.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Wednesday, March 01, 2006

*** சந்தோஷம் பொங்குதே - 75வது பதிவு ***

Your Ad Here

'உங்களிடம் அபரிமிதமான பணம் இருக்கிறதென்றும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் வைத்துக் கொண்டால் என்ன செய்ய விரும்புவீர்கள்?' என்று நான் கேட்கிற போது பலர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பின்னுட்டத்தில் சொல்லுங்கள்)

வேலை செய்வதும் பணம் சம்பாதிப்பதுமே வாழ்க்கையின் குறிக்கோள் என்கிற ஒரு வரையறை சின்ன வயதிலேயே நமக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது. நமக்குத் தெரியாத எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு நமக்குத் தெரிந்த கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நிகழ்காலத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். இது கடந்த
காலத்தில் வாழ்வதற்குச் சமம். நிகழ்காலம் மட்டுமே நிஜம். நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் எதிர்காலத்தின் மகிழ்ச்சிக்கு வித்திட்டதாக அர்த்தம். மாறாக, நிச்சயமற்ற எதிர்கால மகிழ்ச்சிக்காக நிஜமான நிகழ்கால மகிழ்ச்சியை ஒத்தி வைப்பதில் அர்த்தமில்லை

நமது சமூகத்தைப் பொறுத்தவரை நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையில் நூறில் ஒரு பங்கு கூட நாம் நமக்குக் கொடுத்துக் கொள்வதில்லை. இதில் தமிழ்ப்பெண்கள் தியாகச் செம்மல்கள் - திருமணமாகிவிட்டாலே தன் வாழ்க்கை முடிந்துவிட்டதான ஒரு பிரம்மையில் கணவர், குடும்பம் என்று அடுத்தவருக்காக
வாழ்வது மட்டுமே பெரும்பாலான பெண்களுக்கு வாழ்க்கையாகிப் போகிறது. இப்படி நமக்கென்று ஒரு முக்கியத்துவமில்லாமல் வாழ்வதில் நம் சுயம் நமக்கே மறந்து போகிறது. சுயத்தைத் தொலைத்துவிட்டு வாழ்வில் மகிழ்வோடு இருக்கமுடியுமா? ஒன்று விரக்தி வந்துவிடும் இல்லையென்றால் மரத்துப் போய்விடும்.

விரக்தியான 5 மனிதர்களோடு ஒரு அறையில் உங்களை ஒரு நாள் அடைத்துவைத்தால் எப்படி இருக்கும்? அடுத்த நாள் விரக்தியின் திரு உருவமாக வெளிவருவீர்கள்தானே? அப்படியென்றால் விரக்தியும் இயந்திரத்தனமும் நிறைந்த மனிதர்கள் வாழும் உலகில் எப்படி நம்பிக்கை நிலவும்? அன்பு பெருகும்? சமாதானம் திளைக்கும்?

மகிழ்ச்சிக்கு பெரும்பாலும் நிபந்தனை வைத்திருக்கிறோம் - வீடு வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும், அயல்நாடு போனால் மகிழ்ச்சி வரும், அங்கீகாரம் கிடைக்கும் வரை மகிழ்ச்சி கிடையாது - இது போல நிறைய நிபந்தனைகள் ஒவ்வொருவரிடமும். இப்படி மகிழ்ச்சியை எதனுடனும் இணைத்துப் பார்க்காமல் சந்தோஷமாக இருக்க முயலலாமே - Whatever happens, Enjoy என்பார் சுவாமி சுகபோதானந்தா. முயன்று பார்க்கலாமே!

மகிழ்ச்சியான மனிதர்களால்தான் மகிழ்ச்சியான சமூகம் அமையும். எனவே நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வது நமக்கு மட்டுமல்ல, உலக நன்மைக்கும் அவசியம். அதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் தொலைக்காட்சியில் அமிழிந்துவிடவேண்டும் என்பதோ அல்லது உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் முழு நேரமும் ஈடுபடவேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.

அவ்வப்போது நமக்கென்று நேரம் ஒதுக்குதல் அவசியம். அப்படி ஒதுக்குகிற நேரத்தில் நமக்கு மகிழ்ச்சி தருகிற அல்லது நிறைவு தருகிற செயல்களைச்
செய்யவேண்டும். அப்படி நேரம் ஒதுக்க முடியாதவர்கள், பணிக்கிடையில் கிடைக்கும் சிறு சிறு இடைவேளைகளில் பிடித்தமான சிறு சிறு செயல்களைச் செய்யலாம் - உதாரணமாக பிடித்த பாடலை முணுமுணுக்கலாம், இரண்டு வரிக் கவிதை எழுதலாம், ஒரு கார்ட்டூன் போடலாம், ஜன்னல் வழியே வெறுமனே வேடிக்கை பார்க்கலாம்
அல்லது பக்கத்து சீட்டுப் பெண்ணையோ பையனையோ பார்த்துப் புன்னகைக்கலாம் :-). ஆனால் இப்படிப் பிடித்த எதைச் செய்தாலும் அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியம். பாடலை ஹம் செய்யும்போது சம்பள உயர்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் அதில் பயனேதுமில்லை. எதையும் முழுமையாக ஒன்றிச் செய்வதே ஒருவித தியானம்தான்.

இப்படி சிறுகச் சிறுக நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளும்போது மகிழ்ச்சி பல்கிப்பெருகும் வாய்ப்பு அதிகமாகிறது. மகிழ்ச்சி நமது இயல்பாக மாறிப்போகிறது.

தினமும், அன்று நமக்குக் கிடைத்த நன்மைகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்க்கையின் பாஸிடிவான பக்கத்தைப் பார்க்கிற பக்குவம் படிப்படியாக வளரும். முயன்று பாருங்கள். முதலில் 5 நன்மைகளை எழுதுவதற்குக் கடினமாக இருக்கும். மெதுவாக நாள் முழுவதும் நடக்கிற நன்மைகளை மனதில் குறித்துக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். நாளுக்கு நாள் பட்டியல் வளரும் - கூடவே உற்சாகமும்.

இத்தொற்று நோயை விரைவாய்ப் பரப்பி சந்தோஷம் பொங்கும் புது உலகம் படைக்கும் ஆற்றல் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அதை உணர்ந்தால் போதும்!

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை அறிந்து கொள்ள சில கேள்விகள் இங்கே: (கேள்விகளின் மூலம் நினைவில்லை. நிலாச்சாரலுக்காக அன்புடன் மொழி பெயர்த்துத் தந்தவர்: வி.ராமசாமி)

எந்த விஷயம் பற்றிப், படிப்பதற்குப் மிகப்பிடிக்கும்?

ஊடகங்களில் எந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும்?

எவ்வகையான திரைப்படங்கள் பிடித்தமானவை?

தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் யாவை?

மற்றவர்களுக்காக, நீங்களே முன்வந்து செய்யும் காரியங்கள் யாவை?

நண்பர்களுடன் எவ்விஷயங்கள் குறித்து அலச விரும்புகிறீர்கள்?

எவ்விஷயங்கள் குறித்துப் பகற்கனவு காண்கிறீர்கள்?

தங்களுக்குப் பிடித்த வேலைகள் யாவை?

பள்ளிப்படிப்பின் போது, பிடித்த பாடங்கள் யாவை?

வேறு விஷயங்கள் என்னென்ன பிடிக்கும்?

பொழுது போக்கப் படங்கள் வரைவதுண்டா அல்லது வெறுமனே கிறுக்கவாவது செய்வீர்களா? எதைப்பற்றி?

உலகை ஆளும் வாய்ப்புக் கிடைத்தால், என்னென்ன மாற்றங்கள் செய்வீர்கள்?

லாட்டரியில் கோடி கிடைத்தால், அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

தங்களுக்குப் பிடித்தமானவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்கள்?

தாங்கள் இறந்தபின், தங்களை நினைவுபடுத்துபவை எவையாயிருக்க விரும்புகிறீர்கள்?

தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருட்கள் யாவை?

தங்கள் அரசியல் கருத்துக்களை எப்படி விவரிப்பீர்கள்?

தாங்கள் புகழும் நபர் யார்; ஏன் அவரைப் புகழ்கிறீர்கள்?

தங்கள் முன்னேற்றத்திற்குக் காரணமான வேலைகள் யாவை?

தாங்கள் இன்னும் செய்யாத, சிறப்பாகச் செய்யக்கூடிய, வேலைகள் யாவை?

தங்கள் நீண்டகால அபிலாஷைகள் யாவை?

தங்கள் பதில்களைச் சோதியுங்கள். தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒன்றிற்கும் மேற்பட்ட பரிமாணத்தில், தனிப்பட்ட ஒரு நம்பிக்கையையோ, நடத்தையையோ அடையாளம் காணமுடிகிறதா? எந்த ஒரு பதிலும், திரும்பத் திரும்ப வந்து, தங்களை உருவகப்படுத்துகிறதா?

இந்தப் பதில்களைக்கொண்டு, கீழ்க்காணும் தொடர்களைப் பூர்த்தி செய்தால் உங்களைக் குறித்த ஒரு உருவம் கிடைக்கும்

எனக்கு மிகப் பிடித்தது ...

நான் மிக நம்புவது ...

நான் மிக மதிப்பது ...

என்னால் மிக நன்றாகச் செய்யக்கூடியது ...

வழமான வாழ்வுக்கு வேண்டியதாய், நான் நம்புவது ...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

At March 01, 2006 8:24 AM, Blogger Deiva said...

very good positive thinking.

 
At March 01, 2006 1:16 PM, Anonymous Anonymous said...

தங்கள் வலைப்பக்கத்திற்கு இப்போது தான் வருகிறேன். நல்ல பல நுணுக்கமான விசயங்களைச் சொல்லியிருக்கீங்க.. நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும். வார்த்தைகள் செயல் வடிவம் பெறும் போது..வாழ்த்துக்கள்.

 
At March 02, 2006 2:07 PM, Blogger நிலா said...

Thanks, Deiva

 
At March 02, 2006 10:07 PM, Blogger அன்பு said...

அருமையான பதிவு. எப்படி உங்களுக்கு நகைச்சுவையும் - ஆழ்ந்த சிந்தனையும் ஒரே நேரத்தில் வெளிப்படுகிறது என்ற பிரமிப்பு ஏற்படுத்துகிறது. பகிர்வுக்கு நன்றி.

நமக்குத் தெரியாத எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு நமக்குத் தெரிந்த கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நிகழ்காலத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். இது கடந்த
காலத்தில் வாழ்வதற்குச் சமம். நிகழ்காலம் மட்டுமே நிஜம். நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் எதிர்காலத்தின் மகிழ்ச்சிக்கு வித்திட்டதாக அர்த்தம். மாறாக, நிச்சயமற்ற எதிர்கால மகிழ்ச்சிக்காக நிஜமான நிகழ்கால மகிழ்ச்சியை ஒத்தி வைப்பதில் அர்த்தமில்லை


இதை ஒரே முயற்சியில் எழுதினீர்களா என்று தெரியவில்லை - நான் ஓரிருமுறை வாசித்துதான் உள்வாங்கினேன். உங்களுக்கு எழுத்து, சிந்தனையும் நன்கு வசப்படுகிறது. நிலாச்சாரலை, 250 வாரம் கொண்டு சென்றதன் ரகசியம் இது! பாராட்டுக்கள்.

 
At March 03, 2006 3:39 AM, Blogger நிலா said...

//நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும். வார்த்தைகள் செயல் வடிவம் பெறும் போது..வாழ்த்துக்கள்.//

நன்றி, ஜான் போஸ்கோ

 
At March 03, 2006 1:58 PM, Blogger நிலா said...

// உங்களுக்கு எழுத்து, சிந்தனையும் நன்கு வசப்படுகிறது. நிலாச்சாரலை, 250 வாரம் கொண்டு சென்றதன் ரகசியம் இது! பாராட்டுக்கள்.//

அன்பு,

மிக்க நன்றி. உங்கள் வார்த்தைகள் மனதை நிறைத்தாலும், தலை வணங்கி ஏற்று தலையை நிறைக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.

 
At March 03, 2006 2:00 PM, Blogger நிலா said...

//நல்ல முயற்சி. கொஞ்சி பேசும் இலங்கை தமிழ் கேட்க பரவசமாயிருக்கிறது//

நன்றி நந்தன்

 

Post a Comment

<< Home