.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Sunday, September 11, 2005

தகப்பன் சாமி- சிறுகதை

Your Ad Here

(நன்றி: பாக்யா மற்றும் திசைகள்)
பூம்பாவூருக்குச் செல்வதானால் எனக்குக் கொள்ளைப் பிரியம். அந்த ஊரின் புழுதியோடு புழுதியாய் புரண்டு வளர்ந்தவளாயிற்றே! மரகதப் போர்வையை விரித்தது போல் பசேலென்று தென்காசிக்கும் குற்றாலத்துக்குமிடையே அம்சமாய் அமர்ந்திருக்கும் என் ஊர். பொதிகைத் தென்றலும், குற்றாலச் சாரலும், பாசம் பொங்கும் மனிதர்களுமாய்... பூம்பாவூர் ஒரு சுகமான தாலாட்டு போலத்தான் எனக்கு.

ஆனால் ஊருக்குப் போவதில் ஒரே ஒரு தயக்கம் உண்டு எனக்கு. அம்மாவின் நிலைமையைப் பார்த்தால் எனக்கு த்திரம் கொப்பளிக்கும். ஒருவித இயலாமையில் மனசு மறுகும். அம்மாவின் மேல் எனக்குப் பெரிய பரிதாபம் உண்டு. அறிவு, திறமை என எல்லாம் இருந்தும் அப்பாவைப் பொறுத்தவரை அவள் ஒரு அடிமைதான். அப்பாவின் கையில் சாட்டை இல்லாதது மட்டும்தான் குறை. னால் வார்த்தைகளிலேயே ஏகத்துக்கும் அம்மாவை ட்டி வைத்துவிடும் வல்லமை இருந்தது அப்பாவுக்கு. இவ்வளவுக்கும் அம்மா படிக்காத பேதை ஒன்றுமில்லை. பள்ளி ஆசிரியையாக 35 வருடம் வேலை பார்த்து ஓய்வு பெற்றவள்.

"நீதாம்மா அப்பாவைக் கெடுத்து வைச்சிருக்கே. சுடுதண்ணி கூட தானா போட்டுக்கத் தெரியலை. உட்கார்ந்த இடத்தில எல்லாத்தையும் குடுத்துப் பழக்கிட்டே" என்று நான் குற்றம் சாட்டும் போதெல்லாம், "அடிப் போடி. என் போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை விடப் பெரிசு. னா நான் தோத்துப் போயிட்டேன். அதுதான் வித்தியாசம். இது இப்படித்தான்னு எனக்கு விதிச்சிருக்கு" என்பாள். வார்த்தைகளில் கசப்பும் விரக்தியும் வழியும்.
அப்பாவுக்கு அவர் வசதி முக்கியம். மற்றெதெல்லாம் அப்புறம்தான். வழக்கம்போலக் காலையில் எழுந்து கருவேலங்குச்சியில் பல்விளக்கி, எங்கள் வயல் பம்பு செட்டில் குளிக்க வேண்டும். குளித்துவிட்டு வரும்போது வீட்டில் சூடாய் இட்டிலியும் சட்னியும் மணக்கவேண்டும். பின்பு கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு, ஊரில் பஞ்சாயத்து பண்ணிவிட்டு மதிய சாப்பாடு சரியாய் ஒரு மணிக்கு சாப்பிட்டாக வேண்டும். அதன் பின் அவரது பிரத்யேகத் தேக்குக் கட்டிலில் ஒரு மணி நேரமாவது தூங்கியாக வேண்டும். இதில் எதில் குறை வந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஒழிந்தார்கள்; மாட்டியவர்களை கடித்துத் துப்பிவிடுவார். "ஊர்ல எல்லாப்பயலும் நம்மளக் கண்டா அலறுவான்ல" என்று அவரின் கோபத்தில் அவருக்கு மகா பெருமை வேறு.

இரண்டு அண்ணன்களுக்குப் பின் வீட்டில் ஒரே பெண் என்பதால் எனக்கு வீட்டில் கொஞ்சம் செல்லம், சலுகை. அப்பா என் மீது உயிரையே வைத்திருப்பதாக அம்மா அடிக்கடி சொல்லுவாள்.

அம்மா சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்போதும் ஒரு வித வெறுப்பு, விரக்தி. யாரிடமும் நட்பாய் அவள் பழகியதில்லை. பள்ளிக் கூடம் போகும்போது மட்டும் முகம் தெளிவாய் இருக்கும். 'அந்தப் பிஞ்சு முகங்களைப் பார்த்தா எனக்கு உலகமே மறந்து போகும்' என்று காரணமும் சொல்வாள்.

ஓய்வு பெற்ற பிறகு அதுவும் போயிற்று. வீட்டுக்குள் அப்பாவுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டு அவரின் அரட்டல் மிரட்டல்களுக்கு ஈடு கொடுத்துக் கொண்டு ஒரு கூட்டுக்குள் வாழ்வது மாதிரி சுருங்கிக் கொண்டுவிட்டாள். அதனாலேயே நான் வாரம் தவறாமல் சென்னையிலிருந்து தொலைபேசியில் ஒரு அரை மணி நேரமாவது பேசிக் கொண்டிருப்பேன். வாரம் முழுவதும் ஒட்டு மொத்தமாய்ச் சேர்த்து வைத்ததெல்லாம் கொட்டுவாள்.

"இந்த வருஷ திருவிழாவுக்காவது தாத்தா ஊர்ல போய் ஒரு நாலஞ்சுநாள் இருந்துட்டு வர்றேன்னு கேட்டேன் பாப்பா. 'மனுஷன் சோத்துக்கு என்ன செய்வான்'னு கேக்கறாரு உங்கப்பா"

"பாப்பு டீச்சரைப் பார்த்துட்டு வரலாம்னு தெக்குத் தெரு வரைக்கும் போயிட்டு வாரேன்னு கேட்டதுக்கு சிடுசிடுன்னு விழுந்தாரு. எதுக்கு வம்புன்னு பேசாமெ இருந்திட்டேன்"

"உனக்கு ஞாபகம் இருக்கா பாப்பா, என் டியரஸ்ட் பிரண்டுன்னு சொல்லுவேனே ஜெயசீலி, நாற்பது வருஷம் கழிச்சி அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்தா புதன் கிழமை. கோயம்புத்தூர்ல இருக்காளாம். போன் நம்பர் கூட குடுத்துட்டுப் போனா. எங்க, எஸ்.டி.டி எல்லாம் நம்ம இஷ்டத்துக்குப் பண்ணினா அப்பறம் யாரு உங்கப்பாகிட்ட வாங்கிக் கட்டிக்கறது"

"நம்ம ரஞ்சிதம் டீச்சர் பொண்ணு ஜோதிக்குப் பொறந்த நாளுன்னு நேத்து சாக்லேட் கொடுக்க வந்திருந்திச்சு. கையில ஏதாவது கொடுத்தனுப்பலாம்னா அப்பா வீட்டில இல்ல. அந்தச் சின்னப் பிள்ளைய வெறுங்கையோட அனுப்ப வேண்டியதாப்போச்சு. என் கையில ஒரு அம்பது நூறு குடுத்து வைக்கலாமில்லை?"

அம்மா இப்படிக் கதைகதையாய்ச் சொல்லும் போதெல்லாம் எனக்கு கண்ணில் நீரும் நெஞ்சில் கோபமும் அரும்பும். ஒரு முறை பொறுக்காமல் அப்பாவுக்குக் கடிதம் எழுதிக்கூடப் பார்த்தாயிற்று. 'சின்னக் கழுதை எனக்கு புத்தி சொல்லுது' என்று அம்மாவிடம் உறுமியதுடன் மூன்று மாதம் என்னிடம் அவர் பேசாமல் இருந்ததுதான் மிச்சம். ஒன்றும் மாறியதாகக் காணோம். இந்த முறை அதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும்.

"என்னப்பா தூங்கிட்டியா? வீடு வந்திருச்சு" என் கணவரின் குரல் என்னைக் கலைத்தது. காரிலிருந்து என் கணவர் பெட்டிகளை இறக்க, நான் என் மூன்று வயது மகள் நிவேதிதாவை காரிலிருந்து இறக்கி விட்டேன். அப்பா வீட்டுக்குள்ளிருந்து பிரகாசமாய் வெளிப்பட்டார். "வாடா ராசாத்தி" என்று நிவியைத் தூக்கிக் கொண்டு சம்பிரதாயமாய் என் கணவரைப் பார்த்து, "வாங்க மாப்பிள்ளை" என்றார். என் கணவர் சிடுசிடுவென்ற முகத்துடன் 'ம்' என்று தலையசைத்ததும் அப்பாவுக்கு முகம் சிறுத்துப் போனது.

அப்பாவின் ஈகோவும் கோபமும் ஊர் அறிந்ததே. தனது மரியாதைக்குக் கடுகளவு பங்கம் வந்தாலும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திவிடுவார். நான் சற்றே பயத்துடன் அவரையே பார்க்க, நிவி, "தாத்தா, ஹேப்பி பொங்கல் டு யூ" என்று நிலைமையை மாற்றினாள்.

அம்மா மெலிந்து கறுத்திருந்தாள். கண்ணில் அடர்த்தியாய் சோகம் கவிழ்ந்திருந்தது. நான் என் கணவரை மாடி அறையில் செட்டில் பண்ணிவிட்டு கீழிறங்கி வந்தேன். அப்பா ஹாலில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா வழக்கம் போல சமையலறையில் போராடிக்கொண்டிருந்தாள். நான் சமையலறை வாசலருகில் அமர்ந்து வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தேன்.

ஏழு மாத வயிற்றுப் பிள்ளையோடு சிரமப்பட்டு அமர்ந்ததைப் பார்த்து, "இப்படி கஷ்டப்படறியே பாப்பா. பக்கத்திலர்ந்தா அப்பப்ப வந்து பாக்கலாம். மெட்ராஸ் நெனச்சா வர்ற தூரத்திலயா இருக்கு?" என்றாள் அம்மா ஒரு வித இயலாமையுடன்.

"அதை ஏன் கேக்கற. ரொம்ப வெறுத்துப் போகுது. உங்க மருமகன் ரொம்ப மாறிட்டார். முன்னப் போல இல்லை. வீட்டில எந்த உதவியும் கிடையாது. இருந்த இடத்தில எல்லாம் வேணும். நிவியோட சேர்ந்து இப்ப அவரையும் கவனிச்சுக்க வேண்டி இருக்கு.ஆபீஸ்லயும் வேலை பின்னுது. எப்படித்தான் இன்னொரு குழந்தைய சமாளிக்கப் போறேனோன்னு மலைப்பா இருக்கு" என்றேன் மெல்லிய குரலில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் கேட்கும் விதமாக. அப்பா லேசாகத் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு பேப்பரில் ஆழந்தார்.

"மருமகனா அப்படிப் பண்றாரு? ஆச்சர்யமால்ல இருக்கு? நிவி வயித்தில இருக்கும்போது உன்னை எப்படிப் பார்த்துக்கிட்டார், எவ்வளவு உதவி பண்ணுவார்" என்றாள் அம்மா வருத்தத்துடன்.

"அதானே எனக்கும் புரியமாட்டேங்குது. யார்கிட்டருந்து இந்த மாதிரி கத்துக்கிட்டார்னே தெரியலைம்மா. னா எதுக்கெடுத்தாலும் 'உங்கமா செய்யலை?' அப்படின்னு உன்னத்தான் இழுக்கிறார்"

"நானும் நீயும் ஒண்ணா?" என்றாள் அம்மா ஆற்றாமையுடன்

"இதே கேள்வியை நானும் கேட்டேனே! 'உங்கம்மா வேலைக்குப் போயிக்கிட்டே 3 பிள்ளைகளை வேலைக்காரி கூட இல்லாமத்தான சமாளிச்சாங்க. இங்க வேலைக்காரி இருக்கா. கிராமத்தில இல்லாத ஏகப்பட்ட வசதி இருக்கு. உனக்கு மட்டும் ஏன் முடியாது'ங்கறார். அவரை இத்தனை நாள் நான் மொளகா அரைச்சுட்டேனாம். இப்பத்தான் கண் திறந்திருக்காம் அவருக்கு" நான் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

என் கணவருக்குக் காய்ச்சலாக இருப்பதாக நிவி வந்து சொன்னாள். நான் மகா சிரமத்துடன் எழுந்து மாத்திரையைத் தேடி எடுத்துக் கொண்டு மாடி ஏறினேன். பின்பு வெந்நீருக்காக, தைலத்துக்காக, போர்வைக்காக என நான் பலமுறை மூச்சு வாங்க ஏறி இறங்கியதை அப்பா கடுகடுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அம்மா பொறுக்க மாட்டாமல், "ஏன் பாப்பா, மருமகனுக்கு இறங்கி வர முடியாத அளவுக்கா உடம்பு முடியலை?" என்றாள்

"அதெல்லாம் இல்லைம்மா. உடம்பு லேசா கதகதப்பா இருக்கு. அதுக்குத்தான் இப்படிப் படுத்தறார். நான் சொல்லலை?" என்றேன் என் புலம்பலுக்கு உரம் சேர்க்கும் விதமாய்.

அண்ணன்மார் இருவரும் குடும்பத்துடன் வந்த பிறகும் என் கணவரின் சிடுசிடுப்பு தொடர, அப்பா லேசாய் முணுமுணுக்க ரம்பித்தார். அம்மா தனிமையில், "உனக்கும் என்னையப் போலவே வாழ்க்கை அமைஞ்சிருச்சேடி" என்று கண்ணீர் விட்டாள்.

அத்தனை பேருக்கும் மூன்று வேளைக்கும் சமைத்து, வீட்டைச் சுத்தம் செய்து, பேரக் குழந்தைகளை விசேஷமாய்க் கவனித்து அம்மா பம்பரம் போலச் சுற்றிக் கொண்டிருந்தாள். மூன்று முறை வயிற்றில் பரேஷன் ன பிறகும் அம்மாவுக்கு எங்கிருந்துதான் இந்த சக்தி கிடைக்கிறதோ. இத்தனைக்கும் பரேஷனுக்குப் பிறகு பிள்ளைகள் வீட்டிலோ அல்லது பிறந்த வீட்டிலோ அம்மாவை அதிக நாள் ஓய்வெடுக்க விட்டது கிடையாது அப்பா. ‘அங்கே இவ வந்து இருந்தா போதும். மற்றெதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். மனுசனால வீட்டில தனியா இருக்க முடியலை’ என்று வீராப்புடன் கூட்டி வந்துவிடுவாரே ஒழிய அம்மா தலைய்¢ல்தான் அத்தனை வேலையும் விடியும். அதெல்லாவற்றையும் விட ஹெரினியா என்று சென்னையில் பரேஷன் செய்யும் போது கூட அப்பா கூட இல்லாததுதான் அம்மாவுக்கு என்றைக்கும் வருத்தம். ‘அவருக்கு ஒண்ணுன்னா நமக்கு இப்படிப் பதறுதே. பரேஷனுக்குக் கூட இருக்கணும்னு அவருக்குத் தோணலையே. பிள்ளைக நீங்கதான் ஓடி ஓடிப் பாத்தீங்க” என்று அம்மா பலமுறை சொல்லி அழுதிருக்கிறாள். பாவம் அம்மா!

கிளம்புகிற நாளும் வந்தாயிற்று. மதிய சாப்பாட்டுக்குப் பின் கிளம்பவேண்டியதுதான். அம்மா எங்கள் பயணத்துக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்ததில் சமையல் கொஞ்சம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

அப்பா சமையலறையில் எட்டிப்பார்த்து, "என்ன?" என்றார் அதிகாரமாய்."இன்னும் ஒரு பத்து நிமிசத்தில முடிஞ்சிரும்" அம்மாவின் குரலில் பயம் தொனித்தது."மனுசனைப் பட்டினி போடுக் கொல்றதே உனக்குப் பொழைப்பாப் போச்சு"அம்மா பதில் சொல்லாமல் வேலையில் ஆழ்ந்தாள்.

ஒரு வழியாய் சமையலை முடித்து எல்லோரையும் அமரவைத்துப் பரிமாறி விட்டு என் கணவரிடம் அம்மா மெதுவாய், "பாப்பா ரொம்ப கஷ்டப்படறா. கூட ஒரு ரெண்டு மாசம் லீவு போனா போகுதுன்னு சீக்கிரமே இங்க கொண்டு வந்து விட்டுருங்களேன்" என்றாள் மெல்லிய குரலில்

என் கணவர் விசுக்கென்று நிமிர்ந்து என்னைப் பார்த்து, "உன் வேலையா?" என்றார் இளக்காரமாய். "அய்யோ... இல்லீங்க" என்றேன் நான் அவசரமாய்.

அவர் அம்மாவிடம், "அதெல்லாம் சரிப்படாது, அத்தை. எனக்கு நிவியை விட்டுட்டு அவ்வளவு நாள் இருக்க முடியாது" என்றார் கறாராய்.

"எப்படியும் 3 மாசம் இங்கதான் இருக்கப் போறாங்க. கூட ஒரு ரெண்டுமாசம்தானே.” அம்மாவின் குரலில் கெஞ்சல் இருந்தது.

என் கணவர் மனமிரங்காமல், “இந்தத் தடவை டெலிவரி சென்னையிலதான்” என்றார்.

அம்மா திடுக்கிட்டது போல அப்பாவைப் பார்த்தாள். அப்பாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அப்பா பதில் ஒன்றும் சொல்லாததைக் கண்டு அம்மாவே தொடர்ந்து, “இங்கேன்னா எல்லார்க்கும் வசதி..” என்று இழுத்தாள்

“எல்லார்க்கும்னா உங்க எல்லாருக்குமா? நானெல்லாம் மனுஷனில்லையா? மனுசன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்?” என்று வெடித்தார் என் கணவர்.
‘ஆகா.. இது அப்பாவின் டயலாக் ஆயிற்றே’ நான் பதற்றத்தோடு அப்பாவைப் பார்த்தேன். அண்ணன்மார் இருவரும் செய்வதறியாது ஒருவரை ஒருவர் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டனர்.

அப்பா கடுகடுவென்று, “இங்கே கொண்டு வந்து விட்டா நல்லா கவனிச்சுக்கிறோம். மெட்ராஸ் வந்தெல்லாம் டெலிவரி பார்க்க தோதுப்படாது” என்றார்.

என் கணவர் என்னைப் பார்த்து, “உன் மேல உங்க வீட்ல எவ்வளவு அக்கறைன்னு இப்பவாவது தெரிஞ்சுக்கோ” என்றார் ஏளனமாய்.

அவ்வளவுதான் அப்பா என்கிற எரிமலை வெடித்துக் கிளம்பியது. பாதிச் சாப்பாட்டில் கை கழுவிவிட்டு தண்ணீர் டம்ளரை வீசி எறிந்தார். “ஒரு மூணு மாசம் சமாளிக்க முடியலை. நீயெல்லாம் ஒரு மனுஷன்” என்றார் என் கணவரைப் பார்த்து.

என் கணவர் இதை எதிர்பார்த்தவர் போல், “அதை நீங்க சொல்லாதீங்க. இந்த வயசில உங்க வொய்·பை விட்டுட்டு ஒரு ரெண்டு நாள் இருக்கமுடியலை” என்று காரசாரமாய்த் திருப்பித் தாக்கினார்.

பதில் சொல்ல முடியாமல் திணறிய அப்பா உக்கிரத்தின் உச்சிக்கே போனார். “ என் வீட்டில வந்து என்னையே அவமானப் படுத்தறியா. வெளிய போடா” என்றார் என் கணவரைப் பார்த்து.

அதையும் எதிர்பார்த்தது போலவே என் கணவர் விசுக்கென்று நிவியை இழுத்துக் கொண்டு வெளியேற, நான் நெஞ்சு பொறுக்காமல் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தேன். பெரியண்ணன் என் கணவரையும் சின்னண்ணன் அப்பாவையும் சமாதானம் செய்ய முயன்று தோற்றனர். நான் அழுது கொண்டே பெட்டிகளை எடுத்துக் கொண்டு காருக்கு நடந்தேன்.

ஒரு மாதம் சென்றிருக்கும். நானும் தொலைபேசவில்லை. வீட்டிலிருந்தும் யாரும் அழைக்கவில்லை. கல் நெஞ்சுக்காரர்கள். எனக்கு அம்மாவின் கவலைதான் அரித்துக் கொண்டிருந்தது. யாரிடம் புலம்புவாள், பாவம்!

என் கணவரும் அடிக்கடி, “உங்கம்மா பாவம், செல்லம். உன்னை விட்டா யார்கிட்ட பேசுவாங்க? தனியா கெடந்து அழுதுக்கிட்டிருப்பாங்க. உங்கப்பா இல்லாத நேரமா கூப்பிட்டு உண்மையைச் சொல்லிரு” என்று நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.

அப்பா வழக்கமாய் வாக்கிங் செல்லும் நேரத்துக்காய்க் காத்திருந்து போன் அடித்தேன். வெகு நேரத்துக்கப்பிறகு அம்மா எடுத்தாள். எடுத்ததும் என் குரலை இனம் கண்டு, “பாப்பா, எப்படிடா இருக்க? உடம்புக்கெல்லாம் நல்லா இருக்கில்ல?” என்றாள் குரல் கம்ம.

“நான் நல்லா இருக்கேன். முதல்ல உன் மருமகன் உன்கிட்ட தன் சார்பா மன்னிப்பு கேட்கச் சொல்றார்” என்றேன்.

அம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரம் மௌனம் சாதித்தாள். பின் “என்கிட்ட மன்னிப்பு கேக்கறதுக்கு என்ன இருக்கு? உன்னை நல்லா வச்சுக்கிட்டா சரிதான்” என்றாள் பெருமூச்சோடு

நான் சத்தமாய் சிரித்து, “ அவர் என்னை நல்லாதான் வைச்சிருக்கார். அவரை நான் நல்லா வைச்சிருக்கேனான்னுதான் தெரியலை.“ என்றேன்

அம்மா குழம்பியது தெரிந்து “ஊர்ல உனக்காகத்தான் ஒரு டிராமா போட்டோம். அப்பா உனக்குப் பண்றதை இவர் எனக்குப் பண்ணினா அப்பா உணர மாட்டாரான்னு ஒரு நப்பாசை.”

"சும்மா பூசி மெழுகாதே பாப்பா" என்றாள் அம்மா நம்பாமல்

"நெஜம்மாத்தாம்மா. அப்பா உன்ன ட்ரீட் பண்றதைப் பாத்து நான் இங்கே புலம்பிக்கிட்டே இருப்பேன். அதுக்கு உங்க மருமகன்தான் இந்த ஐடியா சொன்னார். அப்பாவுக்கு என் மேல உயிர்னு நீதானே அடிக்கடி சொல்லுவே. அதான் உனக்கு நடக்கற மாதிரி எனக்கு நடந்தா அவர் உணருவாருன்னுதான் முன்னமே பேசி வச்சுக்கிட்டு இப்படிப் பண்ணினோம். னா கொஞ்சம் ஓவர் ஆக்ஷனா போயிருச்சி" என்றேன்.

அம்மா சில விநாடிகள் மௌனத்துக்குப் பின், "மருமகன் பெரியஆளுதான். மாமனாரை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கார். உங்கப்பா இந்த ஒரு மாசமா ரொம்ப மாறித்தான் இருக்கார். காலைல காஸ் ஸ்டவ் பத்தவைச்சு காபி போட்டுட்டுத்தான் என்னைய எழுப்பறார்; தண்ணி பிடிச்சுத்தறார். காய்கறி நறுக்கித் தறார். எனக்கே நம்ப முடியலைடி. நீ சொன்ன பிறகுதான் காரணம் புரியுது" அம்மாவின் குரலில் வியப்பும் சந்தோஷம் தெறித்தன.

தொடர்ந்து, "எனக்கே இப்படி கீழ உக்காந்து காய்கறி நறுக்க குறுக்கு வலிக்குதே. மூணு ஆபரேஷன்ஆகியிருக்கு. உனக்கு ரொம்பத்தான் கஷ்டமா இருந்திருக்கும்கறார் ஒருநாள். "

"உலக அதிசயமால்ல இருக்கு!" என்றேன் நான்.

"அது மட்டுமில்ல. மாமா ரெண்டு நாள் முன்னால் போன் பண்ணி திருவிழாவுக்குக் கூப்பிட்டான். 'உங்கக்காவை நான் கொண்டு வந்து விட்டுட்டு வந்திர்றேன். ஒரு வாரம் கழிச்சி நீங்க கொண்டு வந்து விட்ருருங்க'ன்னார். எனக்கு வாயடைச்சுப் போச்சு. சாப்பட்டுக்கு என்ன பண்ணுவீங்கன்னேன். 'அதான் இப்ப காஸ் ஸ்டவ் பத்த வைக்கத் தெரிஞ்சிருச்சில்ல. சமாளிச்சுக்குவேன். நீ தோசை மாவு மட்டும் அரைச்சு வச்சுட்டுப் போ'ன்றார்"

அம்மா தொடர்ந்து அருவி மாதிரி பேசிக் கொண்டே இருந்தாள்.
என் தாயின் விலங்குகளை நெகிழ்த்திவிட்ட னந்தம் என் கன்னத்தில் நீராய் வழிந்தது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.