.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, June 30, 2006

ஆர்யா, அர்ஜூன் & மிஸ் பண்ணக் கூடாத பாட்டு

Your Ad Here

சென்றவார இறுதியில் நிலாச்சாரல் வேலைகளில் மண்டை காய்ந்து போய் சற்று நேரம் டி.வி. பார்க்கலாம் என்று அமர்ந்தேன். தற்செயலாய் ஒரு தெலுங்குப் படத்தில் இடறினேன். பிடித்தமாய் வேறு நிகழ்ச்சிகள் ஏதுமில்லாததால் 'சரி, கொஞ்ச நேரம் பார்த்துத் தொலைக்கலாம்' என்று பார்க்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். எனக்கு எப்போதும் படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பார்க்கவேண்டுமென்றெல்லாம் கட்டாயமில்லை. நல்ல படமென்றால் காட்சியமைப்பில் நம்மைக் கட்டிப் போடவேண்டும் என்று எண்ணுவேன்.

கல்லூரி மாணவனான ஹீரோவைப் பார்த்தவுடன் 'ஹூம்... தயாரிப்பாளருடைய மகனாக இருக்கும்' என்று தோன்றியது - வெகு சராசரியான தோற்றம். சேனல் மாற்றலாமா என்றெழுந்த எண்ணத்தை ஒரு அழகான காட்சி மாற்றியது. தொடர்ந்து சின்னச் சின்னதாய் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சுவாரஸ்யங்கள் (தெலுங்கு அரைகுறையாய்ப் புரிந்தாலும் ரசிக்கக் கூடியதாய்). மனதுக்குள் சின்ன ஆச்சர்யம்.

அடுத்தடுத்த காட்சிகளில் அந்த ஹீரோவின் ஒவ்வொரு பரிணாமமாய் அவிழ்ந்து கொண்டு வந்தது - துருதுருவென்றிருந்தார், கலக்கலாய் நடனமாடினார், டூப் இல்லாமல் சண்டை போட்டார், கலகலவென்று காமெடி பண்ணினார் - இதெல்லாம் வெகு இயல்பாய் வந்தது அவருக்கு. திரைக் குடும்பப் பின்னணி உடையவராகத்தான் இருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனால் முகஜாடையில் ஒருவரும் தெரியவில்லை.

முழுப்படத்தையும் பார்த்து முடித்தபோது ஜிலுஜிலுவென தென்றல் போலப் படத்தை நகர்த்திச் சென்ற இயக்குநருக்கும் படத்தை அனாயாசமாய் சுண்டுவிரலில் தூக்கி நிறுத்திய அந்த ஹீரோவுக்கும் ஓ போடவேண்டும் போலிருந்தது. பட முடிவில் பெயர் போடுவார்கள் என்று பார்த்தால் பெயர் தெலுங்கில் ஓடியது... பின்னணியில் தீம் ஸாங் ஓட பாடலில் முதல் வார்த்தையான 'நுவ்வுண்டே'யைக் குறித்துக் கொண்டேன். முதல்முறை கேட்கும் போதே மனதை வாரி முடிந்து கொள்ளும் பாடல். செல்லத் தாலாட்டு போல சுகமாய் மனதுக்கு ஒரு சுதந்திரத்தைத் தந்துவிடும் ராகம். அர்த்தம் புரிந்து கேட்டால் இன்னும் நன்றாக இருக்குமாக இருக்கும்!

எனக்கு எப்படியாவது படத்தின் இயக்குநரையும் ஹீரோவையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல். எந்த ஒரு நல்ல படம்(எந்த மொழியாய் இருப்பினும்) பார்த்தாலும் அதனுடைய வெற்றிக்குக் காரணமானவர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்பி கூகிளைச் சரணடைவது வழக்கம். அதே போல அந்தப் படத்தைப் பற்றி நான் அறிந்திருந்த 'நுவ்வுண்டே'வை சமர்ப்பித்துத் தேடினால் வேறு ஏதேதோ வந்தது. மூளையைக் கசக்கி யோசித்து அடுத்ததாய் ஹீரோ கேரக்டரின் பெயரான ஆர்யாவை அனுப்பி கூகிளாண்டவரிடம் கேட்டேன். வாரித்தந்த பதில்களில் அந்தப் படத்தின் பெயரே ஆர்யாதான் என்று அறிந்து கொண்டேன்.

படத்தின் இயக்குநர் சுகுமார் என்ற புதுமுகம் (2004ல்). 'வெல்டன்! முதல்படத்திலேயே கலக்கிவிட்டார்!'

ஹீரோவின் பெயர் அல்லு அர்ஜூன். அடுத்து தேடுபொறியின் உபயத்தில் அல்லு அர்ஜூனின் பூர்வீகம்... நான் எதிர்பார்த்தது போலவே ரொம்ப ஸ்டாராங்கான திரைக் குடும்பம்தான்... யாரென்று ஊகியுங்கள் பார்ப்போம்!!!

படத்துக்கு வருவோம்... வாய்ப்பு கிடைத்தால் ஆர்யா என்ற இந்த தெலுங்குப் படத்தைப் பாருங்கள். மொழி புரியாவிட்டாலும் ரசிக்கலாம்... கதையை இருவரிகளில் சொல்லிவிடலாம் என்றாலும் முத்துமுத்தான காட்சிகளைக் கோர்த்து ஜில்லென்று தந்திருக்கிறார் இயக்குநர். பின்னணி இசையும் பாடல்களும் வெகு நயம். ஆல்பம் மொத்தத்துக்கும் நாலரை நட்சத்திரம் தரலாம் (5க்கு). இசை தேவிஸ்ரீ பிரசாத்.

நான் மேலே குறிப்பிட்ட நுவ்வுண்டே பாடலை இங்கே கேட்கலாம்:
http://www.raaga.com/channels/telugu/movie/A0000403.html

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 26, 2006

போட்டி + பாடம் + பரிசு

Your Ad Here

நண்பர்களே தேன்கூடு - தமிழோவியம் போட்டியில் எனது மனமுதிர்காலம் சிறுகதைக்கு 3வது இடம் கிடைத்திருக்கிறது. வாக்களித்த/ஊக்குவித்த அனைவருக்கும் போட்டி நடத்திய அமைப்புகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சென்ற வாரம் நம்பிக்கை குழுமம் வெளியிட்ட போட்டி முடிவுகளில் எனது மஹாசக்தி சிறுகதை பொற்காசு பரிசு பெற்றதையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பரிசு பெற்ற மனமுதிர்காலம், மஹாசக்தி இரண்டுமே அதிக திட்டமிடுதலில்லாமல் குறுகிய காலத்தில் போட்டிக்கென்றே எழுதப்பட்ட கதைகள். மஹா சக்தியின் கதை அமைப்பில் மாற்றம் தேவை என்று நினைப்பதால் நம்பிக்கை குழுமத்தின் அனுமதியுடன் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் இங்கு பதிகிறேன்

உண்மையில் மனமுதிர்காலம் பரிசு பெறும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவசரமாக எழுதினாலும் படைப்பில் எனக்கு நிறைவிருந்தது. டுபுக்கு அவர்கள் போட்டிக்கு வந்த அனைத்துப் படைப்புகளிலும் (தன் கதை உட்பட) இந்தக் கதையே தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னாலும் கூட 'சின்னத் தம்பித்தனமாக இருக்கிறது' '1960களில் எழுதியிருக்க வேண்டியது' என்றெல்லாம் வந்த விமரிசனங்களால் இந்தக் கருவைப் பல ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுணர்ந்தேன். தவிர பினாத்தலாரின் அறிமுகத்திலும் மூன்றாவது கண்ணின் விமரிசனத்திலும் பத்தோடு பதினொன்று என்பது போலவே குறிப்புகள் இருந்ததால் 'சரி அடுத்தமுறை பார்போம்' என்று முடிவு செய்துவிட்டேன். நேற்று நண்பர் ஒருவர் முடிவு தேதி பற்றிக் கேட்டபோது கூட '26' என்று சொன்னேனே தவிர அது இன்று என்றுகூட உறைக்கவில்லை.

காலையில் அஞ்சல்பெட்டியில் tamila tamila வின் பின்னூட்டம்தான் முதலில் கண்ணில் பட்டது: 'ஒரு நிம்மதி இப்போது இருக்குமே நிலா?? 3வது இடம் என்றால், கொஞ்சம் இடிக்கிறது!!(தமாசுங்கொ) 1தல் இடம் அல்லவா கிட்டியிருக்கனும்!!' இதைப் படித்ததும் 'அட!' என்று ஆச்சரியம்தான் எழுந்தது. இதில் இன்னொரு ஆச்சரியம் எனது மற்றொரு கதையான பிம்பம் ஆறாவது இடத்தைப் பெற்றது! இக்கதைக்க்கு வந்த பின்னூட்டங்களைப் படித்தால் உங்களுக்கே காரணம் விளங்கும்.

நான் எதிர்பார்த்தது போலவே இளவஞ்சிக்கு முதல் பரிசு. வாழ்த்துக்கள்! இரண்டாவது இடம் பெற்ற உஷாவுக்கும் பாராட்டுக்கள்!

ஆனால் சிறப்பான சில படைப்புகள் வரிசையில் பின்னாலிருந்தது வருத்தத்தை அளித்தது. நம்பிக்கை போட்டியில் படைப்பாளியின் பெயரை மறைத்தே நடுவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஒரு வேளை இங்கேயும் அப்படி நடந்தால் பாரபட்சமின்றி வாசகர்கள் வாக்களிப்பார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. போட்டி அமைப்பாளர்கள் இது குறித்து சிந்திக்கலாம்

இந்தப் போட்டி எனக்கு நல்ல பயிற்சிக்களமாக அமைந்தது. முழுநேரப்பணி தவிர்த்து நிலாச்சாரலின் ஆசிரியராகவுமிருப்பதால் என்னால் அதிகம் எழுத முடிவதில்லை. இப்படி போட்டி என்று வரும்போது தோன்றும் உற்சாகத்தில் எப்படியேனும் நேரத்தை ஒதுக்கி எழுதிவிடுவதில் சிறு திருப்தி.

இந்த முறைதான் என் படைப்புகள் பற்றிய விரிவான கண்ணோட்டம் கிடைத்திருக்கிறது. பல கோணங்களிலிருந்தும் கருத்துக்கள் வந்ததால் குறை நிறைகளை உணரமுடிந்தது. முக்கியமாக, கருவைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். கார்ப்பரேட் உலகில் Presentation Skills பற்றிய பயிற்சியில் முக்கியமாக ஆடியன்ஸை உணர்ந்து அவர்களுக்கு ஏற்புடைய கருத்தை முன்வைக்க வேண்டும் என்று சொல்லித் தருவார்கள். அதனை நான் கோட்டை விட்டுவிட்டேன்

சந்தைப்படுத்துதலில் credibility முக்கியம் என்றும் சொல்வார்கள். யார் எதைச் சொன்னால் எடுபடும் என்று தெரிந்திருக்க வேண்டும். எனது பிம்பம் கதையின் கருவை ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்லியிருந்தால் ஏற்புடையாதாகி இருந்திருக்கும். ஆனால் ஒரு சாதாரண வலைபதிவர் சொல்லும்போது அது எடுபடாமல் போகும் என்பதனையும் நான் அறிந்து கொண்டேன்

அதோடு, மக்கள் பின்னூட்டமிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. எப்படியோ, உங்கள் ஆதரவைத் தந்து என்னை ஊக்குவித்ததுடன் எனக்கு தமிழோவியத்தின் சிறப்பாசிரியர் பதவியையும் பெற்றுத் தந்திருக்கிறீர்கள்! நன்றி.

இந்தப் போட்டி பல படைப்பாளிகளை ஊக்குவிக்கிறது என்பதால் அடுத்த மாதத்திலிருந்து முதல் மூன்று இடங்களுக்கு நிலாஷாப் மூலம் டிவிடி மற்றும் மின்நூல்கள் பரிசு தர விருப்பமென்று தேன்கூடு நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் கலந்தாலோசித்துச் சொல்வதாக பதில் தந்திருக்கிறார்கள்.

போட்டிக்கு நிலாஷாப்பிலிருந்து பரிசுகள் வந்தாலும் கூட நான் தொடர்ந்து பங்கு பெறுவேன் - உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ளவாகினும்முடிவாக, இன்னொருமுறை தட்டிய குட்டிய அனைவருக்கும் தலைதாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 16, 2006

பிம்பம் - தேன்கூடு போட்டி

Your Ad Here

"என்னடா ஆச்சு சாமியாருக்கு? பளபளப்பா மாறிட்டு வர்றான்? மாப்பிள்ள வயசுக்கு வந்துட்டானாடா மச்சான்?"

கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்த பாலமுருகு தன்னைப் பற்றிய தன் நண்பனின் கமென்டுக்கு உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். ஆனால் முகம் வழக்கம்போல இறுகித்தானிருந்தது.

"உனக்கு விஷயம் தெரியாதா? ரொம்ப நாளா இவனோட க்ளாஸ் மேட் மலர் இவனுக்கு ரூட் போட்டுக்கிட்டிருந்தாள்ல? என்ன செய்தாளோ தெரியல, சாமியார் துறவறத்தைக் கலைச்சு குடும்பஸ்தனாயிட்டான்"

இந்த நக்கல்களையெல்லாம் புறந்தள்ளி பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினான் பாலமுருகு.

"செமஸ்டர் லீவுக்கு அம்மணி ஊருக்கு போவுதுன்னு துரை பஸ் ஏத்திவிடப் போறாராம்"

"நெசமாத்தான் சொல்றியாடா? நம்ப முடியலையே?"

நண்பனுக்கு மட்டுமா நம்பமுடியவில்லை? பாலமுருகுவுக்கும்தான். எப்படி நடந்ததெனத் தெரியாத மாற்றம். பாறையின் நடுமத்தியில் பூப்பத்த அதிசயம்.

அறையை விட்டு வெளியில் வந்தான் பாலமுருகு. மனமெல்லாம் மலரிடத்தில்.

"மச்சான் லெட்டர்டா"

நண்பன் கையில் செருகிவிட்டுப் போன கடிதம் பெற்றோரிடமிருந்து வந்திருப்பது தெரிந்தது. விரைவில் ஊருக்கு வரச்சொல்லி எழுதியிருப்பார்கள்! பிரிக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

மொத்த ஹாஸ்டலில் எண்ணி பத்து பேருக்கு வீட்டிலிருந்து கடிதம் வருமாக இருக்கும். செல்ஃபோனெல்லாம் வந்துவிட்ட பிறகு யார் எழுத உட்கார்வார்கள்? ஆனால் பாலமுருகு டெலிஃபோனில் அகப்பட்டால்தானே?

இதயத்துக்கருகிலிருந்த கடிதம் நெஞ்சை நெருஞ்சியாய் உறுத்தியது.

'இவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை என்றுதானே ஊருக்குப் போவதைத் தவிர்த்து வருகிறேன்... எதற்கென்று இந்தக் கடிதம்?' பெற்றோர்களை நினைத்ததும் ஆழமாய்க் கசந்தது.

ஏழாவது வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவன்தான் பாலமுருகு.

"மாடு மாதிரி வளந்தாச்சில்ல? இன்னும் என்ன அவனுக்கு தலை சீவி விட்டுக்கிட்டிருக்க?"

"பரிச்சை லீவில வீட்டுக்கு வந்து ரெண்டு வாரம் இருந்துட்டுப் போன்னு சின்னராஜ் ஆசையா கூப்பிடறான். வெக்கமில்லாம எங்கம்மாவை விட்டுட்டு இருக்கமுடியாது சித்தப்பாங்கறான் உன் மகன்"

அப்பாவிடம் இப்படியெல்லாம் வசவு வாங்கிய பையன்தான் பாலமுருகு. ஆனால் எல்லாம் அந்த ஒரு ராத்திரியில் மாறிப் போய்விட்டது.

அன்றைக்குப் போட்டுக் கொளுத்திய வெயிலின் உக்கிரம் அந்த இரவுப் பொழுதிலும் உடம்பை உருக்க, வீட்டிலிருந்த எல்லாருக்குமாய் ஐஸ் சர்பத் வாங்கித் தந்தார் அப்பா. பாலமுருகுவுக்குப் பிடிக்குமென அம்மா தன் பங்கில் பாதியையும் அவனுக்குக் கொடுத்துவிட நட்ட நடு ராத்திரியில் பாத்ரூமுக்கு எழுந்து கொள்ள வேண்டியதாயிற்று.

பக்கத்தில் எப்போதும் படுத்திருக்கும் அம்மாவைக் காணாததில் சற்று குழம்பிப் போய் பாத்ரூமை நோக்கி நடந்தான் பாலமுருகு. அருகில் ஸ்டோர் ரூமிலிருந்து அம்மாவின் மெல்லிய முனகல் சத்தம் கேட்க, அவனுக்கு வயிற்றில் பிரளயம் எழும்பியது. 'அய்யோ வீட்டுக்குள் திருடன் வந்திட்டானோ? அம்மாவைப் பிடித்து வைத்திருக்கிறானோ?' அம்மாகோண்டுவான பனிரெண்டு வயது பாலமுருகுவை பயம் முழுவதுமாய் ஆக்கிரமித்தது. உடம்பு உதறியது. லேசாய்த் திறந்திருந்த ஜன்னலின் மேற்கதவு வழியாய்ப் பார்த்தவனுக்கு அருவருப்பில் உடம்பு கூசிப்போனது. 'ச்சீ... அம்மாவா இப்படி?'

அந்தக் காட்சியைப் பார்த்த கண்களைத் தோண்டி எறியவேண்டும் போல் ஆத்திரம் கொப்புளிக்க பாத்ரூமில் கேவிக் கேவி அழுதுவிட்டு வந்து பாயை எடுத்துக் கொண்டு திண்ணைக்குப் போனான் பாலமுருகு. அதன் பிறகு வாழ்க்கையில் சகலமும் மாறிப் போனது.

அப்பாவின், அம்மாவின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காத வெறுப்பில் தனக்குள் முடங்கிப் போனான் அந்தச் சின்னப் பையன். அவனைச் சுற்றி பெரிதாய் ஒரு கோட்டை எழுப்பிக் கொண்டதும் அப்போதுதான்

வயது ஏற ஏற விபரம் புரியப் புரிய இந்த இடைவெளி மேலும் வளர்ந்ததே ஒழிய குறைந்தபாடில்லை. பதினேழு வயதில் கல்லூரிக்குள் நுழையும்போது பெற்றோரின் மேல் மட்டுமல்லாமல் 'உடம்புக்கு அலையும் உலகம்' என்று இந்த உலகத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்துவிட்டிருந்தது.

பெண்கள் என்றால் ஏழு மைல் தூரத்துக்கு ஓடுவதும், ஆபாசம் என்று திரைப்படங்களை முற்றுமாய் நிராகரிப்பதும் போன்ற இன்ன பிற சமாச்சாரங்கள் இவனை சக மாணவர்களிடம் துறவியாய்க் காட்டின. அவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் எந்த எதிர்வினையும் காட்டாது அழுத்தமாய்த் தன் காரியத்தில் கண்ணாக இருப்பான் பாலமுருகு. கவனம் சிதற வாய்ப்பில்லாது போனதாலோ என்னவோ இதுவரை ஒன்று விடாமல் அத்தனை செமஸ்டர்களிலும் முதல் மார்க். அதுவும் ஒவ்வொரு முறையும் நல்ல வித்தியாசத்தில்.

"என்னதான் சொல்லு, சாமியாரின் புத்தி யாருக்கும் இங்கே இல்லைடா... அவன் எங்கேயோ நாம எங்கேயோ" என்று இரண்டாவது வருடத்திலேயே சகமாணவர்கள் ஒரே மனதாய் ஒப்புக்கொண்டாயிற்று. அவன் இருக்கும் வகுப்புக்கு சற்று அதிகப்படியாய் தயாராக வேண்டும் என்று பேராசிரியர்களுக்கும் புரிந்து போயிற்று.

அந்த கற்பூர புத்திதான் மலரை அவனிடம் ஈர்த்தது - ஆரம்பத்தில் வெட்கப் பார்வையும் சின்னச் சிரிப்புமாய் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது கொஞ்சமும் பிரயோசனமில்லாமல் போக, நேரிடையாக அவனிடம் சகஜமாய்ப் பேச ஆரம்பித்ததில் அவன் திகிலெடுத்து விலகி ஓட.... கடந்த இரு வருடங்களாய் நடந்த இந்தத் துரத்தல் சில நாட்களாய்த்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.

வெறுக்க வெறுக்க, விலக விலக சற்றும் சளைக்காமல் அவள் காட்டிய அக்கறையும், அன்பும், கரிசனமும் தன்னை இந்த மாயவலைக்குள் இழுத்துப் போட்டுவிடும் என்று பாலமுருகுவே எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நாள் அவளில்லாவிட்டாலும் வாழ்க்கை சற்றே இருட்டாய்த் தோன்ற ஆரம்பித்தபோதுதான் அவனுக்குப் புரிந்தது சுழலில் அகப்பட்டுவிட்டோமென்று.


செமஸ்டருக்கு முந்தைய நாள் அவள் பிறந்த நாளுக்கு அவன் ஒரு வெகு சாதாரண வாழ்த்தட்டையை கையெழுத்து கூட போடாமல் நீட்டியபோது, மலருக்கு மலருக்கு மனம் கொள்ளாப் பூரிப்பு. தொலைபேசியில் மெல்ல மெல்ல அவனைக் கரைத்து இன்று அவனை பஸ் ஸ்டாண்டுக்கு வரச்செய்தது அவளுக்குப் பெரிய சாதனையாகத்தானிருந்தது.

"மொதல் மொதலா ரெண்டு பேரும் வெளில வர்றோம். அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்குப் போயிட்டு பஸ் ஸ்டாண்ட் போலாம்பா. நெறைய நேரம் இருக்கே" பஸ் ஸ்டாப்பில் அவளின் கெஞ்சலுக்கு செவிசாய்த்தான்.

கோவிலிலிருந்து வெளியில் வந்ததும், "அஞ்சே அஞ்சு நிமிஷம் இந்த மணல்ல உக்காந்துட்டுப் போலாம்" எங்கோ ஒதுக்குப் புறமாய் அழைத்துச் சென்றாள்.

'மலர் நல்ல பெண்; அவளுக்கு உடம்பு சுகம் பெரிதாயிருக்காது. என்னை என் மனசுக்காக நேசிக்கிற பெண். என்னை, என் விருப்புவெறுப்புகளைப் புரிந்து கொள்வாள்' என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தாலும் உள்ளுக்குள் உதறலாகத்தான் இருந்தது. 'ஒரு வேளை இவளும் சராசரிப் பெண்களைப் போல....'

மலர் மணலில் கோலம் போட்டுக் கொண்டே குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்; அவள் விருப்பு வெறுப்புகளை விவிரித்தாள்; அவனைப் பற்றி சிலாகித்தாள். பாலமுருகு கடலைப் பார்த்தவாறு 'உம்' கொட்டிக் கொண்டே அவள் அருகாமை தந்த இதத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

'தொட்டால்தான் சுகமா? இதோ இந்த இடைவெளி இருந்தும் மனசு சிட்டு போலப் பறக்கிறதே' அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே மலர் சட்டென்று இரு கைகளாலும் அவன் கழுத்தை வளைத்து அவன் மார்பில் புதைந்து கொண்டாள். பாலமுருகு பதறி அனிச்சையாய் அவளைப் பிரிக்க அவள் இன்னும் இறுகிக் கொண்டாள். முதல் முறையாய் ஒரு பெண்ணின் ஸ்பரிஸம்... மூச்சு முட்டும் நெருக்கம்... படீரென அவனது சமநிலையைக் குலைத்துப் போட்ட அந்த உணர்வை கிரகிக்குமுன்னே, நிமிர்ந்து அவன் உதட்டில் அழுத்தமாய் தன் அதரங்களைப் பதித்தாள் மலர். பாலமுருகு சுதாரிக்குமுன் சட்டென்று விலகி ஈரமான விழிகளுடன் அவன் பார்வையை ஆழமாய் ஊடுருவி கிசுகிசுப்பாய் 'ஐ'ல் மிஸ் யூ வெரி மச்' என்றாள். பின் தன் செயலுக்காய் வெட்கப்பட்டவள் போல பையை எடுத்துக் கொண்டு அவனுக்குக் காத்திராமல் ஆட்டோவை நோக்கி நடந்தாள்


பாலமுருகு பிரமித்து அமர்ந்திருந்தான். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பேரின்பப் பிரவாகம் நிகழ்வதாய் உணர்வு. அவளின் ஸ்பரிஸம், இறுக்கம், முத்தம் எல்லாமாய் சில விநாடிகளே நிலைத்திருந்தாலும் யுகயுகமாய் நீடித்ததான பரிச்சயம். வெறும் உடம்பின் கிளர்ச்சியாய் இருந்தால் இது எப்படி சாத்தியமாகும்? அதையும் தாண்டிய ஆன்மானுபவம் போலல்லவா இருந்தது இந்த நிகழ்வு?

அவன் சுய ப்ரக்ஞை பெற்றபோது மலர் தூரத்தில் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் அவசரமாய் எழ முயற்சித்த கணம் ஆட்டோ வேகம் பிடித்தது.

பாதியாய் உணர்ந்தான் பாலமுருகு. அவனுக்கு அவள் மிகவும் தேவையாய் இருந்தாள். ஹார்மோன்கள் செய்யும் கலகம் என்று அவன் புத்தி இடித்துரைத்தாலும் தன் ஆன்மா அவளால்தான் முழுமைபெறும் போன்றதான தாகம் உயிரின் வேரைப் பிடித்தாட்டியது. கண்ணில் நீர் கொட்டியது. தாங்க முடியாத துக்கம் அவனைப் பீடித்தது. முழங்காலில் முகம் புதைத்து வெட்கமில்லாமல் அழுதான். அழுது முடித்த போது நன்றாய் இருட்டிவிட்டிருந்தது. வானத்தில் மினுக் மினுக்கென மலர்கள் பூத்து அவளை மேலும் நினைவுபடுத்தின. கடற்காற்று அவளின் சுகந்தத்தைத் தன்னிடமிருந்து அழித்துவிடக் கூடாதென மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான். மனசு அடங்க மறுத்தது. பழசும் புதுசுமாய் நினைவுகளும் நிழல்களுமாய் சுழன்றடித்தன.

கால்களின் சோர்வை உணர ஆரம்பித்தபோதுதான் இரண்டுமணி நேரம் நடந்திருந்தது உறைத்தது. இன்னும் அரை மணி நடந்தால் ஹாஸ்டல். தண்ணீர் வாங்க சில்லறை எடுத்தபோது கையோடு வந்தது பெற்றோரின் கடிதம். என்னவோ உடனே படிக்க வேண்டுமென்பதான உத்வேகம் வர, தெரு விளக்குக்குக் கீழ் நின்று கடிதத்தைப் பிரித்தான். முதலிரண்டு வரிகளுக்கு மேல் படிக்க முடியாமல் கண்ணில் நீர் திரைகட்டிற்று.

அடுத்த நாள் அதிகாலையிலேயே ஊருக்குக் கிளம்பினான் பாலமுருகு. பஸ் ஏறுமுன் மறக்காமல் அம்மாவுக்கு ஒரு கண்ணன் பொம்மையும் அப்பாவுக்கு ஒரு உயர் ரகப் பேனாவும் வாங்கிக் கொண்டான்.

(முற்றும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 15, 2006

மனமுதிர் காலம் - தேன்கூடு போட்டி

Your Ad Here




ரஞ்சனி நாவலை மூடிவைத்தாள். மனம் மிதப்பாய் இருந்தது. சந்திரா ராஜனின் நாவல்களென்றாலே இபப்டித்தான். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே எப்போதும் காதல் போர். அவர்கள், கோபங்கள், தாபங்கள், கொஞ்சல்கள்... படித்து முடிக்கும்போது யாருக்காயிருந்தாலும் தானும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். ரஞ்சனி மட்டும் விதிவிலக்கா என்ன?

கண்கள் சொக்கி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

"எப்பப் பாத்தாலும் கதப் புஸ்தகமா? உருப்படியா எதாவது வேல பாக்கக் கூடாதா? சொன்னது எதையாவது நீ கேக்கிறியா?" அம்மாதான். வேறு யாரிப்படி கத்துவார்கள்!

ரஞ்சனி உணர்ச்சி காட்டாமல் அமர்ந்திருந்தாள். இதென்ன புதிதா? தினமும் நடக்கும் மண்டகப்படி. அப்பாடி ஒரு வழியாய் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கப் போகிறாள். இத்துனூக்கூண்டு ஊரில் எப்படித்தான் மனிதர்கள் வாழ்கிறார்களோ! போர் போர் மகா போர்!

காலேஜ் சேர இன்னும் ஒரு மாதம்தான். அதன்பிறகு ஜாலிதான். அதற்காகத்தான் ரஞ்சனியும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.
மதுரை தூய இருதயப் பெண்கள் கல்லூரியில் அல்லது திருச்சி கே.என்.ஆர் கல்லூரியில் பி.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி சேர்க்கலாம் என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். ரஞ்சனிக்கு கே.என்.ஆரில்தான் சேரத்தான் விருப்பம். அதுதான் கோஎஜுகேஷன். அங்கேதான் நிறைய பையன்கள் இருப்பார்கள். ஜாலியாய் பொழுது போகும்.

ஆனால் அம்மா அப்பாவிடம், "இதுக்கு ஒரு வெவரமும் தெரியாது. பையங்க கூடல்லாம் சேக்க வேண்டாம். மதுரையில நல்ல கண்டிப்பாமே. அங்கேயே சேருங்க" என்று சொல்லிவிட்டார். எவ்வளவோ சண்டை போட்டுப் பார்த்தாயிற்று. அப்பா லேசு லேசாக இளகினாலும் அம்மா விடுவதில்லை.

'எனக்கு வில்லியே இந்தம்மாதான். எப்பப்பாரு இதைச் செய்யாதே, அதைச் செய்யாதேன்னு... ஹூம்... மிலிட்டரி மகாராணி'

"இப்பிடி உடம்பைப் பிடிக்கிற மாதிரி சட்டைய போட்டுக்கிட்டு வெளில போகாதே பிள்ளை"

"இந்த மாதிரி சைக்கிள்ல ஊர் சுத்தற வேலையெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்"

"அந்த ஜனனியோட பேச்சே சரியில்லை. அவ கூடல்லாம் சேராதே"

இப்படி எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு...

'இந்த வீடு ஒரு ஜெயில். போகிற காலேஜிலயாவாது சுதந்திரமா இருக்கலாம்னா... அதுலயும் மண்ணள்ளிப் போடுறாங்க. நான் இந்தத் தடவை விடப் போறதில்ல.

எப்பாடு பட்டாவது கே.என்.ஆர்லதான் சேரணும்' மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள் ரஞ்சனி.


***

"ஒழுங்கா கதவைப் பூட்டிக்கிட்டு உள்ளே இரு. வீட்டில யாருமில்லைன்னு எதாவது திமிருத்தனம் பண்ணாதே" அம்மா சொல்லிவிட்டுக் கிளம்பியபோதுதான் அந்த சுதந்திரம் உறைத்தது....

"ஆஹா...." என்று கையை விரித்துக் கொண்டு தட்டாமாலை சுற்றினாள். சுதந்திரக் காற்றை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டாள். 'கேட்க ஆளில்லாவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கிறது!'

பிடித்த பாடலை சத்தமாய்ப் பாடிக் கொண்டு, அருவியில் குளிப்பதாய்க் கனவு கண்டு கொண்டே அரை மணி நேரம் குளித்தாள்.

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது முன்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. 'அடச்சே! இந்த சுதந்திரத்துக்கு இத்தனை அல்ப ஆயுசா?'

கதவைத் திறந்தபோது சுரேஷ் நின்றிருந்தான். கோவில்பட்டி ராஜதுரை மாமாவின் மகன் - தூரத்துச் சொந்தம். சென்னையில் மெடிகல் காலேஜில் படிக்கிறான். 'எப்படி மாறிவிட்டான்! பளிச்சென்று ஸ்டைலாய் சினிமா ஹீரோ மாதிரி இருக்கிறான்' அவள் நினைத்துக் கொண்டு நிற்க, அவன் அவளைக் குறுகுறுவெனப் பார்த்துச் சிரித்த சிரிப்பில் ஏதோ அர்த்தமிருந்ததாய்ப்பட்டது ரஞ்சனிக்கு.

"அப்பா மாமாவைப் பாத்துட்டு வரச்சொன்னாங்க" வியர்வையைத் துடைத்துக் கொண்டே அவன் சொன்னபோது கைக்குட்டையிலிருந்து கிளம்பிய வாசனை அவளை ஈர்த்தது

"வீட்ல யாருமில்லை" ரஞ்சனிக்கு அவனை வீட்டுக்குள் அழைப்பதில் தயக்கம்.

"எப்ப வருவாங்க?"

"ஆங்...?" திருதிருவென அவள் விழிப்பதைப் பார்த்து, "நான் உள்ளே வெயிட் பண்ணட்டுமா?" என்றான்

ரஞ்சனி வேறு வழியில்லாமல் அவனை முன் அறையில் அமர வைத்து ஃபேன் போட்டுவிட்டாள்

மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே வந்தவளுக்கு அவனுக்குக் குடிக்க ஏதாவது கொடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் வர சமயலறையில் யோசனையாய் நின்றாள்.

"குடிக்கத் தண்ணி வேணும்" அவன் சுவாதீனமாய் சமயலறைக்குள் வந்திருந்தான். திடுக்கிட்டு, நடுங்கும் கைகளில் அவள் தண்ணீர் தர அவன் சிரித்துக் கொண்டே,

"இந்த பயந்தாங்கொள்ளியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறது?" என்றான் பரிகாசமாய்

'என்னது?' அவள் அவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். பளிச்சென ஒரு நட்சத்திரம் பூத்தது மனசுக்குள். ஜிலுஜிலுவெனெ என்னவோ ரத்தநாளங்களில் ஓடிற்று.

அவளின் பாவனையைக் கவனித்த சுரேஷ், "ஓ, உனக்குத் தெரியாதா இன்னும்? நம்ம வீட்ல பேசி வச்சிருக்கற விஷயத்தை என்கிட்ட எங்கப்பா சொல்லிட்டாரு"

அவன் சொல்லிக் கொண்டே அவளை நெருங்கினான்

ரஞ்சனிக்கு உடம்பெல்லாம் அக்கினிச் சிறகுகளோடு பல்லாயிரக்கணக்கில் பட்டாம்பூச்சிகள் பறந்தன ... அவனைப் பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது.

'காதலிக்கப்படுவது சுகம்' - ஏதோ நாவலில் படித்ததை நிஜமாய் அனுபவிக்கும் பூரிப்பு.

அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தி, "சின்னப் பிள்ளையிலிருந்தே எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்று அவன் கேட்டபோது பதில்கூட சொல்ல முடியாத பரவசத்திலிருந்தாள் ரஞ்சனி.

'இப்படித்தான் சந்திரா ராஜனின் 'கவிதைக் காலங்கள்' கதையிலும் கூட....'

அவள் அந்தக் காட்சியை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் அவளை சுவரில் சரித்து....


***

சுரேஷ் வந்து போய் இன்றோடு 20 நாட்களாயிற்று. ரஞ்சனி அன்று நடந்ததை இதுவரை ஆயிரம் முறையாவது ரீப்ளே செய்து மகிழ்ந்திருப்பாள். நினைக்க நினைக்க கிறக்கமாய்த்தான் இருக்கிறது. இன்னொருமுறை அந்த சிலிர்ப்பை சுகித்துவிட்டு நாவலில் ஆழ்ந்தாள்.

'எனக்கு ஒரு வாரம் தள்ளிப் போயிருக்குங்க' ஷாலினி வெட்கம் குமிழிட கௌதமின் காதில் கிசுகிசுத்தாள். 'யாஹூஊஊ' ஆரவாரத்தோடு அவளை அணைத்துக் கொண்டு 'எனக்கு குட்டி ஷாலினிதான் வேணும்' என்று அவன் கொஞ்சலாய்...'

அதற்கு மேல் படிக்க முடியாமல் ரஞ்சனிக்கு வயிற்றைப் பிசைந்தது. 'எனக்கும் மூணு நாள் முன்னாலேயே வந்திருக்கணுமே... அப்படின்னா நான் கர்ப்பமா இருக்கேனா... அய்யோ...' மூச்சு விட முடியாமல் திணறெலெடுத்தது. வேர்த்து ஊற்றியது. கிலி மூளைக்கு சர்ரென்று ஏறியதில் மயக்கம் வந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு தலையோடு போர்வையால் மூடிக்கொண்டு சத்தம் வராமல் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்

வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். லேசாக மேடிட்டிருந்ததாகத் தோன்றியது. இன்னும் அதிகமாய் அழுகை பொங்கிக் கொண்டு வர தலையணையால் முகத்தை மூடிக் கொண்டு சத்தம் வராமல் குமுறினாள்

'ஐயோ... வீட்டில தெரிஞ்சா அருவாமணையில வச்சு அறுத்துடுவாங்களே! வீட்டுக்குத் தெரியறதுக்கு முன்னால மரியாதையா நானே செத்துப் போயிடணும். வேறு வழியே இல்லை.'

செத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் துக்கம் குரல்வளையை நெறித்தது. பயம் உச்சத்தைத் தொட்டது. 'எல்லாம் அந்த கேடுகெட்ட சுரேஷால் வந்த வினை... அம்மா சொன்னபடி நல்ல பிள்ளையா இருந்திருந்தால் இப்படி சாகவேண்டி இருந்திருக்காதே'

'எப்படி சாகறது? எப்படித் தூக்கு போடுறதுன்னு கூடத் தெரியாதே... பூச்சி மருந்தை எடுத்துக் குடிக்க வேண்டியதுதான். ஐயோ... கசக்கும்... நினைக்கும் போதே அந்த வாசனை குமட்டுதே...'

***

"காலையிலருந்து இப்படி பொங்கிப் பொங்கி அழுவுறா. என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா. நீ கொஞ்சம் பேசிப்பாறேம்மா" பக்கத்துவீட்டு ராஜிக்காவை அறைக்குள் அழைத்து வந்த அம்மாவின் முகத்தில் கலக்கமிருந்தது.

"என்ன இருந்தாலும் பயப்படாம சொல்லச் சொல்லும்மா. ரொம்பப் பதட்டமா இருக்கு" அம்மாவின் குரல் உடைய முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு வெளியேறினார்.

ராஜிக்கா கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு அருகில் வந்தமர்ந்து தலையை மிருதுவாய்த் தடவியதும் ரஞ்சனியின் துக்கம் உடைந்து கேவலாய் வெளிப்பட்டது.

சற்று நேரம் அவளை அழவிட்டுவிட்டு, "சொல்லுடி... என்னன்னு அக்காகிட்ட சொல்லு. என்ன பிரச்சனைன்னாலும் பாத்துக்கலாம். நாங்கெல்லாம் எதுக்கிருக்கோம்?"

சொல்ல வாய் வராமல் வெகு நேரம் திணறிவிட்டுத் திக்கித் திக்கி, "நான்.... ப்ரெக்...னென்டா.. இருக்...கேன்" என்றுவிட்டு மீண்டும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள்.

ராஜிக்காவுக்குத் தான் கேட்பதை நம்ப முடியவில்லை. "என்னது... என்னடி சொல்றே?"

ரஞ்சனி பதில் சொல்லாமல் அழுகையத் தொடர... ராஜிக்கு இது எப்படி சாத்தியம் என்று புதிராய் இருந்தது. கட்டுப்பாடான வளர்ப்பு, கெட்டுப் போக அதிகம் வாய்ப்பில்லாத சூழல், சுபாவத்திலேயே அப்பாவி வேறு... யார்? எப்படி?
தன்னை நிதானப்படுத்திக் கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது ராஜிக்கு. "யாருடி? எப்படிடி?"

"அன்னைக்கு சு...ரேஷ்" பேச முடியாமல் அழுகை பீறிக் கொண்டு வந்தது...

ராஜி, "பயப்படாம சொல்லுப்பா" என்றாள் ஆதரவாய்.

"நான் ஒண்ணுமே செய்யலைக்கா... அவந்தான் கிச்சனுக்குள்ளே வந்து...." விக்கி விக்கி அழுதபடியே தொடர்ந்தாள் "முத்தம் குடுத்துட்டான்"

அவள் மேலும் ஏதோ சொல்லவருகிறாள் என்று சில நொடிகள் காத்திருந்தும் அவள் சொல்ல ஒன்றுமில்லை என்பது போல் அழுது கொண்டே இருக்க ராஜிக்காவுக்கு லேசாய் சந்தேகம் வந்தது.

"அப்புறம்...?"

"அப்புறம் ஃபோன் வந்துச்சி. அவன் முன் ரூமில போய் உக்காந்துக்கிட்டான்..."
ராஜிக்காவுக்குக் குழப்பமான குழப்பம் 'என்ன உளறுகிறது இந்த லூசு?'

"நீ கர்ப்பமா இருக்கேன்னு யார் சொன்னது?"

"எனக்குத் தெரியும்... மூணு நாளைக்கு முன்னாலேயே வந்திருக்கணும்"

"சரி... அன்னைக்கு என்ன நடந்திச்சின்னு எனக்கு விபரமா சொல்லு"

அவள் சொல்லி முடித்ததும் ராஜிக்காவுக்குக் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. நிம்மதியான நிம்மதி. இந்தக் காலத்தில் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணா?

"மக்கு... மக்கு... முத்தம் கொடுத்தா ப்ரெக்னென்ட் ஆக மாட்டாங்கடி" என்றாள் பொங்கி வந்த சிரிப்பை விழுங்கிக் கொண்டு

அழுகையைச் சற்று நிறுத்தி, "நிஜமாவாக்கா?" என்றாள் ரஞ்சனி அவளை நம்பிக்கை இல்லாமல் பார்த்து.

ராஜிக்கா கிசுகிசுப்பான குரலில் படைப்பின் ரகசியத்தை விளக்கிவிட்டு, "இப்பிடி ஏதாவது நடந்தாத்தான் குழந்தை பிறக்கும். நடந்துச்சா?" என்று கேட்டபோது ரஞ்சனி எழுந்து அமர்ந்து இல்லை என்று பெரிதாய் தலையாட்டினாள். நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. மலைக்கடியில் மாட்டிக்கொண்டு மீண்டாற் போன்ற நிம்மதி!

ஒன்றுமில்லாததற்கு இத்தனை களேபரம் செய்துவிட்டோமே என்ற வெட்கம் முகத்தை ஆக்கிரமித்திருந்தது. "அப்புறம் ஏன்கா இன்னும் வரலை?" பயம் முற்றிலும் விலகாத கேள்வி

"சில சமயம் அப்படித்தான்டி. சாப்பாடு, டென்ஷன் இப்படி ஏகப்பட்ட காரணமிருக்கு. நிறைய பப்பாளிப்பழம் சாப்பிடு. வந்திரும்"
***

'கடவுளே.... ராஜிக்கா சொன்னது போலவா நடக்கும்? அந்த ஃபோன் வந்திருக்கலைன்னா ஒருவேளை...? அய்யோ... எனக்கு வேண்டாம்பா...'

'எனக்கு இதெல்லாம் இப்போ சரிப்பட்டு வராது. அம்மா சொல்றபடி எனக்கு வெவரம் பத்தாது'

அம்மாவின் நினைவு வந்ததும் அவரின் கலங்கிய முகம் கண்களில் தோன்ற, 'பாவம் அம்மா, எனக்கு ஒரு கஷ்டம்னா எப்படி தவிச்சுப்போறாங்க! அவங்க எனக்கு நல்லதைத்தானே நினைப்பாங்க! அவங்க சொல்றபடி கேட்டா என்ன தப்பு?'

'எப்ப இதெல்லாம் நடக்கணும்னு அம்மாக்குத் தெரியுமா இருக்கும். அப்ப நடந்தா போதும். இப்படி திருட்டுத்தனம் செஞ்சுட்டு பட்ட அவஸ்தை இனி வேண்டாம்பா'
***

"மார்க் ஷீட் வாங்கிட்டு வந்திர்றேம்மா" சைக்கிளை வெளியே எடுத்த தன் பெண்ணை அப்போதுதான் கவனித்தார் அம்மா.

கையிலோ கழுத்திலோ அசிரத்தையாய் எப்போதும் தொங்கும் துப்பட்டா இன்றைக்கு அடக்கமாய் அதனிடத்தில் அமர்த்தப்பட்டு தோளின் இருபுறமும் பின் செய்யப்பட்டிருந்தது.

சற்றே நிம்மதி மனதில் எழுந்தாலும் 'பாவம் பிள்ளை ரொம்ப பயந்துவிட்டது' என்ற பரிதாப உணர்ச்சியே மேலோங்கி நின்றது.

சைக்கிளில் ஏறி அமர்ந்த ரஞ்சனி வாசலில் நின்ற அம்மாவைத் திரும்பிப் பார்த்து, "நீங்க சொன்ன மாதிரி நான் மதுரையிலேயே சேந்துக்கறேம்மா" என்று சமர்த்தாய்ச் சொன்னபோது அம்மாவுக்குக் குபுக்கெனக் கண்ணில் நீர் கோத்தது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 08, 2006

திருட்டுப் பயலே!

Your Ad Here

தலைப்பைப் பார்த்ததும் சினிமா விமரிசனம் என்று நினைத்து வந்தீர்களானால்... ஸாரி... (உங்களை எப்படித்தான் படிக்கவைக்கிறதாம் :-)))
சமீபத்தில் இந்திய அரசு இயந்திரங்கள் செயல்படும் அழகு குறித்து 'என் அம்மாவின் பாஸ்போர்ட்' என்ற பதிவில் எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அது போல ஒரு புலம்பல்தான் இதுவும்.

சமீபத்தில் எனது நாத்தனார் எங்களுடன் ஒரு மாதம் தங்கிவிட்டு இந்தியா திரும்பினார். தனது பெட்டிக்கு ஒரு சிறிய பூட்டு மட்டும் போட்டிருந்தார். என் கணவர் என்ன சொல்லியும் பெட்டியில் இருந்த நம்பர் லாக்கைப் பூட்ட மறுத்துவிட்டார். (நம்பர் மறந்துவிடுவார் என்று!)

பிரிட்டிஷ் ஏர்வேஸில் ஊர் போய்ச் சேர்ந்த போது சென்னை ஏர்போர்ட்டில் இவரது பெட்டி வரவில்லை. புகார் சொல்லிவிட்டு அவரது கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இரு நாட்கள் கழித்து பெட்டியை எடுத்துக்கொண்டு சென்ற அலுவலர் எல்லா பாரங்களிலும் உஷாராய் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

இங்கே பெட்டியைச் செக்-இன் செய்யும்போது 20.5 கிலோ இருந்தது. ஆனால் அவர் 19 கிலோவுக்குக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். என் நாத்தனார் கேட்டபோது ஏதோ சொல்லி சமாளித்திருக்கிறார். பெட்டி பூட்டிய நிலையில் இருக்கவும் என் நாத்தனாருக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை
ஆனால் பெட்டியைப் பின் திறந்த போதுதான் விலை உயர்ந்த பட்டுப்புடவை ஒன்றும் பரிசுப் பொருட்கள் பலவும் காணாமல் போயிருப்பதைக் கண்டார். டென்ஷனாகி திரும்ப நிறுத்துப் பார்த்ததில் 17 கிலோதான் இருந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் சொன்னால் உங்கள் புகாரைப் பதிவு செய்தாகிவிட்டது; கடிதம் வரும் என்கிறார்கள் - வழக்கமான நம்மூர் ஸ்டைலில். என் கணவர் இங்கிருந்து தொலை பேசியபோதும் இயந்திரத்தனமான பொறுப்பில்லாத அதே பதில்.

4 நாட்கள் கழித்து இன்று வந்த கடிதத்தில் தொலைந்த பொருட்கள் வாங்கிய ரசீது இருந்தால் மட்டுமே ஈட்டுத்தொகை பற்றி பரிசீலிக்க இயலும் என்றும் மற்றபடி தொலைந்த பொருட்களுக்குத் தாங்கள் பொறுப்பில்லை என டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸை மேற்கோள்காட்டி கழன்று கொண்டார்கள்

தொலைந்த பொருட்கள் எல்லாவற்றுக்கும் ரசீது கிடைப்பதரிது என்றாலும் வெறும் ஈட்டுத்தொகையால் திருட்டுப் போன பொருட்களின் சென்டிமென்டல் வேல்யூவை ஈடு செய்ய இயலுமா? அந்தப் பட்டுப்புடவை மறைந்த என் மாமியார் தன் மகளுக்கு வாங்கித்தந்த புடவை; என் நாத்தனாருக்கு ராசியான புடவை வேறு. முகூர்த்த நாளில் அதுவும் வேறு சில மங்கலப் பொருட்களும் காணாமல் போனது வேறு அவருக்கு அபசகுனமாகப் படுகிறது. பாவம், ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டார்.

எனக்கு இருக்கும் கேள்விகளெல்லாம்:

- அதிகபட்சம் 20 பணியாளர்கள் அந்தப் பெட்டியைக் கையாண்டிருக்க வாய்ப்புண்டா? அந்த 20 பேரையும் விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடாதா?

- பிரிட்டிஷ் ஏர்வேஸ் இதனைச் செய்யத் தயங்குவதேன்? திருட்டு அம்பலப்பட்டு பெயர் கெட்டுவிடும் என்றா? இப்போது மட்டும் பெயர் கெடவில்லையா? பின் ஏன் இந்த மெத்தனப் போக்கு? இடைநிலை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பார்களோ?

- திருட்டு நடக்கிறதென்று அப்பட்டமாகத் தெரிகிறது. அதனை எளிதாய்க் கண்டுபிடிக்கலாம் என்றும் தெரிகிறது. அப்படி இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை ஏன்? இது இந்தியாவில் (அல்லது வளர்ந்து வரும் நாடுகளில்) மட்டும்தானா?

- இவர்களோடு மன்றாடிக் கொண்டிருக்கமுடியாது என்று எல்லோருமே விட்டுவிடுவதால்தானோ இத்தகைய திருட்டுகள் தொடர்கின்றன? நீதி ஒன்று இருக்கிறது என்ற பயம் வந்தால் இத்தகைய திருடர்கள் திருந்த மாட்டார்களா?

- நுகர்வோர் வழக்குமன்றத்தில் வழக்குத் தொடரமுடியுமா? எவ்வளவு காலம் பிடிக்கும்? எவ்வளவு செலவாகும்?

- போலீஸில் புகார் தரமுடியுமா? (பெட்டியில் வைத்திருந்தாய் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் என்ன சொல்லமுடியும்?)

- தனியார் துப்பறியும் நிறுவனங்களின் உதவி கொண்டு ஆதாரங்கள் சேகரித்துக் கொடுத்தால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பரிசீலிக்குமா?

- இல்லை, நீதி, நியாயம் என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் ஓவர் ரீயாக்ஷனோ? இதையெல்லாம் கண்டும் காணாமல் போவதுதான் 'நல்ல' இந்தியனுக்கு அழகோ??

ஏதாவது செய்யவேண்டும் என்று துடிப்பாய் இருக்கிறது... ஆனால் சாத்தியமா, தேவையா என்றுதான் குழப்பமாக இருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

(அடுத்த பதிவாவது உருப்படியான பதிவாக இருக்கவேண்டுமென்று உண்மையாகவே ஆசைப்படுகிறேன் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 02, 2006

அம்மாவின் பாஸ்போர்ட்

Your Ad Here

இந்திய அரசு அலுவலகங்கள் என்ன அழகில் வேலை செய்கின்றன என்பதை என் அம்மாவுக்கு பாஸ்போர்ட் வாங்க முயற்சி செய்ததில் தெரிந்து கொண்டேன்

பெற்றோரை எங்களுடன் சில வாரங்கள் இங்கு தங்க அழைக்கலாம் என்ற வெகு நாளைய திட்டத்தை சென்ற வருடம் செயல் படுத்த முயன்றபோது ஓய்வு பெற்ற ஆசிரியரான என் அப்பா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மிகவும் தயங்கினார். அவர் சொன்ன காரணம் அரசாங்க அலுவலகத்துக்குத் தன்னால் அலைந்து கொண்டிருக்க முடியாதென்பது. நான் சொல்லி சொல்லிப் பார்த்து அலுத்துப் போய் அதெப்படி அரசு அலுவலகங்கள் அவ்வளவு மோசமாய் இயங்க முடியும் என்று அவர் மேல் எரிச்சல் வேறு பட்டேன்.

ஒரு வழியாக மிகவும் வற்புறுத்தி உறவினர் ஒருவரின் உதவியுடன் கடந்த டிசம்பர் 2ம் தேதி விண்ணப்பிக்கச் செய்தாகிவிட்டது. அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி என நல்வரும் ஒரே சமயத்தில் விண்ணப்பித்தார்கள். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அம்மாவைத் தவிர மற்ற மூவருக்கும் பாஸ்போர்ட் வந்துவிட ஒன்றும் புரியாமல் நிலவரம் அறிய இணையதளத்தை நாடினோம். அங்கு 'மேலும் 4 புகைப்படங்கள் அனுப்பவும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அடடா இவ்வளவு எளிதாக நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறதே என்று பெருமைப்பட்டுக்கொண்டோம். ஆனால் புகைப்படங்களை எப்படி எங்கு புகைப்படங்களை அனுப்புவது என்று விபரம் தெரியாததால் திருச்சி கலெக்டரேட்டில் வேலை செய்யும் நண்பர் ஒருவரை நாடினோம்.

அவர் கொஞ்சம் விசாரித்துவிட்டு 'நான் இன்னொரு விண்ணப்பம் அனுப்புகிறேன். அதை நிரப்பி புகைப்படத்தோடு அனுப்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். எதற்கு இன்னொரு விண்ணப்பம் என்று குழம்பினாலும் அதையும் அனுப்பி வைத்தோம். ஏப்ரல் 24ம் தேதி அதனை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சேர்த்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தார். 15 நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிடும் என்றார். 6 வாரங்கள் ஆகியும் பாஸ்போட் வரவில்லை

மே 31தேதி அப்டேட் செய்த இணையதள நிலவரம் இன்னும் 'மேலும் 4 புகைப்படங்கள் அனுப்பவும்' என்கிறது. இதற்கிடையில் திருச்சி, சென்னை, டெல்லி அலுவலகம் வரை ஏகப்பட்ட தொலைநகல்கள், மின்னஞ்சல்கள் அனுப்பியாகிவிட்டது. குறைகளைத் தெரிவிக்கவென்று தரப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் - டெல்லி எண் வரை- முயற்சி செய்தாயிற்று. ஒன்று எண் தவறாக இருக்கிறது அல்லது வாய்ஸ் மெயிலுக்குப் போகிறது அல்லது மணி அடித்துக் கொண்டே இருக்கிறது.

இன்னும் 2-3 வாரங்களில் என் பெற்றோர் இலண்டன் பயணப்படவில்லை என்றால் கோடை காலம் முடிந்துவிடும். இனி அடுத்த வருடம்தான் அவர்களால் வர இயலும். ஒரு வருடத்துக்குள் என்னென்ன நடக்குமோ என்ற திகிலில் நண்பருக்கு நண்பருக்கு நண்பருக்கு நண்பர் ஒருவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்வதாக அறிந்து அவரிடம் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள அணுகினோம். அவர் விசாரித்துவிட்டு 'கையெழுத்து தெளிவாக இல்லையாம். அதனால்தான் தாமதமாம்' என்கிறார். தலை சுற்றுகிறது!

இதில் எதை நம்புவது, அடுத்து என்ன செய்வது என்கிற மகா குழப்பத்தில் நான்.

'விஷயம்' தெரிந்தவர்கள் அம்மாவை நேரில் போய் பார்க்கச் சொல்லுங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். அம்மாவுக்குப் பூஞ்சை உடம்பு. மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பின் அவருக்கு பிரயாணம் அதிகம் ஒத்துக் கொள்வதில்லை. இந்த அக்கினி வெயிலில் 6 மணி நேரப் பிரயாணமாய் திருச்சி சென்று பாஸ்போர்ட் ஆஃபீஸில் காத்திருந்து பார்த்துவிட்டுத் திரும்ப 6 மணி நேரப் பிரயாணம் செய்து ஊருக்கு வரவேண்டும் என்று சொன்னால் அம்மா, 'நான் லண்டன் வரவேயில்லை. என்னை விட்டுவிடு' என்கிறார்கள். அப்பா இத்தனை ஏமாற்றத்திலும் 'நான் அப்பவே சொன்னேனில்லை!!!' என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்.

அப்படியே அம்மாவைக் கஷ்டப்பட்டு ஏசி காரில் அனுப்பி வைத்தால்கூட பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒழுங்காகக் காரியம் நடக்கும் என்பது நிச்சயமில்லை என்றே படுகிறது. எனக்கிருக்கும் ஆதங்கமெல்லாம் ஒரு சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பம் 6 மாதங்களுக்கு மேலாக இழுத்துக் கொண்டிருக்கிறது. சரி, பரவாயில்லை. ஆனால் என்ன காரணம், என்ன செய்யவேண்டும் என்று தெரியப்படுத்த வேண்டுமல்லவா? சரி, தெரியப்படுத்தத்தான் இல்லை. நாமாகத் தெரிந்து கொள்ள வழியாவது இருக்கவேண்டுமல்லவா?

திருச்சி டெலிஃபோன் டைரக்டரியைப் பார்த்து பாஸ்போர்ட் ஆஃபீஸின் அத்தனை எண்களையும் சுமார் 100 முறை சுழற்றியாயிற்று. இன்னும் ஒரு முறை கூட ஒரு கடை நிலை ஊழியரிடம் கூட என்னால் பேச முடியவில்லை.

எத்தனையோ பேர் திருட்டுத்தனமாக பல பாஸ்போர்ட்டுகள் கூட வாங்கிவைத்துக் கொள்கிறார்கள்! ஆனால் நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியை எல்லா ஆவணங்களையும் திருத்தமாக சமர்ப்பித்தும் கூட அவருக்கு இந்த நிலை!!! ஓரளவு விபரமும் தொடர்புகளும் கொண்ட நமக்கே அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பம் என்றால் அதிகம் படிக்காத மக்கள் என்ன செய்வார்கள்?

அதிகம் கேட்கவில்லை ஜென்டின்மென், நான் கேட்பதெல்லாம் அரசு அதிகாரிகளிடமிருந்து என் அம்மாவின் பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்த உண்மையான நிலவரமும் பொறுப்பான பதிலும்தான்...

என்னால் முடிந்த அத்தனை வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது... யாராவது பிரதமரையோ ஜனாதிபதியையோ தெரிஞ்சா கொஞ்சம் உதவி பண்ணுங்க... அவங்க சொல்லியாவது ஏதாவது நடக்குதா பாக்கலாம்...

விளையாட்டில்லீங்க... நெசம்மாவே யாராவது உதவினீங்கன்னா... எங்கம்மாவோடு ஆசீர்வாதம் கிடைக்கும் :-)
அதுக்கு நான் உத்தரவாதம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.