ரகப் பேனாவும் வாங்கிக் கொண்டான்.
(முற்றும்)