ஆர்யா, அர்ஜூன் & மிஸ் பண்ணக் கூடாத பாட்டு
சென்றவார இறுதியில் நிலாச்சாரல் வேலைகளில் மண்டை காய்ந்து போய் சற்று நேரம் டி.வி. பார்க்கலாம் என்று அமர்ந்தேன். தற்செயலாய் ஒரு தெலுங்குப் படத்தில் இடறினேன். பிடித்தமாய் வேறு நிகழ்ச்சிகள் ஏதுமில்லாததால் 'சரி, கொஞ்ச நேரம் பார்த்துத் தொலைக்கலாம்' என்று பார்க்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். எனக்கு எப்போதும் படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பார்க்கவேண்டுமென்றெல்லாம் கட்டாயமில்லை. நல்ல படமென்றால் காட்சியமைப்பில் நம்மைக் கட்டிப் போடவேண்டும் என்று எண்ணுவேன்.
கல்லூரி மாணவனான ஹீரோவைப் பார்த்தவுடன் 'ஹூம்... தயாரிப்பாளருடைய மகனாக இருக்கும்' என்று தோன்றியது - வெகு சராசரியான தோற்றம். சேனல் மாற்றலாமா என்றெழுந்த எண்ணத்தை ஒரு அழகான காட்சி மாற்றியது. தொடர்ந்து சின்னச் சின்னதாய் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சுவாரஸ்யங்கள் (தெலுங்கு அரைகுறையாய்ப் புரிந்தாலும் ரசிக்கக் கூடியதாய்). மனதுக்குள் சின்ன ஆச்சர்யம்.
அடுத்தடுத்த காட்சிகளில் அந்த ஹீரோவின் ஒவ்வொரு பரிணாமமாய் அவிழ்ந்து கொண்டு வந்தது - துருதுருவென்றிருந்தார், கலக்கலாய் நடனமாடினார், டூப் இல்லாமல் சண்டை போட்டார், கலகலவென்று காமெடி பண்ணினார் - இதெல்லாம் வெகு இயல்பாய் வந்தது அவருக்கு. திரைக் குடும்பப் பின்னணி உடையவராகத்தான் இருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனால் முகஜாடையில் ஒருவரும் தெரியவில்லை.
முழுப்படத்தையும் பார்த்து முடித்தபோது ஜிலுஜிலுவென தென்றல் போலப் படத்தை நகர்த்திச் சென்ற இயக்குநருக்கும் படத்தை அனாயாசமாய் சுண்டுவிரலில் தூக்கி நிறுத்திய அந்த ஹீரோவுக்கும் ஓ போடவேண்டும் போலிருந்தது. பட முடிவில் பெயர் போடுவார்கள் என்று பார்த்தால் பெயர் தெலுங்கில் ஓடியது... பின்னணியில் தீம் ஸாங் ஓட பாடலில் முதல் வார்த்தையான 'நுவ்வுண்டே'யைக் குறித்துக் கொண்டேன். முதல்முறை கேட்கும் போதே மனதை வாரி முடிந்து கொள்ளும் பாடல். செல்லத் தாலாட்டு போல சுகமாய் மனதுக்கு ஒரு சுதந்திரத்தைத் தந்துவிடும் ராகம். அர்த்தம் புரிந்து கேட்டால் இன்னும் நன்றாக இருக்குமாக இருக்கும்!
எனக்கு எப்படியாவது படத்தின் இயக்குநரையும் ஹீரோவையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல். எந்த ஒரு நல்ல படம்(எந்த மொழியாய் இருப்பினும்) பார்த்தாலும் அதனுடைய வெற்றிக்குக் காரணமானவர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்பி கூகிளைச் சரணடைவது வழக்கம். அதே போல அந்தப் படத்தைப் பற்றி நான் அறிந்திருந்த 'நுவ்வுண்டே'வை சமர்ப்பித்துத் தேடினால் வேறு ஏதேதோ வந்தது. மூளையைக் கசக்கி யோசித்து அடுத்ததாய் ஹீரோ கேரக்டரின் பெயரான ஆர்யாவை அனுப்பி கூகிளாண்டவரிடம் கேட்டேன். வாரித்தந்த பதில்களில் அந்தப் படத்தின் பெயரே ஆர்யாதான் என்று அறிந்து கொண்டேன்.
படத்தின் இயக்குநர் சுகுமார் என்ற புதுமுகம் (2004ல்). 'வெல்டன்! முதல்படத்திலேயே கலக்கிவிட்டார்!'
ஹீரோவின் பெயர் அல்லு அர்ஜூன். அடுத்து தேடுபொறியின் உபயத்தில் அல்லு அர்ஜூனின் பூர்வீகம்... நான் எதிர்பார்த்தது போலவே ரொம்ப ஸ்டாராங்கான திரைக் குடும்பம்தான்... யாரென்று ஊகியுங்கள் பார்ப்போம்!!!
படத்துக்கு வருவோம்... வாய்ப்பு கிடைத்தால் ஆர்யா என்ற இந்த தெலுங்குப் படத்தைப் பாருங்கள். மொழி புரியாவிட்டாலும் ரசிக்கலாம்... கதையை இருவரிகளில் சொல்லிவிடலாம் என்றாலும் முத்துமுத்தான காட்சிகளைக் கோர்த்து ஜில்லென்று தந்திருக்கிறார் இயக்குநர். பின்னணி இசையும் பாடல்களும் வெகு நயம். ஆல்பம் மொத்தத்துக்கும் நாலரை நட்சத்திரம் தரலாம் (5க்கு). இசை தேவிஸ்ரீ பிரசாத்.
நான் மேலே குறிப்பிட்ட நுவ்வுண்டே பாடலை இங்கே கேட்கலாம்:
http://www.raaga.com/channels/telugu/movie/A0000403.html
10 Comments:
அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவிக்கும் பவன் கல்யாணுக்கும் மருமகன்;தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன்; முன்னாள் நகைச்சுவை நடிகர் அல்லு இராமலிங்கையாவின் பேரன் - சரியா ?
This comment has been removed by a blog administrator.
மணியன்
விட்டா அல்லு அர்ஜூனின் பயோகிராஃபியே எழுதிருவீங்க போலிருக்கு
உங்க பதில் ரொம்ப சரி...
மற்றவங்களுக்கும் சான்ஸ் கொடுக்கறதுக்காக உங்களோட பதிலை அப்புறமா வெளியிடறேன், சரியா?
நன்றி
படத்தின் பெயர் ஆர்யான்னு சொல்லிட்டீங்க இல்லே. பாத்துட்டா போச்சி.
நன்றி.
சஸ்பென்ஸ் வச்சது போதும், சொல்லுங்க! :-)
மஞ்சூர் ராசா
பாட்டு கேட்டீங்களா?
மிஸ் பண்ணிடாதீங்க
சேது
சஸ்பென்ஸ் உடைச்சாச்சு :-)
நெருப்பு
இங்கே யாரும் எதுக்கும் கவலைப்படலையே? நாட்டுக்கு முக்கியமாக விஷயங்களைப் பத்தி மட்டும்தான் எழுதணும்னா இங்கே முக்கால்வாசி வலைப்பதிவுகள் இருக்காதுங்கோ :-)
படமே பாக்காத ஆளா நீங்க? வாழ்க்கையை லைட்டாவும் பாக்கணுமில்லை!
டேக் இட் ஈஸி :-)
ஆர்யா ஒரு நல்ல படம். நான் கூட முதல்ல நீங்க நம்ம ஊரு அர்ஜூனும் ஆர்யாவும் ரீமேக் பண்ணக் கூடிய படத்தைப் பத்திச் சொல்லிருக்கீங்கன்னு நினைச்சேன்.
அல்லு அர்ஜூன் அவரது சமீப பன்னி (bunny), ஹாப்பி (தெலுங்கு மசாலா நிரம்பிய நம்ம அழகிய தீயே) போன்ற படங்களிலும் நல்லா நடிச்சிருந்தார்.
பிரதீப்
பன்னி, ஹாப்பி பற்றி சொன்னதற்கு நன்றி
டிவிடி கிடைக்கிறதா பார்க்கிறேன்
அழகிய தீயேவின் எளிமையும் யதார்த்தமும்தான் படத்தினுடைய பலங்கள்
அதிலே மசாலாவா? நன்றாக வந்திருக்கிறதா?
Post a Comment
<< Home