பொயிட்டு வாறேன்... நல்லா இருங்க சாமி...
மேடையிலிருந்து இறங்கும் நேரம் வந்தாகிவிட்டது. முள்கிரீடமாக இருக்குமென்றெண்ணியிருந்ததை மலர்க் கிரீடமாக ஆக்கித் தந்த பெருமை உங்கள்
ஒவ்வொருவருக்குமுண்டு. ஒரு வாரம் ஓடியது தெரியாமல் காலம் கரைந்துபோனது. ஒரு வாரத்தில் எவ்வளவோ மாற்றங்கள்! எத்தனையோ பரிமாற்றங்கள்!
நட்சத்திர வாரத்தின் வெற்றி எத்தனை பதிவு போட்டிருக்கிறோம் என்பதிலோ அல்லது பின்னூட்டப் புள்ளி விபரங்களிலோ இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. யார் யாரை விஞ்சி நின்றார்கள் என்று கணக்குப் போடுவதற்கு இது வியாபாரமில்லை. அதனால்தான் நான் என் பதிவுகளின் எண்ணிக்கையையோ அல்லது பின்னூட்ட விபரங்களையோ இங்கு தரவில்லை.
வெற்றி தோல்வி என்றெல்லாம் கவலைப் படாமல் எனக்கும் உங்களுக்கும் இந்த வாரம் எவ்வளவு நிறைவாக இருந்தது என்று பார்ப்பதில்தான் பயன் இருக்கிறது.
இந்த வாரத்தை ஒரு பல்சுவை வாரமாக நான் கொண்டு சென்ற திருப்தி எனக்கிருக்கிறது. விளையாட்டு, ஆன்மீகம், குறும்படம், சிறுகதை, சமூக சிந்தனை, வாழ்க்கைப் பதிவு, நட்சத்திரப் பேட்டி (!!!) என்று ஒரு வெரைடி கொடுத்தது எனக்கு நிறைவாகத்தானிருக்கிறது.
உங்களில் சிலர் என்ன கூறி இருக்கிறீர்கள் என்பதை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
//உங்கள் நட்சத்திர வார சிறப்பு போட்டிகள் மூலம் சோம்பிக் கிடந்த தமிழ்மணத்தை புத்துயிர் பெறச் செய்துள்ளீர்கள். - மணியன்//
//சாதாரணமாக நட்சத்திரங்கள் கவனிக்கப் படுவார்கள். இதில் நீங்கள் நட்சத்திரமாகி போட்டியில் கலந்து கொண்ட எங்களையும் எல்லாரும் கவனிக்க
வைத்துவிட்டீர்கள். - குமரன்//
//அடடா.. இந்த கேம் ஷோ மூலமா என்னோட பேரு பிரபலமாயிருச்சி போலருக்கு..- டி.பி.ஆர்.ஜோசப்//
//மிகப்பெரிய ஞானிகளின் அருள் வாக்குகளிலிருந்தும் வறட்சியான போதனைகளிலிருந்தும் மனிதனுக்கு கிடைக்கும் நம்பிக்கையை விட இது போன்ற ஜீவனுள்ள கதைகள் மனதுக்குள் விதைக்கும் நம்பிக்கைகள் அழுத்தமானவை. படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்கி சிறப்படைந்தது. - பாரதி//
//நல்ல கருத்து, எளிமையான அதேநேரம் அருமையான காட்சியாக்கம். டைட்டில், சப்-டைட்டில், தேவையான இசை, ஒளிப்பதிவு என்று ஒரு நல்லதொரு முழுக் குறும்படமாகவே வந்துள்ளது. ....உங்கள் பன்முக ஆர்வமும், திறமையும் ஆச்சரியமூட்டுகிறது. தொடருங்கள் - அன்பு//
//இயல்பான, அடுத்தவர் மனம் புண்படாத வகையில் இடப்பட்ட பாங்கு என்னை மிகவும் கவர்கிறது. - ஞானவெட்டியான்//
//உங்களுக்கு எழுத்து, சிந்தனையும் நன்கு வசப்படுகிறது. நிலாச்சாரலை, 250 வாரம் கொண்டு சென்றதன் ரகசியம் இது! பாராட்டுக்கள். -அன்பு//
//அன்று இளவரசன் சித்தார்த்தனுக்கு தோண்றிய கேள்வி, காலங்காலமாக ரிஷிகளும், சித்தர்களும் பதில் தேடியலைந்த கேள்வி,ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வடிவத்தில் அதே பொருளைத்தேடிய கேள்விகள்,இதோ இப்போது வலைப்பதிவு உலகத்திலும் கேட்கப்படுகிறது!
எல்லாம் கிடைத்து விட்டால் என்ன செய்வாய்?நல்லாதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு! - Agent 8860336 ஞான்ஸ்//
//எண்ணிக்கையில் வளரும் பின்னூட்டங்களை விட எங்கோ ஓர் மூலையில் ஏதோ இருவரை சிந்திக்க வைக்கிறதே ! அதுதான் உங்கள் எழுத்தின் உண்மையான வெற்றி! நடந்து வந்த பாதையை தடம் தெரியாமல் அழிக்கும் உலகில் நன்றியோடு நடை பயின்ற நாற்றங்காலை உளமார தளிர் கரங்களால் தடவி பார்ப்பதில்தான் எத்துனை சுகங்கள்! - ஒரு அன்பரின் தனிமடல்//
இந்தப் பாராட்டுக்கள் மனதை நிறைத்தாலும் இவற்றைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வேனே தவிர தலையில் ஏறிக்கொள்ள அனுமதிக்க மாட்டேன்.
இப்படிப்பட்ட கருத்துக்கள் உங்கள் அனைவருக்குமே இருக்க வேண்டியதில்லை. எத்தகைய விமரிசனங்களாக இருந்தாலும், நான் முதல் பதிவில் சொன்னது போல் - 'தட்டினாலும் குட்டினாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்' - இன்னும் என்னைத் தட்டவோ குட்டவோ உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
டம்மிப் பதிவென்று போட்டும் கூட என்னை நட்சத்திரமாய் பாவித்து சிந்தனையைத் தூண்டும் பேட்டிக் கேள்விகள் கேட்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அடுத்த வாரம் ஒவ்வொரு கேள்விக்காய் நேரம் கிடைக்கையில் பதில் சொல்கிறேன்.
ஒரு சில நண்பர்கள் எனது ஒரு பதிவுக்கு 100க்கு மேல் பின்னூட்டம் வந்ததை சாதனையாகச் சொன்னார்கள். எனக்கு அதில் துளிகூட பெருமையில்லை. அதைவிட எனது 'சந்தோஷம் பொங்குதே' என்ற பதிவுக்கு வந்த பதினைந்தோ இருபதோ பின்னூட்டங்கள் முத்தானவை என்பதில்தான் எனக்குப் பெருமை.
விளையாட்டில் பரபரவென சுற்றித் திரிந்த நண்பர்களின் உற்சாகம், பூப்பறிக்க வருகிறோம் கேள்வி ஒன்றில் நான் செய்த பிழையை (அது விளையாட்டை எந்த விதத்திலும் பாதிக்காவிட்டாலும்) தனி மெயிலில் சுட்டிக் காட்டிய போட்டியாளரின் நாசூக்கு, சக படைப்பாளி என்ற பொறாமை இல்லாமல் உள்ளத்திலிருந்து பாராட்டிய எத்தனையோ அன்பர்களின் பெருந்தன்மை, தனி மெயிலிலும் சாட்டிலும் விசேஷமாய்ப் பரிமாறிக் கொண்ட அன்பு என்று இந்த நட்சத்திர வாரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது... உள்ளம் நிறைந்திருக்கிறது. பெயர் சொல்லி உங்கள் ஒவ்வொருவரையும் விளித்து நன்றி சொல்ல ஆசைதான். நேரமில்லாமல் போனதற்காய் வருந்துகிறேன். மொத்தமாய் அனைவருக்கும் ஆழ்மனதின் அடியிலிருந்து கோடானு கோடி நன்றிகள்!
(கியர் சேஞ்ச் இங்கே)
'எப்பேர்ப்பட்ட புருஷன் உங்களுக்கு! நீங்க குடுத்துவச்சவங்க', 'எப்பிடி எப்பவும் சந்தோஷமா இருக்கீங்க?' - அப்பிடீன்னெல்லாம் தனி மெயில் வருது. நான் எழுதுறத வச்சு எங்க வீட்டுக்காரர் புனிதர்னோ, எங்களுக்கு வாழ்க்கையில குறையே இல்லைன்னோ எடுத்துக்கக் கூடாது. நாங்களும் அடிச்சுக்கிட்டிருக்கோம். எங்களுக்கும் குறை இருக்கு. ஆனா எங்க தப்புகள்லருந்து நெறையவே கத்துக்கிட்டிருக்கோம். இன்னும் கத்துக்கிறோம். வாழ்க்கை கடுமையான ஆசிரியரப்பா. பரீச்சைய நடத்திட்டுத்தான் பாடம் சொல்லிக் குடுக்கும். படிக்க நெறய இருக்கில்ல, நம்மளே எல்லாத் தப்பும் பண்ணிக் கத்துக்கிட எங்க நேரம்? அதனால அடுத்தவங்க பண்ற தப்புலருந்தும் நம்ம பாடம் கத்துக்கிடணும் (நம்ம சரக்கில்ல. எங்கயோ படிச்சது).
பொதுவா நெறைய பேரு என்கிட்ட கேட்ட கேள்வி 'எப்படி உங்களுக்கு இவ்வளவு டைம் கிடைக்குது?' - வாழ்க்கையில எல்லார்க்கும் எல்லாம் கிடைக்காதுல்ல - எங்களுக்குப் பிறந்த ஒரே குழந்தை இறந்து போயிட்டான். ரொம்ப வேதனைதான். சோகம்தான். ஆனா கதாநாயகர் அடிக்கடி எங்கிட்ட சொல்வாரு 'குறைகளை வச்சு நிறைகளைச் செய்'ன்னு. அதத்தான் நான் இப்போ செய்ய முயற்சி செய்றேன். குழந்தை இல்லாதது குறைதான். ஆனா அந்தக் குறையினால கிடைக்கிற நேரத்தை இப்படி மனசுக்குப் பிடிச்ச ஏதாவது காரியத்தில செலவழிக்கிறேன். அவ்வளவுதான். நானொண்ணும் பெரிசா செஞ்சிடலை.
இதெல்லாம் நான் சொல்றதுக்குக் காரணம் உங்ககிட்ட வீசுற அனுதாப அலைல அடுத்த தேர்தல்ல ஓட்டு வாங்கணும்கறதுக்காக இல்லீங்க...:-)) வாழ்க்கைன்னா இப்படித்தான் - எல்லாருக்கும் எல்லாம் கிடைச்சிறாதுன்னு நம்ம அனுபவத்த சொல்லத்தான். மனசிருந்தா எல்லாருக்கும் நம்ம குறைகளை வச்சு நிறைகள் செய்ய வாய்ப்பிருக்குன்னு பகிர்ந்துக்கணும்னுதான்.
(அடுத்த கியர்)
நச்சத்திர வாரத்துக்குப் பொறகு சன்னப் பேரு காங்காமப் போயிர்றாகன்னு சனமெல்லாம் பேசிக்கிடத கேட்ருக்கேன். நானும் அப்பிடித்தேன் போலாம்னு ரோசனைல இருக்கேன். வேற ஒண்ணுமில்லைய்யா. நம்ம நெலாச்சாரல்ல எல்லாம் போட்டது போட்டபடி கெடக்கு. தெனைக்கும் புதுசா புதுசா எதுனாச்சும் கண்டுபிடிக்குறாய்ங்க. நம்ம இன்னும் ரெண்டு வருசம் பின்னால கெடக்கோம்னு நெஞ்சு அடிச்சிக்கிடுது. எந்திரிச்சு வெரசா ஓடணும்ல.
கொஞ்ச காலமா நம்ம கூட்டாளிக வேற கதை பொஸ்தவம் போடுன்னு சொல்லிக்கிட்டிருக்காக. நாந்தேன் நம்ம கதைய என்னத்த பொஸ்தவமா போடுததுன்னு கம்முன்னு கெடந்தேன். ஆனா இப்ப ரெண்டு நாளாத்தேன் நீங்கலாம் சொல்ததெ படிச்ச பொறகு ரோசனையா கெடக்கு... பாப்பம்... அப்படிப் பொஸ்தவம் போடுததார்ந்தா அத வேற பாக்கணுமுல்ல? பெரிய கத ஒண்ணு பாதி முடிச்சாக்ல கெடக்கு... அதயும் செத்த பாக்கணும்...
நெலாச்சாரல்லர்ந்து இ-பொஸ்தகம் போடுத வேலையும் கெடக்கு... அதேன் கொஞ்ச நா ஆளு காணாமப் போனாலும் பொயிருவேன்.
ஆனா சொல்ல முடியாதுய்யா... என்னமோ ஆடுன காலும் பாடுன வாயும்னு சொல்லுவாகளே அது போல ஆயிப்போனாலும் பொயிரும். எதுக்கும் இருக்கட்டும்னுதேன் சொல்லி வக்கேன்.
என்னமோய்யா, செவனேன்னு கெடந்த என்னிய மேடைல ஏத்தி உட்டு வேடிக்க பாத்துட்டீக. மேலுக்கு நின்னு பாத்த பொறவுதான்ய்யா இங்கிட்ருக்க சனம் எம்புட்டு நல்லவுகன்னு தெரியுது.
எறங்குத நேரம் வந்திருச்சுன்னு வெசனமொண்ணும் இல்ல சாமி. ஆனா இம்புட்டு பாசத்தையும் சொமந்துகிட்டு கீழ எறங்கும்போது என்னமோ கண்ண மறைக்காப்ல இருக்குய்யா...
பொயிட்டு வாறேன்... நல்லா இருங்க சாமி...
32 Comments:
Nila
I got to read some of your blogs this week. I enjoyed reading them. I used to read Nilacharal regularly. I like it when positive energy and strength spreads around encouraging few others.
அன்பு நிலா,
நற்சேத்திரப்(நட்சத்திறப்) பதவியிலிருந்து இறங்கினாலும், எங்களின் மனதில் மிகுந்த இடத்தை நிரப்பி அதில் அமர்ந்திருப்பீர்கள்.
வாழ்க! வளர்க!!
நிலா,
அருமையான வாரம். ஒவ்வொரு பதிவையும் மிகவும் ரசித்தேன்( எண்ட்ரிதான் கொஞ்சம் பிந்திப்போச்சு!)
அதிலூம் இந்த விடைபெறும் பதிவு மனசை என்னவோ செஞ்சுருச்சு.
மனம் போலதான் வாழ்க்கை அமையும். அமைஞ்சிருக்கு. வாழ்த்துக்கள்.
நல்லா இருங்க நிலா.
என்றும் அன்புடன்,
துளசி
இங்க போட முடியாமத்தேன் ஒரு தனிப்பதிவு. வந்து பாருங்கக்கோவ்.
http://elavasam.blogspot.com/2006/03/blog-post.html
அன்பின் நிலாராஜ்,
மிகவும் அருமையான நட்சத்திர வாரம்.நிலாச்சாரலுக்கு எழுதுவது போக இங்கும் அவ்வப்போது எழுதுங்கள்.தமிழ்மணத்திலும் உங்கள் எழுத்துகளுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்
அன்புடன்
செல்வன்
Then ThuLi
thanks for the encouragement. Would be gald to have your contributions for nilacharal
பல்சுவையுடன் விறுவிறுப்பாகக் கொண்டுசென்றீர்கள் நிலா. வாழ்த்துக்கள். நன்றி.
//** நட்சத்திர வாரத்தின் வெற்றி எத்தனை பதிவு போட்டிருக்கிறோம் என்பதிலோ அல்லது பின்னூட்டப் புள்ளி விபரங்களிலோ இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. யார் யாரை விஞ்சி நின்றார்கள் என்று கணக்குப் போடுவதற்கு இது வியாபாரமில்லை. அதனால்தான் நான் என் பதிவுகளின் எண்ணிக்கையையோ அல்லது பின்னூட்ட விபரங்களையோ இங்கு தரவில்லை **//
அது :-))).
//** எண்ணிக்கையில் வளரும் பின்னூட்டங்களை விட எங்கோ ஓர் மூலையில் ஏதோ இருவரை சிந்திக்க வைக்கிறதே ! அதுதான் உங்கள் எழுத்தின் உண்மையான வெற்றி **// உண்மை நிலா
//** ஒரு சில நண்பர்கள் எனது ஒரு பதிவுக்கு 100க்கு மேல் பின்னூட்டம் வந்ததை சாதனையாகச் சொன்னார்கள். எனக்கு அதில் துளிகூட பெருமையில்லை. **// என்ன இப்படி சொல்லீட்டீங்க.. 200+ பின்னோட்டம் வாங்கினா தங்க மெடல் கொடுக்கிறாங்கலாம் :-))
நிலா! ஒரு அருமையான வாரம் தந்தமைக்கு நன்றி. எல்லோருக்கும் ஒவ்வொரு வழி. நீங்கள் கொண்டு சென்ற வழி ரொம்பவே உற்சாகமாக இருந்தது.
ஒன்னே ஒன்னு, இன்னும் கொஞ்சம் பின்னூட்டத்திற்கு வேகமாக பதில் அளித்திருக்கலாம். நான் பின்னோட்டம் போட்டுட்டு, நிலா என்ன சொல்றாங்கன்னு மூனு நாலா வெயிட் பண்ணினேன் :-(.
நீங்களும் லீவுலயா போறீங்க..ஓய்வு எடுத்துட்டு சீக்கிரம் வாங்க
அன்புடன்,
சிவா
//நிலா! ஒரு அருமையான வாரம் தந்தமைக்கு நன்றி. எல்லோருக்கும் ஒவ்வொரு வழி. நீங்கள் கொண்டு சென்ற வழி ரொம்பவே உற்சாகமாக இருந்தது//
நன்றி சிவா,
//ஒன்னே ஒன்னு, இன்னும் கொஞ்சம் பின்னூட்டத்திற்கு வேகமாக பதில் அளித்திருக்கலாம். நான் பின்னோட்டம் போட்டுட்டு, நிலா என்ன சொல்றாங்கன்னு மூனு நாலா வெயிட் பண்ணினேன் ://
இதுக்கு மட்டும் வெரசா பதில் சொல்லிர்றேன்...
நிங்க சொன்னது 100/100 சரி. பூப்பறிக்க வருகிறோம், 250வது இதழ்னு வேலை பென்டு நிமித்திருச்சி. இப்பதான் ஒவ்வொரு பதிவா பத்த்து எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டு வாரேன்.
பொறுமைக்கு நன்றி.
//நீங்களும் லீவுலயா போறீங்க..ஓய்வு எடுத்துட்டு சீக்கிரம் வாங்க//
சிவா, நமக்கு சும்மாவெல்லாம் இருக்க முடியாது. நிலாச்சாரல்ல நெறைய டெவலப்மென்ட் வேலை இருக்கு. அதான்
Kumaran,
:-))))
"வாழ்க்கையில எல்லார்க்கும் எல்லாம் கிடைக்காதுல்ல - எங்களுக்குப் பிறந்த ஒரே குழந்தை இறந்து போயிட்டான். ரொம்ப வேதனைதான். சோகம்தான்//
நிலா, இந்த வரிகளைப் பார்த்ததும் எதுவும் தோன்றவில்லை. இங்கு இதைக் குறித்து எதை எழுதினாலும் அபத்தமாய் இருக்கும்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்கள்தோறும் வேதனை இருக்கும்"
தினம் முணுமுணுக்கும் கண்ணதாசன் பாடல் வரிகள்.
நிலா, இந்த பின்னுட்டத்தைப் பிரசுரிப்பதும், டெலிட் செய்வது உங்கள் விருப்பம். இதை ஏன்
தனிமடலாய் போடவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், நிலாவின் இன்னொரு
பரிணாமத்தை இச்செய்தி சொல்கிறது என்ற உண்மை எனக்கு உறைத்தது.
//"வாழ்க்கையில எல்லார்க்கும் எல்லாம் கிடைக்காதுல்ல - எங்களுக்குப் பிறந்த ஒரே குழந்தை இறந்து போயிட்டான். ரொம்ப வேதனைதான். சோகம்தான்//
நிலா, இந்த வரிகளைப் பார்த்ததும் எதுவும் தோன்றவில்லை. இங்கு இதைக் குறித்து எதை எழுதினாலும் அபத்தமாய் இருக்கும்.
//
உண்மை. அதனால் தான் நான் முழு பதிவிற்குமே ஒன்றுமே சொல்லாமல் பின்னூட்டம் இட்டேன்.
நிலா,
இந்த வாரம் மிக உற்சாகமாகப் போனது. பாராட்டுக்கள்.
You have a very dymanic personality.
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் .
பாருங்க. எங்க ர.ம.த., தங்கத்தாரகை, ஜெயஸ்ரீ வந்திருக்காங்க. நமக்குள்ள மரியாதை செஞ்சுருங்க.
//எங்களின் மனதில் மிகுந்த இடத்தை நிரப்பி அதில் அமர்ந்திருப்பீர்கள்.
வாழ்க! வளர்க!!//
மிகவும் நிறைவாக இருக்கிறதய்யா. நன்றிகள் பல
//அருமையான வாரம். ஒவ்வொரு பதிவையும் மிகவும் ரசித்தேன்( எண்ட்ரிதான் கொஞ்சம் பிந்திப்போச்சு!)//
தலைவி,
வந்ததுக்கான அறிகுறியே இல்லையே???
(சும்மா உங்களை கலாய்க்கிறேன்)
//அதிலூம் இந்த விடைபெறும் பதிவு மனசை என்னவோ செஞ்சுருச்சு.//
உங்க இரும்பு மனசு வாடலாமா, சொல்லுங்க?
//மனம் போலதான் வாழ்க்கை அமையும். அமைஞ்சிருக்கு. வாழ்த்துக்கள்.நல்லா இருங்க நிலா.//
உங்க ஆசீர்வாதமெல்லாம் இருக்கும்போது வேறெப்படி இருக்கும்.
நன்றி தலைவி. தனிமெயில் கிடைச்சுது. சீக்கிரம் பதில் போடறேன்.
//மிகவும் அருமையான நட்சத்திர வாரம்.நிலாச்சாரலுக்கு எழுதுவது போக இங்கும் அவ்வப்போது எழுதுங்கள்.தமிழ்மணத்திலும் உங்கள் எழுத்துகளுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்
//
நன்றி செல்வன்,
இரட்டைக் குதிரை சவாரி கொஞ்சம் சிரமாக இருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது எழுதுகிறேன்.
மந்திரச்சிற்பிகள் அருமையாக இருந்தது. வாழ்த்துகள்! நன்றி!
//பல்சுவையுடன் விறுவிறுப்பாகக் கொண்டுசென்றீர்கள் நிலா. வாழ்த்துக்கள். நன்றி//
காசி அவர்களே
ஊக்கத்துக்கு நன்றி
//நிலா, இந்த வரிகளைப் பார்த்ததும் எதுவும் தோன்றவில்லை. இங்கு இதைக் குறித்து எதை எழுதினாலும் அபத்தமாய் இருக்கும்...... நிலாவின் இன்னொரு
பரிணாமத்தை இச்செய்தி சொல்கிறது என்ற உண்மை எனக்கு உறைத்தது.//
உஷா,
என்ன சொல்வதென்று எனக்கும் தெரியவில்லை. மிகவும் யோசித்துவிட்டுத்தான் 'எல்லாருக்கும் பிரச்சனைகள் உண்டு' என்பதை வலியுறுத்துவதற்காகவே பதிவில் இதனை எழுதினேன். எனக்கு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் கிடையாது. நிலாக் குழுவுக்கே இப்போதுதான் தெரியும்.
என்னைப் பொறுத்தவரை குறைகளுக்கு அனுதாபம் காண்பிக்கும்போதுதான் அது பெரிதாகத் தெரிகிறது. இங்கே சோகமாய் யாரும் வயலின் இசைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்:-)
//உண்மை. அதனால் தான் நான் முழு பதிவிற்குமே ஒன்றுமே சொல்லாமல் பின்னூட்டம் இட்டேன்.
//
குமரன்
இப்படி எல்லாரும் சோக கீதம் இசைப்பீங்கன்னு தெரிஞ்சா சொல்லியே இருக்கமாட்டேன்.
Make me laugh
அதுதான் நீங்கள் எல்லாம் எனக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும்
//Make me laugh
//
அதுக்குத் தான் நம்ம பார்ட்னர் கொத்ஸ் இருக்காரே. :-)
//அதுக்குத் தான் நம்ம பார்ட்னர் கொத்ஸ் இருக்காரே. :-) //
of course... he is doing an excellent job :-))
//அதுக்குத் தான் நம்ம பார்ட்னர் கொத்ஸ் இருக்காரே. :-)//
அது இங்க எல்லாம் கிடையாது. நம்ம பதிவுக்கு வாங்க. http://elavasam.blogspot.com :)
கும்ஸ், விளம்பரத்திற்கு உதவியமைக்கு நன்றி. :)
//இந்த வாரம் மிக உற்சாகமாகப் போனது. பாராட்டுக்கள். //
Jayashree,
உங்கள் எல்லோரின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது என்பது உண்மை
//You have a very dymanic personality.//
Thank you
//மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் .//
நன்றி
பி.கு: உங்களுக்கு மரியாதை செய்யச் சொல்லி உங்க தலைவர் சொல்லிட்டுப் போயிருக்காரு. அதனால ஒரு பெரிய சல்யூட் :-)
//பாருங்க. எங்க ர.ம.த., தங்கத்தாரகை, ஜெயஸ்ரீ வந்திருக்காங்க. நமக்குள்ள மரியாதை செஞ்சுருங்க//
நீங்க சொன்னபடி உங்க ர.ம.த-க்கு சல்யூட் வச்சாச்சுங்க, கொத்ஸ்
போதுமா இல்லை இதுக்கு மேலா ஏதாவது...?
சல்யூட் எப்படி இருந்ததுன்னு அவங்களை கேட்டுட்டு அப்புறம் சொல்லறேன். :)
//மந்திரச்சிற்பிகள் அருமையாக இருந்தது. வாழ்த்துகள்! நன்றி!//
நன்றி, தங்கமணி
//அது இங்க எல்லாம் கிடையாது. நம்ம பதிவுக்கு வாங்க. http://elavasam.blogspot.com :)
கும்ஸ், விளம்பரத்திற்கு உதவியமைக்கு நன்றி. :)//
கித்ஸ்,
இலவசம்னு வலைபதிவு வச்சிக்கிட்டா இலவச விளம்பரமெல்லாம் கிடையாது
விளம்பரக் கட்டணம் கேட்டு இன்வாய்ஸ் வந்துகிட்டே இருக்கு
இன் வாய்ஸ் எல்லாம் போதாது. எழுத்துபூர்வமா வேணும். :)
மொத்த நட்சத்திர வார பதிவுகளையும் ( விளையாட்டுப் பகுதி தவிர்த்து) இந்த வார இறுதியில் தான் ஆற அமர உக்காந்துப் படிக்க முடிஞ்சது.
சோறு போடும் அலுவலகம் சொன்ன வேலைகளில் கட்டப்பட்டு கருத்துச் சொல்ல அவ்வளவாய் அவகாசம் கிடைக்காத்தால் தான் இந்த தாமதம்.
அது தவிர கிடைத்த ஒரு சில மணித்துளிகளிலும் சங்கக் கடமைகள் அழைக்க(ஹிஹி)...உடனுக்குடன் உங்கள் பதிவுகளைத் தொடர முடியாமல் போயிற்று...
மொத்ததில் பூ பறித்ததில் கைகள் காயப்பட்டாலும் ( கீ போர்ட்டை தாறுமாறாய் தட்டியதில்) மனங்களில் மற்றோர் பறித்த்ப் பூக்களின் வாசமும் நீண்ட நாள் வீசும் என்பதில் சந்தேகமில்லை...
நிலவும் சூரியனும் நீடுழி வாழ அந்த ஆகாயத்து மந்திரச் சிற்பியின் ஆசிகளை மனமார வேண்டுகிறேன்.:)
தேவ்,
மென்மையான கவிதை போன்ற பின்னூட்டம். நன்றி
//சோறு போடும் அலுவலகம் சொன்ன வேலைகளில் கட்டப்பட்டு கருத்துச் சொல்ல அவ்வளவாய் அவகாசம் கிடைக்காத்தால் தான் இந்த தாமதம்.//
ஓ அது கூட நடக்குதா? நான் நெனச்சேன் சங்கக் கடமைகள்ல முழுமூச்சா இறங்கிட்டீங்கன்னு :-)))
Post a Comment
<< Home