சென்ற வருடம் பொறியியல் பட்டம் பெற்ற என் உறவுப்பையன் (ஆங்கிலத்தில் கஸின் என்று சொல்ல வசதியாக இருக்கிறது) ஒரு வருடமாக வேலை கிடைக்காத ஏமாற்றத்தில் தன்னைத் தமிழ் மீடியம் படிக்கவைத்து தன் வாழ்க்கையையே தன் பெற்றோர்கள் வீணாக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். இது என்னைச் சற்று சிந்திக்க வைத்தது. (இப்படி எல்லாம் ஏதாவது நடக்காவிட்டால் சிந்தப்பதே இல்லையாக்கும்!)
தாய்மொழியில் கல்வி கற்பது வாழ்க்கையை சிதைக்கிறதா? அறிஞர்கள் எல்லாம் தாய்மொழிக்கல்வி மாணவர்களின் தரத்தை உயர்த்தும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஏன் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது என்ற கேள்வி இயல்பாய் எழுகிறது. தாய்மொழியிலேயே பிரதானமாய் கல்வி கற்கும் சீனர்கள் அமெரிக்காவில் மேற்கல்விக்கோ அல்லது வேலைக்கோ செல்வதில்லையா? அவர்கள் எவரும் இப்படிக் குறை கூறித் திரிவதாகக் காணோமே! எங்கே இருக்கிறது குற்றம் -நமக்குள்ளா, நம் சமூகத்திலா?
நானும் ஒரு கிராமத்தில் தமிழ் மீடியம் பள்ளியில் படித்தவள்தான். ஒரு வாக்கியம் கூட ஆங்கிலம் பேசத் தெரியாமல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழைந்தவள்தான். அதனால் வெகுவாய் அவமானப்பட்டிருக்கிறேன் தான். ஆனால் அதனால் என் வாழ்வு சிதைந்து போகவில்லையே! என்னைப் போல பலரை என்னால் அடையாளம் காட்டமுடியும். நேர்முகத்தில் ஆங்கிலக் கேள்விகளுக்குத் தமிழில் சிறப்பாகப் பதிலளித்து வேலையைத் தட்டிச் சென்றவர்களிருக்கிறார்கள்தான்
நம் மாணவர்களிடம் இப்படிப்பட்ட ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதில் நம் சமூகத்துக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் முக்கியமான பங்குண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது. நியாயமாகப் பார்த்தால் கல்வி நிறுவனங்கள் இந்த நிலைக்குப் பொறுப்பெடுத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாழ்வு மனப்பான்மையையும் களைய ஆவன செய்வதை அவர்களின் கடமையாகக் கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சனை குறித்துப் பல கேள்விகளுக்குப் பதில் காண ஆதங்கமாய் இருந்தாலும் அரிதாய்க் கிடைக்கும் நேரம் தீர்ந்துவிட்டதால் கேள்விகளை உங்களிடம் வைக்கிறேன்:
1. தாய்மொழி கண்போன்றது; அயல் மொழி கண்ணாடி போன்றது என்று நம் சமூகம் உணராமல் போனதற்கு என்ன காரணம்?
2. ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை என்கிற நிலை ஏன் வந்தது தமிழகத்தில்?
3. தாய்மொழிக் கல்வி கற்பவர்களுக்கு ஒருவேளை அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படவேண்டுமோ?
4. பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கற்றுக் கொடுக்க வேண்டுமோ?
5. என்ன செய்தால் இது போன்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்கலாம்?