.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, March 16, 2006

பாஸ்டன் பாலாவுக்கு பதில்

Your Ad Here

நான் விளையாட்டாக நினைத்த நட்சத்திரப் பேட்டிக்காக பாஸ்டன் பாலா அவர்கள் தேர்ந்த பத்திரிகையாளரைப் போல கேட்டிருந்த முத்தான கேள்விகளுக்குத் தனிப்பதிவாக பதில் சொல்வது சரியாக இருக்கும் என எண்ணியதால் இந்தப் பதிவு. தாமதத்திற்கு சாக்கு சொல்வது வீண் வேலை என்பதால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நேராக கேள்விகளுக்குச் செல்கிறேன்:


1. தமிழ் இணையத்தின் தவறவிடக் கூடாத வலையகமாக நிலாச்சாரல் உள்ளது. நிலாச்சாரலின் அடுத்த கட்டமாக என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி, பாலா. நிலாச்சாரலின் அடுத்த கட்டமாக நிலா புக்ஸ் என்ற அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மின் நூல்களையும் பின் அச்சு நூல்களையும் வெளியிட ஆவல். முதல் கட்டமாக 3 மின் நூல்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறோம். இன்னும் 5 நூல்களுக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எளிய துவக்கம் என்றாலும் அதன் பின் பெரிய கனவு இருக்கிறது. சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

2. வெப்2.0 கரைபுரண்டோடும் காலம் இது. தமிழ் தொழில் நுட்பங்கள் பிறமொழித் தளங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

தொழில் நுட்ப வளர்ச்சியால் பார்வையாளரை வசத்தப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. அதே சமயம் வலையகங்கள் பயன்படுத்த எளிமையாக இருத்தல் அவசியம்(உதாரணத்துக்கு எழுத்துரு பதிவிறக்கத்தை தேவையற்றதாக்குவது). அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியை பயன்படுத்திக் கொள்வது நலம்

வாசகர்களை தக்கவைத்துக் கொள்வதை விடுத்து கணித் தமிழ் வளர்ச்சி குறித்து மட்டும் பார்த்தோமானால் நாம் பெருமைப்படும் விதத்தில் பல தன்னார்வத் தொண்டர்களும் நிறுவனங்களும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கணித்தமிழை வளர்த்து வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.


3. மனத்திருப்திக்காக செயல்படும்போது விமரிசனங்களினாலும் பார்வையாளரைத் திருப்திப்படுத்தும் செய்கைகளும் கொள்கைகளை நீர்த்துப் போகவைக்கும் அபாயம் உள்ளது. தங்களின் சிந்தனை என்ன?

நல்ல கேள்வி. ஒருவருக்கு எதில் ஆன்ம திருப்தி என்பதைப் பொறுத்தே கொள்கைகள் நீர்த்துப் போவது அமைந்திருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டுமே மனதிருப்தி தருமானால் அங்கே கொள்கைகள் தாக்குப் பிடிப்பது கடினம்தான். அப்படியான சூழல் இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதற்கான காரணத்தை அடுத்த பதிலில் தந்திருக்கிறேன்.


4. லாபத்தில் இயங்கினால் மட்டுமே தமிழ் வலையகங்கள் நீண்டநாள் நீடிக்க முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது. Eyeballs, pageviews போன்றவை முக்கியமான அளவுகளாகக் கருதுகிறீர்களா? வருகையாளர்களில் எவ்வளவு பேர் ஜனரஞ்சகமும் காத்திரமும் சம அளவில் நிறைந்த நிலாச்சாரல் போன்ற தமிழ்த்தளத்திற்கு சந்தா கட்டிப் படிக்க முன் வரக் கூடும்? இலவசமாக சேவை நடத்துவதன் மூலமே பொருளாதார ரீதியில் தன்னிறைவு உடைய வலையகத்தைத் தொடர முடியுமா?

நிலாச்சாரலுக்கு முன்னும் பின்னும் ஆரம்பித்த எண்ணற்ற தமிழ் வலைத்தளங்கள் பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டுவிட்டன. நிலாச்சாரலிலிருந்து வருவாய் தேவையில்லை என்ற எங்கள் நிலைப்பாடே நிலாச்சாரல் இன்னும் தொடர்வதற்குக் காரணம்.

இந்த தெளிவான நிலைப்பாடு காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய நெருக்கடி எங்களுக்கில்லை. அதனால் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவும் தேவை இருக்கவில்லை.

பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பார்வையிடும் பக்கங்களின் விபரமும் நிலாச்சாரலின் ரீச் பற்றி அறிய பயன்படுமாதலால் விபரங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை பெருக வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு எதுவும் செய்ததில்லை. உண்மையாகவே இதுவரை நிலாச்சாரலுக்கென்று எங்கும் எந்தக் கட்டண விளம்பரமும் நாங்கள் தந்ததில்லை. நிலாச்சாரலில் விளம்பரம் செய்யுங்கள் என்று யாரிடமும் போய் கேட்டதில்லை. Organic growth என்று சொல்வார்களல்லவா - அப்படித்தான் நிலாச்சாரலின் வளர்ச்சி இயற்கையாகவே அமைந்தது. வாய்மொழி விளம்பரம் தந்த அனைத்து வாசகர்களுக்கும்தான் நன்றி சென்றடையும்

ஆனால் எத்தனைதான் இருந்தாலும் சந்தா கட்டி படிக்க வாசகர்கள் பெருமளவில் முன்வருவார்களா என்பது சந்தேகமே. பெரிய பெரிய பத்திரிகைகளெல்லாமே இந்த இணைய சந்தா விஷயத்தில் தடுமாற்றம் காண்பதாகத்தான் அறிகிறேன். ஆனாலும் சில வாசகர்கள் நிலாச்சாரல் இலவசம் என்பதை அறியாமல் சந்தா விபரங்கள் கேட்டு அஞ்சல் அனுப்பும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எனினும் சந்தா என்ற Revenue model வழி செல்லாமல் பொருளாதாரத் தன்னிறைவுக்கு புதிது புதிதாகத் தோன்றும் மற்ற வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நிலாஷாப். நிலா புக்ஸ் மூலம் மின் நூல்கள் விற்கும் திட்டமும் உள்ளது.

லாபத்தில் இயங்கினால் மட்டுமே தமிழ் வலையகங்கள் நீண்ட நாள் நீடிக்கமுடியும் என்ற கருத்தை என்னால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருவாயில்லாமல்/ வருவாயை எண்ணாமல் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றனவே? ஒருமித்த கருத்துடைய குழு அமையுமானால் பொருளாதார ரீதியில் தன்னிறைவு உடைய வலையகத்தைத் தொடர்வது சாத்தியமே.


5. நிலாச்சாரலில் தங்களை மிகவும் பாதித்த வாசகர் செய்கை/மறுமொழி எது?

ஒரு பிரபல இசையமைப்பாளரின் மகாரசிகரான மருத்துவர் ஒருவர், ஒரு இசை விமரிசனம் அனுப்பியிருந்தார். அது நடுநிலையாக இல்லாதது போல் தோன்றவே அதைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து மடல் அனுப்பியிருந்தேன். அவருக்கு வந்ததே கோபம்! என்னைத் தனிப்பட்ட விதத்தில் மிகவும் கடுமையாக விமரிசித்து பதில் அனுப்பியிருந்தார். என்னைப் பற்றி முன்பின் தெரியாமல் அத்தகைய கடும் சொற்களை அவர் வீசியது என்னைச் சற்றுப் புண்படுத்தியது.

பொதுவாகவே படைப்பாளிகள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாதலால் நான் இது போன்ற எதிர்வினைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் இவ்வளவு படித்த, பொறுப்பான பணியிலிருக்கும் மனிதர் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவாரே ஆனால், அவரது நோயாளிகளின் நிலைமை குறித்த கவலை எனக்குப் பெரிதாக எழுந்தது :-)


***
பாலா, பதில்களில் ஏதேனும் கேள்விகளிருந்தால் தயங்காமல் கேளுங்கள்

கேள்விகளைத் தந்து என்னை சிந்திக்கச் செய்த அனைவருக்கும் நன்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At March 16, 2006 8:19 AM, Blogger Boston Bala said...

---மின் நூல்களையும் பின் அச்சு நூல்களையும் வெளியிட ஆவல்.---

வாழ்த்துகள்.

#2. ஆமாம். ஆனால், இணையத்தில் தமிழில் (தட்டச்ச) எழுத முடியும்; அதை உறவினருக்கு எளிதில் அனுப்பி, பகிர்ந்து கொள்ள இயலும் போன்றவை மேலும் பரவலாக அறிமுகம் ஆகவில்லை. (அதிகம் அறிமுகமில்லாத) நண்பர் சமீபத்தில் 101 மொழிகளை கணினியில் எழுதவல்ல நிரலியை வாங்கியதாகக் காண்பித்தார். 'இது எல்லாமே இலவசமாக, இதைவிட மேம்பட்ட முறையில் கிடைக்கிறதே' என்று தமிழ், ஹிந்தி எடிட்டர்களை சுட்டினேன். 'அப்படியா' என்று வியந்தார்.

----வாய்மொழி விளம்பரம் தந்த அனைத்து வாசகர்களுக்கும்தான் ---

மிகவும் சரி.

---லாபத்தில் இயங்கினால் மட்டுமே தமிழ் வலையகங்கள் ---

சிறுபத்திரிகைகள் போல் காலப்போக்கில் நிதிப்பற்றாக்குறையில் நின்றுபோகும் அபாயம் இருக்கிறதே? மேலும், தன்னார்வலர்கள் வேறு விஷயங்களில் நாட்டம் கொள்ளும்போது, வருமானம் இல்லாத ஒன்று தன்னிறைவு அடைந்து விடுமா?

பொருளாதாரக் குறிக்கோள் இல்லாமல் சேவை நோக்கில் மட்டுமே இயங்கும் அமைப்புகளுக்குள்ள பின்னடைவுகள் இங்கும் இருக்கும்.

தங்களின் விரிவான பதில்களுக்கு என்னுடைய நன்றி.

 
At March 16, 2006 11:19 PM, Blogger நிலா said...

/// ஆனால், இணையத்தில் தமிழில் (தட்டச்ச) எழுத முடியும்; அதை உறவினருக்கு எளிதில் அனுப்பி, பகிர்ந்து கொள்ள இயலும் போன்றவை மேலும் பரவலாக அறிமுகம் ஆகவில்லை//

உண்மைதான்.


//சிறுபத்திரிகைகள் போல் காலப்போக்கில் நிதிப்பற்றாக்குறையில் நின்றுபோகும் அபாயம் இருக்கிறதே? மேலும், தன்னார்வலர்கள் வேறு விஷயங்களில் நாட்டம் கொள்ளும்போது, வருமானம் இல்லாத ஒன்று தன்னிறைவு அடைந்து விடுமா?

பொருளாதாரக் குறிக்கோள் இல்லாமல் சேவை நோக்கில் மட்டுமே இயங்கும் அமைப்புகளுக்குள்ள பின்னடைவுகள் இங்கும் இருக்கும்.//


ஒருவர் போனால் இன்னொருவர் வருவார். அப்படித்தானே சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன?

ஆனால் அதற்காக இந்த மாடலில் குறைகள் எதுவும் இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல சேவை நிறுவனங்களுக்கான பல பின்னடைவுகள் இங்கும் இருக்கின்றன - உதாரணமாக தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கேற்றவாறு நிலாச்சாரலை விரிவுபடுத்துவது மிகப் பெரும் சவாலாகவே எங்களுக்கு அமைந்திருக்கிறது.

 

Post a Comment

<< Home