'ராமஜெயம் எழுதினால் கூட பிரசுரிக்கின்றன இணைய இதழ்கள்' என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கள். அதென்னவோ தெரியவில்லை - நம்மவர்களுக்குக் குறை சொல்லித் திரிவதென்றால் இனிப்பு சாப்பிடுவது போல. அதே சமயம் நிறையைத் தட்டிக் கொடுக்க ஆயிரத்தில் ஒருவர்தான் முன் வருவார்கள்.
ஒட்டு மொத்தமாய் இணைய இதழ்களென்றாலே படைப்புகளுக்காக அலைகிறவர்கள் என்கிற எண்ணம் கட்டுரையாளருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை. அப்படியே அலைந்து திரிந்து சேகரித்தாலும் கண்டதை எல்லாம் பிரசுரித்தால்தானே தவறு? எங்கோ நடந்த ஒரு சில குற்றங்களுக்காக இணைய இதழ்களை ஒட்டுமொத்தமாய் இப்படி மட்டம் தட்டினால் எப்படி?
இணைய இதழ்கள் வருவாய்க்காகவா நடத்தப்படுகின்றன?
நிலாச்சாரல் உட்பட பல சஞ்சிகைகள் கணிசமான நேர முதலீட்டுடன் தன்னார்வத்துடன் நடத்தப்படுபவையே. படைப்புகளைக் கவனமாய்ப் பரிசிலித்து தகுதியானவையாகக் கருதப்படுபவை மட்டுமே நிலாச்சாரலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் பல படைப்புகள் மெருகேற்றப்பட்டே பிரசுரிக்கப் படுகின்றன. ஒரு இணைய இதழை நடத்திப் பார்த்தால்தான் இதிலுள்ள சிரமங்கள் புரியும்.
அச்சு இதழ்களைப் புதிய படைப்பாளிகள் நெருங்கவே முடியாத சூழலில் அவர்களுக்கு மேடை கொடுத்து அவர்களை வார்த்தெடுக்கும் பணியை இணைய இதழ்கள் செய்து வருகின்றன என்பதை சற்றே மனதில் கொள்வது நல்லது.