***மந்திரச் சிற்பிகள் 1***
இது நினைவலைகள் இல்லைங்க... ஒரு மாதிரியான நன்றி நவிலல். என்ன இவ்வளவு சீக்கிரம்னு பார்க்கிறீங்களா? இதுவே லேட்டு. அட, உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல இன்னும் நேரம் வரல.
இப்ப யாராருக்குன்னு தெரிஞ்சிக்க மேலே படிங்க.கூட்டுப் புழுவை வண்ணத்துப் பூச்சியாக்கறது கஷ்டமில்லை. ஆனா ஒரு மண்புழுவை பட்டாம்பூச்சியா ஆக்கறதுக்கு சில மந்திரச் சிற்பிகள் முயற்சி செய்தாங்க; இன்னும் செய்துக்கிட்டு இருக்காங்க. அவங்களைப் பத்தி சொல்றது என் கடமைன்னு நினைக்கிறேன்
அது என்னவோ சின்னதிலருந்தே எனக்கு என் மேல இருக்கிற நம்பிக்கையைவிட மற்றவங்களுக்கு என் மேல அதிகமாவே நம்பிக்கை இருந்திருக்கு. ஏன்னு காரணம் தெரியலை. என் தன்னம்பிக்கையைவிட சுத்தி இருந்தவங்க வச்ச நம்பிக்கைகள்லாம்தான் என்னை உந்தித் தள்ளி நடக்க வச்சிருக்கு.
பொதுவாவே நமக்கு வெளாட்டு ஜாஸ்தி. ரொம்ப சேட்டை, அரட்டை எல்லாம். இப்போவே பாத்திருப்பீங்களே, நிலாச்சாரலோட 250 இதழ் வேலைகள், நட்சத்திர வாரம் எல்லாம் இருந்தும் வெளாட்டு நடத்திக்கிட்டிருந்தோம்ல... அப்பிடித்தேன் எப்பயும்.
பத்தாவது முடிச்சவுடன் பையங்க கூட என்னைத் தொடர்ந்து படிக்க வைக்க விருப்பமில்லாமே (எல்லாம் பசங்களோட சேஃப்டிக்குதான்:-))) பக்கத்து டவுண் பெண்கள் மேல்நிலைப்பள்ளில சேர்த்தாங்க. பழைய ஸ்கூல்ல நம்மதான் தாதா. என்ன ஆட்டம் போட்டாலும் எப்படியோ மார்க் வாங்கிருவேன். அதனால எல்லாருக்கும் செல்லப் பிள்ளை. அப்பாவும் அம்மாவும் வேலை பார்த்த ஸ்கூல் வேற.
புது ஸ்கூல்ல நம்மளை யாருன்னே தெரியாது. கிராமத்துப் பிள்ளைன்னு ஏளனம் வேற. கையெழுத்து வேற கேவலமா இருக்கும். பொதுவாவே பெண்கள் பள்ளிகள்ல கையெழுத்துக்கு நெறைய முக்கியத்துவம் தருவாங்க. நம்ம கிறுக்கலைப் பாத்த உடனேயே டீச்சரெல்லாம் இது சரியில்லைன்னு முடிவு பண்ணீட்டாங்க. மாதத் தேர்வு ரெண்டுல சரியா மார்க் வராததால மனசே விட்டுப் போச்சு. அடப் போங்கப்பான்னு ரொம்ப கேர்ஃப்ரீ ஆயாச்சு. அடுத்த நாள் எக்ஸாம் இருந்தா கூட அசராம சினிமா போற அளவுக்கு வெறுப்பாகிப் போச்சு.
அரையாண்டு முடிஞ்சு அடுத்த மாதத் தேர்வுல பயாலஜில மார்க் ரொம்ப சுமார். பேப்பர்லாம் குடுத்து முடிஞ்சப்பறம் கவலைப் படாம சிரிச்சுக்கிட்டிருந்ததைப் பார்த்த பயாலஜி மிஸ் சுஜாதா 'நீ மனசு வைச்சா நல்லா படிக்கலாமில்லை?' அப்படின்னாங்க ஒரு முறைப்போட. 'ஆங்?... நம்ம ஒருத்தர் இருக்கோம்னு இவங்களுக்குத் தெரியுமா?'ன்னு திகைச்சுப் போயிட்டேன். மத்தப் பிள்ளைங்களும் 'அட...' அப்படின்னு என்னைப் பாத்ததுங்க, ஏன்னா சுஜாதா மிஸ் அப்படி பெர்சனல் ரிமார்க் எல்லாம் பண்ற ஆளில்லை.
'என்னது திடீர்னு' அப்படின்னு யோசிச்ச சில படிப்பாளிங்க அரையாண்டுத் தேர்வு மார்க் எல்லாம் கம்பேர் செய்ய ஆரம்பிசுதுங்க. கடைசில பார்த்தா அரையாண்டுல பயாலஜில நம்மதான் ஃபர்ஸ்ட் மார்க். அது கூடத் தெரியாத அளவுக்கு பொறுப்பின் திலகாம இருந்தோம்! என் கிறுக்கலைப் பொறுமையா படிச்சு திருத்திருத்திருக்காங்களேன்னு ஆச்சர்யம்! நமக்கு என்னமோ பளிச்சுன்னு தலைக்குள்ள அடிச்சது. அதுக்கப்புறம் எப்படி பொறுப்பு வந்து என்ன சாதிச்சோம்னு சொன்னா தற்பெருமையா போயிரும். அதனால விட்டுறலாம்.
அப்புறம் அண்ணா யுனிவர்சிடி வந்து முதல் மூணு செமஸ்டர்லயும் யாரும் எதிர்பார்க்காத அளவு ஓரளவு டீசன்டான மார்க் வாங்கவும் உள்ள தூங்கிக்கிட்டிருந்த வெளாட்டுத்தனம் எந்திருச்சிரிச்சு. அதுக்குப்பிறகு நான் படிச்ச படிப்பை நினைச்சாலே வெக்கமா இருக்கு. அஸைன்மென்டைக் காப்பி அடிக்கறது கூட கடைசி நேரத்திலதான். மகா மகா பொறுப்பான என் க்ளாஸ்மேட் ஒருத்தி அசைன்மென்ட்ல ஏதாவது பிரச்சனைன்னா என்னை இருத்திப் பிடிச்சு உக்கார வச்ச்சு டிஸ்கஸ் பண்ணுவா. 'துப்பறியும் சாம்பு' ஏதோ செய்யப் போயி என்னவோ நடக்குமே அதே போலத்தான் எப்படியோ பிரச்சனை சால்வ் ஆகிப் போகும். 'நீ மட்டும் ஒழுங்கா படிச்சா யுனிவர்ஸிடி ரேங்க் வாங்கலாம்'ன்னு என்னென்னவோ ஆசை வார்த்தை சொல்லி என்னைத் திருத்தப் பார்த்தாள். அந்த மாதிரி வஞ்சப் புகழ்ச்சி எத்தனை பாத்தாச்சுன்னு நெனச்சி எஸ்கேப் ஆயிடறது.
பொண்ணுங்கன்னா பொறுப்பா இருப்பாங்கன்னு பேச்சு. நம்ம பரிச்சைக்கு பத்து நாள் முன்னாலதான் புத்தகத்தை எடுக்கறது. அதிலயும் போரடிச்சுப் போய் ஹாஸ்டல்ல ரூம் ரூமா நாவல் தேடி அலையறது. அண்ணாவில மக்களெல்லாம் செகண்ட் இயர்லயே ஜி. ஆர். ஈ ஆரம்பிச்சிரும். இப்படி எக்ஸாமுக்கு முந்தின நாள் நாவல் கேட்டுக்கிட்டுத் திரிஞ்சா நம்மள புழு மாதிரிதான் பாக்கும். ஃபைனல் இயர்ல இன்னும் மோசம். படிக்கிற ஆசையே இல்லாம போயிருச்சி. வேண்டாத வம்பெல்லாம் வேற வெலைக்கு வாங்கியாச்சு.எனக்கு வந்த (நானா இழுத்துப் போட்டுக்கிட்ட) ஒரு பிரச்சனைனால ஃபிரண்டுன்னு நெனச்சவங்க எல்லாரும் விட்டலாச்சார்யா படத்தில வர்ற மாயமோகினிகள் போலக் காணாமப் போயிட்டாங்க.
அப்ப எங்களுக்கு ஸ்பேஸ் டெக்னாலஜி எடுத்தவர் டாக்டர் வி மோகன். அவர் மேல மக்களுக்கெல்லாம் நல்ல மரியாதை உண்டு. ஒரு தடவை வழக்கம் போல கடைசி ஆளா ஏதோ ரிப்போர்ட் சப்மிட் பண்ணப் போனேன். வச்சுட்டுக் கிளம்பறப்போ, "You know, you have good potential. Are you proud of what you have done?" அப்படீன்னார். கதி கலங்கிடிச்சு. அவர் எதனால அந்தக் கேள்வி கேட்டார்னு நல்லாவே தெரியும். ஆனா உயிர்த் தோழிகளே நமக்கெதுக்கு வம்புன்னு விலகிப் போனப்ப, அவ்வளவு பெரிய மனுஷன் ஒரு பொருட்டா மதிச்சுக் கேட்டது எனக்கு மகா ஆச்சர்யம். ஆனா என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. பரிதாபமா ஒரு முழி முழிச்சுட்டு வந்தாச்சு. “A real friend is one who walks in when the rest of the world walks out.”' அப்படிங்கற பொன்மொழி நினைவுக்கு வந்தது.ஆனா மனம் திருந்தி பொறுப்பு வந்து யுனிவர்சிடி ரேங்க் வாங்கறதுக்கு அது டூ லேட். ஆனா அவ்வளவு பெரிய மனுஷன் சொல்றாருன்னா அதில ஏதாவது அர்த்தம் இருக்கணும்னு மனசில ஆழமா பதிஞ்சிருச்சி.
என்னதான் பொறுபில்லாமத் திரிஞ்சாலும் ஒரு செமஸ்டர்ல கூட கப் எதுவும் வாங்காம ஒரே அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணினதோட, கேவலம்னு சொல்ல முடியாத அளவுக்கு ஏதோ மார்க் வாங்கி பி டெக் முடிச்சாசு. கடைசிப் பரிச்சை அன்னிக்கு "வாழ்க்கையிலேயே எனக்கு கடைசி பரிச்சை இது"ன்னு சொல்லி பயங்கர கொண்டாட்டம்! ஆனா விதி விட்டதா?
வீட்ல கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னடா இது வம்பா போச்சேன்னு பொறுப்பான பிள்ளையா (வேற வழி இல்லாம) எம்.டெக் அப்ளை பண்ணியாச்சு. ரிலேடிவ்ஸ் எல்லாம் மேல படிக்க வைக்க வேண்டாம்னு அப்பாவுக்கு ஒரே அட்வைஸ். மேல படிச்சா அதுக்கு மேல படிச்ச மாப்பிள்ளை பாக்கணுமாம். (அது என்ன கணக்கோ!). ஆனா அப்பா படிக்க அனுப்பிச்சிட்டாங்க.
திருச்சி ஆர்.இ.சில சேந்தாச்சே ஒழிய, படிக்கறதுல சுத்தமா விருப்பமில்லாம விரக்தியா சுத்திக்கிட்டிருந்தேன். எனக்குக் கிடைச்ச க்ளாஸ்மேட்ஸ் அத்தனை பேரும் சொக்கத் தங்கம். உண்மையான பாசம் இருந்தது எல்லார்கிட்டேயும். அதில வேலைக்கு லீவு போட்டுட்டு எங்ககூட படிச்ச ராமகிருஷ்ணன் என்கிற ராம்கி எங்களைவிட அஞ்சாறு வயசு மூத்தவர். ஆனா வயசு வித்தியாசமெல்லாம் பார்க்காம எங்க கூடத்தான் எப்பவும் சுத்திக்கிட்டிருப்பார். 12 பேருல அநேகமா மற்ற எல்லாம் உண்மையாவே படிக்க ஆசைப்பட்டு வந்தவங்க அல்லது ஒரு குறிக்கோளோட வந்தவங்க - நம்மளை மாதிரி கல்யாணத்திலருந்து தப்பிக்கறதுக்காக வந்தவங்க இல்லை. அதனால பி.டெக் மார்க் எல்லாம் நல்லா இருக்கும். நான் கடைசிக்கு முந்தின மார்க். படிப்பைவிட தமிழ் மன்றத்திலதான் நம்ம ரொம்ப ஆக்டிவ். இப்படி இருக்கும்போதே ராம்கிக்கு எப்படியோ என்மேல அபாரமான நம்பிக்கை. எதோ நான் எல்லாத்தையும் ஊதித் தள்ளிடுவேன்கற மாதிரிதான் பேசுவார்.
முதல்ல ஒரு கதை எழுதி தயங்கித் தயங்கி நம்ம க்ளாஸ்மேட்ஸ் கிட்ட காட்டினப்போ எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சுபோச்சு. கையெழுத்து நல்லா இருக்கறவனைப் பிடிச்சு அதை எழுதவச்சு ஆனந்த விகடனுக்கு அனுப்பி வச்சதில பெரிய பங்கு ராம்கிக்கும் ராஜனுக்கும் உண்டு. அதில பாருங்க, அப்படி அனுப்பிச்ச கதை பிரசுரத்துக்கு தேர்வாயிருச்சி. நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ அவ்வளவு சந்தோஷம் அத்தனை க்ளாஸ்மேட்ஸ்க்கும் இருந்தது. அன்னைக்கு அவங்க அப்படி ஸ்டெப் எடுக்கலைன்னா எந்தக் காலத்திலயும் நான் பத்திரிகைக்கு கதை அனுப்பிருக்கமாட்டேன்.
அதோட முடிஞ்சதா? எம்.டெக்ல நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதத்தில என்னை டிஸ்டிங்க்ஷன் வாங்க வச்சது (நான் படிச்சது பாதிதான். அவங்க படிச்சி சொல்ற கதையைக் கேட்டுட்டுப் போய் எழுதினதுதான் மீதி. ராஜன் நல்ல வாத்யார்), கேம்பஸ் இன்டர்வ்யூல வேலை வாங்க வச்சது அப்படின்னு அவங்களோட பிரதாபங்களை அடுக்கிக்கிட்டே போகலாம். நமக்கு ஸ்டைலான இங்கிலீஸ் கிடையாது; சப்ஜெக்ட்ல பெரிய பிஸ்தா கிடையாது. இன்டர்வ்யூவுக்கு நம்மளை மக்கள் ப்ரிபேர் பண்ணி விடுவாங்க பாருங்க...என்ன கேள்வி கேட்பாங்க, எப்படி பதில் சொல்லணும், எப்படி க்ரூப் டிஸ்கஷன்ஸ்ல பேசணும்... சிம்ப்ளி கிரேட்! இன்றைக்கு நான் இருக்கும் நிலைமைக்கு என் எம்.டெக் க்ளாஸ்மேட்ஸ் - குறிப்பா ராம்கியும் ராஜனும் ஒரு காரணம்ங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை.
சில வருடங்களுக்கு முன்னால ராம்கி என் கணவர்கிட்டே, "ஒழுங்கா க்ளாஸ¤க்கு வரமாட்டா. உக்காந்து படிக்கமாட்டா. ஆனா பாருங்க இன்னிக்கு இங்கிலாந்து, இத்தாலின்னு பறந்துக்கிட்டிருக்கா. நாங்கெல்லாம் இன்னும் இந்த வேலையில குப்பை கொட்ட வேண்டிருக்கு"ன்னார். அப்படி அவர் சொன்னதில துளி கூட பொறாமை இல்லை; பொறாமைப்படற நிலைமையிலயும் அவர் இல்லை. என்னை உயர்த்திச் சொல்லணும்கறதுக்காகவே சொன்னது அது. அன்றைக்கு அவர் முகத்தில நான் பார்த்தது பெருமிதம்தான். 'நான் சொன்னேனில்லை?'ங்கற மாதிரி இருந்தது. இப்போ ராம்கி சிங்கப்பூர்ல இருக்கார். டாக்டர் ராஜன் உலகமெல்லம் சுத்தி வர்றான்(ர்!)
சுருக்கமா எழுதணும்னுதான் நினைச்சேன். ஆனா என் வாழ்க்கையில என்னைவிட அதி முக்கியமான ரோல் பண்ணிருக்கற நிறையபேர் இன்னும் இருக்காங்களே!
அவங்களும் வருவாங்க...
(பொறுமையா படிச்சதுக்குக் கடைசில உங்களுக்கும் நன்றி சொல்லிடலாம், திரும்ப வந்தீங்கன்னா:-)))
19 Comments:
நல்ல பதிவு. சுவாரசியமாகவும், நேர்த்தியாகவும், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எழுதுவது சுலபமில்லை.
ரசமான வாசிப்பு தந்தமைக்கு நன்றி.
திரும்ப வந்தீங்கன்னா:-))) -
- கட்டாயம் வருவேங்க..
I started reading your blogs recently after knowing that you are the editor of Nilacharal. I slowly got addicted to your blogs now. Each one of the article in your blog is excellent.
இது போன்ற சிற்பிகள் நமக்கு தெரியாம, அந்த காலகட்டங்கள்ல நம்மலோட உலாவி வந்ததை அசை போடும் இன்பமே ஒரு அலாதி தான். உங்க பதிவு அப்படியே என்னுடயதை படம் பிடிச்சு காமிச்ச மாதிரி இருக்குது. வாழ்த்துக்கள்!
Hi Ms.Nila,
Really your narrative is simply superb! Remembering the people who were our fulcrum, also warrants of your seriousness within a vizaiyaattu ponnu! I hardly read other articles, unless the titles are catchy. I know this approach is wrong, but somehow got into your this blog, as you are the current star writer. Due to paucity of time, I could not write more. HAts off to Ramki,RAjan, your hubby ( must be really a very co-operative person, allowing you to take time to write so much!!) and again to you, from Mamsapuram! BEcoz, I worked for Anadavikatan, Junior vikatan as student reporter in my college days and one Elangovan, a senior to me in Maanava Pathrikaiyaalar thittam, was one of my best friend and well wisher. He is the son of a doctor couple there, (bad memory as I forgot their names), and later after college, he joined some spice board in KErala to become their magazine's editor. Your old memories rekindled some freshness in me too.Adukkaaga, meendum oru nandri
http://maraboorjc.blogspot.com
http://sirichuvai.blogspot.com
JC,
அவசர பின்னூட்டம்.
வருகைக்கு நன்றி
ராம்கியும் ஏன் ராஜு பற்று எழுதவில்லை எனக் கோபித்துக் கொண்டார். இன்னும் வரப் போகிறவர்களில் அவரும் உண்டு
இளங்கோ எனது பால்ய சிநேகிதன். இப்போது தொடர்பு இல்லாமல் போய்விட்டது. வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன். தொடர்பு ஏற்பட்டால் சொல்லுங்கள். நன்றி
நண்பர்களே,
இந்த பதிவில் என் நண்பர்களுக்கு நான் நன்றி தெரிவித்திருந்ததற்கு மிகவும் தரக்குறைவாய் என்னை விமரிசித்து மாண்புமிகு போலி டோண்டு பின்னூட்டம் அனுப்பியிருந்தார். அதோடு திரு.டோண்டு ராகவனின் பதிவில் பின்னூட்டமிட்டதற்காக மிரட்டியிருந்தார்.
அவருக்கு ஒரு குறிப்பு: சேற்றை அடுத்தவர் மேல் தெளிப்பதாக நினைத்துக் கொண்டு சாக்கடையாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு கண்டிப்பாக மனநல உதவி தேவை. என்றேனும் ஒரு நாள் உங்கள் உண்மை இயல்பை உணர என் அசீர்வாதங்கள். (உங்களோடு ஒப்பிடுகையில் நான் எவ்வளவோ உயர்ந்தவளாதலால் ஆசீர்வதிக்க எல்லா தகுதியும் இருக்கிறதெனக்கு).
இனி உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு பின்னூட்டம் அனுப்புவதில் செலவளிக்கத் தேவையில்லை. ஏனெனில் அதில் ஒரு வார்த்தை கூட நான் படிக்கப் போவதுமில்லை; தவறி படிக்க நேர்ந்தாலும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிற ரகமில்லை நான். இத்தோடு உங்களை ஒரு பொருட்டாக மதிப்பது இங்கே நிறுத்தப்படுகிறது.
சிறுமை கண்டு பொங்கி எழும் நிலாப்பெண்ணே, மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எலிக்கூடி சோதனையில் என்னுடைய ப்ளாக்கர் எண் மற்றும் பின்னூட்டப் பக்கத்தில் என் போட்டோ இரண்டும் சேர்ந்து வந்தால்தான் உண்மையான டோண்டுவின் பின்னூட்டம் என்று இன்னேரம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன் நிலா !மலரும் நினைவுகள்,மல்லிகை சரமாக மணம் வீசி வருகின்றதே!இன்று ஒரு சுவாரசியமான வாசிப்பு வாழ்த்துக்கள்!
சிங்கு,
வோட்டு போட மறந்து போயிட்டு இங்க வந்து மல்லிகை மணம்னு வேற சொல்லறீரா? இது ரோஜாக்களின் காலமய்யா.
சும்மா டமாசுக்கு. கோவப்படாதீங்க. :)
பாருங்க ஸ்மைலி எல்லாம் போட்டாச்சு.
//நல்ல பதிவு. சுவாரசியமாகவும், நேர்த்தியாகவும், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எழுதுவது சுலபமில்லை.
ரசமான வாசிப்பு தந்தமைக்கு நன்றி.//
நன்றி, Srikanth
//திரும்ப வந்தீங்கன்னா:-))) -
- கட்டாயம் வருவேங்க..//
தருமி,
வந்ததுக்கான அறிகுறியே காணுமே? நன்றி வேணுமா வேண்டாமா?
//I started reading your blogs recently after knowing that you are the editor of Nilacharal. I slowly got addicted to your blogs now. Each one of the article in your blog is excellent.
//
Deiva
Thanks for your support
//உங்க பதிவு அப்படியே என்னுடயதை படம் பிடிச்சு காமிச்ச மாதிரி இருக்குது. வாழ்த்துக்கள்//
வெளிகண்டநாதர்,
ரொம்ப சந்தோஷம். அப்படியே நீங்களும் ஒரு பதிவு போட்ருங்க..
வந்ததுக்கான அறிகுறியே காணுமே? நன்றி வேணுமா வேண்டாமா? // -
- நிலா, பரிசுதான் தரலை; நன்றியாவது தாங்க!
வோட்டு போட மறந்து போயிட்டு இங்க வந்து மல்லிகை மணம்னு வேற சொல்லறீரா? இது ரோஜாக்களின் காலமய்யா.// -
- கொத்ஸ், ஆயிரம் சொல்லுங்க மல்லிகை மணமே தனிதான்..ஆளப்பாத்தா அழகு...ஆனா, மலர்னா மணம் இருக்கணுங்க...அதத்தான் சிங்ஜி சொல்றார்..
//மலரும் நினைவுகள்,மல்லிகை சரமாக மணம் வீசி வருகின்றதே!இன்று ஒரு சுவாரசியமான வாசிப்பு வாழ்த்துக்கள்!//
நன்றி, சிங் செயக்குமார். உங்கள் பின்னூட்டங்களெல்லாம் கவிதை மயமாக சுவாரஸ்யமாக இருக்கின்றன.
சிறு போடிகளுடன் நட்சத்திர வாரத்தை செய்தது , வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது.
//- நிலா, பரிசுதான் தரலை; நன்றியாவது தாங்க!//
தந்தாச்சு. பாத்தீங்கள்ல?
//கொத்ஸ், ஆயிரம் சொல்லுங்க மல்லிகை மணமே தனிதான்..ஆளப்பாத்தா அழகு...ஆனா, மலர்னா மணம் இருக்கணுங்க...//
தருமி, நான் ஒப்புக்கறேன் :-)))
கொத்ஸ் ரோஜாவுக்கு ஆதரவா ஒரு பதிவு போடுவாரென்று நம்புகிறேன்
//சிறு போடிகளுடன் நட்சத்திர வாரத்தை செய்தது , வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது.//
நன்றி Karthikramas
அடுத்த போட்டியில் பங்கேற்க வாங்க
Post a Comment
<< Home