*** சந்தோஷம் பொங்குதே - 75வது பதிவு ***
'உங்களிடம் அபரிமிதமான பணம் இருக்கிறதென்றும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் வைத்துக் கொண்டால் என்ன செய்ய விரும்புவீர்கள்?' என்று நான் கேட்கிற போது பலர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பின்னுட்டத்தில் சொல்லுங்கள்)
வேலை செய்வதும் பணம் சம்பாதிப்பதுமே வாழ்க்கையின் குறிக்கோள் என்கிற ஒரு வரையறை சின்ன வயதிலேயே நமக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது. நமக்குத் தெரியாத எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு நமக்குத் தெரிந்த கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நிகழ்காலத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். இது கடந்த
காலத்தில் வாழ்வதற்குச் சமம். நிகழ்காலம் மட்டுமே நிஜம். நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் எதிர்காலத்தின் மகிழ்ச்சிக்கு வித்திட்டதாக அர்த்தம். மாறாக, நிச்சயமற்ற எதிர்கால மகிழ்ச்சிக்காக நிஜமான நிகழ்கால மகிழ்ச்சியை ஒத்தி வைப்பதில் அர்த்தமில்லை
நமது சமூகத்தைப் பொறுத்தவரை நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையில் நூறில் ஒரு பங்கு கூட நாம் நமக்குக் கொடுத்துக் கொள்வதில்லை. இதில் தமிழ்ப்பெண்கள் தியாகச் செம்மல்கள் - திருமணமாகிவிட்டாலே தன் வாழ்க்கை முடிந்துவிட்டதான ஒரு பிரம்மையில் கணவர், குடும்பம் என்று அடுத்தவருக்காக
வாழ்வது மட்டுமே பெரும்பாலான பெண்களுக்கு வாழ்க்கையாகிப் போகிறது. இப்படி நமக்கென்று ஒரு முக்கியத்துவமில்லாமல் வாழ்வதில் நம் சுயம் நமக்கே மறந்து போகிறது. சுயத்தைத் தொலைத்துவிட்டு வாழ்வில் மகிழ்வோடு இருக்கமுடியுமா? ஒன்று விரக்தி வந்துவிடும் இல்லையென்றால் மரத்துப் போய்விடும்.
விரக்தியான 5 மனிதர்களோடு ஒரு அறையில் உங்களை ஒரு நாள் அடைத்துவைத்தால் எப்படி இருக்கும்? அடுத்த நாள் விரக்தியின் திரு உருவமாக வெளிவருவீர்கள்தானே? அப்படியென்றால் விரக்தியும் இயந்திரத்தனமும் நிறைந்த மனிதர்கள் வாழும் உலகில் எப்படி நம்பிக்கை நிலவும்? அன்பு பெருகும்? சமாதானம் திளைக்கும்?
மகிழ்ச்சிக்கு பெரும்பாலும் நிபந்தனை வைத்திருக்கிறோம் - வீடு வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும், அயல்நாடு போனால் மகிழ்ச்சி வரும், அங்கீகாரம் கிடைக்கும் வரை மகிழ்ச்சி கிடையாது - இது போல நிறைய நிபந்தனைகள் ஒவ்வொருவரிடமும். இப்படி மகிழ்ச்சியை எதனுடனும் இணைத்துப் பார்க்காமல் சந்தோஷமாக இருக்க முயலலாமே - Whatever happens, Enjoy என்பார் சுவாமி சுகபோதானந்தா. முயன்று பார்க்கலாமே!
மகிழ்ச்சியான மனிதர்களால்தான் மகிழ்ச்சியான சமூகம் அமையும். எனவே நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வது நமக்கு மட்டுமல்ல, உலக நன்மைக்கும் அவசியம். அதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் தொலைக்காட்சியில் அமிழிந்துவிடவேண்டும் என்பதோ அல்லது உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் முழு நேரமும் ஈடுபடவேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.
அவ்வப்போது நமக்கென்று நேரம் ஒதுக்குதல் அவசியம். அப்படி ஒதுக்குகிற நேரத்தில் நமக்கு மகிழ்ச்சி தருகிற அல்லது நிறைவு தருகிற செயல்களைச்
செய்யவேண்டும். அப்படி நேரம் ஒதுக்க முடியாதவர்கள், பணிக்கிடையில் கிடைக்கும் சிறு சிறு இடைவேளைகளில் பிடித்தமான சிறு சிறு செயல்களைச் செய்யலாம் - உதாரணமாக பிடித்த பாடலை முணுமுணுக்கலாம், இரண்டு வரிக் கவிதை எழுதலாம், ஒரு கார்ட்டூன் போடலாம், ஜன்னல் வழியே வெறுமனே வேடிக்கை பார்க்கலாம்
அல்லது பக்கத்து சீட்டுப் பெண்ணையோ பையனையோ பார்த்துப் புன்னகைக்கலாம் :-). ஆனால் இப்படிப் பிடித்த எதைச் செய்தாலும் அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியம். பாடலை ஹம் செய்யும்போது சம்பள உயர்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் அதில் பயனேதுமில்லை. எதையும் முழுமையாக ஒன்றிச் செய்வதே ஒருவித தியானம்தான்.
இப்படி சிறுகச் சிறுக நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளும்போது மகிழ்ச்சி பல்கிப்பெருகும் வாய்ப்பு அதிகமாகிறது. மகிழ்ச்சி நமது இயல்பாக மாறிப்போகிறது.
தினமும், அன்று நமக்குக் கிடைத்த நன்மைகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்க்கையின் பாஸிடிவான பக்கத்தைப் பார்க்கிற பக்குவம் படிப்படியாக வளரும். முயன்று பாருங்கள். முதலில் 5 நன்மைகளை எழுதுவதற்குக் கடினமாக இருக்கும். மெதுவாக நாள் முழுவதும் நடக்கிற நன்மைகளை மனதில் குறித்துக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். நாளுக்கு நாள் பட்டியல் வளரும் - கூடவே உற்சாகமும்.
இத்தொற்று நோயை விரைவாய்ப் பரப்பி சந்தோஷம் பொங்கும் புது உலகம் படைக்கும் ஆற்றல் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அதை உணர்ந்தால் போதும்!
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை அறிந்து கொள்ள சில கேள்விகள் இங்கே: (கேள்விகளின் மூலம் நினைவில்லை. நிலாச்சாரலுக்காக அன்புடன் மொழி பெயர்த்துத் தந்தவர்: வி.ராமசாமி)
எந்த விஷயம் பற்றிப், படிப்பதற்குப் மிகப்பிடிக்கும்?
ஊடகங்களில் எந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும்?
எவ்வகையான திரைப்படங்கள் பிடித்தமானவை?
தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் யாவை?
மற்றவர்களுக்காக, நீங்களே முன்வந்து செய்யும் காரியங்கள் யாவை?
நண்பர்களுடன் எவ்விஷயங்கள் குறித்து அலச விரும்புகிறீர்கள்?
எவ்விஷயங்கள் குறித்துப் பகற்கனவு காண்கிறீர்கள்?
தங்களுக்குப் பிடித்த வேலைகள் யாவை?
பள்ளிப்படிப்பின் போது, பிடித்த பாடங்கள் யாவை?
வேறு விஷயங்கள் என்னென்ன பிடிக்கும்?
பொழுது போக்கப் படங்கள் வரைவதுண்டா அல்லது வெறுமனே கிறுக்கவாவது செய்வீர்களா? எதைப்பற்றி?
உலகை ஆளும் வாய்ப்புக் கிடைத்தால், என்னென்ன மாற்றங்கள் செய்வீர்கள்?
லாட்டரியில் கோடி கிடைத்தால், அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?
தங்களுக்குப் பிடித்தமானவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்கள்?
தாங்கள் இறந்தபின், தங்களை நினைவுபடுத்துபவை எவையாயிருக்க விரும்புகிறீர்கள்?
தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருட்கள் யாவை?
தங்கள் அரசியல் கருத்துக்களை எப்படி விவரிப்பீர்கள்?
தாங்கள் புகழும் நபர் யார்; ஏன் அவரைப் புகழ்கிறீர்கள்?
தங்கள் முன்னேற்றத்திற்குக் காரணமான வேலைகள் யாவை?
தாங்கள் இன்னும் செய்யாத, சிறப்பாகச் செய்யக்கூடிய, வேலைகள் யாவை?
தங்கள் நீண்டகால அபிலாஷைகள் யாவை?
தங்கள் பதில்களைச் சோதியுங்கள். தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒன்றிற்கும் மேற்பட்ட பரிமாணத்தில், தனிப்பட்ட ஒரு நம்பிக்கையையோ, நடத்தையையோ அடையாளம் காணமுடிகிறதா? எந்த ஒரு பதிலும், திரும்பத் திரும்ப வந்து, தங்களை உருவகப்படுத்துகிறதா?
இந்தப் பதில்களைக்கொண்டு, கீழ்க்காணும் தொடர்களைப் பூர்த்தி செய்தால் உங்களைக் குறித்த ஒரு உருவம் கிடைக்கும்
எனக்கு மிகப் பிடித்தது ...
நான் மிக நம்புவது ...
நான் மிக மதிப்பது ...
என்னால் மிக நன்றாகச் செய்யக்கூடியது ...
வழமான வாழ்வுக்கு வேண்டியதாய், நான் நம்புவது ...
29 Comments:
//நமக்குத் தெரியாத எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு நமக்குத் தெரிந்த கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நிகழ்காலத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். //
மிகச்சரியாகச் சொன்னீர்கள் நிலா.
வெகுநாட்களாகவே எனக்குள் கீழ்கண்ட கேள்வி எழும்...
நம்மில் ஒவ்வொரு தலைமுறையும் தன் அடுத்த தலைமுறையை வளமாக்கவும், அதற்கு சேர்த்து வைக்கவுமே செலவிடப்படுகின்றன. இது ஒரு முடிவே இல்லாமல் தொடர்கிறது எனில், எந்த தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கும்?
எப்படி இருக்கிறீர்கள் என யாரையேனும் கேட்டால் "ம்.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.." னு அனுபவிச்சு சொல்றவங்க எத்தனபேர்? அனேகமா "ஏதோ இருக்கேன்.." னுதான் சொல்றாங்க.
"take life as it comes" னு வாழ்க்கையை எடுத்துகிடா எப்பவும் சந்தோஷமா இருக்கும். எப்பவும் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கறது கூட தப்பு. என்னைப்பொருத்தவரை என் வாழ்வில் நிகழ்கிற சோகங்களைக்கூட மனமாற அனுபவிக்கிறேன். and it feels good!
>>> என்ன செய்வீர்கள்
ஒரு ஹார்லி டேவிஸன் அல்லது ஒரு ராயல் என்பீல்ட் வாங்கிக்கொள்வேன்.., ஊர்கள் பல சுற்றுவேன்.... பணம் பற்றி கவலைப்படாமல் உலகம் சுற்றும் போதும் என் பைக்கை எடுதுச்செல்வேன்.... இதுதாங்க உடனே தோணுச்சு :-D
Congrajulations on your 75th Post. :)
அதான் சொல்லிட்டோமே. விடைகள் அறிவித்த பின்தான் மற்ற பதிவுகளைப் படிப்போம் என்று. ;)
வாழ்த்துக்கள் நிலா.
இது சம்பந்தமாக நான் செய்த மீள்பதிவைப் பார்க்க" http://dondu.blogspot.com/2006/03/blog-post_01.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இயந்திர மயமாகிவிட்ட உலகில் இது ஓர் முக்கியமான பதிவு. இதே கருத்தை நானும் யாஹூ சிக்னேசர் மூலம் பரப்பி வருகிறேன். அதில் என் வாழ்வின் குறிக்கோளாக நான் குறிப்பிடுவது,
My Top 5 priorities
1. INDEPENDANCE (Freedom)
2. HEALTH
3. Living-for-THIS DAY
4. CHARITY
5. SERVICE
சரி, இப்பொழுது உங்கள் கேள்விக்கான பதில், எனக்கு பிடித்த புத்தகங்களை சோர்வடையும் வரை படிப்பேன். பின்பு இசையைக் கேட்டு ரசித்தலும் இசை பயிற்சி பெறுதலும். ஊர் சுற்றுதல், நமக்கு தெரிந்ததை பிறருக்கு கற்றுக் கொடுத்தல், கருத்து பரிமாற்றம் மற்ற்ம் வெற்று அரட்டை...
நிலா,
நல்ல பதிவு. கிட்டத்தட்ட இதேபோல் நானும் அடிக்கடி நினைத்துப்பார்த்ததுண்டு.
உங்கள் கேள்விக்குப் பதில். இப்போது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதையேதான் தொடருவேன். இப்போது நான் செய்துகொண்டிருப்பதே மிக மகிழ்வாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது. அபரிமிதமான பணமும், நேரமும் கிடைத்தாலும் இதையேதான் தொடர வெண்டிவரும்.
நல்ல சிந்தனை நிலா! ஆசை தானே எல்லாத்துக்கும் காரணம். 1000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் 10000 ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறான். அதே 10000 வந்ததும் ஒரு லட்சம் இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. சில பேர் வாழ்க்கை இப்படி பணம் சேர்ப்பதிலேயே போய் விடுகிறது. போன வாரம் என் நண்பனிடம் (என்னுடைய பதிவில் வரும் என் நண்பன் செந்தில் :-) ஜூஸ் கடை வைத்திருக்கிறான்) சென்னையில் வீடு வாங்குவது பற்றி
கேட்ட போது 'லே! கிறுக்குப்பயலே! அப்படியே அந்த காச பேங்கில போட்டுட்டு வட்டிபணத்துல நம்ம கிராமத்துல, கழுத்துல ஒரு துண்ட போட்டுக்கிட்டு வெட்டியா பஞ்சாயத்து பண்ணிகிட்டு சுத்தலாம்ல' அப்படிங்கறான். எனக்கும் ஒரு ஆசை உண்டு. ஊர்ல போய் சீக்கிரம் செட்டில் ஆகிடனும் என்று. நீங்க கேட்ட //** 'உங்களிடம் அபரிமிதமான பணம் இருக்கிறதென்றும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் வைத்துக் கொண்டால் என்ன செய்ய விரும்புவீர்கள் **// கேள்விக்கு பதில் இது தான் :-)).
இன்னும் பதிவை படிக்கவில்லை. 75வது பதிவுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் என்று வந்தேன். வாழ்த்துகள். பதிவை பின்னர் படிக்கிறேன். :-)
தேவ்
வாழ்த்துக்கு நன்றி
அன்று இளவரசன் சித்தார்த்தனுக்கு தோண்றிய கேள்வி,
காலங்காலமாக ரிஷிகளும், சித்தர்களும் பதில் தேடியலைந்த கேள்வி,
ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வடிவத்தில் அதே பொருளைத்தேடிய கேள்விகள்,
இதோ இப்போது வலைப்பதிவு உலகத்திலும் கேட்கப்படுகிறது!
எல்லாம் கிடைத்து விட்டால் என்ன செய்வாய்?
நல்லாதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு!
------------
//நம்மில் ஒவ்வொரு தலைமுறையும் தன் அடுத்த தலைமுறையை வளமாக்கவும், அதற்கு சேர்த்து வைக்கவுமே செலவிடப்படுகின்றன. இது ஒரு முடிவே இல்லாமல் தொடர்கிறது எனில், எந்த தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கும்?//
//என்னைப்பொருத்தவரை என் வாழ்வில் நிகழ்கிற சோகங்களைக்கூட மனமாற அனுபவிக்கிறேன். and it feels good! //
ஆகா... குருவே, எப்படீங்க?
உங்களைப் பார்த்தால் பொறாமையா இருக்கு :-)
//ஒரு ஹார்லி டேவிஸன் அல்லது ஒரு ராயல் என்பீல்ட் வாங்கிக்கொள்வேன்.., ஊர்கள் பல சுற்றுவேன்.... பணம் பற்றி கவலைப்படாமல் உலகம் சுற்றும் போதும் என் பைக்கை எடுதுச்செல்வேன்.... இதுதாங்க உடனே தோணுச்சு :-D
//யாத்ரீகன், இந்தத் தெள்வுதான் தேவை.
உஙக்ள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்
டோண்டு அவர்களே,
நேரமின்மை காரணமாக இப்போதுதான் உங்கள் பதிவைப் படிக்க முடிந்தது. நல்ல பதிவு.
'வாழ்க்கை அற்புதம்' என்பதைப் படிக்கும்போதே எனக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அதனால்தான் 'மகிழ்ச்சியான மனிதர்கள் மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க முடியும்' என்கிறார்கள்
// இதே கருத்தை நானும் யாஹூ சிக்னேசர் மூலம் பரப்பி வருகிறேன். அதில் என் வாழ்வின் குறிக்கோளாக நான் குறிப்பிடுவது,
My Top 5 priorities
1. INDEPENDANCE (Freedom)
2. HEALTH
3. Living-for-THIS DAY
4. CHARITY
5. SERVICE
//
சாணக்யா
மிக நல்ல நோக்கம்.
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கு நன்றி
//மகிழ்ச்சியாக இருக்கிறது படிப்பதற்கு.//
சந்தோஷம், பாரதி
//இப்போது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதையேதான் தொடருவேன். இப்போது நான் செய்துகொண்டிருப்பதே மிக மகிழ்வாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது. அபரிமிதமான பணமும், நேரமும் கிடைத்தாலும் இதையேதான் தொடர வெண்டிவரும்.
//
முத்து,
மிக நன்று. பலருக்கு இது அமைவதில்லை.
வாழ்த்துக்கள்
//'லே! கிறுக்குப்பயலே! அப்படியே அந்த காச பேங்கில போட்டுட்டு வட்டிபணத்துல நம்ம கிராமத்துல, கழுத்துல ஒரு துண்ட போட்டுக்கிட்டு வெட்டியா பஞ்சாயத்து பண்ணிகிட்டு சுத்தலாம்ல' அப்படிங்கறான். எனக்கும் ஒரு ஆசை உண்டு. ஊர்ல போய் சீக்கிரம் செட்டில் ஆகிடனும் என்று. நீங்க கேட்ட //** 'உங்களிடம் அபரிமிதமான பணம் இருக்கிறதென்றும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் வைத்துக் கொண்டால் என்ன செய்ய விரும்புவீர்கள் **// கேள்விக்கு பதில் இது தான் :-)).
//
சிவா,
எனக்கும் இந்தக் கேள்வி பலகாலமாக உண்டு - நாமெல்லாம் நாடுவிட்டு நாடு வந்ததால் மட்டும் சந்தோஷம் பொங்கிவிட்டதா என்று. உங்கள் நண்பர் சொல்லியபடி கிராமத்தில் கழுத்தில் துண்டைப் போட்டுக்கொண்டு பஞ்சாயத்துப் பேசிக் கொண்டு திரிவதிலிருக்கும் சுகம் இங்கு கிடைக்குமா தெரியவில்லை. தேடல்... தேடல்... தேடல்... பிரச்சனை என்னவென்றால் என்னத்தைத் தேடுகிறோம் என்று கூட சில சமயம் தெரியாமல் போய்விடுவதுதான்
//தேடல்... தேடல்... தேடல்... பிரச்சனை என்னவென்றால் என்னத்தைத் தேடுகிறோம் என்று கூட சில சமயம் தெரியாமல் போய்விடுவதுதான்//
ரொம்ப உண்மையான வார்த்தை. நானும் இப்பொழுது இதை அதிகம் உணர்கிறேன். சில சமயங்களில் மிகவும் சலிப்பாக இருக்கிறது. தேடி, தேடி இருப்பதை அனுபவிக்காமல் இருக்கிறோம். இதுவும் உண்மை.
//எல்லாம் கிடைத்து விட்டால் என்ன செய்வாய்?
நல்லாதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு!
//
நன்றி, ஞான்ஸ்
//ரொம்ப உண்மையான வார்த்தை. நானும் இப்பொழுது இதை அதிகம் உணர்கிறேன். சில சமயங்களில் மிகவும் சலிப்பாக இருக்கிறது. தேடி, தேடி இருப்பதை அனுபவிக்காமல் இருக்கிறோம். இதுவும் உண்மை.//
திடீர்னு தேடல் கீடல்னல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீரு...இது ஒரு வேளை போலி கொத்ஸோ?
//திடீர்னு தேடல் கீடல்னல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீரு...இது ஒரு வேளை போலி கொத்ஸோ?//
புதுசா புதிர் ஒண்ணும் தோணலை. வாழ்க்கையே புதிர்தானேன்னு ஒரு பதிவு போட பிராக்ட்டீஸ். :)
Congrads Nila for Diamond blog I mean to say 75th blog. keep it up. uyarntha sinthanaikalai veliyittu neengalum uyarnthu matrvarkalaiyum sinthanai seyyumpadi irukkattum blogs. To-morrow is "WOMEN'S DAY". Best wishes to you. thangam
Dear Thangam
Thanks for your wishes and appreciations
//புதுசா புதிர் ஒண்ணும் தோணலை. வாழ்க்கையே புதிர்தானேன்னு ஒரு பதிவு போட பிராக்ட்டீஸ். :)//
நீரே ஒரு புதிர்தானய்யா :-)))
இந்த புதிரை புரிஞ்சிக்கிட்ட எங்க வீட்டம்மாவுக்கு எதனா பரிசு உண்டா? :)
கொத்ஸ்,
போன பின்னுட்டத்தில தத்துவம்... இந்த பின்னுட்டத்தில ரொமான்ஸா? நவரச நாயகனா இருப்பீர் போல :-))
இந்த மாதிரி எல்லாம் வம்புக்கு இழுத்துட்டு நம்ம பதிவை கண்டுக்காம போனீங்கனா அடுத்தது கோவந்தான்.
யோவ் கொத்ஸ்,
கஷ்டப்பட்டு தங்கிலீஷ்லயாவது பின்னூட்டம் போட்டு உங்க பதிவில எண்ணிக்கைய ஏத்தறது தெரியலையா?
ஆமா, நம்ம பேட்டியெல்லாம் பாக்கறதில்லையா? கைப்பு ஆரம்பிச்சு வச்ச பில்ட் அப் வேலையத் தொடருவீர்னு பார்த்தா... கொத்தனார் பில்ட் பண்றத தவிர எல்லாம் வேலையும் செய்யறாரப்பா :-))
Post a Comment
<< Home