பதிவுலகில் பெண்கள் - பொன்ஸுக்கு பதில்
பொன்ஸ் எழுதியிருக்கும் பதிவுலகில் பெண்கள் என்ற பதிவு பார்த்தேன்
(மன்னிக்கணும், பொன்ஸ்...) அந்தப் பதிவுடைய நோக்கம் எனக்குப் புரியவில்லை. சாடலாகவும் புலம்பலாகவுமே படுகிறது. இந்தப் பதிவு புதிதாக வர இருப்பவர்களையும் கலவரப்படுத்தாதோ?
//வெளிப்படையாக புரியாதபடி நக்கல் தொனிகளில் விரும்பத்தகாத விமர்சனங்கள் இன்னொரு பக்கம்.//
வெளிப்படையாகப் புரியவில்லை அல்லவா, விட்டுவிடலாமே?
//இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே, "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது" என்று எழுந்து நிற்கும் வக்கிரம்.//
'உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறது' என்பதை அப்படியே லிட்டரலாக எடுத்துக் கொள்ளலாமே! பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் கையில் இருக்கிறது என்னும்போது இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தம் கர்ப்பித்துக் கொண்டு நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வானேன்?
//எங்களை நாங்களாக இருக்க விடுங்கள்//
இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. நீங்கள் நீங்களாக இருக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஏன் உங்கள் கண்ட்ரோலைத் தேவையில்லாமல் அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும்?
அப்படிச் செய்கிறார்கள், இப்படிச் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டு நம் பலகீனத்தைக் காட்டிக் கொள்வதால் யாருக்கு லாபம் என்று யோசித்துப் பாருங்கள். நமது வலிமையை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாமே?
தாக்குதல்களையோ கிண்டல்களையோ கேலிகளையோ முற்றிலும் அலட்சியப்படுத்திப் பாருங்களேன்! இதற்கெல்லாம் முக்கியத்துவம் தந்து நொந்து போவதைத்தானே தாக்குதல் தொடுப்பவர்கள் விரும்புகிறார்கள்? அவர்களுக்கு அந்த திருப்தியைத் தருவானேன்? இது பெண்களுக்கென்றில்லை... அனைவருக்குமே பொருந்தும்
எல்லோரும் கடந்து வரும் பாதைதான் இது... ஆனால் ஒரு கட்டத்தில் நாம் புரிந்து கொள்வது அல்லது புரிந்து கொள்ள ஆரம்பிப்பது:
நன்றும் தீதும் பிறர் தர வாரா :-)