மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன?
'ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன்' என்ற செந்தழல் ரவியின் பதிவைப் பார்த்ததும் உதவவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் உள்ளே சென்றேன்.
பதிவையும் பின்னூட்டங்களையும் படித்து முடித்ததும் இவ்வளவு பேர் மனம் கசிந்து பணமாக உதவுகிறார்களே, இதனால் அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே நன்மை நடக்குமா என்ற கேள்வி என்னை உறுத்தியது. இந்தப் பின்னூட்டத்தை இட்டேன்:
//நல்ல முயற்சி...
ஒரு சிறு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பெண் எம்.எஸ்.ஸி படித்திருக்கிறாரல்லவா? அதற்கேற்ற வேலை வாங்கித்தந்தால் தன் சொந்தக் காலில் நிற்கும் நிலை வருமே? பின் கரஸ்பாண்டன்ஸில் பி.எட் பண்ணலாமே! அறுபதாயிரம் கொடுத்து அவர் பி.எட் படித்து முடித்தாலும் அவருக்கு வேலை கிடைக்கும்வரை அதன் பலன் தெரியப்போவதில்லை அல்லவா?
ஐ.டி.ஐ படிக்கக் கூட வசதியில்லாமல் எவ்வளவோ திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த அறுபதாயிரத்தில் ஒரு வேளை 10 பேருக்கு தொழிற்கல்வி தந்து 10 குடும்பங்களை முன்னேற்றலாமோ என்ற கேள்வி எழுகிறது.
பசிப்பவருக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தல் நலம் அல்லவா? //
ரவி எனக்கு இவ்வாறு தனிம்டல் அனுப்பினார்:
//நீங்கள் கூறுவது சரிதான்...கல்லூரியில் பாதியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் தற்க்கொலைக்கு சென்றுவிட்டாராம் இந்த பெண்...உங்கள் பின்னூட்டம் வெளியிட்டால் உதவிசெய்யும் எண்ணம் உடையவரும் நின்றுவிடுவார்கள்...நான் எடுத்த முயற்சி தோல்வியில்தான் முடியும்...கல்லாதவர் ஆயிரக்கணக்காணவர் இங்குண்டு....ஒவ்வொருவரையும் தேடித்தேடி அலைய நேரமோ / சக்தியோ இல்லை...நம் கவனத்துக்கு வந்தவருக்கு முடிந்தவரை உதவலாமே என்றுதான் நான் இந்த முயற்சி எடுத்தேன்...
விரும்பினால் உதவி...இல்லை என்றால் ஒரு கயமை பின்னூட்டம்...அவ்வளவுதான் நான் எதிர்பார்ப்பது...
நன்றி...//
அவருக்கு நான் கூறிய பதில்:
//ரவி
உங்கள் முயற்சி தோல்வியில் முடியும் என்பதால் அடுத்தவர்கள் சீர் தூக்கிப் பார்க்கக்கூடாது என்று நினைப்பது நல்லதா என நினைத்துப் பாருங்கள்.
உதவ வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில் குறையில்லை. ஆனால் அந்தப் பெண்ணுக்கு என்ன செய்தியை நீங்கள் தருகிறீர்கள் - தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தால் உதவி வரும் என்றா?
நாளைக்கே அவளுக்குக் காதல் தோல்வி என்றால் இதே முயற்சியில் அந்தப் பெண் இறங்க மாட்டாளா?
ஆயிரம் இரண்டாயிரத்தைக் கொடுத்துவிட்டு நானும் நல்ல பேர் வாங்க முயற்சிக்கலாம், ரவி. ஆனால் அந்தப் பெண் உண்மையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்
நீங்கள் அறுபதாயிரம் திரட்ட எடுத்துக் கொள்ளும் அதே முயற்சியை அவருக்கு வேலை வாங்கித் தர முயற்சியுங்கள் என்று நான் எழுதியதில் தவறொன்றுமிருப்பதாக எனக்குப் படவில்லை
இலவசம் தந்து நம்மைக் கையேந்திகளாக்கும் அரசியல்வாதிகளைக் கடிந்து கொள்கிறோமே... இப்போது நாம் செய்வதென்ன?
எதிர்க்கருத்து கூறுவதால் உங்களையோ உங்கள் முயற்சிகளையோ குறைவாக மதிப்பிடுகிறேன் என எண்ண வேண்டாம். ஆற்றல் நல்ல விதத்தில் பயன்படட்டுமே என்கிற ஆதங்கம். வேறொன்றுமில்லை
நீங்கள் எனது பின்னூட்டத்தை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் இது குறித்து நான் பதிவெழுதுவதாகத்தானிருக்கிறேன்
நன்றி//
ரவியின் பதில் இங்கே:
//கண்டிப்பாக வேலையையும் பெற்றுத்தருகிறேன் நிலா அவர்களே !!! அருமையான உங்கள் கருத்துக்கு நன்றி !!!//
இந்த விவாதத்தை நான் இங்கே வெளிப்படுத்தக் காரணம் உண்டு. இதே போல் முன்பொரு முறை கோயம்புத்தூரைச் சேர்ந்த சிந்தனை சிற்பிகள் அமைப்பில் நடந்தது. இதே கருத்தைத்தான் அப்போதும் சொன்னேன். பொதுவாகவே நாம் உணர்ச்சி வசப்படும் சமுதாயம். பிரச்சனையின் மூலத்தை ஆற்ற முயற்சிக்காமல் சட்டென்று அதன் அறிகுறிகளை அகற்ற முயற்சிப்போம். அதற்காக பேரளவு ஆற்றல் செலவிடுவோம். அதே ஆற்றலின் ஒவ்வொரு துளியும் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால் நம் சமூகம் முன்னேறும் என்ற ஆதங்கம்தான் எனக்கு.
எப்படிப்பட்ட உதவி நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம். உணர்ச்சிவசப்பட்டு பணத்தைத் தருவது உண்மையில் உதவியா அல்லது தவறான முன்னுதாரணமா என்பதை சற்றே சிந்தித்தல் நலம்.